பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 21 டிசம்பர், 2021

நிறம் மாறும் வெள்ளை மழை!

கண்ணாமூச்சு!!

நண்பர்களே,

சாதாரணமாக எல்லோராலும் பார்த்து  இயல்பாக அர்த்தப்படுத்தி புரிந்துகொள்ளும் விடயங்களை கற்பனை ஊற்று பெருக்கெடுக்கும் கவிஞர்கள், வேறு கோணத்தில் பார்த்து பொருத்தமான உவமைகளால் வெளிப்படுத்துவர்.

உதாரணத்திற்கு, ரோஜா என்ற திரைப்படத்தில், பனிபிரதேசத்தில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் நிகழும் பனிப்பொழிவை, " ஒரு வெள்ளை  மழை இங்கு பொழிகின்றது" என்று பனி பொழிவை வெள்ளை நிற மழைபொழிவாக உருவகப்படுத்தி அந்த பாடலின் ஆசிரியர் எழுதி இருப்பார். ஏற்கத்தக்க உவமையாகவே அந்த காட்சியோடு பொருந்திப்போகிறது அவரின் கற்பனை.

வானிலிருந்து பொழிகிறது மழைபோல, அதே சமயத்தில் நீராக இல்லை என்றாலும் தொடர்ந்து பொழிவதாலும் அது வெள்ளை  நிறத்தில்  இருப்பதாலும்  அதை  வெள்ளை மழை என்று உருவக படுத்துவது ஏற்புடையதே.

பனி, மலை மீது  பொழிந்தாலும் மரம் மீது பொழிந்தாலும் , வீட்டின் கூரை மீது பொழிந்தாலும் , வாகனத்தின் மீது பொழிந்தாலும், சாலையில் பொழிந்தாலும்  வெள்ளையாகத்தான் இருக்கும். சீதோஷண, தட்பவெட்பத்தை பொறுத்து உருகும்  வரை அப்படியே உறைந்த  நிலையில் இருந்தாலும் வெள்ளையாகத்தான் இருக்கும்.

அப்படி பொழிந்து உறைந்து  இருக்கும் பனியை கருப்பு பனி என்று குளிர் பிரதேசத்து நாடுகளில் இருக்கும் மக்கள் வெகுவாக சொல்வதை முதன் முதலில் கேட்டபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சொல்பவர்கள் அனைவரும் கவிஞர்களா  என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை.

பிறகு எதனால் அப்படி சொல்கிறார்கள் அது எப்படி இருக்கும்?

அதிலும் அந்த கருப்பு பனியை கண்களால் பார்க்கவும் முடியாதாம், அந்த கருப்பு பனி அதிக ஆபத்தானதும் பல  வேளைகளில் கைகள் கால்கள், தலை இடுப்பு போன்ற உடலுறுப்புகள்  உடைந்துபோகவும் சில வேளைகளில் உயிருக்குக்கூட ஆபத்தை விளைவிப்பதாகவும் இருக்குமாம். 

வினோதமாக இருந்தது கேட்பதற்கு, பிறகு பனி பெய்து ஓய்ந்திருந்த சாலை ஓரங்களில் - நடை பாதைகளில் நடக்கும்போதும் சாலையில் வாகனத்தில்  பயணிக்கும்போதும் அனுபவத்தால் அறியவந்தது அது  உண்மைதான் என்று.

பனி இறுகி   ஐஸ் போல கெட்டியாக  மாறி சாலைகளில் படர்ந்திருக்கும் போது தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் , நடை பாதைகளின்  நிறத்தோடு இரண்டற கலந்து , அப்படி ஒரு கூடுதல் படிவம் அந்த சாலையில் இருப்பதாகவே தெரியாது.

அப்படி இருக்கும் அந்த சாலையில் நடக்கும் போதும் வாகனத்தில்  பயணிக்கும் போதும் கடுமையான எச்சரிக்கையோடும் கூடுதல் நிதானத்தோடும்  பயணிக்க வேண்டும். 

பலவேளைகளில் இந்த சாலையில் இருக்காது என்றெண்ணி அதில் பயணப்பட்டு வழுக்கி விழுந்தும் வாகன கட்டுப்பாட்டை இழந்தும் காயம் அடைந்தவர்கள் / அடைபவர்கள் ஏராளம்.


சரி இது பனிக்காலத்தில் ஏற்படுவது , எனவே இதுபோன்ற காலங்களில் சாலை பயணத்தின்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து நடந்துகொள்ளலாம். சில இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் இருக்கலாம்.

ஆனால்   வாழ்க்கை பயணத்தின்போது நமக்கு முன்னால்  என்ன இருக்கின்றது, பின்னால் எது தொடர்கின்றது, எங்கே அடி  எடுத்து வைப்பது,  நாளை என்ன நடக்கப்போகிறது என்று யூகிப்பதோ, உணர்ந்துகொள்வதோ பெரும்பாலும் முடியாததாகவே போகிறது இந்த கறுப்பு பனியின் கண்ணாமூச்சு போல. 

வெள்ளை பனி சறுக்கு போன்ற கண்ணுக்கு தெரிந்த குதூகலங்கள் குறைவின்றி  இருந்தாலும், கருப்பு பனி(Black Ice)   போன்ற கண்ணுக்கு தெரியாத -  யூகிக்க முடியாத  வழுக்கல்கள், சறுக்கல்கள், பின்னடைவுகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளால் வெளி உலக தொடர்பை தற்காலிகமாக தள்ளிவைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டவர்கள் / தள்ளப்படுபவர்கள் நம் மத்தியில் வாழ்ந் துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

நாளை நடப்பது என்னவென்று தெரியாத புதிர் நிறைந்த இந்த பூவுல வாழ்க்கைபயணத்தை மேற்கொள்ள நம்மை மீறிய ஒரு சக்தி துணை நின்று  நம்மை இயக்குகின்றது என்று ஆணித்தரமாக அறிய தோன்றுகின்றது.

என்னதான் எச்சரிக்கை உணர்வு மேலோங்கி இருந்தாலும் மேலுள்ளவனின் கைப்பாவைகளே நாம் எனும் புரிதலும் உணர்வும் நம் மனதில் உறுதியாக மேலோங்கி இருக்கும் வரை சறுக்கல்கள் வந்தாலும் தடம் பிறழாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோலாகிய இறை நம்பிக்கை /இயற்கை நம்பிக்கை  நம் பாதம் எதிர்மறை எனும் கல்லில்  இடராதபடி நம் பாதைக்கு வெளிச்சம் வீசி நம்மை  வழி நடத்தும் என்ற  நம்பிக்கையோடு   வரும் புத்தாண்டில் நடை தொடர்வோம்.

"I DO NOT KNOW WHAT TOMORROW HOLDS , BUT I DO KNOW WHO HOLD TOMORROW" 

சமயம் வாய்க்கும் என நம்புகிறேன்  உங்களை மீண்டும் பதிவுகளின்  மூலம் சந்திக்க.

நன்றி,

அனைவருக்கும் ப(னி)ணிவான வணக்கங்கள்.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

 

14 கருத்துகள்:

  1. கோ வே வருக வருக!!! ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களைப் பார்த்து

    வெள்ளை மழை!! என்பதைப் பார்த்ததும் புது வெள்ளை மழை எனும் ரோஜா படப் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் வரவேற்பிற்கும் மிக்க நன்றி அம்மையாரே

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  3. உதாரணத்திற்கு, ரோஜா என்ற திரைப்படத்தில், பனிபிரதேசத்தில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் நிகழும் பனிப்பொழிவை, " ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது" என்று பனி பொழிவை வெள்ளை நிற மழைபொழிவாக உருவகப்படுத்தி அந்த பாடலின் ஆசிரியர் எழுதி இருப்பார். ஏற்கத்தக்க உவமையாகவே அந்த காட்சியோடு பொருந்திப்போகிறது அவரின் கற்பனை.//

    காலையில் தலைப்பு மட்டும் பார்த்து மனதில் உடனே வந்ததை கொடுத்துவிட்டுப் போனேன் இப்போது பதிவை வாசிக்கும் போது நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலோடு என் நினைவும் தங்களுக்கு வந்திருக்கும் என நம்புகிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  4. பனி இறுகி ஐஸ் போல கெட்டியாக மாறி சாலைகளில் படர்ந்திருக்கும் போது தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் , நடை பாதைகளின் நிறத்தோடு இரண்டற கலந்து , அப்படி ஒரு கூடுதல் படிவம் அந்த சாலையில் இருப்பதாகவே தெரியாது.//

    ஆமாம். அது ஆபத்தானதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனிதர்களின் மனதில் படர்ந்திருப்பது என்னவேன்று யாருக்கும் தெரியாததுபோல் சாலைகளில் படர்ந்திருக்கும் இறுகிய பனியும் தெரியாமலே கால்வைக்கவேண்டியதாகிறது.
      தொடர் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. வெள்ளை உறை பனியை விட இந்தக் கண்ணாடி போன்று கட்டியாகி இருப்பதுதான் ரொம்பக் கஷ்டம்

    //ஆனால் வாழ்க்கை பயணத்தின்போது நமக்கு முன்னால் என்ன இருக்கின்றது, பின்னால் எது தொடர்கின்றது, எங்கே அடி எடுத்து வைப்பது, நாளை என்ன நடக்கப்போகிறது என்று யூகிப்பதோ, உணர்ந்துகொள்வதோ பெரும்பாலும் முடியாததாகவே போகிறது இந்த கறுப்பு பனியின் கண்ணாமூச்சு போல. //

    நல்ல ஒப்பீடு. இதற்கு அடுத்த பாராவில் சொன்னதும் அருமை ஆமாம். அதேதான்

    நம் வாழ்க்கை ஒரு ரகசியப் பெட்டி.

    //"I DO NOT KNOW WHAT TOMORROW HOLDS , BUT I DO KNOW WHO HOLD TOMORROW" //
    இப்பாராவும் அப்படியே வழி மொழிகிறேன் கோ.

    கிறிஸ்துமஸ் வாழ்த்துகளோடு புத்தாண்டு வாழ்த்துகளும்.

    இனி வரும் காலங்களேனும் ஓ மை என்று க்ரானை சொல்லாமல் காட் என்று முன்பு போல் சொல்ல அந்த இறைவன் ஆசி செய்ய வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ஆழமாக வாசித்து அலசி ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் தங்கள் கருத்திற்கும் தங்கள் அன்பிற்கும் தங்களின் மேலான ஆதரவு மற்றும் உற்சாகமூட்டலுக்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே.
      விழாகால வாழ்த்துக்களுக்கும் காலாகாலமாக விழாத நம் நட்பிற்கும் நன்றியும் வணக்கங்களும்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றிகள் தனபால்.

      நீக்கு
  7. அதீத பனிப்பொழிவு ஆபத்தானதுதான். பனிப்பிரதேசத்தில் நடக்கும்போது விழுந்தால் அதிகமாக பாதிப்பு இருக்கும் என்பதால் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் சில பனிப் பிரதேசங்களில் இப்படி விழுந்து அடிபட்டு கொண்டவர்களை பார்த்ததுண்டு. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வலைப்பதிவு படித்து மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் வந்த எம்மையும் என் பதிவையும் கண்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள், வெங்கட். தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு