பின்பற்றுபவர்கள்

புதன், 14 ஜனவரி, 2015

பொங்கல் இங்கே மாடு எங்கே?

மாட்டுப்பொங்கல் 


பொங்கலுக்கு அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் மாட்டை பிடித்துகொண்டு (எந்த மாடு என்பவர்களுக்கு - பாபியும் அதன் பேபியும்  படியுங்கள்) ஆற்றுக்கு சென்று,பசுவின் மடி நனையும் அளவிற்கு தண்ணீரில் நிற்க வைத்து,
அதன் உடல் மீது தண்ணீர் இறைத்து, வைக்கோல் கொண்டு தேய்த்து பின்னர் லைப் பாய் சோப்பு போட்டு நுரை வருமளவிற்கு(லைப் பாய் சோப்பில் என்றைக்கு நுரை வந்திருக்கு?) தேய்த்து மீண்டும் தண்ணீர் இறைத்து சும்மா பள பளன்னு சுத்தம் செய்து கொஞ்சம் மேட்டு பகுதிக்கு கூட்டி சென்று, அங்கே நிற்கவைத்து, மாட்டின் கால்கள் , மடி , அடி பகுதிகளுக்கும் சோப்பு போட்டு கழுவி மீண்டும் தண்ணீரில் இறக்கி , இப்போது இன்னும் கொஞ்சம்  ஆழத்துக்கு அழைத்து சென்று நன்றாக நனைத்து கரைக்கு அழைத்து வந்தோம்.


பின்னர் அங்கேயே   வெய்யிலில் நிற்க வைத்து  கொஞ்சம் நேரம் கழித்து வீட்டுக்கு அழைத்து வந்தோம்.
.
வீட்டில் நன்றாக காய வைத்திருக்கும் சாக்கு பையினால் உடம்பை துடைத்து விட்டு, சாம்பிராணி புகைபோட்டு மாட்டின் முகத்துக்கும் மற்றும் அதன் உடம்பை சுற்றியும் காட்டிவிட்டு, சாப்பிட நன்றாக  ஊற வைத்திருக்கும் கடலை பிண்ணாக்கு, தவிடு கலந்த தண்ணீரை கொடுத்தோம்..

அதற்கடுத்து   அதன் பழைய மூக்கணாங்கயிறு, கம்பளி கயிறு, அதன் வெண்கல  மணி இணைக்கப்பட்ட தோல் பெல்ட், மற்றும் அதனை கட்டி இருக்கும் நீண்ட தாம்பு  கயிறு முதலிய வற்றை அவிழ்த்துவிட்டு கொஞ்சம் நேரம் பிரீயாக விட்டு விட்டோம்.

கழற்ற பட்ட மணி இணைக்கப்பட்ட தோல் பெல்டை தவிர மற்ற எல்லா வற்றையும் எரிந்து விட்டு, வெண்கல மணிக்கும் , பெல்டுக்கும் பாலிஷ் போட்டோம்.

இதற்குள் காலை எட்டு மணியாகிவிட்டது.

மாட்டுக்கு வாங்கிய புதிய மூக்கணாங்கயிறு, கம்பளி கயிறு, தாம்பு கயிறு, சங்கு கயிறு, கொம்புக்கு அடிக்க பெய்ன்ட், மற்றும் கொம்பில் கட்ட பலூன்கள் , மாட்டின் கழுத்தில் கட்ட வைக்கோலில் முறுக்கி பின்னப்பட்ட ஒருவகை கயிறு அதில் ஆகாங்கே வெட்டி துண்டிக்கப்பட்ட கரும்பு, முறுக்கு போன்றவை எல்லாம் தயாராக இருந்தது.

வழக்கமாக எங்கள் ஊரின் நடுவே இருந்த மாரியம்மன் கோவில் வளாகத்தில் அன்றைக்கு சுமார் 4.00 மணியளவில் எல்லா மாடுகளையும் அலங்கரித்து கொண்டுவந்து நிறுத்துவார்கள், பிறகு அந்த கோவில் பூசாரி ஒரு பித்தளை செம்பில் நிறப்பப்பட்ட மஞ்சள் நீரை வேப்பிலை கொத்தில் நனைத்து எல்லா மாடுகள் மீதும் தெளிப்பார் அதன் பின்னர் ஓரிரு முரட்டு காளைகள் தவிர ஏனைய மாடுகளை வீட்டுக்கு அழைத்து செல்வர்.

முரட்டு காளைகளை பெரிய பெரிய வட(ம்)  கயிறுகளை கொண்டு இரண்டு பக்கங்களிலும் கட்டி அதை இங்கும் அங்குமாக செல்லமாக இழுத்து விளையாட்டு காண்பித்துவிட்டு அவிழ்த்து விடுவார்கள் அது ஓடும்போது சிறுவர்கள் இளைஞர்கள் அதன் பின்னால் ஓடி அதை மடக்கி பிடித்து மீண்டும் அந்த கோவில் வளாகத்துக்கு கொண்டுவந்து உரியவரிடம் சேர்ப்பார்கள் காய படுத்தாமல்.

சரி இப்போதே மாட்டு கொம்புக்கு பெய்ன்ட் அடித்தால்தான் காயும் என்பதற்காக அப்பாவுடன் சேர்ந்து நானும் பெய்ன்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டேன்.

மூக்கானாங்கயிறோ அல்லது மற்ற எந்த கயிறோ இல்லாததால் கொஞ்சம் சிரமப்பட்டு தான் பெய்ன்ட் அடித்து முடித்தார் அப்பா.

மணி ஒன்பது.

மாட்டின் தொழுவம் சுத்தமாக்கபட்டது, தரை எல்லாம், சாணம் கொண்டு மெழுகி, கோலம் போட்டு, சாம்பிராணி புகை போடப்பட்டது, தொழுவம் எங்கிலும் மாவிலைகளும் பலூனும் கட்டப்பட்டது.

இப்போது நாங்கள் எல்லோரும் வீட்டின் உள்ளே இருந்தோம். அப்பாவின் நண்பர்கள் வருகையும் எங்கள் உறவினர்களின் வருகையுமாக வீடே கொஞ்சம் கலகலப்பாக இருந்தது.

மாட்டுக்கென பிரத்தியேகமாக  வெல்லம் பாசிபருப்பு மற்ற பயர் வகைகளோடு சேர்த்து பொங்கல் தயாராகிக்கொண்டு இருந்தது.

எங்கள் வீட்டின் பின் புறம் மாட்டு தொழுவம் அதன் பின்னால் சிறிய நிலம் அதை தாண்டினால் வெட்ட வெளி.

எப்போதும் கட்டப்பட்டே இருக்கும் மாடு இன்றைக்கு கொஞ்சம் பிரியாக கட்டுகளின்றி வெறும் புல்லுகட்டுடன் சுதந்திரமாக இருந்தது.

பொங்கல் தயாராகிவிட்டது.

ஒரு தாம்பாள் தட்டில் வாழை இலை வைத்து  அதன் மீது சமைக்கப்பட்ட பொங்கலை போட்டு பரப்பி காற்றாட விட்டு, அதனோடு கொஞ்சம் மஞ்சள் வாழை பழங்களையும் சேர்த்து வீட்டு ஹாலில் வைத்துவிட்டு, மாட்டுக்கு மஞ்சள் பூசி சந்தன பொட்டு வைத்து அலங்கரிக்க தொழுவம் இருந்த இடத்துக்கு அம்மாவும் அவருக்கு உதவியாக இருந்த  ஒரு பெண் மணியும் சென்றார்கள்.

தொழுவம் இருந்தது மாட்டை காணவில்லை.

அம்மா சொன்னதை  கேட்டு வீட்டில் இருந்த அத்தனைபேரும் அதிர்ச்சி அடைந்தோம்.

அக்கம் பக்கம் தேடியும் எந்த பலனும் இல்லை.

மாட்டுக்கு மணியுடன் கூடிய பெல்ட் கட்டியிருந்தால் அது ஒவ்வொரு முறை தன் தலையை ஆட்டும்போது எழும் ஓசையை வைத்து மாடு தொழுவத்தில் இருப்பதை வீட்டுக்கு உள்ளே இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் அதைதான் பாலிஷ் போட கழற்றி விட்டோமே.

எங்கு தேடியும் மாடு கிடைக்கவில்லை.

பொதுவாக மாட்டை நாங்கள் எங்கும் வெளியில் அவ்வளவாக அழைத்து செல்வது கிடையாது, வருடத்துக்கு இரண்டுமுறை ஆற்றுக்கும் அந்த கோவில் வளாகத்துக்கும் தான் அழைத்து செல்வோம்.

மருத்துவரும் வீட்டுக்கே வந்து பார்த்துவிட்டுத்தான் செல்வார், அப்படி இருக்க எங்கே சென்றிருக்கும்.

மணி இப்போது பனிரெண்டு, மாட்டை கடைசியாக நாம் பார்த்து குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது ஆகியிருக்கும் இந்த ஒரு மணி நேரத்தில் மாடு எவ்வளவு தூரம் நடந்திருக்கும், சரி ஆளுக்கொரு மூலையாக தேடலாம் என்று அப்பாவுடன் நானும், அப்பாவின் நண்பர்கள் இருவர் இரண்டு பக்கங்களிலும் எங்கள் பெரியப்பாவின் மகன் ஒரு பக்கமாகவும் தேட ஆரம்பித்தோம்.

நல்ல நாளதுவும் இப்படி ஏன் நடக்க வேண்டும், மாட்டை கட்டாமல் விட்டது ரொம்ப தப்பா போச்சு.

எதிரில் வருவோரிடமெல்லாம் அடையாளம் சொல்லி மாட்டை பார்த்தீர்களா என விசாரித்துகொண்டே எல்லா இடங்களிலும் தேடினோம், ஒரு பிரயோஜனமும் இல்லை,  ஒரு வேளை வீட்டுக்கு திரும்பி இருக்குமோ என நினைத்து நாங்களும் வீட்டுக்கு திரும்பினோம், ஆனால் மாடு இல்லை.

சரி ஒருவேளை பவுண்டரி என்று சொல்லப்படும், ஆடு மாடுகள் யாருடைய  தோட்டத்திலோ வயல்வேளிகளிலோ  மேய்ந்தால் அந்த தோட்டத்து சொந்த காரர் அரசாங்கம் நடத்தும் கால் நடைகளை அடைத்து வைக்கும் ஒரு பட்டி போன்ற வேலி அடைக்கப்பட்ட இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள், பின்னர் தகவல் அறிந்து அங்கு வரும் அந்த கால் நடைகளுக்கு சொந்த காரரிடம்  உரிய அடையாளங்களையும்  வீட்டு முகவரி, சாட்சி போன்றவற்றை கேட்டறிந்து ஒரு அபராத தொகை வசூலித்துக்கொண்டு கால்நடைகளை ஒப்படைக்கும் இடத்தில் இருக்குமோ என நினைத்து அங்கு செல்ல முடிவு செய்தோம்.

அதன் படி வீட்டிலிருந்து சுமார் மூன்ற கிலோ மீட்டர் தூரமிருக்கும் அந்த பவுண்டரி செல்ல கொஞ்சம் பணம் எடுத்துகொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தால்.......

வீட்டு வாசலில் எங்கள் மாடு நின்றுகொண்டிருக்கின்றது அதன் பின்னால் எங்கள் பெரியப்பாவின் மகன்.

எல்லோருக்கும் ஒரே சந்தோஷம், எங்கே இருந்தது? எங்கே இருந்தது.....?

பெரியப்பா மகன் சொன்னார் காலையில் குளிப்பாட்ட கொண்டு சென்றோமே அந்த ஆற்றில் ஆழம் குறைந்த  பகுதியில் தண்ணீர்ல் நின்றுகொண்டு தனது வாலை ஆட்டி ஆட்டி குளித்துகொண்டிருந்தது  என்று.

அதன் உடம்பின் வலது பக்கம் முழுவதும்  பூசினாற்போல சாணம் ஒட்டிகொண்டிருந்தது, எங்கிருந்து வந்தது இந்த சாணம் , காலையில் தானே நன்றாக குளிக்க வைத்தோம்?

பிறகு தான் புரிந்தது,மாட்டு தொழுவத்தை சாணம் போட்டு  மெழுகி இருந்த அந்த ஈரமான தரையில் படுத்திருந்ததால் ஒரு பக்கம் முழுவதும் சாணம் ஒட்டிஇருந்ததை கழுவி சுத்தம் செய்துகொள்ள ஆற்றுக்கு சென்றிருக்கின்றது என்று.


சரி ஒரு வழியாக மாடு திரும்பி வந்ததை எண்ணி சந்தோஷப்பட்டு, இப்போது, வெந்நீர் வைத்து  வதவதப்பான சூட்டில் மீண்டும் ஒருமுறை மாட்டை கழுவி சுத்தம் செய்து முதல் வேலையாக அதன் கழுத்தில் பாலிஷ் செய்து பளபளப்பாக்கிய வெண்கல மணி பெல்ட்டை கட்டி, புதிய மூக்கணாங்கயிறு பூட்டி, கழுத்தை சுற்றி கம்பளி கயிறு கட்டி, இரண்டு கொம்புகளையும் சேர்த்து சங்கு கோர்த்த கருப்பு நிற நூல் கயிறு கட்டி வர்ணம் தீட்டப்பட்ட கொம்புகளில் கொத்து கொத்தாக ஊதி கட்டப்பட்ட பல வண்ண பலூன்கள் கட்டி , வடை முறுக்கு கரும்பு துண்டங்கள், மாவிலை கட்டிய வைக்கோலில் முறுக்கி பின்னப்பட்ட கயிறு கழுத்தை சுற்றி  கட்டி, முகத்துக்கும் கால்களுக்கும் கஸ்தூரி மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய வட்ட வடிவில் சந்தன பொட்டு வைத்து, பிரத்தியேகமாக தயாரித்து வைத்திருந்த பொங்கல் வைக்கப்பட்ட தாம்பாள் தட்டிலிருந்த பொங்கலை நாங்கள் ஒவ்வொருவராக சிறிய சிறிய கவளமாக உருட்டி  எங்கள் மாட்டுக்கு (பசுவுக்கு) ஊட்டிவிட்டோம், மீதமிருந்த வாழையிலையையும் சேர்த்துதான்.


பின்னர் அதற்க்கு குடிக்க பக்கெட்டில் வைத்திருந்த வெல்ல பானகத்தையும் கொடுத்தோம், குடித்து முடிக்கும்போது மாடுகளை அழைத்து கோவிலுக்கு வரும்படி தள்ளாரி அழைத்த தண்டோரா சத்தம் கேட்டு புதிய கயிறினால் இணைக்கப்பட்ட எங்கள் அழகிய அந்த பசு மாட்டை அழைத்துக்கொண்டு கோவில் வளாகம் நோக்கி புறப்பட்டோம் , அப்போது மணி நான்கு 

அடுத்த சில மாதங்களில் அழகிய பெண் கன்றை ஈன்றது இந்த பசு.


"பசு வதை கொடுமை; கொடுமை இல்லா ஜல்லிக்கட்டு இனிமை."

அனைவருக்கும் எமது இனிய மாட்டு பொங்கல்  நல் வாழ்த்துக்கள் ! அனைத்து மாடுகளுக்கும் தான்!!

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 கருத்துகள்:

  1. ஹா... ஹா...

    அன்புடன்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபால்,

      உங்கள் சிரிப்பொலி இங்கே கேட்கிறது.

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      அன்புடன்

      கோ

      நீக்கு
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவுக்கு அனேக நமஸ்காரங்கள்,

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      அன்புடன்

      கோ

      நீக்கு
  3. ம்ம்ம் இங்கு மாடு எல்லாம் ரோட்டில் அழகான நடை போட்டுக் கண்டதையும் தின்று செல்வதுண்டு...ஆம் அங்கு மாடுகள் வெள்யில் காண்பது அரிதுதான்....உங்கள் ஊரில்.....அங்கு விலங்குகளுக்குக் கிடைக்கும் மரியாதை இங்கு கிடைக்கவில்லையே...

    நல்ல அனுபவப் பதிவு. அருமையான பதிவு. பொங்கல் வைத்தீர்களா? பொங்கல் அங்கு....மாடு இங்கு...இங்க எங்க ஊர்லதான் சுத்தி சுத்தி வர்ராங்களே.....பாவம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் விசாரிப்புகளுக்கும் மிக்க நன்றி.

      பொங்கல் வைத்தோம்.

      எல்லோரும் நலமா?

      நட்புடன்

      கோ

      நீக்கு
  4. கோமாதா எங்கள் குலமாதா என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். ஒரு பசுவை பற்றிய அருமையான கதை. ராம நாராயணன் மட்டும் இருந்து இருந்தால் இந்த கதையை வைத்து ஒரு முழு நீள படம் செய்து இருப்பார்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. கில்லருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    அன்புடன்

    கோ

    பதிலளிநீக்கு