பின்பற்றுபவர்கள்

திங்கள், 27 டிசம்பர், 2021

டேக் இட் ஈசி !!

   ஊர்வசி! 

நண்பர்களே,

யாரேனும் இக்கட்டான - நெருக்கடியான வேளைகளில் இருக்கும்போது, அவர்களை  பார்ப்பவர்கள், தெரிந்தவர்கள் சொல்லும் ஆறுதலான  - பொதுவான-உற்சாகமூட்டும்  வார்த்தைகள்   "டேக் இட் ஈஸி".

அப்படி சொல்லப்படும் அந்த வார்தைகளுக்கு நேரடியான மொழி பெயர்ப்பு அர்த்தம் வேறாக   இருந்தாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம், பரவாயில்லை விடு, போகட்டும் விடு, அதையெல்லாம் பெருசா நினைக்காதே, வருத்தப்படாதே... எளிதாக எடுத்துக்கொள் போன்றவையாகத்தான் இருக்கும்.

இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் நம் பலரின்  நினைவிற்கு தவறாமல் வருவது ஒரு திரைப்பட பாடல். அந்த பாடலில் எந்த கஷ்டமான சூழலிலும் , ஏமாற்றத்திலும், எதிர்மறை நிகழ்வுகளின்போது.  சோர்ந்துபோகாமல் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தவேண்டும் எனும் பொருள்படும்படி, அந்த பாடலில் பல சூழல்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். 

உதாரணத்திற்கு:

ஒளியும் ஒலியும் வரும்  நேரம் பார்த்து மின்சார தடை ஏற்பட்டால் வருத்தப்படவேண்டாம், டேக் இட் ஈஸி.

ஒழுங்காக படித்தும் தேர்வில் தோற்றுபோனாலும் டேக் இட் ஈஸி.

தண்ட சோறு என்று அப்பன் சொன்னால் டேக் இட் ஈஸி.

பயணத்தின்போது பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்தால்  டேக் இட் ஈஸி.

இந்த வரிசையில் , பண்டிகை தேதி ஞாயிற்று கிழமை வந்தால் (ஒரு நாள் அரசு விடுமுறை போய்விட்டதே என எண்ணி வருத்தப்படமால்) டேக் இட் ஈஸி என்று தொடரும்.

ஆமாம், அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட்டால் யார்தான் வருத்தப்படமாட்டார்கள் ? அதை எப்படி ஈசியாக எடுத்துக்கொள்ள முடியும்?

இந்த பாடல் இந்திய  - தமிழக கலாச்சார பண்பாட்டு சூழலில் எழுதப்பட்ட பாடல்  அது உலகின் அனைத்த்து நாடுகளின் நடைமுறை வாழ்வியலோடு ஒத்து போகுமா என்றால், இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஏனெனில் இங்கு(இங்கிலாந்தில்) திடீர் கரண்ட் கட் என்பது அபூர்வமே, விருப்பமான எந்த தொலைக்காட்சி நிகழ்சியையும் தடை இன்றி பார்த்து மகிழலாம்.

பக்கத்து சீட்டில் யார் அமர்ந்தாலும் அதை பற்றி யாரும் இங்கு கவலை படுவதில்லை, பயண தூரம் கொஞ்சம்தான் மேலும் அவரவர் தமது  கைகளிலுள்ள புத்தகத்தில் கண் பதித்தருப்பதாலும் காதுகளில்  இணைக்கப்பட்டிருக்கும் ஒலிவாங்கி மூலம் தமது விருப்ப   பாடல்களை  கேட்டு ரசித்துக்கொண்டிருப்பதாலும்  அருகில் யார் அமர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.

நன்றாக படித்தும் தேர்ச்சிபெறவில்லை என்றாலும் பெரிதாக யாரும் வருத்தப்படுவதில்லை, அடுத்து வரும் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றுவிடமுடியும் என்ற நம்பிக்கை பலமாக இருப்பதால்.

தண்ட சோறு என்று எந்த தகப்பனும் தன்  பிள்ளைகளை சொல்வதில், ஏனெனில் படிக்கும்போதே பகுதி நேர வேலைக்கு போய்  பிள்ளைகள் தங்கள் செலவுக்கு தாங்களே சம்பாதித்து கொள்வதால்.

மேற்சொன்னவைகூட சாதாரணம்தான் எங்கும் நிகழலாம் , ஆனால்......

எல்லாவற்றிற்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் (பண்டிகை தேதி) SUNDAY அன்று வந்துவிட்டால் இங்கே யாரும் கொஞ்சம் கூட  வருத்தப்படுவதே இல்லை, மாறாக அதை மிகவும் மகிழ்சியுடன் வரவேற்பார்கள்.

ஆச்சரியம்!!!!!....  ஆனால் அதுதான் உண்மை.

அதெப்படி? மேலை நாட்டினர் அந்தளவிற்கு பரந்த மனப்பான்மையும் தியாக உள்ளமும், கடமை உணர்வும்   கொண்டவர்களா? 

அது எனக்கு தெரியாது.

ஆனால் பண்டிகை நாட்கள் சனி ஞாயிறுகளில் வந்தால் அதை பற்றி துளியும் வருத்தப்படமாட்டார்கள் மாறாக மிகவும் சந்தோஷப்படுவார்கள், இரட்டிப்பு மகிழ்ச்சியும்  அடைவார்கள்.

அதெப்படி இரட்டிப்பு மகிழ்சி?

அதாவது இங்கே(இங்கிலாந்தில்) வார இறுதி விடுமுறை(weekend)நாட்கள் பெரும்பான்மையான உலக நாடுகளைப்போல சனிக்கிழமையும் ஞாயிற்று கிழமையும் தான்.

அந்த சனி ஞாயிறுகளில் அரசு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அதற்கு அடுத்து வருகிற வேலை நாள் அதாவது திங்கட்கிழமை அரசு விடுமுறை. என்பது எழுதப்பட்ட விதிமுறை.

இங்கிலாந்தில் வருடத்திற்கு எட்டு நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் , இந்த விடுமுறை நாட்கள் சனி ஞாயிறுகளில் வந்துவிட்டால் , சனி ஞாயிறுகளை கணக்கில் கொள்ளாமல் அடுத்துவருகிற வார நாளை விடுமுறையாக  அறிவித்துவிடுவார்கள்.

உதாரணத்திற்கு:

எந்த ஆண்டாக இருந்தாலும் ஈஸ்டர் என்பது ஞாயிற்று கிழமைதான் என்பது உலகம் அறிந்த ஒன்று , எனினும் அதற்கு அடுத்தநாள் ஈஸ்டர்  Monday  என்ற பெயரில் அரசு விடுமுறை அளிக்கின்றது. அதாவது Good  Friday  என்று சொல்லப்படும் புனித வெள்ளி அன்று அரசு விடுமுறை அதற்கடுத்து வரும் சனிக்கிழமை வார இறுதி விடுமுறை, அதை தொடர்ந்துவரும் ஞாயிற்றுக்கிழமை(Easter Sunday) வார இறுதி விடுமுறை.

அதே சமயத்தில் இந்த ஈங்ஸ்டர் தினம் ஞாயிறாக  இருப்பதால் அதற்கடுத்த திங்கட்கிழமை அரசு விடுமுறை;  அப்படி பார்த்தால் வெள்ளி சனி ஞாயிறு திங்கள் என தொடர்ந்து நான்கு நாட்களை விடுமுறையாக அனுபவிப்பதால் இங்கே பண்டிகை தேதி  Sunday வந்தாலோ  Saturday வந்தாலோ யாரும் கவலைப்படுவதில்லை மாறாக இரட்டிப்பு மகிழ்ச்சிதான் - டேக் இட் ஈஸி பாலிசிதான்.

அதேபோல இந்த ஆண்டு(2021) Christmas  தினமும் அதற்கடுத்த Boxing day வும் சனி மற்றும் ஞாயிறுகளில் வந்ததால் அதற்கடுத்த இரண்டு வார நாட்களாகிய திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமையும் அரசு விடுமுறை.

இப்படி சேர்ந்தாற்போல்  போல் நன்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இரட்டிப்பு மகிழ்சிதான்.

இதேபோல வருகிற 2022 புத்தாண்டுதினம் வார இறுதி சனிக்கிழமை வருவதால் , அடுத்துவரும்  ஞாயிறும் அதை தொடர்ந்துவரும் திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாகிவிடுவதால் சேர்ந்தாற்போல மூன்று தினங்கள் விடுமுறை கிடைக்க பெறுவார்கள்.

எனவே பட்டியலிடப்பட்ட விடுமுறை நாட்கள் சனிக்கிழமை வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலும் இங்கே டேக் ஈஸி பாலிசிதான்.

இப்போ சொல்லுங்க, Christmas விடுமுறையாக சேர்ந்தாற்போன்று  நான்கு நாட்கள் அனுபவித்துவிட்டு அடுத்துவரும் புத்தாண்டு விடுமுறையான தொடர் மூன்று நாட்களை எதிர்நோக்கி காத்திருக்கும் இங்குள்ளோர்  விடுமுறை நாட்கள் எந்த கிழமை வந்தாலும் மனப்பூர்வமாக டேக் இட் ஈஸியாகத்தானே கருதுவார்கள்.

இதில் என்னைப்போன்று மேலும் சிலர் தங்களின் செலவிடப்படாத விடுமுறை(AL) நாட்களில் சில நாட்களை சேர்த்து டிசம்பர் 23ஆம் தேதியில் இருந்து ஜனவரி 3 ஆம் தேதிவரை சுமார் 12 நாட்கள் தொடர் ஓய்வில் இருந்துவிட்டு ஜனவரி 4 ஆம்   தேதிதான்   வேலைக்கு திரும்புவர்..... எத்தனை ஆனந்தம்.?

இதுபோன்ற நடைமுறை வேறு எங்கேனும் இருந்தால் தெரிவியுங்கள்.

நண்பர்களே,

மேற்சொன்ன விஷயங்கள் மட்டுமின்றி வாழ்வில் எந்த சூழலிலும் மனம்  சோர்வடையாமல்  டேக் இட் ஈஸி யாக எடுத்துக்கொண்டு வாழ்வை தொடரும்போது எதுவும் நம்மை நிலைகுலைய செய்வதில்லை என்பது உறுதி.

அனைவருக்கும்  வர இருக்கும் 2022 புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

WISH YOU ALL A HAPPY NEW YEAR 2022!!


நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ. 


1 கருத்து:

  1. சனவரி வந்தால் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் அதுவும் அடுத்த வாரம் அதிக விடுமுறை நாட்கள்...!

    பதிலளிநீக்கு