பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஞான தங்கமே!!


பார்க்கும் பராக்கும்.

நண்பர்களே,

ஏழாம் வகுப்பு வரை கால் நடையாகவோ அல்லது அவ்வப்போது மழை காலங்களில் பேருந்துகளிலோ பள்ளிக்கூடம் மற்றும் சில  தூரம் குறைந்த  இடங்களுக்கும் சென்று வருவது  வழக்கம்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்துதான், எங்கள் பெரியப்பா வாங்கி கொடுத்த புதிய மிதி வண்டியில் , பள்ளிக்கூடம் செல்வது சாத்தியமானது.

(எட்டாம் வகுப்பு வயதில், புதிய மிதிவண்டி என்பது எனக்கு சார்ட்டர் விமானத்திற்கு சமமானது. - நன்றி பெரியப்பா.)

பள்ளிக்கூடத்தில் மிதி வண்டிகளை நிறுத்துவதற்கு, மாணவர்களுக்கு ஒரு பக்கமும் ஆசிரியர்களுக்கு ஒரு பக்கமுமாக நிர்ணயிக்கபட்ட சிமெண்ட் கூரை வேயப்பட்ட  ஒரு இடம் இருந்தது. மாணவர்கள் தங்கள் மிதி வண்டிகளை அவர்களுக்கான  பகுதியில் எங்கு  வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். 

மிதி வண்டி இருக்கின்ற காரணத்தால் நண்பன் ராஜ கோஜாலுடன்( இது என்ன பெயர் கோஜால்?!!----காஜலை/கஜோலை அங்கீகரிக்கும் நாம் கோஜாலை ஏற்கமுடியாதா என்ன?) வீட்டிலிருந்து கொஞ்சம் தூரத்திலுள்ள திருப்பதி ஏழு மலையானின் மற்றுமொரு பெயர் கொண்ட திரை அரங்கம் சென்றோம்.

சென்ற இடத்தில் மிதி வண்டியை அதற்கென இருந்த இடத்தில் நிறுத்துமாறு திரை அரங்க ஊழியர் சொல்ல நாங்களும் அந்த இடத்திற்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு அதன் பூட்டை பூட்டினோம்(பெரியப்பாவின் அறிவுரை - எங்கு நிறுத்தினாலும் முதல் வேலையாக வண்டியை பூட்டவேண்டும்).

அப்போது எங்கள் அருகில் வந்த ஒரு நபர் எங்கள் மிதி வண்டியின் பிரேக்கை அழுத்தி அதில் ஒரு அட்டையை சொருகி வேறொரு அட்டையை என் நண்பனிடம் கொடுத்து இருபது பைசா கேட்டார்.

என்ன?... ஏது?... யார்?...  ஏன்?... என புரியாமல் குழம்பியபடி  அட்டையை உற்று பார்த்ததில் அதில் ஒரு எண் எழுதப்பட்டிருந்தது, மிதி வண்டியின் பிரேக்கில் சொருகப்பட்டிருந்த அட்டையிலும் அதே எண் எழுத பட்டிருந்தது.  இப்போது எங்கள் குழப்பம்   அதிகமாகி, விசாரித்ததில் , இது மிதி வண்டிக்கான பாஸ் , இங்கே நிறுத்த நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் என பதில் கூறி பணம்(!!) கேட்டார்.

மிதி வண்டி நிறுத்த கட்டணமா?  பள்ளி கூடத்தில் இப்படி ஒரு விஷயமே இல்லையே?... ?  தம்பி சீக்கிரம் கொடுங்க படத்துக்கு நேரமாச்சு.

சரி ஏன் இரண்டு அட்டையிலும் ஒரே எண்?  அதாவது நீங்கள் படம் முடித்து திரும்பி வந்து வண்டியை எடுத்துனு  வெளிய வரும்போது இந்த இரண்டு அட்டைகளிலும் ஒரே எண் இருந்தால்தான் உங்களை வெளியில் விடுவோம் .. இல்லாவிட்டால் உங்கள் அட்டையை சரி பார்த்து சரியான வண்டியை கண்டு பிடித்து எண்களை சரி பார்த்துதான் அனுப்புவோம்.

அப்போ இந்த அட்டையையும் மிதி வண்டியின் இன்னொரு பிரேக்கில் வைக்கணுமா?

தம்பிகளா....இந்த அட்டை உங்களுக்கு .. இதை  உங்கள் பாக்கட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.. இதுதான் முதல் தடவையா...?  ஆமாம் அண்ணே  அதான் எங்களுக்கு தெரியல.

சரி ..சரி..  காசு கொடுங்கள்....

காசு கொடுத்தபின்னர் மீண்டும் மிதி வண்டியின் பாதுகாப்பு தன்மையையும் இரண்டு அட்டைகளிலும் ஒரே எண் இருப்பதையும் உறுதி செய்துவிட்டு , இடைவேளை நேரத்தில் முறுக்கு  வாங்க வைத்திருந்த இருபது பைசா இப்போது மிதி வண்டி நிறுத்த கட்டணமாகி விட்டதே என வருத்தத்துடன் மீண்டும் அந்த அட்டையை திருப்பிப்பார்க்க.. அது ஒரு சிகரெட்டு பாக்கட்டின் அட்டை.  மிகுந்த தயக்கத்துடன்(புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது , அதன் அட்டையை வைத்திருப்பது நம் நற்பெயருக்கு தீங்கானது) அதை அரை கால் சட்டை பையில் வைத்து கொண்டு அரை மனதுடன் படம் பார்த்துவிட்டு சரியான மிதி வண்டியுடன் வீடு திரும்பினோம்.  

பள்ளிக்கூடத்து கட்டணமில்லா மிதி வண்டி நிறுத்தத்தில் தொடங்கி  இன்றுவரை பல பல , வகை வகையான வண்டிகள் நிறுத்தத்தில் பல பல ஊர்களில் பல பல நாடுகளில் , உணவு விடுதிகள், திரை அரங்குகள், கல்விக்கூடங்கள், வேலைஸ்தலங்கள்முதல் விமான நிலையம் வரை , மிதி வண்டி, இரண்டு  மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி பழக்கப்பட்டிருந்தாலும் கடந்த வாரம் ஒரு வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட அனுபவம்போல் என் வாழ்வில் நிஜத்தில் மட்டுமல்ல  கனவில் கூட நிகழ்ந்ததில்லை..

அப்படி என்ன  அனுபவம் நிகழ்ந்தது?  சொல்லாமல் விடுவேனா?... அல்லது சொல்லும்வரை  நீங்கள்தான் விடுவீர்களா?

வாகன நிறுத்தத்தில் நாளைவரை காத்திருங்கள், வருகிறேன் வேகமாக. 

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


4 கருத்துகள்:

  1. hi hi சார்

    எப்படி இருக்குரீங்க?
    கடைசியாக தீபாவலிக்கு; புத்தாண்டுக்கு; பொங்கலுக்கு மட்டும்...
    இந்த பக்கம் தலை காட்டிட்டு
    ரொம்பநாளா பார்க்க முடியலியே?
    பதிவின் ஃபைனல் டச் பழைய கோவை நினைவுபடுத்தியது!

    என்னுடைய பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கு
    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      நலமுடன் இருக்கிறேன்

      பணிச்சுமையும், சில பல நிகழ்வுகளும் பதிவுகளின்பால் செல்ல அவகாசம் அளிக்காததால் விழா காலங்களில் வாழ்த்துக்களை மட்டும் சொல்லும் அளவுக்கு சமயம் வாய்த்தது, மற்றபடி பதிவுகள் பக்கம் தலை வைக்கக்கூடாது என்ற சபதமோ சத்தியமோ செய்யவில்லை என்பதை சத்தியம் செய்து சொல்ல தயார்.

      வருகைக்கும் மிக்க நன்றி மகேஷ்.

      விசேஷம் ஏதேனும்......!!!???

      கோ.

      நீக்கு
  2. துளசிதரன்: நல்ல அனுபவம். காத்திருக்கிறோம் என்ன என்று அறிய.

    கீதா: ஆஹா கோ மீண்டும் வருகை...மகிழ்ச்சி பின்ன மிதிவண்டி உங்களுடையதுன்னு எப்படித் தெரியும் யாராவது மாத்தி எடுத்துக் கொண்டு போய்ட்டா? அதுக்குத்தான் பாஸ்...

    என்னா ஆகியிருக்கும்? நேற்றைய தினத்தை நினைத்துப் பார்க்கும் போது மனதில் என்னென்னவோ தோனுது சரி வேண்டாம் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு காத்திருக்கிறோம்..அதுவும் வண்டி இருக்கும் இடத்தில் ஒளிஞ்சுருந்து பார்க்கறோம்...நீங்க இங்க கரெக்டா சொல்லப் போறீங்களா இல்லையானு....ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      என்னுடைய வருகைக்கண்டு உளமார மகிழும் உங்களின் பவித்ர நட்பிற்கு முதலில் என் தலை வணக்கம்.

      பதிவுலகில் நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது நான் நடைவண்டி பிடித்து நடக்க தொடங்கியவன். அப்படி நடைவண்டி பழகும் என்னை கைபிடித்து வழி நடத்தும் தங்களின் ஊக்கமும் உற்சாகமும் இனி வரும் காலங்களில் குறைந்தது சைக்கிளில் அரை பெடல் அடிக்கும் அளவேனும் என்னை உயர்த்தும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. மறந்தும் கைவிடாதீர்கள் அப்புறம் பேலன்ஸ் இல்லாமல் விழுந்துடப்போறேன்.

      நான் என்ன சொல்லப்போகிறேன் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும் என்பது இந்த உலகிற்கே தெரியுமே.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நட்புடன்

      கோ

      நீக்கு