பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 டிசம்பர், 2014

பலா பழமும் பளா(ர்)ன மேட்டரும்

பலா               

இரண்டு நாட்களுக்கு முன் இங்கே ஒரு மளிகை மற்றும் காய் கறி கடையில் பலா பழம் விற்பதை கண்டேன் .
அந்த கடையின் வாயிலில் நுழையும் போதே என் வாயில் ஒழுகியதை யாரும் அறியாதவண்ணம் துடைத்துகொண்டேன், ஆனால் சி சி டி வியில் பதிவானதை நான் கவனிக்க வில்லை.

ஆவலுடன் அந்த பலா சுளைகள் பேக் செய்யபட்டிருந்த ஒரு பெட்டியை எடுத்து முகர்ந்து பார்த்தேன்.

அந்த பலாவின் வாசம் என் மூக்கில் நுழைந்ததும், விமானமின்றி என் நினைவுகள் விருட்டென நம் ஊர் பக்கம் பயணித்தது.

சின்ன வயசில் ,அப்போது வயது ஆறு, கோடை விடுமுறைக்கு எங்கள் தாத்தா வீட்டுக்கு சென்று தங்கி இருந்த காலங்களில் தாத்தா சந்தையில் இருந்து வாங்கி கோணி பையில் கட்டி தமது சைக்கிளில்  கொண்டுவரும் பெரிய பெரிய  பெயர் தெரியாத அந்த முள் பூசணிக்காய்களை மிகவும் ஆச்சரியத்துடன்  பார்த்து இது என்ன என்றுகேட்டதற்கு இது ஒரு பழம் என்று சொன்னார் தாத்தா.

எனக்கு தெரிந்தவரை முலாம் பழம், தர்பூசனிபழம் தான் பெரிய பழங்கள் காய்களில் பூசணிக்காய், ஆனால் இதுபோன்றதொரு பழத்தை நான் அன்று வரை பார்க்காததால் தாத்தாவிடம் பலகேள்விகளை கேட்டுகொண்டே இருந்தேன்.

அவர் சொன்னார் இது  நன்றாக இனிப்பாக இருக்கும் சாப்பிட சுவையாக இருக்கும் என்று.

எனினும் தாத்தா சொன்னார் இன்னும் இரண்டு நாட்கள் பொருத்துதான் சாப்பிட முடியும் அப்போதுதான் அது அன்றாக பழுத்து இருக்கும் என்று.

தாத்தா வீட்டில் என்னைபோன்று, என் சித்தி பிள்ளைகளும்,என் மாமா பிள்ளைகளும் விடுமுறைக்காக தாத்தா வீட்டுக்கு வந்திருந்தனர்.

அன்று இரவு சாப்பாடு ஏழு மணிக்கெல்லாம்  முடிந்தாயிற்று, தாத்தா வீடு ஒரு அழகிய மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது. தாத்தா வீடுதான் அந்த தெருவின் கடைசி வீடு அதற்க்கு பிறகு தெரு முடிந்து விடும் அந்த முடிவில் ஒரு வெளி நாட்டு  குளிர்பான நிறுவனத்தின் பண்டக சாலையின் மதில் சுவர் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு அடி உயரத்தில் கட்டபட்டிருந்தது.

எங்கள் தாத்தா வீட்டுவாசலில் ஒரு மின் விளக்கு கம்பம் இருந்தது.

தாத்தாவும் எல்லா ஆம்ள பிள்ளைகளும்.அந்த வாசலில் விளக்கு வெளிச்சத்தில் படுத்துகொள்வோம்.

தாத்தா எங்களின் படிப்பு விஷயங்களை கேட்பார், பின்னர் நாங்கள் தாத்தாவிடம் பல விஷயங்களை கேட்போம் அவரும் சலிக்காமல் எங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே வருவார்.

மற்ற பிள்ளைகள் எல்லோரும் ஏதேதோ தாத்தாவிடம் கேட்க்க நான் மட்டும் தாத்தா அன்றைக்கு வாங்கி வந்த அந்த முள் பூசணிக்காயை பற்றியே கேட்டுகொண்டிருந்தேன்.

அப்போதுதான் தாத்தா சொன்னார் அதன் பெயர் பலா பழம் என்று.

ஏன் அதை இரண்டு நாட்கள் கழித்துதான் சாப்பிடவேண்டும் என்று சொன்னீர்கள்.

அது இன்னும்  பழுக்க வேண்டும் அதற்குதான்.

இப்போ சாப்பிட்டா  என்ன?

இப்போ சாப்பிட்டா  சுவை இருக்காது.

அப்போ  ஏன் இன்றைக்கு வாங்கி வந்தீர்கள் இரண்டு நாட்கள் கழித்து வாங்கி வந்திருக்கலாமே?

இன்றைக்குத்தான் நான் போயிருந்த ஊரில் சந்தையில் இதை விற்றார்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த பழம் அங்கே கிடைக்காது எனவேதான் இன்றைக்கே வாங்கி வந்தேன் என்றார்,

அந்த பழத்தை எப்படி சாப்பிடுவது?

இரண்டு நாட்கள் கழித்து சொல்கின்றேன், இப்போ ரொம்ப நேரமாயிடுச்சு  எல்லோரும் தூங்குங்கள் என சொல்லிவிட்டு தாத்தாவும் தூங்க ஆரம்பித்து விட்டார்,

ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை, அருகில் படுத்திருந்த என் சித்தி மகன் ,என்னை விட பெரியவர், அவரிடம் அந்த பலா பழத்தை பற்றி சில கேள்விகளை கேட்டுகொண்டிருந்தேன்.

அவர் சொன்னார், தன் அப்பா ஒருமுறை பலாபழம் என்று சொல்லி ஒரு இலையில் சுருட்டி வாங்கி வந்ததாகவும் அது இவ்வளவு பெரியதாக இல்லை எனவும்,மேலே எந்த முள்ளும் அதில் இல்லையெனவும் நிறமும் இப்படி தாத்தா வாங்கிவந்ததுபோல இல்லை என்றும் அதை இரண்டு நாட்டகள் வரை காத்திராமல் வாங்கி வந்த அன்றே சாப்பிட்டதாகவும் சொன்னார்


அவர் சொல்ல சொல்ல தாத்தா வாங்கி வந்த அந்த பழமும் இவர் சொல்லும் பழமும் வேறுவேறாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. எனினும் தாத்தா வாங்கி வந்த அந்த  பழத்தை சாப்பிடும் ஆவல் எனக்கு அதிகரித்தது.

நாங்கள் பேசிகொண்டிருந்தபோது தாத்தாவின் குறட்டை சத்தம் கேட்டது.

மற்றவர்களும் அவர்களது பேச்சு சத்தம் குறைத்து தூங்கிகொண்டிருந்தனர்,

நான் என் சித்தி மகனிடம் கேட்டேன், தாத்தா அந்த பழங்களை எங்கு வைத்திருக்கின்றார் தெரியுமா?

ஆமாம் தெரியும் ஸ்டோர் ரூமில் அரிசி டின்னுக்கு (அரிசியை மூட்டை பிரித்து பேரல் போன்ற ட்ரம்மில் கொட்டி மூடிபோட்டு வைத்திருப்பார்கள்) பக்கத்தில் கோணிப்பையில் கட்டி வைத்திருக்கின்றார்.

சரி நாம போய் அதை பார்த்துவிட்டு வரலாமா?

வேண்டாம் காலையில் பார்க்கலாம்.

இல்லை எனக்கு இப்பவே அதை பார்க்கவேண்டும்.

இப்போ நாம எழுந்து போனால் யாராவது விழித்திருப்பவர்கள் நம்மை எங்கே போகிறீர்கள் என கேட்பார்களே.

நாம பாத்ரூம் போறதா சொல்லிடலாம்.

சரி வா?

இருவரும் மெதுவாக எழுந்து அதைவிட மெதுவாக நடந்து தெரு விளக்கின் வெளிச்சத்தில் வீட்டிற்கு உள்ளே சென்றோம்.

ஸ்டோர் ரூமின் கதவை ஓசையின்றி திறந்தோம்.

இருட்டில் குத்துமதிப்பாக தட்டி தடவி அரிசி ட்ரம்மை தொட்டுவிட்டோம்.

பின்னர் கீழே தரையில் தடவி கோணிப்பையை அடையாளம் கண்டு பழங்களை ஸ்பரிசித்து பார்த்தேன்.

மூட்டை கட்டபடாதிருந்ததால் பழங்களின் மேல் இருந்த அந்த முள்  பகுதியை தொட்டு உணர முடிந்தது.

தொட்டவுடன் அதை சாப்பிடும் ஆர்வம் அதிகரித்தது..

கோணிபையின் வாய் பகுதி பக்கவாட்டில் இருந்ததால், அதை விரித்து என் தலையை அந்த கோணிபையிக்குள் நுழைத்து என் பற்களால் அந்த பலா பழத்தை கடிக்க முயன்றேன் முடியவில்லை மாறாக அந்த முட்கள் போன்ற மேல்பகுதி என் உதட்டில் கீறி வலி ஏற்படுத்தியது.

சரி இதை எப்படி தின்பது  நம் வாயினால் கடிக்க முடியவில்லையே, உனக்கு ஏதேனும் வழி தெரியுமா என என் சித்திமகனிடம் கேட்க்க தலையை கோணிப்பையில் இருந்து வெளியில் எடுத்தேன்.

அங்கே வெளியில் என் இரண்டாவது மாமாவும் என்  சித்திமகனும் அருகில் எங்கள் பாட்டியும் நின்றுகொண்டிருந்தனர்.

எனக்கு ரொம்ப பயமா இருந்தது, என்ன செய்வார்களோ என்று.

என் பாட்டி கேட்டார் என்ன செய்துகொண்டிருக்கின்றாய் இங்கே இந்த நேரத்தில்?

பொய் சொல்ல வேண்டாமே , அப்படி சொன்னாலும் அது எடுபடாது ஏனென்றால் என் சித்தி மகன் ஒருவேளை எல்லாவற்றையும் சொல்லியிருப்பாரோ?

நான் என் ஆசையை அவர்களிடம் சொல்லி நடந்தவற்றை கூறிவிட்டேன்.

பாட்டி சொன்னார், என் மாமாவிடம், " நாளை மதியம் இந்த பழத்தை வெட்டி அனைவருக்கும் கொடு இப்போ  எல்லோரும் போய் படுத்துகொள்ளுங்கள்".என சொல்லிவிட்டு, என் வாயை கழுவிவிட்டார் இல்லையேல் எறும்பு கடிக்கும் என்று.

என்னது பலா பழத்தை வெட்டி சாப்பிடவேண்டுமாஎனக்கு ஒன்றுமே புரிய வில்லை.

எல்லோரும் மீண்டும் அவரவர் இடங்களில் படுத்துகொண்டோம்.

அப்போது நான் என் சித்திமகனிடம் கேட்டேன், எப்படி பாட்டியும் மாமாவும் அங்கே  வந்தனர் என்று.

அதற்க்கு அவர் சொன்னார் நீ கோணிப்பையில் தலையை விட்டிருந்தபோது , யாரேனும் உள்ளே வருகின்றார்களா என நோட்டம் பார்க்க ஸ்டோர் ரூமுக்கு வெளியில் கதவருகே போய் நிற்கும்போது,அந்த கதவருகே படுத்திருந்த பாட்டியின் காலை மிதித்துவிட்டேன் அவர்கள் உடனே எழுந்து விசாரித்ததில்  நடந்தவற்றை கூறி நீயும் உள்ளே இருப்பதை சொல்லிவிட்டேன், அந்த நேரத்தில் சினிமாவுக்கு போயிருந்த மாமாவும் வரவே இருவரும் உன்னை பார்த்துவிட்டனர் என்றார்,

சரிஎன்று கூறி நாங்கள் இருவரும் உறங்கிவிட்டோம்.

கனவிலும் அந்த பலா பழங்கள்தான் வந்தன,

காலை விடிந்தது.

எல்லோரும் குளித்துமுடித்து கோயிலுக்கு  செல்ல தயாராகிகொண்டிருந்தனர்.

நான் கோயிலுக்கு வரவில்லை , இன்று மாமா பலாபழம்  வெட்டபோராறு நான் அதை பார்க்கவேண்டும்.

அதற்க்கு தாத்தா சொன்னார் நாம் கோயிலுக்கு போயிட்டு வரும்போதுதான் அது நல்லா பழுத்து இருக்கும் எனவே நாம போயிட்டு வந்திடலாம், சீக்கிரம் சாப்டுட்டு புறப்படுங்கள் என துரிதபடுத்தினார்.(கோயிலுக்கே கோயிலா?)

கோயிலில் நடந்த எந்த ஆராதனையிலும், நிகழ்ந்த எந்த பிரசங்கத்திலும் மனம் ஒன்றாமல், சிந்தனை முழுவதும் அந்த பலா பழத்தின் மீதே மொய்த்துக்கொண்டிருந்தது.

ஒருவழியாக கோயிலிலிருந்து வெளியில் வந்து , ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்கு வந்ததும் பாட்டி சமைத்து வைத்திருந்த மத்திய உணவினை சாப்பிடும் முன்  அந்த பலாபழ மூட்டையை காண வேண்டுமென நினைத்து ஸ்டோர் ரூம் சென்றேன்.

அந்த மூட்டையை காண வில்லை உடனே பாட்டியிடம் அந்த மூட்டை எங்கே என கேட்டேன்.

அவர்கள் சொன்னார்கள் அதை மாமா மொட்டை மாடியில் வெயிலில் வைத்திருக்கின்றார் நாம் சாப்பிட்ட வுடன் அதை வெட்டி கொடுப்பார் என்று.

வெய்யிலில் வைத்தால் வெட்டுவதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்குமாம்.

வேகமாக மொட்டை மாடி சென்று பார்த்தேன்.

அங்கே  பெரிய அவிலான இரணடு பழங்கள் கொஞ்சம் பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் காணப்பட்டன.


மீண்டும் அவற்றை என் கைகளால் தடவிபார்த்துவிட்டு சந்தோஷமாக சாப்பிட வந்தேன்.

அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு மாமாவின் அருகில் சென்று நின்றுகொண்டேன், அவர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை.

அவர் சாப்பிட்டு முடிக்கும்வரை அவர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

பிறகு ஒரு வழியாக மாமா கத்தியை தீட்டினார், கொஞ்சம் நல்லெண்ணையை (அப்படி தான் சொன்னார்கள்)
ஒரு கிண்ணத்தில் எடுத்துவந்தார். எண்ணெய் எதற்கு?

ஒரு கோணியை நடு ஹாலில் இருந்த ஒரு வட்ட வடிவிலான மேசைமீது விரித்தார்.

பிறகு  மொட்டை மாடியில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த இரண்டில் பெரிய சைசில் இருந்த ஒரு பலா பழத்தை ன் தோளில் சுமந்து வந்து அந்த மேசை மீது வைத்தார்.

அதற்குள் தாத்தாவும் சாப்பிட்டு முடித்திருந்தார்.

இப்போது தாத்தா அந்த பழத்தை அறுக்க மாமா தீட்டி வைத்த அந்த கத்தியை எடுத்து தன் கட்டை விரலில் அறுப்பதை போன்று தடவி பார்த்தார் -என்ன செய்கின்றார்?

எப்போது அந்த பழத்தை அறுக்கபோகின்றார் என நான் ஆவலுடன் அந்த பழத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சரியாக தாத்தா கத்தியை அந்த பலாபழம் மேல் வைக்கவும் எங்கிருந்தோ வந்த ஒரு அந்த பலா பழம் மேல் அமரவும் நான் அதை ஓட்ட என் கையை அந்த பலா பழம் அருகே கொண்டு செல்லவும் ............... என்ன நடந்திருக்கும்?

ரத்தம்! ...ரத்தம்!... ஒரே ரத்தம்!சாரி!!  சத்தம்! ....சத்தம்!....  ஒரே சத்தம்! கோ!....என்று.

எல்லோரும் பதறிவிட்டனர் தாத்தா உட்பட.

நானும் சட்டென்று என் கைகளை பின்னுக்கு இழுத்துக்கொண்டேன், விபத்து தவிர்க்கப்பட்டது.

கோபத்தில் என் மாமா என் கன்னத்தில்பளாரென்று” அறைந்துவிட்டார்.

கொஞ்சமும் நான் எதிர்பாராத அந்த கண நேர சூழ்நிலை , ... நான்  எதிபார்த்த  மகிழ்ச்சி , சந்தோஷம் கொஞ்ச நேரத்தில் காணாமல் போனது.

கண்களில் எனக்கிருந்த அந்த ஆவல்  அதில் வழிந்த கண்ணீரால் கரைந்தோடியது.

அழும் என்னை ஆறுதல் படுத்த பாட்டி என்னை அந்த இடமிருந்து தூக்கிக்கொண்டு வெளியில் வந்து விட்டார்.

தேம்பி  தேம்பி அழும் என்னை  சமாதானம் செய்ய பாட்டி என்னென்னவோ செய்துபார்த்தும் அந்த பேரதிர்ச்சியில் இருந்து நான் மீள வெகுநேரமானது.

நீ அங்கே போகாதே மாமாவை தாத்தாவிடம் சொல்லி அடிக்க சொல்கின்றேன் போன்ற சமாதான வார்த்தைகளை சொல்லி என் அழுகையை நிறுத்த பாட்டி கொஞ்சம் கஷ்ட்ட பட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஒருபக்கம் அவமானம், இன்னொரு பக்கம் பலாபழத்தை எப்படி அறுக்கின்றார்கள் அதன் உள்ளே எப்படி இருக்கும் என்ற விவரத்தை அறிந்துகொள்ளமுடியவில்லையே என்ற ஆதங்கம், இன்னொருபக்கம், அந்த ஹாலுக்கு போககூடாது என்ற வைராக்கியம்.

இதற்கிடையில் சூடு அதிகமாக இருந்ததால் என் சட்டையை கழற்றி கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கும்பொருட்டு என்னை அரை கால் சட்டையுடன் வைத்திருந்தார் பாட்டி.

நான் அந்த ஹாலின் வெளியில் போடபட்டிருந்த ஒரு சிறிய நாற்காலியில் அமர்ந்துகொண்டு உள்ளே என்ன நடக்கும் என்ற யோசனையில் இருந்தாலும், என்னை அவர் ஏன் அடித்தார் என்பதிலும் என் மனம் குழம்பிபோய் இருந்தது.

என்னை தவிர மற்ற எல்லா பிள்ளைகளும் என் சித்திமகன் உட்பட அந்த பலாபழ ஆப்பரேஷன் தேட்டரில் இருந்தனர்.

இதற்கிடையில் எனக்கு தண்ணீர் கொண்டு வர கிச்சனுக்கு சென்றார் என் பாட்டி.

அப்போது என் அம்மா அப்பாவின் நினைவு வந்தது.

உடனே எழுந்து வீட்டை விட்டு வெளியில் வந்து, கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன்.

இதற்க்கு முன் பலா நேரங்களில்  மன்னிக்கவும் பல நேரங்களில் அப்பா அம்மாவுடன் தாத்தா வீட்டுக்கு வந்த நினைவுகளின் அடிச்சுவட்டை பின் பற்றி என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

என் வீட்டிற்கும் தாத்தா வீட்டிற்கும் சுமார் ஆறு  மையில் தூரம்.

தாத்தா வீட்டிலிருந்து முக்கிய சாலை வந்துவிட்டேன், அங்கிருந்து இடமா வலமா என தெரியாத பட்சத்தில்,சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டேன்.

பிறகு அங்கிருந்த சில கட்டிடங்களின் அடையாளங்களை கருத்தில்கொண்டு அந்த முக்கிய சாலையின் இடதுபுறம் நடக்க ஆரம்பித்தேன்.

வெகுதூரம் அந்த சாலையின் போக்கிலேயே நடந்த எனக்கு ஒரு கட்டத்தில் சாலையை கடக்க வேண்டியதாயிற்று.

 அந்த பிரதான சாலையில் கனரக வாகனங்கள்,பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், டாக்க்சிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் வேகமாக போய்கொண்டிருந்தன.

கொஞ்ச நேரத்தில் என் வீராப்பை மறந்துவிட்டு சாலையில் வரிசையாக பாடி இல்லாமல், அதாவது வண்டியின் பாடி பில்ட் பண்ணாமல் வெறும் சக்கரங்கள் இஞ்சின் மட்டுமே பொருத்தப்பட்ட நீண்ட வாகனங்கள் முகமூடி திருடர்களைபோன்று முகத்தை துணியால் இறுக்கி கட்டிக்கொண்டு கண்ணுக்கு கருப்பு நிற கண்ணாடி அணிந்த ஓட்டுனர்களால் ஒட்டிசெல்லாப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் மனம் லயித்தது.

சுமார் ஐம்பதுக்கும்  மேற்பட்ட அந்த வாகனங்கள் கடக்கும் வரை யாருமே சாலையின் மறு பக்கம் செல்ல முடியாமல் நான் இருந்த பக்கமே கூடிநின்றிருந்தனர்.

நானும் காத்திருந்து பின்னர் அந்த கூட்டத்தோடு கூட்டமாக சாலையை கடந்தேன்.

மீண்டும்  என் வீராப்பு அவமானம் நினைவுக்கு வர இன்னும் வேகமாக ஒரு குத்துமதிப்பான திசையில் நடக்க ஆரம்பித்தேன்.

இப்போது ஓரளவுக்கு நான் வரும் வழி சரிதான் என ஊர்ஜிதபடுத்திகொண்டேன், கொஞ்சம் தைரியமும் கூடியது.

எனினும் எங்கள் வீடு இருக்கும்  ஊருக்கும்  இப்போது நான் "பாத யாத்திரை"யில்  இருக்கும் ஊருக்கும் இடையில் இருக்கும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடப்பது எனக்கு ரொம்ப பயமானதாக இருந்தது.

(இப்போதுகூட அந்த பயம் இன்னமும் இருக்கின்றது)

அந்த பாலம் வழியாகத்தான் எல்லா வாகனங்களும் செல்லவேண்டும், மாட்டு வண்டி முதல் கனரக வாகனங்கள் வரை , இதில் பாதசாரிகள் நடப்பதற்கு பிரத்தியேக வசதியில்லாத கொஞ்சம் குறுகலான பழைய பாலம் அது.

அதன் மீது  எத்தனையோ பெரிய விபத்துக்கள் நடந்திருக்கின்றன.

எனினும் முன் வைத்த காலை பின் வைக்கும் என்னத்திற்கு சிறிதும் இடம் கொடுக்காமல்,அந்த பாலத்தின் மீது எதிரும் புதிருமாக வரும் வாகனங்களின் போக்கிற்க்கேற்ப, அவற்றின் பேரிரைச்சல், ஹார்ன் சத்தங்கள், பிரேக் போடும்போது எழும் பயங்கர சத்த்தத்திற்கிடையில்  ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டேன்.

பாலத்தை கடந்ததும் எனக்கு இன்னும் தைரியம் வந்துவிட்டது ஏனென்றால், அந்த பாலத்திலிருந்து இன்னும் கொஞ்ச தூரத்தில் தான் எங்கள் வீடு.

இதற்கிடையில், தாத்தா வீட்டில்:

என்னை வெளியில் உள்ள அறையின் நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வந்த பாட்டி நான் நாற்காலியில் இல்லாததை கண்டு,ஒருவேளை நான் மீண்டும் பலாபழ ஆப்பரேஷன் அறைக்கு சென்றிருப்பேன் என நினைத்து, ஹாலுக்கு சென்று பார்த்திருக்கின்றார்.

அங்கே நான் இல்லை என்றதும், ஒருவேளை கழிவறைக்கு சென்றிருப்பேன் என நினைத்து அவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை கேட்கவும் இல்லை.

நேரம் அதிகமாகியும் நான் உள்ளே வராததை கண்ட தாத்தா என்னை உள்ளே அழைத்து வரும்படி கூறி இருக்கின்றார்.

அப்போதுதான் என் பாட்டிக்கு கொஞ்சம் சூழ்நிலையின் தீவிரம் தெரிந்து வீட்டின் எல்லா அறைகளிலும் , எல்லா இடங்களிலும், மொட்டை மாடியிலும், அக்கம் பக்கத்திலும் தேட ஆரம்பித்திருக்கின்றனர்.

தாதாவுக்கு மிகுந்த கவலையும் வேதனையும் ஏற்பட்டிருக்கின்றது.

அவரும் சைக்கிளில் சென்று பல இடங்களில் தேடி இருக்கின்றார்.

என் மாமாவும் வேறு ஒரு சைக்கிளில் பல இடங்களில் தேடிவிட்டு , விஷயத்தை என் அம்மா அப்பாவிடம் சொல்ல என் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கின்றார்.

எங்கள் வீட்டில்:

அம்மா சமையல் அறையில் இருந்த உரலில் அடுத்த நாளுக்கான காலை உணவுக்கென மாவு ஆட்டிகொண்டிருந்தார்.

அன்று விடுமுறை நாள் என்பதால், அப்பா வீட்டு பின் புறம் இருந்த மாட்டு தொழுவத்தில் எங்கள் பசுவுக்கு அகத்தி கீரையை ஒவ்வொன்றாக அதன் வாயில் வைத்து ஊட்டிகொண்டிருந்தார்

அப்போதெல்லாம் வீடுகள் திறந்தேதான் இருக்கும்.

அப்படி திறந்திருந்த வீட்டில் நான் ஓடிசென்று அம்மாவை கட்டிக்கொண்டு அழுதேன்.

செய்வதறியாது, ஆச்சரியத்தில், அதிர்ச்சியில் அம்மா பேச்சு வராமல் சில நொடிகள் திகைத்துபோனார், பின்னர் நான் யாருடன் வந்தேன்ஏன் சட்டையில்லாமல் இருக்கின்றேன், ஏன் காலெல்லாம் மண்ணும் தூசியுமாக இருக்கின்றது என கேட்டுக்கொண்டே, வாசலை பார்த்தார், ஒருவேளை நான் யாருடன் வந்திருக்கின்றேன் என பார்க்க.

அதற்குள் அம்மா போட்ட சத்தம் கேட்டு அப்பாவும் வந்துவிட்டார்.

நான் அழுதுகொண்டே நடந்தவற்றை கூறினேன், அம்மாவும் அப்பாவும் என்னை  இறுக்க அணைத்துக்கொண்டு , ஏன் இப்படிசெய்தாய், வழியில் ஏதேனும் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும், உனக்கு வழி எப்படி தெரிந்தது,வேறு எங்கேனும் சென்றுவிட்டிருந்தால் என்னவாகியிருக்கும், அல்லது உன்னை யாரேனும் பிள்ளை பிடிக்கின்றவர்கள் பிடித்துகொண்டு போய்விட்டிருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போம், வழியில் ஏதேனும்  விபத்து நேரிட்டிருந்தால்..... என ஏதேதோ சொல்லிகொண்டிருந்தனர், எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

மேலும் நான் யாரிடமும் சொல்லாமலும் , யாருக்கும் தெரியாமலும்  வந்ததை அறிந்ததும் அப்பா அம்மா இருவரும் எங்கள் தாத்தா பாட்டி இருவர்மீதும்   கொஞ்சம்.. அல்ல ரொம்பவே  கோபப்பட்டனர் ,அவர்களை நம்பி பிள்ளையை அனுப்பினால் இப்படிதான் பார்த்துகொள்வார்களா?

சரி தம்பியை குளிக்க வைத்து வேறு ஆடை உடுத்தும்படி அம்மாவிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்கு எதிரில் உள்ள வெல்டிங் கடையிலிருந்து தாத்தா வீட்டுக்கு அருகிலுள்ள அந்த குளிர்பான நிறுவன கிடங்கு அலுவலகத்துக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, தாத்தா வீட்டுக்கு தகவல் சொல்ல அப்பா புறப்பட்டார்.

தொலைபேசிமூலம், தாத்தாவிடமே கொஞ்சம் கடுமையாக பேசி விஷயத்தை சொல்லிவிட்டு அப்பா வீடு திரும்ப வீட்டில் என்னைஅறைந்த” என் மாமா அமர்ந்திருந்தார்.

நடந்தவற்றை என் மாமா அவர் தரப்பிலிருந்து சொல்ல , என் அப்பாவின் கோபம் கொஞ்சமும் தணியாத நேரத்தில். என் தாத்தாவும் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்.

அவரும் என் அப்பாவிடம் மன்னிப்புகேட்க்க , தாத்தா என்னை அவர் மடியில் அமர்த்தி முத்தமிட்டு கையோடு  கொண்டு வந்திருந்த  பையில் இருந்த ஒரு எவர் சில்வர் பாத்திரம் நிறைய   இருந்த எதோ ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்தார்.

நான் ஆவல் மிகுதியால் அது என்ன என்று கேட்டேன்.

தாத்தா சொன்னார், பலாபழம்.

அத்தனை பெரிய பழம் எப்படி இந்த பாத்திரத்தில்?

ஓடிச்சென்று அம்மாவின் கையிலிருந்த பாத்திரத்தில் கை விட்டு பார்த்தேன்.

அவை ஒவ்வொன்றும் என் கை கொள்ளாத அளவாக  பெரிய பெரிய துண்டங்களாக இருந்தன.

மீண்டும் தாத்தாவிடம் கேட்டேன் ஏன் இப்படி இருக்கின்றது என்றேன்.

அவர்சொன்னார் நீ பார்த்த அந்த பெரிய பலா பழத்தின் உள்ளே இதுபோன்று தனித்தனியான சுளைகள் இருக்கும், அதன் உள்ளே கொட்டைகள் இருக்கும் அந்த கொட்டைகளை எடுத்துவிட்டால் அவை இதுபோன்று இருக்கும்.

சாப்பிடு என்று  என் கையில் இருந்த அந்த சுளையை பிய்த்து எனக்கு ஊட்டிவிட்டார்.

ஆகா!! .... அந்த சுவையே சுவைதான்.

பிறகும் அம்மா எங்கள் அனைவருக்கும் இரவு உணவு தயாரித்து கொடுத்தார், நான் சாப்பாட்டை விட தாத்தா கொண்டு வந்த பலா பழத்தையே அதிகம் சாப்பிட்டேன்.

அடுத்து பல முறை தாத்தா பல பழம் வாங்கிவந்து எங்கள் வீட்டிலேயே என் எதிரிலேயே அறுத்து எண்ணெய் தடவி ஒவ்வொரு சுளையாக என்னிடம் கொடுத்து பாத்திரத்தில் போட  செய்தார்.

அப்படி ஒருமுறை தத்தா வாங்கிவந்த ஒரு சிறிய பலாபழத்தில் மொத்தம் முப்பது சுளைகள் இருந்தன எனது இந்த பதிவோடு இதுவரை எழுதிய எனது மொத்த  பதிவுகளின் எண்ணிக்கையைபோல.

இத்தனை நினைவலைகளில் அடித்துசென்ற  நான் இங்கே அந்த கடையில் எனக்கு பின்னால் இருந்த  ஒருவர் எக்ஸ்க்யூஸ் மீ  கொஞ்சம் ஒதுங்குங்கள் நானும் பலா பழம் வாங்கவேண்டும் என்று சொன்ன குரல் கேட்டு மீண்டும் சுய நினைவுக்கு வந்தேன்.

நன்றி,

மீண்டும் (சி)ந்திப்போம்

கோ

15 கருத்துகள்:

 1. கோபத்தில் என் மாமா என் கன்னத்தில் “ப(லா)ளாரென்று” அறைந்துவிட்டார்.

  நல்ல ரசிக்க வைத்த பதிவு. பலா பழத்திற்கும் எனக்கும் கூட ஒரு நல்ல
  சம்பவம் உண்டு. அதுவும் பண்ருட்டி என்னும் ஊரில். அதை பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசுவின் பலாவை எதிர்பார்கின்றேன். பாராட்டியதற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. பலாவை பாராட்டியதற்கு வருகைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 3. பலா பழத்தை போன்றே கரடு முரடாக இருந்தாலும் நடை சுவையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 4. ராஜு,

  பாதை கரடு முரடாக இருந்தாலும் உடன் பயணித்து கனியை சுவைத்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 5. குழந்தையாக இருந்தபோதே என்ன ஒரு வைராக்கியம்?
  பலாவை விட தன்மானமே பெரிது என நடந்தே வீட்டிற்கு வந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமதி அனிதா அவர்களுக்கு,

   ஆமாம் அது இன்னமும் என் வீட்டாருக்கும் எனக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   பின் குறிப்பு:நான் இன்னும் குழந்தைதான், வேண்டுமென்றால் நண்பர்கள் துளசிதரன் மற்றும் கீதா அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

   கோ

   நீக்கு
 6. உங்கள் வாயிலிருந்து ஒழுகி நீங்க துடைத்துக் கொண்டது அந்தக் காமேராவில் பதிவானதை நாங்களும் பார்த்தோமே...!!! எங்கள நீங்க பாக்கலியா!!!??

  பலா பழம் எங்களுக்கும் மிகவும் பிடித்த பழமானதால் இந்தப் பலாப்பழமும் மிகவும் ப்டித்தது. நீங்கள் கோபித்துக் கொண்டு ஓடி வந்ததற்கு தாத்தா மன்னிப்புக் கேட்டாரா!!?? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல??!!! ஹஹ்ஹஹ..ஆனாலும் சரியான வீம்புக் காரர் போல நண்பரே! ..

  இனிமையான முப்பது பலாச்சுளைகளைத் தந்ததற்கு வாழ்த்துக்கள்..இனியும் பெரிய பலாப் பழத்திலிருந்து இனிய பல சுளைகளை எங்களுக்குத் தர வேண்டி வாழ்த்துகிறோம் நண்பரே! பலாப்பழம் இங்கு வரை மணக்கின்றது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   ஓ.... அந்த கடையில் எனக்கு பின்னால் இருந்து எக்ஸ்க்யூஸ் மீ என்று சொன்னது நீங்கள் தானா, பலா பழ மயக்கத்தில் உங்களின் அழகிய திருமுகங்களை பார்க்கவில்லை மன்னிக்கவும்.

   தாத்தா மன்னிப்பு கேட்டது என்னை கவனிக்க தவறிவிட்டதற்க்காக என்று நினைக்கின்றேன்.

   அதானே, பலாபழம் யாருக்குத்தான் பிடிக்காது, அதுவும் பாலக்காட்டு மாதவன் இருக்கும் ஊரில் அதிகம் கிடைக்குமே?

   இந்த முப்பதை (வயதை...... இதைவிட கொஞ்சம்...குறைவுதான் ) பாராட்டிவந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

   எல்லாம் உங்கள் ஊக்கமும் ஆதரவும் ஆசியும் தான் காரணம்.

   நட்புடன்,

   கோ

   நீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. பலாப் பழத்தைப் பார்த்து ஜொள்ளு விட்டது தான் பலான மேட்டரா :)

  பதிலளிநீக்கு
 9. வாங்க ஜி.

  அறை வாங்கினதும் கூட.

  அந்த வயசில் அதுதான் பலான மேட்டரு எனக்கு, உங்களுக்கு எது?

  வருகைக்கும் பலா சுவைத்ததற்க்கும் மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஊருக்கு நியைற கிடைக்கும். பலா பழம்.

  பதிலளிநீக்கு
 11. உங்கள் வரவேற்பு பலாவை விட காட்டிலும் சுவையாக இனிக்கின்றது.


  கோ

  பதிலளிநீக்கு