பின்பற்றுபவர்கள்

சனி, 11 நவம்பர், 2017

கழுவி... கழுவி....

ஊற்று!!!

நண்பர்களே,

சமீப காலமாக இந்த வார்த்தை தொடரினை  சமூக   வலை தளங்களிலும்   , ஊடகங்கள் வாயிலாகவும் பேச்சு  மொழியாக  கேட்க முடிகிறது.

இப்படி "கழுவி கழுவி ஊற்றுவது"..எனும் சொற்றொடருக்கு , நான் புரிந்துகொண்ட வகையில்:

பதில் சொல்ல முடியாதபடிக்கு ஒருவர்  மற்றொருவரிடம் கேள்விகள் கேட்பதும் எழுத்தில் பதிக்ககூடாத , கேவலமான ஆபாச வார்த்தைகளாலும் விமர்சனங்களாலும் மற்றவரை திணறடிப்பதும் , அதனால் அவருக்கு தலை குனிவை எற்படுத்துவதுமே என நினைக்கின்றேன்.

இப்படி சிலரால் மற்றவருக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலைமையை எண்ணி நான் வருத்தப்பட்டதுண்டு.

ஏன் இப்படி செய்கிறார்கள், இப்படி சிலரை "கழுவி கழுவி ஊற்றுவதில்"  இவர்களுக்கு என்ன மகிழ்ச்சி, லாபம் என நினைப்பதுண்டு.

இந்த "கழுவி கழுவி ஊற்றுவது"  என்ற சொற்றொடர் பழங்காலத்திலிருந்து சொல்லப்படும் வாழையடி வாழையான சொற்றொடராக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.  இதில் மாற்று கருத்து யாருக்கேனும் இருக்குமாயின் தயவாக எனக்கு தெரிய படுத்துங்கள்.

இந்த சொற்றொடர் பழமையானதா அல்லது புதிதானதா என்பதை நோக்கி அல்ல  இந்த பதிவின் பயணம்.

மாறாக இதுபோன்ற அவலமான செயல் தேவைதானா?  இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள், நாகரீக மனிதர்கள்தானா  எனும் கேள்வி என் மனதில் அவ்வப்போது இதுபோன்ற தலைப்புகளில் காணும்போதெல்லாம் தோன்றுவதுண்டு.

இப்படி ஒவ்வொரு முறை இதுபோன்ற செய்திகளை , காணொளிகளை காணும்போதெல்லாம் வருத்தப்படும் நானே  இரண்டு நாட்களாக " கழுவி கழுவி ஊற்றும்படியான நிலைமைக்கு  தள்ளப்பட்டேன் என்பதை என்னாலே  நம்ப முடியவில்லை,  அதுவும்   வாய்பேசாத.... ஒரு ..... 

ஆம் நண்பர்களே,

சொல்வதற்கே  நா... கூசுகிறது... எனினும் நண்பர்களாகிய உங்களிடம் சொல்லுவதில் வெட்கம் கூடாது என்பதற்காக வெட்கத்தை விட்டு சொல்லுகிறேன்.

சில நாட்களுக்கு  முன் இந்தியாவிலிருந்து திரும்பி இருந்த நெருக்கமான நண்பர் செய்த புண்ணியத்தால் நான் இப்படி "கழுவி கழுவி ஊற்ற"வேண்டியதாயிற்று.

விடுமுறையில் ஊருக்கு சென்றவர் என்னிடம் கடனாக , கைமாற்றாக பணம் பெற்று கொண்டு,  போய்வந்தவுடன் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டாரோ என நினைக்க வேண்டாம்.

அவர் ஊரிலிருந்து கொண்டுவந்து கொடுத்த சில வெகுமானங்கள், பலகாரங்களுடன் சேர்த்து கொடுத்த மற்றுமொரு "வஸ்த்துவே" நான் இப்படி கழுவி கழுவி ஊற்றும்படி செய்தது.

அதாவது என் தந்தையார்( இன்று  அவரது நினைவு நாள்) பழக்கப்படுத்திவிட்ட வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் ஊரிலிருந்து புலம் பெயர்ந்தவுடன் ,  என்னிடமிருந்து புலம் பெயர்ந்துவிட்டது, காரணம் நான் வாழும் நிலத்தில் வாழை இலை  கிடைப்பதில்லை.

என் விருப்பத்தை அறிந்துகொண்ட நண்பர் எனக்காக நான்கு வாழை  இலைகளை வாங்கி வந்திருந்தார்.

மூன்று நாட்கள் இரவு உணவின்போது மூன்று இலைகளை மகிழ்ச்சியோடு உபயோகித்தேன்.

நான்காவது நாள் இரவு கடைசி இலையில் சாப்பிட்டு முடிக்கும்போது, இதுபோன்று வாழை இலையில் இனி சாப்பிட வாய்ப்பு கிடைக்காதே என்று சோர்வுடன் சாப்பிட்டு முடித்த என் மனதில் பளீச் என்று ஒரு யோசனை தோன்றியது.

அதாவது  சாப்பிட்டு முடித்ததும் இந்த இலையை அப்படியே கழுவி துடைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து மீண்டும் பயன் படுத்தினால் என்ன?

மண்டையில் இந்த யோசனை பிரகாசமான பல்பை எரிய வைத்தது.

சேலை முள்ளின் மீது விழுந்தாலும் முள் சேலை மீது விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தானே என்று சொல்வார்களே  , அதனடிப்படையில் , முள் கரண்டி இதன் மேல் படாமலும் , இலை கூர்மையான பொருள்களின் மேல் படாமலும்  இலையை எந்த பாதிப்பும் இல்லாமல் பக்குவமாக எடுத்து சென்று நன்றாக  கழுவி  சுத்தம் செய்து, உலர்ந்த துவாலையால் துடைத்து பக்குவமாக சுற்றி குளிர் சாதன பெட்டியில் வைத்துவிட்டேன்.

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அவ்வாறே கழுவி கழுவி பயன்படுத்திவிட்டு நேற்று இரவோடு அந்த இலைக்கு நன்றி பெருக்கோடு விடை  கொடுத்தேன்

சுவையோடு தொப்பை நிரப்ப உதவிய அந்த வாழை இலையை குப்பை தொட்டியில் போடுவதற்குமுன் அதற்கு good-bye  சொல்லிவிட்டு  அதனை ஒரு புகை படமும்  எடுத்து கொண்டேன்.

Image result for vazhai ilai

இந்த நிகழ்சியை முன்னிலை படுத்தி என்னை யாரும் "கழுவி கழுவி ஊற்றமாட்டார்கள்" என  உறுதியுடன் நம்புகிறேன்..

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள்; இது பாராட்டா... இல்ல கழுவி ஊத்தறமாதிரியா?.

   கோ

   நீக்கு
 2. இதுதான் அந்த கழுவி கழுவி ஊற்றலா? மனம் படுத்தும் பாடு. மற்றொரு புறம் ஆசை. தவறில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

   என் ஆசையை அங்கீகரித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 3. ஏன் இப்படி செய்கிறார்கள், இப்படி சிலரை "கழுவி கழுவி ஊற்றுவதில்" இவர்களுக்கு என்ன மகிழ்ச்சி, லாபம் என நினைப்பதுண்டு.// ஆம் கோ! இப்படி நினைப்பதுண்டு. கீழ்த்தரமான செயல் என்றும் நினைப்பதுண்டு.

  உங்கள் கழுவி ஊற்றல் வாழை இலை படத்தைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது!!! அதைத்தான் க ஊ இருப்பீர்கள் என்று!! அதைத்தான் இப்படி எப்பவும் போல ஹிஹிஹிஹீ..

  நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்று சொல்ல வந்தது!!!

  முன்பெல்லாம் வீட்டில் ஏதேனும் அரைத்த பிறகு உரலையோ, மிக்சியையோ நன்றாகக் கழுவி ஊத்து என்பார்கள். அதாவது கழுவிய நீரை எது அரைத்து வழித்தோமோ அந்தப் பாத்திரத்தில் ஊற்று என்பார்கள். பாருங்கள் ஆனால் இப்படி நல்ல வார்த்தைகள் எல்லாம் இப்போது எப்படி ஆகிவிட்டது என்று! வீட்டில் பயன்படுத்தினால் மறைமுகமாக ஏதேனும் சொல்லுகிறார்களோ என்று நினைக்க வைத்துவிடுகிறது!!ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.
   கழுவி ஊற்றுவதில் நீங்களும் கைதேர்ந்தவரென்று சொல்லுங்க.

   கோ

   நீக்கு