பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 28 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--4


 மௌன சம்பாஷணை!!.

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--3

தான் வருவதற்குள் -  தன்னை காண்பதற்குள் கண்மூடிப்போன அம்மாவை மண்மூட காத்திருக்கும் கந்தக செய்தியால் பேரதிர்ச்சியில் மூழ்கி இருந்தவர் தன்னிலை மறந்தவராய், தன் தாயாரின் ஆன்மாவோடு மானசீகமாக தன் மனதிற்குள் பற்பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாராம்.

தனது சிறு  வயதில் அம்மாவிடம் பேசிய பேச்சுக்கள், அவரிடம் பெற்ற அறிவுரைகள், கற்ற பாடங்கள்,கண்டிப்புடன் கூடிய அன்பான அரவணைப்புகள், உணவு முறைகள், உடை,  சுகாதாரம்மற்றும்  உறவுகளை பேணும் பக்குவம், இறைபக்தி, பிறர்க்குதவும் குணம்,வறுமையில் செம்மை,ஏழ்மையில் நேர்மை போன்ற ஏற்றமிகும் எண்ணற்ற உயர் குணங்களை தமக்கு பயிற்றுவித்த தமது அம்மாவின் வாழ்வை எண்ணி எண்ணி கலங்கிய மகன், கவிதை பிரியரான தன் அம்மாவின் ஆன்மாவோடு  மௌனமாக சம்பாஷித்த செய்திகளின் சில துளிகள் இதோ  மறுபடியும்:

அம்மா,

"ஈன்றெடுத்து அமுதூட்டி
இணையில்லா அன்பு கூட்டி
சான்றோராய் எமை பேண
சளைக்காமல் தினமுழைத்து - கால்
ஊன்றியே இவ்வுலகில்
உயர்ந்தோராய் எமை நிறுத்தி
உன்னத வாழ்வளித்தாய் - நான்
விடை கொடுக்க வருமுன்னே 
விண்ணகம் ஏகிவிட்டாய் - அணையா
விளக்கொளி ஆகிவிட்டாய்.

கலங்கரை விளக்கெனவே
கடலிடை கலன்கள் எம்மை
களங்கமில்லா அக்கறையால்
இக்கரைக்கு கொண்டுவந்தாய். 

இக்கரையில் சுகவாழ்வு
எய்துகின்றவேளையிலே
இக்கரையில் நிர்கதியாய்
எமை நிறுத்தி
அக்கரைக்கு போனதேன் 
அத்தனை சடுதியில்?

வெளியில் போகும்போது
"போகிறேன்" என சொன்னால்
"போய் வருகிறேன்" என சொல்லச்செய்து
பிழைத்திருத்தம் செய்யவைப்பீர் -ஆனால்
"போகிறேன்" என்றுகூட என்னிடம்   
  சொல்லாமல் போனதென்ன
ஞாயம் அம்மா?

ஆண்டவன் கட்டளை துவென்றால் - அதை
அணையிட்டு  தடுத்திட கூடிடுமோ?
மீண்டும் வேண்டும் நீர் எம் வாழ்விலெனும் -எம்
வேண்டுதல் இறை செவி சேர்ந்திடுமோ?

வருவோமே  நாங்களும் 
ஒரு நாளாம் திருநாளில்
மறுவாழ்வில் ஸ்பரிசிக்க-உம்மை
முகமுகமாய் தரிசிக்க.

அதுவரை,

அன்பு, கருணை,சாந்தம், தயவு எனும்
 உமது அத்தனை நற்குணங்கள்
இம்மையில் எமை நீங்கா
வரம் எம்மை சேரவேண்டும்.

எதை கூறி நன்றி சொல்வேன்?

எமக்காய் அர்ப்பணித்த - உமது
ஈடற்ற வாழ்விற்காய் - எமது 
உள்மூச்சு நிற்கும்வரை
ஓயாமல் நன்றி சொல்வேன் 

நன்றி! நன்றி!! நன்றி!! அம்மா
உமது ஆன்மா இனிதே இளைப்பாறட்டும்
இறைவனின்   இணையடி நிழலில்".

அந்த அன்பு தாயாரின்  ஆன்மா இறைவனின் இன்னடியில்  இளைப்பாற என்னோடு சேர்ந்து நீங்களும் இறைவனிடம் வேண்டிகொள்ளவீர்கள் என நம்புகிறேன்.

பதிவின் தலைப்பிற்கிணங்க "அம்மா இங்கே வா! வா" என நாம் எத்தனை முறை அழைத்தாலும் மரித்தவர்கள் இனி வரப்போவதில்லை; மாறாக இந்த பதிவின்முதல் பாகத்தில் குறிப்பிட்டிருக்கும் உப தலைபிற்கிணங்க  நாம் தான் அவர்களிடம் செல்லவேண்டும் என்பதே  நிச்சயமான உண்மை.

உலக நியதி எனும் மாயங்கள்  விளைவிக்கும் இதுபோன்ற ஆற்றொன்னா   காயங்கள், மேலும் ரணமாகாமல்,  காலப்போக்கில் ஆறுதல்- எதார்த்தம்-நிதர்சனம் எனும் களிம்புகளால், குணமாகவேண்டும் என்பது வேண்டுதலாகவும் மனதிற்கு ஆறுதலாகவும் அம்மாவை இழந்து துடிக்கும் அவர்தம்குடும்பத்து மக்களுக்கு அமையட்டும் என கூறி இந்த பதிவினை கலங்கிடும் கண்களோடும்  - கனத்த இதயத்துடனும்  நிறைவு செய்கிறேன்.

நன்றி.

 மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

(முன் குறிப்பை குறித்த) பின்குறிப்பு:

என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பரிட்சயமானவரும், என் நிழலாக விளங்குபவரும்  வெளி நாட்டில் வசித்துவருபவருமான ......

சரி,  யார் அந்த உங்களுக்கு மிகவும் பரிட்சயமானவர்?

சொல்லி இருக்கிறேன், அவர் பெயரை, என்னுடைய  ஒவ்வொரு  பதிவின் இறுதியிலும், ஒற்றை எழுத்தில்.

8 கருத்துகள்:

  1. அந்த அன்னை புண்ணியம் செய்தவர் இப்படியொரு மகனைப் பெற! ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சுரேஷ், அந்த மகன்தான் புண்ணியம் செய்திருக்கவேண்டும் இப்படிப்பட்ட தாயை பிறவியில் பெற்றதற்கு.


      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. மீளாத் துயர்தான்... தேற்றுங்கள் அவரை

    பதிலளிநீக்கு
  3. முயற்சிக்கிறேன்.

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  4. ஓ! கோ புரிகின்றது. வாசித்து வரும் போதே அதுவும் முதல் பகுதியிலேயே அறிய முடிந்தது என்றாலும் அப்படி இது போன்ற செய்தியை அனுமானித்திடக் கூடாது என்பதால் காட்டவில்லை.

    அம்மாவின் இழப்பு என்பது அத்தனை எளிதாக வர இயலாத ஒரு நிகழ்வு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளுடன் அந்த நிழல் போன்ற ஒற்றை எழுத்திற்குச் சொந்தக்காரர் இந்தத் துக்க நிகழ்விலிருந்து மீண்டு வரவும் பிரார்த்தனைகள்...அது யாரென்று புரிந்துதான் இந்தப் பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
  5. அன்பிற்கினிய நண்பர்களே,

    வருகைக்கும் தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  6. மனம் ஏற்க மறுக்கும் நிகழ்வு தான்,, இறைவன் இணையடி நிழலில் அவர் ஆன்மா இளைப்பாறட்டும்.

    உறவுகள் அவர் நினைவினை இனி போற்றட்டும்.

    மறக்க முடியா அவரின் நினைவுகள் நம் வாழ்க்கைக்கு நல் வழிகாட்டியாக,,

    நல்ல மகனைப் பெற்ற உயரிய ஆத்மா,,

    அவரின் ஆசிகள் எங்களுக்கும்,,,

    பதிலளிநீக்கு
  7. பேராசிரியருக்கு,

    தங்களின் வருகைக்கும் ஆறுதலான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு