பின்பற்றுபவர்கள்

சனி, 3 ஜனவரி, 2015

ஏர்போர்டில் பாஸ்போர்ட் ஜாலம்

நண்பர்களே,

இந்த பதிவை படிப்பதற்குமுன், "கடவு சீட்டும் கலையான முகமும்" பதிவினை படித்துவிட்டு தொடரவும்.


பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நெஞ்சில் நிழலாடியது.
நான் முதன்முதலில் பாஸ்போர்ட் எடுக்க சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்த (இப்போதும் அங்கேயேவா இருக்கின்றது?) சாஸ்த்திரி பவனுக்கு சென்று வந்த நினைவுகளும், பாஸ்போர்டில் அம்மாவின் பெயரை மனைவி என்று தவறாக எழுதி,இருந்ததை மாற்ற பல முறை சென்றுவந்ததும்   (அப்போ நான் கல்லூரியில் முதலாண்டு பட்டபடிப்பு மாணவன்தான்) நினைவில் இருந்தாலும் இங்கே வேறொரு மலரும் நினைவினை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

அப்போது நான் வளைகுடா நாட்டில் வசித்துவந்தேன்.

அங்கே எனக்கு இருந்த மிக முக்கியமான , நெருங்கிய நண்பரும் என் கல்லூரியில் நாட்களிலேயே மிகவும் நட்புடன் பழகியவருமான அன்புக்குறிய ஒருவர் இருந்தார்.

நீங்கள் நினைப்பவரில்லை இவர் வேறொருவர்.

அவர் பெயரின் தமிழாக்கம் - "மகிழ்ச்சியின் மைந்தன்". (இவர் யார் என தெரிந்தவர்கள் எனக்கு   அவரது முழு பெயரையும் உடனடியாக எழுதுங்கள்- முதல் மூன்றுபேருக்கு தலா ......?????.பரிசு உண்டு)

பெயருக்கேற்றார்போல எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார் மற்றவர்களையும் மகிழ்சியோடு வைத்திருப்பார்.

மிகுந்த பொறுப்பானவர், திட்டமிட்டு காரியங்களில் இறங்குபவர், உயரிய பண்பாளர் - படிப்பாளர்.

எப்போதும் அவரின்  தொழில் சார்ந்த படிப்பு படித்து அதன் தேர்வுகளுக்கு தயாரித்து கொண்டிருப்பார்.

விருந்தோம்பலில் நிகரற்றவர், அவரே அருமையான பிரியாணி தயாரித்து நண்பர்களை அழைத்து உபசரிப்பார்.

ஒருநாள்  இதுபோன்றதொரு விருந்து சமைத்து என்னை அழைத்திருந்தார்.

அருமையானஆம்பூர் மட்டன் பிரியாணி, நன்றாக சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் நேரம் கதை பேசிகொண்டிருந்தோம், இடையில்  கிட்டார் இசைத்து பாடியும் மகிழ்வித்தார்.

அவரின் மேசை மீது பாஸ்போர்ட் மற்றும் சில தஸ்தாவேஜிகள்   இருந்தன.

பாடலை கேட்டவண்ணம் அழகான பிரேம் போடப்பட்டு மேசைமீதிருந்த ஒரு புகைப்படத்தின் மீது எனது பார்வை சென்றது.

உடனே மேசையினருகில்  சென்று  அந்த போட்டோவை பார்த்தேன்.

அது நண்பரின் சமீபத்தைய  புகைப்படம்.

ரொம்ப ஸ்மார்டாக இருந்தார்.

புதிய போட்டோவாக இருக்கின்றதே என கேட்டதற்கு, ஆமாம், சமீபத்தில்  பாஸ்போர்ட்  ரினிவல் செய்ய நேர்ந்தது, அப்போது எடுத்த படம் , அப்படியே ஒரு காபியை பெரிதாக்கி பிரேம் போட்டுவைத்தேன் என்றார்.

என்ன அதற்குள் ரினிவல் வந்துவிட்டதா?

இல்லை இன்னும் ஆறு மாசம் இருக்கு, இருந்தாலும் இப்பவே பண்ணிட்டா அடுத்த  வாரம் ஊருக்கு போய் திரும்பும் போது,ஒன்னும் பிரச்னை இருக்காது என்றார்.

எவ்வளவு  நாள் லீவ்ல  போறீங்க.

ஒரு வாரம்.

ஒருவாரத்துக்கா?

என்ன ஏதாவது எமர்ஜன்சியா  ?

இல்ல என்னோட   கடைசி இரண்டு தேர்வுகள் எழுதவேண்டியிருக்கு அதான் என்றார்.

எப்போ போறீங்க ஊருக்கு.

வருகிற  வியாழன் அன்று.

எப்படி ஏர்போர்ட் போறீங்க?

டாக்சிலதான் போறேன், இல்லனா கார ஒருவாரத்துக்கு  ஏர்போர்ட்ல பார்க் பண்ணா , பாதுகாப்பாக இருக்குமான்னு தெரியல , அதுவுமில்லாம எதுக்கு அனாவசியமாக பார்கிங் சார்ஜ் வேற தண்டத்துக்கு என்றார்.

வியாழ கிழமை எத்தனை மணிக்கு ப்ளைட்?

மாலை 6.00 மணிக்கு ஆனால் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் முன்னதாக இருக்க வேண்டும்.

அப்படியானால் ஒரு 3.30 க்கு இங்கிருந்து கிளம்பினால் சரியாக இருக்குமா என்றேன்.

ட்ராபிக் இல்லையானால் சரியாக இருக்கும்.

அப்படியானால் நானே உங்களை ஏர்போர்ட் கொண்டு வந்து விடுகின்றேன், வியாழகிழமை எனக்கு 12.00 மணிக்கு வேலை முடிந்து விடும், நான் ஒரு மணிக்கு இங்கே வருகின்றேன், நாம ஒரு இரண்டரை அல்லது மூணு மணிக்கு புறப்படலாம் என்று சொன்னேன்.

உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.

இதுல என்ன இருக்கு, நான் டிராப் பண்றேன்.

ரொம்ப தேங்க்ஸ்.

அப்படியே கொஞ்சம் நேரம் பேசிவிட்டு, அவர் போட்டு கொடுத்த ஏலக்காய் தேநீர் அருந்திவிட்டு  வீடு திரும்பினேன்.

அந்த குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் நண்பரை அழைத்துக்கொண்டு எனது காரில் விமான நிலையம் சென்றோம்.

கொஞ்சம் நேரம் கழித்து அவர் உள்ளே சென்று சோதனைக்காகவும் போர்டிங் பாசுக்காகவும் வரிசையில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.


உள்ளே இருந்து டாட்டா காண்பித்து என்னை போகும்படி செய்கை காட்டினார்.

 பரவாயில்லை நீங்கள் உள்ளே போகும்வரை நான் இருக்கின்றேன் என நானும் செய்கையில் சாடை காட்டினேன்.

இவரின் முறை வந்ததும் அங்கிருந்த அலுவலர் டெஸ்கில் இவரது பாஸ்போர்ட், டிக்கட் எல்லாம் வைத்தார்.

இவரின் பாஸ்போர்டை பிரித்த  அந்த அலுவலர்,மாறி மாறி இவரையும் இவரது பாஸ்போர்ட்டையும்  பார்கின்றார்.

நண்பர் நினைத்தார், ஒருவேளை பாஸ்போர்ட் ரினிவல் செய்யும் போது ஏதேனும் குழறுபடிகள் நடந்திருக்குமோவென.

அந்த அலுவலர் உங்கள் பெயர் என்ன என கேட்டிருக்கின்றார், இவரும் தமது பெயரை சொல்லி இருக்கின்றார்.

வீட்டு விலாசம்? அதையும் சொல்லி இருக்கின்றார்.

உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கின்றீர்கள்?

நானும் மனைவியும் என் தங்கையும்.

மனைவி பெயர்?

சொல்லி இருக்கின்றார்.

ஊருக்கு யாரெல்லாம் போகின்றீர்கள்?

நான் மட்டும் தான்.

சரி உங்கள் பாஸ்போர்டை கொடுங்கள்.

அதான்  கொடுத்திருக்கின்றேனே?

அந்த அலுவலர், உங்கள் முகம் வேறு மாதிரி இருக்கின்றதே?

ஆமாம், புகைப்படம் எடுக்கும்போது கொஞ்சம் சோர்வாக இருந்தேன் அதான்.

இல்லையே இந்த புகைப்படத்தில் சிரித்த முகமாகதானே இருக்கின்றது, அதுவும் கிளீன் ஷேவ் வேறு செய்திருக்கின்றதே? என சொல்லி அந்த அலுவலர் பக்கத்து டெஸ்க்கில் இருக்கும் மற்ற அலுவலரிடம் கொண்டு காண்பித்து சிரிக்கின்றார்.


நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை, கிளீன் ஷேவா....? 

திரும்பி தன் இருக்கைக்கு வந்த அலுவலரிடம் , ஏதாவது பிரச்சனையா? என கேட்க்க, அந்த அலுவலர் நண்பரிடம் பாஸ்போர்டை காட்டி இருக்கின்றார்.

இவரும் பரபரப்பாக வாங்கி பார்த்து பெரிய  அதிர்ச்சிக்குள்ளாகி  இருக்கின்றார்.

பிறகு அலுவலர் இவரிடம் எதோ கூற பெட்டியை அவசர அவசரமாக இழுத்துக்கொண்டு வெளியில் இருக்கும் என்னிடம் ஓடிவந்து , நடந்ததை கூறி, இன்னும் ஒரு  மணி நேரம் தான் இருக்கின்றது , உடனே வீட்டுக்கு போகவேண்டும் என்றார்.

என்ன நடந்திருக்கும் , ஏன் உடனே வீட்டுக்கு போகவேண்டும்?

நடந்தவற்றை நாளை சொல்லவாஇல்லை இப்போதே சொல்லவா?

சரி உங்களை நாளை வரை காக்கவைக்க வேண்டாமே என்று இதோ இப்பவே சொல்லிடறேன்.

என்ன நடந்ததென்றால்,......, விமான நிலையம் செல்லும் அவசரத்தில் தனது பாஸ்போர்ட்டுக்கு பதில் தனது மனைவியின் பாஸ்போர்டை எடுத்துவந்திருக்கின்றார்.

எனக்கு சிரிப்பு தாங்கமுடியல இருந்தாலும் , நண்பரின் பதட்டம் ஒருபக்கம் அவரை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது.

அவரை கொஞ்சம் ஆசுவாசபடுத்திவிட்டு, நீங்கள் இங்கேயே இருங்கள் நான் மட்டும் போய் கொண்டுவருகின்றேன் என சொல்லிவிட்டு, வீட்டுக்கு சென்று அவர் மனைவியிடம்  நடந்தவற்றை "சுருக்கமாக" கூறி நண்பரது பாஸ்போர்ட்டை கொண்டுவந்து கொடுத்து சரியான நேரத்தில் அவர் பயணம் செய்ய வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.


அவருக்கு வாழ்த்து சொல்லி வழி அனுப்பும்போது அவர் காதில் சொன்ன விஷயம், "திரும்பி வரும்போது உங்கள் பாஸ்போர்டுக்கு பதில் ஊரிலிருக்கும் உங்கள் அம்மாவின் பாஸ்போர்ட்டை கொண்டு வந்துவிடாதீர்கள்" என்று.

இந்த நிகழ்ச்சியை நான் அந்த தேசத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு வரும்வரை அவ்வப்போது எங்கள் நண்பர்களின் வட்டாரத்தில் சொல்லி சிரித்து மகிழ்ந்ததும் என் நினைவில் நிழலாடியது.

நன்றி,

மீண்டும் (சி)ந்திப்போம்.

கோ.

4 கருத்துகள்:

  1. சில சமயங்களில் அவசரத்தில் இப்படித்தான் ஆகிவிடும்
    நண்பருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. திரு கரந்தையார் அவர்களுக்கு

    ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.

    அன்றுமுதல் நானும் மற்ற நண்பர்களும் ஒன்றுக்கு பத்துமுறை எல்லாவற்றையும் சரிபார்த்த பின்னரே வீட்டை விட்டு கிளம்ப ஆரம்பித்தோம்.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்.ஆனால் அவசரத்தில் உதவிய உங்கள் உதவிக்கு ஒரு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு