பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 13 ஜனவரி, 2015

நன்றி உழவனே!


படி அளப்பவன்

உழவுக்கும் தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், விளைச்சலுக்கு ஒத்தாசைபுரியும் சூரியனுக்கும் நன்றி சொல்ல உழவன் கொண்டாடும் ஒரு உன்னத திருநாள் இந்த பொங்கல் திருநாள்.




கருக்கலில் கலப்பை ஏந்தி - வயல் 
காட்டுக்கு சென்று - விளைச்சல்
பெருக்கல் வேலை செய்வதற்காய்
கலப்பை முனையால்,

சேற்றுக்குள் எழுதுகின்றான் -நம்
சோற்றுக்கான பார்முலாவை. 



நாம் சோற்றில் கைவைக்க அவன் சேற்றில் கால் வைக்கின்றான், காலமெல்லாம் உழைக்கின்றான்.


அப்படி பட்ட உழவனுக்கு நாம் கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டுமல்லவா?

எப்படி அவனுக்கு நன்றி சொல்லுவது.

உழவனுக்கு நன்றி சொல்ல ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

ஆனால் எல்லோருக்கும் ஏற்ற வழி, எவராலும் எளிதில் செய்ய கூடிய வழி, 

ஒரு நாளைக்கு பல முறை செய்ய கூடிய வழி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உழவனுக்கு நன்றி சொல்ல ஒரு வழி இருக்கின்றது.

அது:

எப்போதெல்லாம் நாம் சாப்பிடுகின்றோமோ அப்போதெல்லாம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.

தேவைக்கு அதிகமாக சமைத்து அதை வீணாக்காமல் இருப்பதன் மூலம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.

அளவுக்கு மீறி தட்டில் போட்டுக்கொண்டு, பின்னர் அதை குப்பையில் கொட்டாமல் அளவோடு பங்கிட்டு உண்பதன் மூலம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.

தட்டில் போடப்பட்ட உணவின் ஒவ்வொரு பருக்கையின் பின்னாலும் பலரது உழைப்பு உண்டென ஒரு வினாடி நினைப்பதன் மூலம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.

பரிமாற பட்ட உணவினை  ஒரு பருக்கை விடாது சாப்பிட்டு முடிப்பதன் மூலமும் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.

தானியங்கள், காய்கறிகள், கீரைகள்,பழங்கள், உணவு பதார்த்தங்கள், சமையல் பொருட்கள் போன்ற எல்லா பண்டங்களையும் அளவோடு - வீணாகாமல் பயன்படுத்துவதன் மூலம் கண்டிப்பாக உழவனுக்கு நாம் நன்றி சொல்ல முடியுமே.

தட்டில் போடப்படும் உணவில் சாப்பிட முடியாத அல்லது சாப்பிட கூடாத சில பொருட்களை(பட்டை, இலவங்கம், ஏலக்காய்,பிரிஞ்சி இலை, மாங்கொட்டை, முருங்கைக்காய் தோல், கருவேப்பிலை.....) தவிர  வேறு ஒன்றையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பதன் மூலம் உழவனுக்கு நன்றி மட்டுமல்ல மரியாதையும் கொடுக்க முடியுமே.

குறிப்பாக திருமண பந்தியில் பங்குகொள்ளும் போது தயவு செய்து உணவினை வீணடிக்காமல், தேவைக்கு அதிகமாக வாங்கிவிட்டு பின்னர் அதை அப்படியே மூடிவிட்டு எழுந்து போவது, நாம் அந்த திருமண வீட்டாரை அவமதிப்பதோடு, அந்த உணவை உற்பத்தி செய்த உழவனையுமல்லவா அவமதிக்கின்றோம்.

எத்தனை பணம் கொடுத்தாலும் எங்குமே எந்த உணவு பொருளுமே கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்படுவதாக கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், நிலைமை என்னவாகுமென்று.

இனியும் உணவுபொருட்களை வீணாக்காமல் ஒவ்வொரு முறையும், சாப்பிட ஆரம்பிக்கும்போதும், சாப்பிட்டு முடிக்கும்போதும், இறைவனுக்கு நன்றி சொல்வதோடு சேர்த்து  அந்த உணவினை கடும் உழைப்போடு உற்பத்தி செய்த எல்லா உழவர்களுக்கும் நன்றி சொல்லுவோம்.


நன்றி உழவர்களே.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      நலம் தானே.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபால்

      இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      நலம் தானே.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      (என்றும்)நட்புடன்

      கோ

      நீக்கு
  3. மிக மிக அருமையான அவசியாம பதிவு!

    நாம் சோற்றில் கைவைக்க அவன் சேற்றில் கால் வைக்கின்றான், காலமெல்லாம் உழைக்கின்றான்.// ஆம் உண்மையான வரிகள்!

