பின்பற்றுபவர்கள்

புதன், 21 ஏப்ரல், 2021

கனவிதுதான்.......

நிஜமிதுதான்..

நண்பர்களே ,

நியாயமற்ற கோரிக்கையை கூட முன் வைத்து விதிக்கப்பட்ட தடைகளை மீறி ஊர்வலம், மறியல், போராட்டம் பொதுக்கூட்டம் என்று நடத்தி பழக்கப்பட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்தவர்கள் நாம்.

இன்னும் கொஞ்சம் பிரபலமானவர்கள், ஊரில் கொஞ்சம் வசதி வாய்ந்தவர்கள், கொஞ்சம் கூடுதலான  அங்கீகாரமும் அறிமுகமும்  கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளின் / பொது மக்களின் கவனத்தை ஈர்க்க எதுவும் செய்வார்கள் என்பது நாம் பார்த்து பழகிவிட்ட ஒன்றுதான்.

இப்படி இருக்க , அரசியல் கட்சிகளில் உள்ள கீழ் நிலை பிரமுகர்கள் துவங்கி, முதல் கட்ட, இரண்டாம் கட்ட , மேல் மட்ட தலைவர்கள் வரை தாங்கள் நினைத்தால் எந்த சட்டத்தையும்/தடையையும்  மதிக்காமல் தங்கள் விருப்பப்படி, தமது சகாக்களை  கூட்டி, கண்டன பொதுக்கூட்டம், பாராட்டு கூட்டம், கட்சி கொள்கை(??!!) விளக்கக்கூட்டம், வாகன அணி வகுப்பு  என்று நடத்துவதையும் பார்த்திருப்போம்.

நாடு முழுவதும்  ஊரடங்கு அமுலில் இருந்த சமயத்தில் கூட சக்தி வாய்ந்தவர்கள் நடத்திய ஆடம்பர திருமண நிகழ்வுகளும், பிறந்த நாள் விழாக்களும் ஆங்காங்கே நடைபெற்றதையும் அறிவோம்.

இந்த இந்த நிகழ்வுகளுக்கு அதிக பட்சம் இத்தனை பேர்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்ற தடை உத்தரவு இருந்தபோதும் அதனை மீறி பல நூறு பேர்கள், ஆயிரம் பேர்கள் என கூட்டப்பட்ட  விசேஷங்கள்  நடந்ததும் நாம் அறியாமல் இல்லை.

உள்ளூர் பிரபலங்களே  இப்படி செய்யும்போது, அதற்கும் மேலே உள்ள பலம் வாய்ந்தவர்களும் அவர்களது கூட்டமும் என்னென்ன செய்வார்கள்?

சில நேரங்களில் தங்களுக்கு வேண்டுமென்றால் சட்டத்தையே வளைத்து, அல்லது இலகுவாக்கி தாங்கள் நினைக்கும் காரியங்களை செய்து கொள்ளும் அரசு அதிகாரம் மிக்க ஆளுமைகள்  என்னதான் செய்ய  மாட்டார்கள்?

அப்படிதான் கடந்த சில நாட்களுக்கு முன் இயற்கை எய்திய, இந்தியா உட்பட உலகையே தமது சிங்காசனத்தின் கீழ் நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த, இங்கிலாந்து அரச குடும்பத்தின் தற்போதைய அரசியாரின் கணவரின் நல்லடக்க வைபத்தன்று பல லட்சம் மக்கள்   தங்கள் இறுதி மரியாதையை செலுத்தும் வண்ணம் , அமுலில் உள்ள ஊரடங்கு விதிகளை தளர்வு செய்து உத்தரவு பிறப்பிக்க கூடும் என நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. 

பியூனெரல் என்று சொல்லப்படும் நல்லடக்க ஆராதனையில்  அதிக பட்சம் 30 பேர்கள் வரைதான் அனுமதி என்பது  பல மாதமாக இருக்கும் அரசு உத்தரவு. இது ஏற்கனவே அமுலில் உள்ள நடைமுறை.

எனினும் பனிரெண்டு நாட்களுக்கு முன், சர்வ அதிகாரமிக்க, நாட்டின் ராஜ  குடும்பத்தில்  நிகழ்ந்துவிட்ட இந்த துயர சம்பவத்தினை அடுத்து தீர்ப்புகள் திருத்தப்படலாம், அல்லது சட்டங்கள் வளைக்கப்படாலாம் என நினைக்க தோன்றியது பெரும்பான்மையானவர்களுக்கு.

தங்களின் அதிகாரம் ஆளுமை,செல்வாக்கை பயன்படுத்தி உலகம் முழுவதிலும் இருந்து , உலக தலைவர்கள், காமன் வெல்த் நாடுகளின் பிரதி நிதிகள், சிறப்பு விருந்தினர்கள், அரசாங்க பிரதிநிதிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள்,  அமைச்சர்கள், மேட்டுக்குடி சீமான்கள்- சீமாட்டிகள் என பலரையும் வரவழைத்தும் உள்ளூர் குடிமக்களையும் அனுமதித்து ஆடம்பர அலங்கார ஊர்வலங்கள் நடத்தி இறந்த இளவரசரின் இறுதி யாத்திரை நடைபெறும் என பலரும்எதிர்பார்த்தனர்

ஆனால் நடந்தது என்ன?

நீதியின் முன் எல்லோரும் சமம் , கோமானுக்கும்  சாமானியனுக்கும்  ஒரே சட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறாமல், வெளி ஆட்களான ஆராதனை நடத்தும் பிரமுகர்கள் இருவர் தவிர ஏனைய குடும்ப மக்கள் மட்டுமே பங்கு பெற்ற பாதுகாப்பு முறைமைகளை சற்றும்  தளர்வில்லாமல் பின்பற்றி மிக மிக எளிய முறையில் நடந்த அந்த நல்லடக்க ஆராதனையை  தொலைக்காட்சி வாயிலாக உலகம் முழுவதும்  பார்த்து வியந்தவர் கோடி.

அதில் சிறப்பு என்ன வென்றால், நாட்டின் பிரதமருக்கு கொடுக்கபட்ட அழைப்பை , ராஜ குடும்பத்து உறுப்பினருக்காக விட்டுக்கொடுத்து அந்த நிகழ்ச்சியை தானும் தொலைக்காட்சி வழியாகவே பார்த்து தமது அஞ்சலியை செலுத்தினார் என்பது உலக சரித்திரத்தில் பொன்னெழுத்தில் பதித்து பாதுகாக்கப்படவேண்டிய  சட்டத்தை மதிக்கும் உயரிய பண்பு.

ராஜ குடும்பம் கேட்டிருந்தால் அல்லது நினைத்திருந்தால்  பாராளுமன்றம் மூலம்  ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி  கட்டுப்பாட்டு தளர்வை ஏற்படுத்தி இருக்கலாம்,

ஆனால் , நோய்த்தொற்றின் காரணமாக அரசு விதித்திருந்த கட்டுபாட்டிற்கு ராஜ குடும்பமும் கட்டுப்பட்டு நடந்துகொண்டது அனைவரது கவனத்தையும் கவனமா ஈர்த்தது.

நம்ம ஊரில், மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன்  சட்டி என்றொரு பழமொழி உண்டு. ஆனால இங்கே இந்த விஷயத்தில் அரசனுக்கும் ஆண்டிக்கு ஒரே நியதியும் கட்டுப்பாடும் சட்டமும்  என்பதை காணும்போது உள்ளம் பூரிக்கின்றது.

இன்னும்  இரண்டு மாதங்கள் கடந்திருந்தால் தமது நூறாவது ஆண்டை கொண்டாடி இருப்பார்  இளவரசர்;  அதற்குள் மறைந்துவிட்டாலும் ராஜ குடும்பத்தின் இந்த கண்ணியமிக்க செயல்  நூற்றாண்டுகளாக  வரலாற்று நினைவுகளில் கொண்டாடப்படும்.

அன்றிரவு வலுக்கட்டாயமாக  கண்ணை மூடிக்கொண்டு கனவிலாவது இப்படி ஒரு கட்டுப்பாடு நம்ம ஊரில் நடக்குமா என  மிகவும் வாஞ்சையோடு காத்திருந்தேன்  ...கனவும்  வந்தது ... வந்த வேகத்தில் என் தூக்கமும் கலைந்தது.

 அப்படி என்ன கனவு?

சமூக இடைவெளிக்கு "இடைவேளை"  கொடுத்துவிட்டு ஒருவர் தோளோடு ஒருவர் உராய்ந்தவண்ணம் பெருந்திரளான மக்கள் கூட்டம்.. பரபரப்பாக ,முகக்கவசம் இன்றியும் மாசு நிறைந்த  தூசி சாலையில்  இருமலோடும் தும்மலோடும்...   வாழ்க!  ஒழிக!!. எனும் பேரிரைச்சல் கோஷத்தோடும்  வாகன  போக்குவரத்தை பாதித்தும்  ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும்  வழி கொடாமலும் ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்த பின்னணி சத்தம் கேட்டு என் தூக்கம் தொலைந்ததுதான் மிச்சம்.

ரொம்ப ஆசை பட்டுவிட்டேனோ?  என் கனவில்  வந்ததுதான்  காலத்திற்கும்  நிஜமாகவே இருக்குமோ  நம்ம ஊரில், மாற்றத்திற்கு வாய்ப்பு இருக்குமா என்றேனும் ?

இளவரசர் பிலிப் அவர்களின் மறைவிற்கு  அஞ்சலி செலுத்தி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி. 

மீண்டும் ச(சி )ந்திப்போம் 

கோ 


10 கருத்துகள்:

 1. இளவரசருக்கு அஞ்சலிகள்!

  உங்கள் ஊரில் கடைபிடிக்கப்படும் விதிகள் நம்மூரில் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். இங்கு சமீபத்தில் நடந்த கூட்டங்கள் பிரச்சாரங்கள் திருவிழாக்கள் தொற்று அதிகரிக்கக் காரணம். அதுவும் மாஸ்க் இடைவெளி என்பதெல்லாம் எதுவுமே இல்லை..

  மக்கள் விழிப்புணர்வு மிக முக்கியம். ஆனால் நம் ஊரில் சுய அறிவு சுயக்கட்டுப்பாடு இல்லாததால் அரசு கண்டிப்பாக பல தடைகள் கொண்டு வர வேண்டிய அவசியமாகிறது. ஆணைகள் பிறப்பிக்கத்தான் வேண்டி யுள்ளது. அப்படிப் பிறப்பித்தால் மக்கள் உடனே அரசைக் குற்றம் சொல்லி தங்கள் வாழ்வாதாரமே போய்விட்டது என்று தூற்றுவார்கள்/. மக்கள் திருந்தாத வரையும் எதுவும் பயனில்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய அம்மையீர்,

   தாங்களும் திருமிகு. துளசிதரன் ஐயா அவர்களும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

   போடப்படும் சட்டங்களை மக்கள் மதிக்காதவரை எந்த சட்டமும் எவரையும்
   ஒன்றும் செய்ய முடியாது. என்னதான் அபராதம் விதித்து தண்டனைகள் கொடுத்து சட்டத்தை பின் பற்ற வைக்க முயற்சித்தாலும் அனைவரும் ஏற்று செயல் படுத்தாத வரையில் இயற்றப்படும் சட்டங்கள் அர்த்தமற்றவையே.
   கட்டுப்படாததன் பக்க விளைவுகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என அறிந்தும் அலட்சியப்போக்கோடு செயல் படும் மக்களின் மனநிலை மாறவேண்டும். முக கவசமும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தமக்கு முக்கியமோ இல்லையோ தமது வீட்டில் இருக்கும் நமது அன்பிற்குரியவர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்று கருதினால் வெளியில் செல்லும் அனைவரும் குறைந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும். நல்ல கனவு இனியேனும் வருமா?
   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. முன்பிருந்த எச்சரிக்கை உணர்வு, தற்போது இரண்டாவது அலையின்போது, மிகவும் குறைந்துள்ளது. அதைவிட அலட்சியத்தன்மை மேலோங்கியுள்ளது. நாமாக கட்டுப்பாடோடு இருப்பதுதான் இப்போதைய சூழலுக்கு மிகவும் சிறந்தது. நான் (இரு தவணை) தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டுவிட்டேன். நண்பர்களை போட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.
  தேர்தல், வழிபாட்டுத்தலங்கள் திறந்துவிடப்படல், விழாக்களில் மக்கள் அதிகக்கூட்டம், கூட்டங்களுக்கான கட்டுப்பாடு இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களே எண்ணிக்கை பெருகக்காரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா அவர்களுக்கு அநேக நமஸ்காரங்கள்.

   இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதோடு நண்பர்கள் உறவினர்களையும் ஊக்கப்படுத்தும் தங்களது சமூக அக்கறையும் பார்வையும் வெகுவாக பாராட்டப்படவேண்டிய ஒன்று.
   தங்கள் சொல்வதுபோல் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடனும் சுய பொறுப்புடனும் நடந்து கொள்வது நல்லது. அதேபோல தேர்தல் நேரத்து கட்டுப்பாடு தளர்வு இந்த இரண்டாம் அலைவரிசையின் வீரியத்திற்கு காரணமென்பதை தங்களைப்போலவே பலரும் முன்மொழிந்து வழிமொழிந்து அங்கீகரிக்கின்றனர்.
   முன்பிருந்ததைவிட எச்சரிக்கை உணர்வும் அச்ச உணர்வும் வெகுவாக குறைந்துள்ளதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் பலதரப்பட்ட (ஆதாரமற்ற) செய்திகளும் ஒரு முக்கிய காரணமென நான் கருதுகிறேன். நல்லது நடக்க இறைவனை பிராத்திப்போம்.

   வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா

   நீக்கு
 3. பதில்கள்
  1. மக்களின் மனம் மாறாதவரை மாற்றத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் தரும், ஏமாறப்போவது யார் என்று உணராமலேயே. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்று.
   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி தனபால்.

   நீக்கு
 4. அரச குடும்பத்தினரின் செயல் போற்றுதலுக்கு உரியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அவர்களது இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியதுதான்.
   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.

   நீக்கு
 5. இப்படி இங்கே நடக்க வாய்ப்பே இல்லை. இங்கே இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் தான் அதிகம். அங்கே இருக்கும் அரச குடும்பத்தினரும், அரசும், மக்களும் பாராட்டுக்குரியவர்களே!.

  பதிலளிநீக்கு
 6. வாய்ப்பே இல்ல (வெங்கட்நாக) ராஜா! எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கு. எல்லாவற்றிலும் ஆதாயம் தேடும் மன நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் சூழ்ந்த இந்த சுயநல உலகில் நம் எதிர்பார்ப்பு சாத்தியம் தானா என யோசிக்க தோன்றுகின்றது..

  கண்டிப்பாக அரச குடும்பம் பாராட்டுக்குரியதே.

  வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு