பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 மே, 2022

ஏறி இறங்கி பார்த்தது.

இதயத்தில் இன்பம் சேர்த்தது.

நண்பர்களே,  

லண்டனில் இருந்து  கிளாஸ்கோ வரை மேற்கொண்ட சொகுசு இரவு ரயில் பயணம் குறித்ததான எமது பதிவை பார்த்திருப்பீர்கள். பார்க்கதவர்கள் , பார்க்க விரும்பினால்  தண்டவாளம் ஏறிய வண்டவாளம் ! (koilpillaiyin.blogspot.com) சென்று பார்த்துவிட்டு தொடரவும்.

கிளாஸ்கோ சென்றடைந்த முதல் நாள், தங்கும் ஓட்டலில் கொஞ்சம் நேரம் மட்டுமே  தங்கி பெட்டி படுக்கைகளை (படுக்கை அங்கேயே இருந்தது) வைத்துவிட்டு  அங்கிருந்து கிளாஸ்கோ மத்திய ரயில் நிலைய Queen street ஸ்டேஷனில் இருந்து ஸ்காட்லாந்தின் தெற்கு பகுதியில் இருக்கும் ஒரு பிரசித்திபெற்ற ஏரியை காணவும் அதில் படகு சவாரி செய்யவும் ரயில் ஏறி  புறப்பட்டேன்.

அந்த ஏரி  அமைந்திருக்கும் ஊரின் பெயர் Balloch, பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையும் சுகத்தையும் சேர்க்கும் ஒரு அழகிய சிறிய நீர் கிராமம் என்று சொல்லலாம்.

ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஊர்களை கடந்து  சுமார் ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு பாதை முடிந்து கடைசியாக அந்த  ரயில்  வந்து நின்ற இடம்தான் Balloch  Central Station.


அங்கிருந்து  இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நடை தூரத்தில் உல்லாச படகுகளின் அணி வகுப்புடன் நம்மை வரவேற்கும் அந்த அழகிய ஏரியின்  பெயர் LOCH LOMOND அதாவது லோமண்ட் ஏரி. ஆங்கிலத்தில் LAKE என்பதைத்தான் ஸ்காட்லாந்து பாஷையில் LOCH என்கிறார்கள்.


இதனை சுற்றி இருக்கும்  HIGH LAND பகுதியில்  சிகப்பு நிற மான்கள் நிறைந்து இருப்பதாலும் OAK மரங்களால் சூழப்பட்டு இருப்பதாலும்     இந்த பகுதி முழுமையும் தேசிய பூங்கா பகுதியாகவும் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. 


ஏரியின் வடக்கு பக்கத்திலிருந்து உருவாகி ஓடிவரும் LEVEN எனும் ஆறும்   தெற்கு பக்கத்தில் உருவாகி ஓடிவரும் (ஒட்டுமொத்த UK விலேயே ஒன்பதாவது நீளமான ஆறாக கருதப்படும்)  CLYDE எனும் ஆறும் இந்த LOCH LOMOND ஏரியில் சங்கமிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சி.


சுமார் 39 கிலோ மீட்டர் நீளமும் 71 சதுர கிலோ மீட்டர் பரப்பும் , 8 கிலோமீட்டர் அகலமும் கொண்ட அந்த LOCH LOMOND பிரமாண்டமான ஏரியில் படகு பயணம் பிரசித்தம்.
சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நிகழும் அந்த பயணத்தின் போது  ஏரியின் இரு மருங்கிலும் விவரிக்கமுடியாத அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் / மேகங்கள் உரசும் மலைகளும் , அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகளும் ஆங்காங்கே தென்படும் அருவிகளும் சோலைகள் நடுவே கட்டப்பட்டு இன்றளவும் அதே கம்பீரத்துடன் பயன்பாட்டிலுள்ள  பழங்காலத்து   பிம்மாண்டமான மாளிகைகள், செல்வந்தர்களின் வீடுகள் நம் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.

ஒவ்வொரு இடத்திலும் வலது இடது புறங்களிலுள்ள இடங்களின் சிறப்பையும் வரலாற்று பின்னணியையும் பயணிகளுக்கு விளக்கியவாறே அந்த படகு பயணம் தொடர்கின்றது.

அழகும் கவர்ச்சியும் வசீகரமும் இருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்கிமில்லையா? 


அதுபோலவே, கலையான கிளைகொம்புகள் கொண்ட அழகிய சிகப்பு மான்கள் இருக்கும் அந்த தேசியப்பூங்காவாக பராமரிக்கப்பட்டுவரும் காட்டுப்பகுதியில் கட்டுக்கட்டான வண்ண கோலத்தை கொண்ட இதுவும் உண்டாம்.

ஏரியை சுற்றியுள்ள மலைகாட்டு சரிவுகளில்  பெரிதும் வளர்ந்துவிட்ட, வயதாகியும்போன, பெருங்காற்றுக்கு ஈடு கொடுத்து காலூன்றி நிற்க பல மின்றிப்போகும் நிலையிலுள்ள சுமார் 1,25,000டன் மரங்களை அறுவடை செய்யவும் அதனால் ஏற்பட இருக்கும் எதிர்மறையான இயற்கை பேரழிவுகளை தடுக்கவும்   LANDSCAP ஐ ஒழுங்கு படுத்தவும்  திட்டங்களும் பேச்சுவார்த்தையில் உள்ளனவாம்.

என்னதான் உயரஉயர ஏறினாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இறங்கித்தான் ஆகவேண்டும் , எனவே உல்லாச படகில் ஏறி LOCH LOMOND ஏரியை சுற்றிபார்த்தபிறகு தரை இறங்கி  அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு, சில கடைகளையும் ஏறி இறங்கி ஞாபகார்த்த பொருட்களை வாங்கிக்கொண்டு  மீண்டும் அதே ரயிலில் ஏறி இருப்பிடம் வந்து சேர்ந்தேன். 

இந்த ரயில் பயணமும் படகு சவாரியும் மனதிற்கு இதமாகவே  இருந்தது.

நினைவில் மீதமிருக்கும் காட்சிப்பதிவுகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி ,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

 

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தனபால்

   நீக்கு
 2. ரயில் பயணமும் உல்லாச படகுப் பயணமும் சிறப்பு. இந்த மாதிரி பயணங்கள் நமக்கு நல்ல அனுபவங்களைத் தருவதால் பயணம் செய்வது எப்போதும் பிடிக்கும். தொடர்ந்து பயணம் குறித்து வாசிக்க காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வெங்கட், பயணம் பிடித்த ஒன்றுதான், நேரம் காலம் விடுமுறை, தட்பவெட்பம் அனுகூலமாக கூடி வரவேண்டுமே.
   வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. படகு சவாரியை ரசித்தீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்சசியே.

   வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 4. அருமையான பயணம் என்று தெரிகிறது. காடும் சோலையும் நதியும் நதிகளின் சங்கமமும் இருந்தால் அதைச் சொல்லவும் வேண்டுமோ வார்த்தைகள்தான் கிடைக்குமோ அதை வர்ணித்திடவும், நம் மகிழ்ச்சியைச் சொல்லவும்...உங்கள் வர்ணனை அருமை.

  மான் என்ன அழகு.

  பார்த்தவற்றையும், பிரயாணத்தையும் நீங்கள் சொல்லியிருப்பதை அப்படியே மனக்கண்முன் கொண்டுவந்துப் பார்த்துக் கொண்டேன்.

  ஸ்காட்லாண்ட் மிகவும் அழகான பிரதேசம். நம் நட்பு பூஸார் (அதிரா) அங்குதான் இருக்கிறார்.

  ஹாஹாஹா மற்றதின் பெயரைக் கூடச் சொல்லாமல் விட்டீர்களே!! சுருண்டு படுத்துக் கொண்டு தலையைத் தூக்கிப் பார்ப்பவருக்கும் அழகான வடிவம் தான் உடம்பில்! அழகு ஆபத்து!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அருமையான பயணம்தான். இயற்கை அழகை பூரணமாக வர்ணிக்க ஏது வார்த்தைகள்?.

   முடிந்தவரை எழுத்தில் வாடிக்கின்றேன் எனினும் நேரில் சென்று பார்ப்பதையெல்லாம் நினைவு படுத்தி எழுதுவது எவர்க்கும் அரிதே.
   ஸ்காட்லாந்தில் இருக்கும் தங்கள் நட்புகுறித்த குறிப்பை கண்டேன், அவர்களுக்கு என் வணக்கம்.
   சிலவற்றின் பெயரை கேட்டாலே சும்மா அதிருமில்லையா? பேரதிர்ச்சிவேண்டாம் என்பதால் குறிப்பிடவில்லை. அதை சிலாகித்து ரசித்த தங்களின் ரசனை வேற லெவல்.
   வருகைக்கு மிக்க நன்றிகள் அம்மையீர்.

   நீக்கு
 5. நம் வெங்கட்ஜி அவர்கள் எழுதும் பயணங்கள் பற்றிய பதிவுகளில் உள்ள இந்தியாவில் உள்ள இடங்களுக்குக் கூடப் போகும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை அப்படியிருக்க உங்கள் இடமோ? எல்லாமே இப்போதைக்கு உங்கள் எல்லோரது பதிவுகள் படங்கள் மூலம் பார்த்து மனக்கண்ணில் ரசிப்பதுதான்.

  அழகான இடம். படங்களும் அழகாக இருக்கின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் வெங்கட் அவர்களின் பயண குறிப்புகளை வாசிக்கும்போது நேரில் சென்று பார்க்கும் ஆவல் கூடுவது உண்மைதான்.

   மனமிருந்தால் மார்க்கம் உண்டு எனும் கூற்று எல்லா வகையிலும் சாத்தியமா?

   தங்களின் ஆதங்கம் விளங்குகின்றது, எனினும் "THE GRASS IS ALWAYS GREEN ON THE OTHER SIDE " என்பதுபோல்தான் எங்கிருந்து எதை பார்க்கிறோம் என்பதும் .

   நாம் வாழும் பகுதிக்குள்ளேயே எத்தனையோ சிறப்புகள் உள்ளனவே, திருமதி கீதா மற்றும் தங்களின் பயண குறிப்புகளை வாசிக்கும்போதும் அவற்றை நேரில் பார்க்கும் வாஞ்சை அதிகரிப்பது முற்றிலும் உண்மையே.

   சரி ஒரு எட்டு இந்தப்பக்கம் வந்துட்டு போக உங்களுக்கு ஒரு வாய்ப்பு அமையாமலா போகும்? நீங்கள்தான்(கீதா) ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்தவர் ஆயியிற்றே..
   வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.

   நீக்கு
 6. நானும் பயணித்த உணர்வு சிறப்பான படங்கள் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே,,தங்களின் உணர்வுமிக்க பயணத்திற்கு.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்.

   நீக்கு