    அது என்று நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் நாம் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று...அருமை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      திருமண பந்திகளில் ஆட்கள் அமருவதற்கு முன்னரே உணவு பரிமாற்ற படுவது கூட சில நேரங்களில் பெருத்த உணவு வீணாவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.

      யார் அந்த இடத்தில் அமரபோகின்றார்(சிறுவரா, வயதானவரா, எல்லோருக்கும் எல்லாமும் பிடிக்குமா, எல்லோரும் இந்த அளவினை உண்டு முடிப்பாரா) என்று தெரியாமலே பரிமாரபடுகிறது.

      சேற்றில் இறங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
    2. ஆம்! நாம் உட்கார்வதற்கு முன்னரே சாப்பாடு பரிமாறப்படுவது மிகவும் மோசமான ஒன்று. அது இங்கு சென்னையில் மிகவும் அதிகமாகிவிட்டது. நமக்கு எது வேண்டும் வேண்டா என்பது நாம் தானே முடிவு செய்ய முடியும்.? அல்லாமல் பரிமாறுபவர்கள் முடிவு செய்து...வீணாகி குப்பைத் தொட்டியில் போடுவதற்கு பதிலாக (இந்தக் குப்பைத் தொட்டிக்கு யாசிப்பவர்கள் படையெடுப்பதும் நடக்கின்றது....என்ன ஒரு கேவலமான நிகழ்வு நாம் அதற்கு உடந்தையாக இருக்கின்றோம் என்பதை நினைக்கும் போது மனது வேதனையடைகின்றது. நாங்கள் அதனால் வெறும் இலை இருக்கும் இடத்தில்தான் அமர்வது வழக்கம்) ஹோட்டலிலும் கூட அளவுக்கு அதிகமான உணவு.
      னீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரியே! ஆதரிக்கின்றோம். நாங்கள் பரிமாறும் போது நீங்கள் சொல்லியிருப்பதுதான் செயல்படுத்துகின்றோம். உணவு வீணாகாகம்ல். உணவு மீந்தால் அதைக் கொடுப்பதற்கு எத்தனை வறுமையில் வாடும் குழந்தைகள், முதியோர் இருக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கலாமே.

      ம்ம்ம் சேற்றில் இறங்கிய அனுபவம் உண்டு. கிராமத்தில் உளுந்து விதைத்து அதைப் பறிக்கச் சென்றதுண்டு. நெல் புழுக்கியது உண்டு. களை எடுத்ததுண்டு. பார்க்கப்ப்போனால் விவசாயப் படிப்புத்தான் படிக்க நினைத்து, பொருளாதாரம் படித்து அதில் வரும் அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் பாடம் உண்டு அதில் விருப்பப்பட்ட்டு ஐசிஏஆரின் ஃபெல்லோஷிப் சேர விரும்பி அதுவும் நடக்காமல்....அதன் பின் வாட்டர் கன்சர்வேஷன்/மனேஜ்மென்ட் ஃபார் அக்ரிகல்சரில் எம்ஃபில் செய்ய நினைத்து டாக்டர் தேனப்பன் என்பவர் (இவர் கோயம்புத்தூரில் வேளாண்மைக் கல்லூரியில் வாட்டர் கன்சர்வேஷன்/ட்ரிப் இரிகேஷன் பற்றி ஆய்வு செய்து பல கட்டுரைகள் கிசான் வேர்ல்டில் வெளிவந்து அதில் ஆர்வமுற்று எம்ஃபில் செய்ய நினைத்து அதுவும் நடக்காமல்....வெட்டியாக சமையல் அறை எனும் நான்கு சுவற்றுக்குள் காலத்தை ஓட்டி இதோ இப்போதுதான் என் நண்பர் துளசியுடன் வெளியுலகை எட்டிப்பார்க்கிறேன்...-கீதா.

      அருமையான பதிவு..

      துளசி, கீதா

      நீக்கு
  4. நன்றி சொல்வதை அழகாக விவரித்த நண்பருக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.
    எமது பதிவு மோதகமும், அதிரசமும்.
    நன்றி
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு . சமூகத்திற்கு மிகவும் தேவையான பதிவு. மேலே உள்ள கடைசி படத்தை பார்த்தவுடன் மனனத்தில் ஓர் நெருடல். விளைநிலத்தை எல்லாம் விலைநிலமாக்க இருந்து மரங்களை எல்லாம் வெட்டி தீர்த்து விட்டதால், அந்த விவசாயியின் பார்வையில் தான் என்னே ஒரு பிரதிபலிப்பு. கிட்ட தட்ட அழுதே விட்டேன் .

    பதிலளிநீக்கு
  6. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  7. புதுவை வேலு,

    வருகைக்கும், வளமான கவிதைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு