பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2014

அலைகள் ஓய்வதில்லை

கடல்


 இந்த  பதிவை நமது தமிழக மீனவர்களுக்கான அர்பணிப்பாக வழங்குதல் சால சிறந்ததாக இருக்கும் என நினைக்கின்றேன்.


வாழ்வில் தமது பெரும்பான்மையான நேரத்தை   உலகில் வாழும் அத்துனை மீனவர்களும் யாரோடு  கழிக்கின்றனர், யாரோடு உறவாடி, யாரோடு நெருங்கி ஜீவிக்க பயன்படுத்துகின்றனர்.

கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகளின் நல வாழ்விற்காகவும் அவர்களின் பசியினை போக்குவதற்காகவும்,எத்தனை போராட்டங்கள் நிர்பந்தங்கள் இருந்தாலும், கால மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இயற்கையின் சீற்றங்கள் எப்படியிருந்தாலும் , தனது கட்டுமரங்களையோ படகுகளையோ செலுத்தி பலவேளைகளில் போதிய மீன்களை பிடிக்க முடியாமல், கடலின் மைய பகுதிவரை சென்று, இரவு பகல் என்று பாராமல், அயர்வு தூக்கம், உடல் வேதனைகளை புறம் தள்ளி தமது படகுகளை முன் செலுத்தி மீன் பிடிக்க எத்தனிக்கும் வேளைகளில், சிலசமயங்கள், சர்வதேச எல்லை கோடுகளை தெரியாமல் கடக்க நேரிடும்போது அதனால் நேரிடும் பேரிடர்களுக்கும் ஆளாகி சொல்லொன்னா துயருறும் என் மீனவ சகோதரனின் நண்பனாக விளங்கும் சாகரம் என அழைக்கப்படும் மீனவனின் நண்பன் தான்  இன்றைய இந்த பதிவின் தலைப்பு.

விடலை பருவத்தில் விளையாடி மகிழ விஷயங்கள் பலவுண்டு. அவற்றுள் நம் விஷுவல் மீடியா சினிமா சொல்வது "கடலை போடுவது" அதில் ஒன்று என்று. கடலைபோடுவது என்றால் என்ன என்று கடுகளவும் எனக்கு புரியவில்லை எனினும் நானும் முயன்றேன் களியாட்டம் செய்ய  அல்ல பதிவாக்கம் செய்ய.

எனவே தான் இந்த பதிவில் நானும் "கடலை" போட்டேன்.



நீலக்கடலே!

 நீளக்கடலே!!

நிலத்தை விட அதிக இடம் உனக்கு.

இப்படி

நாடு பிடிக்கும் ஆசை உன்னை 

நாடி வந்தது எப்படி?

உப்பு தின்றவன்  தண்ணீர் குடிப்பான்

உன்னை யன்றி 

யாருக்கு பொருந்தும் இந்த

ஒப்பில்லா உயர்  கூற்று?

உன்னிடமிருந்து உருவான 

கவிதைகள் கோடி

கதைகள் கோடி

கற்பனைகள் கோடி கோடி

நீ ஒருகோடியில் துவங்கி

மறுகோடிவரை 

வியாபித்திருப்பதாலா?

கரையோடு உனக்கென்ன

அப்படி ஒரு  நிலையான காதல்?

அலையலையாய் வந்து 

முத்தமிட்டு செல்கின்றாய்

என் காதலியோ எனைப்பார்த்து

அலையாதே!! என்கிறாள்.

உனக்குள் எத்தனை விந்தைகள்

உன் மடியினில் பல்பொருள் சந்தைகள்.

உனக்கு வேண்டாம் என்பவற்றை 

உடனே கரையில் ஒதுக்குகின்றாய்

வேண்டும் என்பவற்றை 

ஆயிரமாண்டுகளானாலும்

உனக்குள் அப்படியே பதுக்குகின்றாய்.


உன்னை ஊருக்குள் நுழையவிடாமல்

கரை என்னும் சென்சார் போர்டு 

காவல் புரிகின்றதாய் எனக்கு புறிகின்றது

உன் நிறம் அப்படி  என்பதாலோ?

எனினும், 

ஆவல் மிகுதியால்

சிலவேளைகளில் 

காவலை மீறுகின்றாய்.

அவ்வப்போது சீற்றம் கொண்டு 

சிலிர்த்துக்கொண்டு

உன் நீர்மூலம்

ஊரை

 நிர்மூலமாக்குகின்றாய்.

உன்னை சமூத்திர புரமாகமட்டுமல்ல

பெரியதோர் சமத்துவபுரமாகவும் பார்க்கின்றேன்.

உன்னில் வாழும் பலகோடி உயிரினங்கள்

இன மொழி நிற பாகுபாடு ஏதுமின்றி

விசா, கடவு சீட்டு சம்பிரதாயங்களை கடந்து

சர்வதேச எல்லைகளை

சர்வ சாதாரணமாக கடக்கலாம்.

ஆனால் என் தமிழக மீனவன்

தவறிப்போய் 

ஓரடி அதிகம் தாண்டினாலும் 

ஒரேயடியாக தாண்டவமாடும் 

ஒரு சில நாட்டினரும் உன் மீதுதான்

ஒண்டி குடித்தனம் செய்கின்றனர்.

மீனவ நண்பனே!

மண்மீது எல்லைகோடுகள்

நியாயம் தான் என்றறிவேன்

உன்மீதும் கோடுகள் போட்டு

எல்லை வகுப்பது என்ன நியாயம்?

எல்லைகளால் ஏகப்பட்ட தொல்லைகள்.

எல்லையில்லா ஆனந்தம் 

உன்னில் வாழும் உயிரினங்களுக்கே

உண்மையிலேயே உரிமையாகும்.

சூரிய பந்தை விழுங்குவதும் 

விடியுமுன்னே வெளியே

உமிழ்வதும்

உன் முடிவில்லா விளையாட்டு.

விந்தைக்குரிய நீண்ட 

கரங்கள் உனக்கு

சொந்தமானது எப்படி?

ஒரு கையால் மண்ணை பூசிக்கின்றாய்

மறு கையால் விண்ணை வருடுகின்றாய்.

அதிர்ஷ்ட்டகாரனை

மச்சக்காரன் என்பர்

கோடானுகோடி மச்சங்களை கொண்ட

உன்னை என்னவென்பது?

பாற்கடலை கடைந்தபோது

"அமுதம்" தந்தாயாம்

பார்போரெல்லாம் சொல்கின்றனர்

நெஞ்சம் மகிழும் செய்திதான்

ஆனால்,

சில ஆண்டுகளுக்கு முன்பு

இதே போன்றதொரு 

 டிசம்பர் மாதத்தில்

நஞ்சையல்லவா 

உமிழ்ந்து சென்றாய் - கொன்றாய்!

கொள்ளையர் கப்பல்கள் 

உன்மீது பயணிப்பதாக

ஓராயிரம் கதைகளை யாம்

அவ்வப்போது கேட்பதுண்டு

ஆனால் அன்று

நீயே கொள்ளையனாய் மாறி

உயிர்களையும் உடமைகளையும்

பகல் கொள்ளை அடிப்பாய் என்று

ஒருபோதும் நினைக்கவில்லை.

அலைஅடித்து வீழ்த்தியதால்

அப்பா இல்லை அங்கே

அம்மாபோனது எங்கே?

இப்பாரில் உறவுகளின்றி

ஒப்பாரி கேட்க்குது இங்கே.

காயம் பட்ட உள்ளங்கட்க்கு - என்ன

நியாயம் சொல்லபோகின்றாய்?


சரி போனது போகட்டும்

இனி எங்கள் மேல் சரியாவண்ணம்

சரிசெய்துகொள்  உன்னை.

அமுதம் வேண்டாம் எமக்கு

அமைதிதா அதுபோதும் எப்போதும்.

உன்னை எழுதி

வெள்ளை தாளை நிறப்பும் முயற்ச்சி

உன்னை ஒரு சொட்டு விடாமல்

என் பேனாவிற்குள் அடைக்கும் முயற்ச்சிபோல்

வீணான முயற்சி என்பதால் 

இத்தோடு நிறுத்துகின்றேன்


என் நீல கடலே!

உன் மீது எமக்குள்ள 

காதல் அலைகள்

என்றுமே ஓயாது.

நன்றி.

மீண்டும் ச (சி)ந்திப்போம்.

கோ



11 கருத்துகள்:

  1. கடலை பற்றிய அருமையான பதிவு. ரசித்து படித்தேன்.கடலுக்கே கடலை போட்ட முதல் ஆள் நீர்தான் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. விசு,

    "கடலை போட்டதை" பாராட்டிய உமக்கு கடலளவு நன்றிகள்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  3. //உன்னை ஒரு சொட்டு விடாமல்
    என் பேனாவிற்குள் அடைக்கும் முயற்ச்சிபோல்//
    அடைத்தாலும் அடைத்து விடுவீர் நண்பரே
    அருமை நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கு,

      கடலை பாராட்டி, கடல்கடந்து வந்த உங்கள் பாராட்டு அலைகளின் தாலாட்டில் அகம் மகிழ்கின்றேன்.

      வருகைக்கும் உங்கள் வரிகளுக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. மிக நன்றாகவே கடலை போட்டிருக்கின்றீர்கள் "கடலை போடாமலேயே"
    கரையோடு உனக்கென்ன

    அப்படி ஒரு நிலையான காதல்?

    அலையலையாய் வந்து

    முத்தமிட்டு செல்கின்றாய்

    என் காதலியோ எனைப்பார்த்து

    அலையாதே!! என்கிறாள்.// பின்னே "கடலை போட்டால்" என்ன சொல்லுவாளாம்?!!

    உன்னில் வாழும் பலகோடி உயிரினங்கள்

    இன மொழி நிற பாகுபாடு ஏதுமின்றி

    விசா, கடவு சீட்டு சம்பிரதாயங்களை கடந்து

    சர்வதேச எல்லைகளை

    சர்வ சாதாரணமாக கடக்கலாம்.// அழகான வரிகள். ரசித்தோம். சுனாமியாய் எழுந்தது பற்றிய வரிகளும் மிகவும் அருமை!
    மீனவ நண்பனின் கதையும் அழகான வரிகளில் எழுதப்பட்டது கற்பனைக்கும் கரைகள் இல்லை என்பதை நிரூபிக்கின்றது நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      கடலைபோட்டதை சொட்டுசொட்டாடாக படித்து பதிவின் ஒரு சொட்டுவிடாமல் ரசித்து, தாங்கள் அனுப்பிய விமர்சனம் கடல்களை கடந்து வந்திருந்தாலும் எந்த அலைகளிலும் சிக்காமல் என் இதய அலைவரிசையில் சங்கமமானதை எண்ணி என் நெஞ்சம் மகிழ்கின்றது.

      என் காதலி எனை பார்த்து அலையாதே என சொன்னது "என்னை விட்டு அடிக்கடி அலைபோல சென்றுவிடாதே என்னோடு எப்பவும் இரு" என்பதைத்தான் "அலையாதே" என சொன்னாதாக நான் எழுதியிருந்தேன் மற்றபடி வேறு எதற்கும் நான் அலையவில்லை!!!!.

      கடலுக்கு ஒரு கரையுண்டு நட்புடன் கரம் குலுக்கிகொள்ள அதுபோல் கடல்கடந்தும் என்னோடு நட்புபாரட்டும் உங்களுக்கு என் நன்றிகள்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  5. அன்பிற்கினிய நண்பர்களே,

    கடலைபோட்டதை சொட்டுசொட்டாடாக படித்து பதிவின் ஒரு சொட்டுவிடாமல் ரசித்து, தாங்கள் அனுப்பிய விமர்சனம் கடல்களை கடந்து வந்திருந்தாலும் எந்த அலைகளிலும் சிக்காமல் என் இதய அலைவரிசையில் சங்கமமானதை எண்ணி என் நெஞ்சம் மகிழ்கின்றது.

    என் காதலி எனை பார்த்து அலையாதே என சொன்னது "என்னை விட்டு அடிக்கடி அலைபோல சென்றுவிடாதே என்னோடு எப்பவும் இரு" என்பதைத்தான் "அலையாதே" என சொன்னாதாக நான் எழுதியிருந்தேன் மற்றபடி வேறு எதற்கும் நான் அலையவில்லை!!!!.

    கடலுக்கு ஒரு கரையுண்டு நட்புடன் கரம் குலுக்கிகொள்ள அதுபோல் கடல்கடந்தும் என்னோடு நட்புபாரட்டும் உங்களுக்கு என் நன்றிகள்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  6. இது தான் உண்மையான கடலை போடுவதற்கு அர்த்தமோ? அருமை நண்பரே.
    நானும் கல்லூரி நாட்களில் கடலை போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது நண்பரே,

    பதிலளிநீக்கு
  7. சொக்கன்,

    பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    கடலைபோடுவதன் உண்மை அர்த்தம்(அப்படி ஒன்று இருக்குதா?) இன்னமும் எனக்கு புலப்படவில்லை.

    வருகைக்கு நன்றி.

    சந்திப்போம்

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  8. கடல் மேல் தங்களின் காதல் அருமை அரசே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலையோடு கடலை போடாதவர் எவரேனும் இருப்பார்களா?
      வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

      கோ

      நீக்கு