பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 2 டிசம்பர், 2014

ஸ்வீட் சிக்ஸ்டீன்

சமீப நாட்களாக, ஸ்வீட் சிக்ஸ்டீன் என்ற வார்த்தைகள் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.
வாழ்க்கையில் நாம் எத்தனை சிக்ஸ்டீன் களை  பார்த்திருந்தாலும் , அந்த முதல் சிக்ஸ்டீன் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இன்னும் சிலர் தாங்கள் அரை நூற்றாண்டை  கடந்து  காலம் தள்ளிக்கொண்டிருந்தாலும் தங்களை இன்னும் ,அநியாயத்துக்கு,
ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று கூறிக்கொண்டு நாட்டில் நடமாடுவதையும் ஆங்காங்கே பார்க்க முடிகின்றது.

பதினாறு வயதில்  அப்படி என்ன ஒரு சிறப்பு ?

இது ஒரு பட்டாம்பூச்சி பருவம், கூட்டை விட்டு அழகிய வண்ண சிறகுகளை விரித்து உலகத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில், புதிய பரிமாணத்தில், புதிய அர்த்தத்தோடு,புதிய  அணுகுமுறையோடு பார்க்கும் ஒரு புதிய பிறப்பு.

நன்மை தீமைகளை சட்டென்று புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், கொஞ்சமாவது குழந்தை தனமின்றி சுயமாக யோசித்து நிதானித்து செயல்படக்கூடிய  பருவம்.

தனது பொறுப்புகளை, கடமைகளை,ஓரளவுக்கு உணர்ந்துகொண்டு அவற்றிற்கு உரிய செயல்வடிவம் கொடுத்து வாழ்வியல் முறைமைகளின் முதற்படியில் அடியெடுத்து வைத்து உலக எதார்த்தங்களை எதிர்கொள்ளும்  ஒரு அழகிய அர்த்தமுள்ள  பருவம் இந்த முதல் பதினாறாம் பருவம்.

இது ஆண் பெண் இருபாலாருக்கும் பொருந்தும் என்றாலும் நம்ம பசங்க இதை ஒன்னும் அவ்வளவு சீரியசாக எடுக்கின்றார்களா என்பது எனக்கு தெரியவில்லை.

என்னுடைய பதினாறு எப்போது வந்தது எப்போது சென்றது என்பதெல்லாம் எனக்கு மூளையின் எந்த ஒருமூலையிலும் அந்த நினைவு தங்கியிருக்க கொஞ்சமும் வாய்ப்பு இல்லை.

இப்போது   என் நினைவலைகளை கொஞ்சம் பின்னோக்கி நகர்த்தி பார்த்தால், அப்போது நான் மேனிலை முதலாமாண்டு படித்துகொண்டிருந்திருப்பேன், அந்த சமயத்தில்ஸ்வீட் சிக்ஸ்டீன் என்ற  வார்த்தை கூட எனக்கு தெரியாதுஅப்படியிருக்க அந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினேன் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது என்று சொல்ல துளியும் வாய்ப்பில்லை.

ஆனால் இந்த பதினாறாம் பிறந்த தினத்தை பெண் பிள்ளைகள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி அதற்க்கான கொண்டாட்டங்களை மிக மிக உற்சாகத்துடன் , மகிழ்ச்சியுடன் ஒழுங்கு செய்ய பெற்றோர்களை ஊக்கபடுத்தி, தனது நெருங்கிய பள்ளி தோழிகளை அழைத்து அவர்களோடு கேக் வெட்டி உணவருந்தி பரிசுபொருட்களை பிரித்து பார்த்து தனது பதினாறாவது பிறந்த தினத்தை  நினைவில் பதித்து அது தனது வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத நாளாக கருதுவார்கள்.

இந்த பதினாறாவது பிறந்ததினத்தை பெண்கள் கொண்டாடுவதால்தான் என்னவோ இதற்க்கு ஸ்வீட் சிக்ஸ்டீன் என்ற அங்கீகாரம் என நினைக்கின்றேன், ஒரு பையனுக்கு  ஸ்வீட் சிக்ஸ்டீன் என யாராவது கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சொன்னாலும் கேட்க்க கொஞ்சம் என்னவோமாதிரிதான் இருக்கும்.

பெண்களை ஸ்வீட் கேர்ல்ஸ் என்றால் கேட்க்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கு, அதையே ஒரு பையனை பார்த்து ஸ்வீட் பாய் என்று சொன்னால், அப்படி சொல்பவரை கொஞ்சம் ஒருமாதிரியா பார்பார்கள்.

பாய்ஸ் எப்பவுமே ஸ்மார்ட் பாய்ஸ்தான் (ஸ்வீட் எல்லாம் ஒத்துவராதுங்க நமக்கு)

சரி விஷயத்துக்கு வருவோம்.( அடப்பாவி ஆரம்பிச்சி அரை மணி நேரம் ஆச்சி இன்னும் பாய்ண்டுக்கே வரலியா?)

இதோ வந்துட்டேன்.

கடந்த ஒன்றாம் தேதி திங்கட்கிழமை, என் நண்பரின் மகளின் ஸ்வீட் சிக்ஸ்டீன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சென்றிருந்தேன்.

மகளுக்கு எமது அன்பான வாழ்த்துகளை சொல்லி கைகுலுக்கி ஆசிர்வதித்தேன். உடனே என் வயச கணக்குபோடாதீங்க பதினைந்து வயசு பொண்ண ஆசீர்வதிக்க நாற்பது வயசு ஆகியிருக்கனும்னு அவசியமில்ல புரியுதா? 


பின்னர் மகள் தனது பள்ளி தோழிகளுடன் தனது மேல் அறையில் பேச்சு, சிரிப்பு பாட்டு என மகிழ்ந்திருந்தாள்.

நானும் மற்ற நண்பர்களும் கீழே ஹாலில் அமர்ந்து சிலபல விஷயங்களை அங்கே வைக்கபட்டிருந்த சில பல விஷயங்களை(ஒன்னுமில்லைங்க - கூல் ட்ரிங்க்ஸ் , நொறுக்கு தீனி,ஸ்வீட்ஸ் போன்றவைதான்) சுவைத்தவண்ணம்
பேசிக்கொண்டிருந்தோம்.

பெண்மணிகள் மத்திய விருந்துக்கான ஆயத்தங்களை செய்துகொண்டிருந்தனர்.

கொஞ்சம் நேரம்கழித்து நண்பரின் மனைவி நான்காக மடிக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை தாளை நண்பர்களின் மத்தியில் கொண்டுவந்து இதை கொஞ்சம் படியுங்கள் என்று நடுவிலிருந்த காபி டேபிளின் மீது வைத்தார்கள், பின்னர் தமது கண்ணை துடைத்தவாறே சமையல் அறைக்குள் சென்று மற்ற பெண்மணிகளுடன் சமையல் வேலையில் மும்முறமானார்கள்.

கண்கலங்கும்படிஎன்ன நடந்தது, ஒருவேளை தயிர் பச்சடிக்கு வெங்காயம் வெட்டியிருப்பார்களோ?

சரி மேலும் ஆராயாமல் அந்த வெள்ளைத்தாளில் இருந்த கருப்பு எழுத்துக்களை என்னிடம் கொடுத்து கொஞ்சம் சத்தமாக வாசிக்கும்படி ஒரு நண்பர் சொன்னார் .

அதில் பிறந்தநாள் கொண்டாடும் தனது மகளுக்கு நண்பர் எழுதி இருந்த ஒரு பிறந்த நாள் வாழ்த்து செய்தி.

பொதுவாக பிறந்த நாள் என்றால் ஏற்கனவே அழகிய (பொய்யான, பொருத்தமில்லாத) வார்த்தைகளை கொண்டு அச்சடிக்கப்பட்ட அட்டைகளை தங்களின் கையொப்பமிட்டு கொடுப்பதுதான் பெரும்பான்மையினர் செய்யும் செயல், னால் நண்பர் தன் மகளுக்கு தன் கைப்பட, தனது மனதில் தோன்றிய வார்த்தைகளை வாழ்த்துகளாக்கி, அந்த வெள்ளை தாளில் வார்த்து இருந்தார்.

அந்த கடிதம் இப்படியாக இருந்தது:

கடவுளின் பெரிதான கிருபையால் கிடைக்கப்பெற்ற  என் அன்பிற்கு பாத்திரமான அருமை மகளே,

இன்று உனக்கு பதினாறாம் பிறந்த தினம், இந்த ஆசிர்வதிக்கப்பட்ட நல்ல நாளில் உன்னை பரிபூரண , பவித்திர உள்ளத்தோடு எல்லா நன்மைகளையும் ஒருசேர பெற்று இந்த உலகில் நீ ஒரு சிறந்த பெண்ணாக வாழ வேண்டும் என்று உன்னை அந்த எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் ஆசிர்வதிக்கின்றேன்.

உனக்கு இன்று பதினாறு வயது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றாலும் அதுதானே உண்மை.

எனினும் இன்னமும் நீ எனக்கு குழந்தையாகவே காட்சி அளிக்கின்றாய்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குமுன் மருத்துவமனையில் உன் அம்மா உன்னை ஈன்றபொழுது அவர்களின் அருகிலேயே இருந்து உன் ஒவ்வொரு உடல் பாகமும் இந்த உலகை நோக்கி  கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்த அந்த சப்தமில்லா நிமிடங்கள் இன்னும் என் நெஞ்சில் நீங்காமல் ரீங்காரமிட்டுகொண்டிருக்கின்றது.

 உன் அழகிய சிறு உடலும் அதின் உள்ளே நீ  பத்திரமாய் பொதிந்துவைத்திருந்த அந்த உயிரும் முழுமையாக அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்துடனே , உதவிக்கு இருந்த அந்த தாதியர்கள் உன்னையும் அம்மாவையும் இணைத்திருந்த அந்த தொப்புள் கொடியின் இணைப்பை துண்டித்து உன் பட்டுடலை நனைத்திருந்த திரவத்தை பட்டைவிட மென்மையான துவாலையால்  துடைத்து , உனக்காக நான் வாங்கிவைத்திருந்த பிங்க் நிற பூந்துவாலையில் சுற்றி என்னிடம் கொடுத்தார்கள்.

கொடுக்கும் போது சொன்னார்கள் இன்னும் குழந்தை அழவில்லை எனவே கொஞ்சம் நேரம் பார்த்துவிட்டு டாக்டரிடம் சொல்லபோவதாக..

குழந்தை ஏன் அழவேண்டும் சிரிக்கத்தானே எல்லோரும் ஆசைபடுவார்கள்,அப்படி இருக்க அந்த தாதிமார்கள் நீ இன்னும் அழவில்லை என்று சொன்னதும் எனக்கு கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தது, பிறகுதான் எனக்கு விஷயம் புரிந்தது, குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து வெளிஉலகுக்கு வந்தவுடன் இங்கிருக்கும் ஆக்சிஜனை முதன் முதலில்  சுவாசிக்கும்போது கொஞ்சம் அழுவார்களாம் , அது குழந்தைகளின் சுவாச உறுப்புகளை விரிவுபடுத்த உதவும்  என்று.

பிறந்தது முதலே நீ எதற்கும் அழகூடாது என்று நான் நினைத்தது தவறுதான், னால் அதன் பிறகு இன்றுவரை உன்னை அழவிடாமல் அரவணைத்து காக்கும்படி துணை புரியும் இறைவனுக்கு இன்று காலையில்கூட நன்றி சொன்னேன்.

நீ பிறந்து ஐந்தாவது மாதம் அப்பாவின் பிறந்த நாளன்று உனக்கு காதுகுத்தவேண்டுமென்று டாக்டரிடம் விசேஷித்த முன்பதிவுசெய்து உன்னை தூக்கி சென்றோம், உனக்கு காது குத்துவதற்கு முன் அந்த டாக்டரிடம் மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டேன் குழந்தைக்கு வலிக்குமா என்று.  நான் பலமுறை கேட்டதினால் அந்த டாக்டருக்குத்தான் காது வலித்திருக்கும்

டாக்டர் சொன்னார் இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு வலிதெரியாது எனவே பயப்பட வேண்டாம் என்று.

எனினும் உனக்கு அவர்கள் ஒரு சிறிய பிஸ்டல் போன்ற கருவிமூலம் இரண்டுபக்கங்களிலும் குத்தும்போது நீ வீரிட்டு அழுதபோது என்கண்ணிலும் நீர் சுரந்ததை உன் அம்மாகூட பார்க்காவண்ணம் நான் துடைத்துகொண்டேன், ஏனென்றால், நான் பிறந்த நாளன்று உனக்கு ஒரு கொடுமை நிகழ்ந்ததே என எண்ணி.

எனினும் ஓரிரு நாட்களிலே நீ அணிந்திருந்த அந்த முதல் கம்மலோடு உன் அழகை பார்த்து பூரிப்படைந்தேன் அந்த காதுகுத்திய டாக்டருக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன்,

ஐந்தாவது  மாதம் தடுப்பூசி போடவேண்டும் என்றார்கள், ன் மனம் ஏனோ அதை ஏற்க்க மறுத்தது, எனினும் உன்னுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை காரணம் காட்டி என்னை கட்டிபோட்டார்கள், இரண்டு மூன்று நாட்களாக உனக்கு வலி நிவாரண மருந்து கொடுக்கும்போதெல்லாம் ன் மனம் வலித்ததை நான் யாருக்கும் சொல்லவில்லை.

நீ ஆரோக்கியமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளருவதை  கண்டு பூரிப்பில் மூழ்கும் ஒவ்வொரு தருணமும் உனக்கு தடுப்பூசிகளை போட்ட அந்த டாக்டர்கள் நர்சுகளுக்கு  மனமார நன்றிகள் சொல்லியிருக்கின்றேன்.

நீ பிறந்து ஆறாம் மாதம் உன் வரவை ஆவலோடு எதிபார்த்திருந்த உன் பாட்டி, அம்மாச்சி, தாத்தா ,அத்தைகள், சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா மற்றும் நம் குடும்ப மக்கள் அனைவருக்கும் ஒரு இன்ப மகிழ்வாக உன்னை அழைத்து சென்றோம்,அப்போது எனது இரண்டு கரங்களுக்கு மத்தியில் நீ ஒரு பொம்மைபோல தூங்கிகொண்டிருந்தாய்.

விமான நிலையத்திலேயே உன் தூக்கம் கலைந்தது , புன்னகை பூத்தது உன்னை பார்க்க வந்தவர்கள் அனைவரிடமும் உன் கள்ளமில்லா உள்ளத்தின் அன்பை உன் பல்லில்லா பொக்கை வாய் சிரிப்பு மூலம் பரிமாறினாய்.

உனக்கு நீ பிறந்த மண்ணின் வாசனையையும் சேர்த்து, இறைவன் தேர்ந்தெடுத்து கொடுத்த அழகிய பெயர் சூட்டி  மகிழ்ந்தோம்.

உனது பெயரின் அர்த்தத்திற்க்கேற்ப  இன்று  வரை நீ நடந்துகொள்வதை நினைத்து மீண்டும் இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன்.

கடந்த சில நாட்களாக நீ உன் பதினாறாவது பிறந்த நாள் குறித்து பல விஷயங்களை அம்மாவிடம் பரிவர்த்தனை செய்வதை அறிந்தேன்,

அதில் ஒன்று உனக்கு ஒரு அழகிய - நீண்ட நாட்கள்  நினைவுக்குரிய ஒரு பரிசுப்பொருள் வேண்டும் என்பது, ஆனால் அது என்னவாக இருக்கவேண்டும் என்பதைகூட உனக்கு சொல்ல தெரியவில்லை, நீ இன்னும் குழந்தையாகவே இருப்பதாலோ என்னமோ?

இன்றுவரை நீ எங்களிடம் எந்த ஒரு பொருளையும் ஆசைப்பட்டு , கட்டாயபடுத்தி, பிடிவாதம் பிடித்து , அழுது புரண்டு கேட்டதாக எள்ளின் முனையளவும் எனக்கு நினைவில்லை.

ஏற்கனவே நாங்கள் உனக்கு ஒரு அழகிய பரிசுப்பொருள் வாங்கவேண்டும் என்று முடிவுசெய்திருந்தோம்.

அதன்படி, உனக்கு ஒரு பரிசு பொருள் உன் கபோர்டுக்குள் வலது டிராவில் வைத்திருக்கின்றோம்.

உனக்கு பிடித்திருக்கும் என நம்புகின்றோம்.

நீ பார்பதற்கு முன் அதை பற்றி உனக்கு இப்போதே சொல்வது நலமாயிருக்கும் என நினைக்கின்றேன்.

அந்தப்பொருள் இரண்டு உலோகங்களாலும் ஒரு ரத்தினத்தினாலுமான  ஒரு கலவை.

ஆம் நீ யூகித்தது சரிதான்.

அது ஒரு வைர மோதிரம்.

உன் அழகிய விரலை சுற்றி படரும் பாகம் தங்கத்தினாலானது,அதன் மேலே உள்ள வைரக்கல்லை இணைக்கும் உலோகம் வெள்ளியிலானது.

உலகியல் தத்துவம் அதில் அடங்கி இருப்பதாக நான் உணர்ந்ததால் அதை உனக்கும் உணர்த்தவே இந்த பொருளை தேர்ந்தெடுத்தோம்.

தங்கம்   போன்ற  மதிப்புமிக்கவர்களாக  இந்த சமூகத்தில் வாழ்பவர்கள் அவர்களை விட எளியவர்களிடத்தில் அன்பையும் , மரியாதையும் , கனிவையும் கரிசனையையும் காண்பித்தால் அவர்கள் நமது புகழின் மகுடத்தில் வைரங்களை தாங்கிபிடிப்பவர்களாக இருப்பார்கள்.

 உலகில் எளியவர் உயர்ந்தவர் எனும் பாகுபாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை முதன்மைபடுத்தி, பணம் இருப்பவர்கள், பணமில்லாதவரை ஏளனமாக நினைக்காமல் எல்லோரிடத்திலும் சமமான அன்பையும் மரியாதயாதயையும் காண்பித்து ஒருவரிடத்தில் உள்ள நல்லகுணங்களை பாராட்டி ஒருமித்து மனிதாபிமானத்துடன், மனித நேயத்துடன்  வாழ்ந்தால்தான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும்  மதிப்பும் இருக்கும், அது நீண்ட காலத்திற்கு நன்மதிப்பையும் கூட்டும்.

என்னதான் தங்கம் என்றாலும் அதில் வைரம் ஆழமாக அழுத்தமாக பதிக்கபடவேண்டுமெனில் அதற்க்கு வெள்ளியின் உதவி ,ஒத்தாசை மிகவும் அவசியம்,அப்படி இந்த மூன்றும் சரியாக  இணைந்ததால்தான் நீ இப்போது பார்க்கபோகும் அந்த  மோதிரம்   அழகானதாக இருக்கின்றது.

இனிவரும் காலங்களில் இந்த மோதிரம் உன் விரலுக்கு அழகை மட்டுமல்ல உன் மனதுக்கு ஒரு அழகான வாழ்வியல் தத்துவத்தையும் நினைவுபடுத்தும் ஒரு ஞாபக சின்னமாக அமைய வேண்டும் என்று என் ஆசையையும் தெரிவித்து இத்துன்  என் ஆசியையும் உனக்கு அளிக்கின்றேன்.

என் அன்பு மகளே,

இன்றுள்ள மகிழ்ச்சியும் குதூகலமும் என்றென்றும் உன்னில் நிலைத்திருக்கவும் ஞாயமான உன் ஆசைகளும் , உன்னுடைய இலக்கும்  நிறைவேறவும்  என் இதயபூர்வமான வாழ்த்துக்களை இன்று உனக்கு தெரிவிக்கின்றேன்.

இன்னும் பல பல பதினாறு பிறந்த நாட்களை கொண்டாட இறைவனின் அருளும் ஆசீர்வாதமும் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை வழிநடத்தும்.

ஹாப்பி பர்த்டே!


இத்தனையும் நான் என் மனதில் இருந்ததை உனக்கு எழுதிவிட்டேன்.
இந்த சந்தோஷமான நாளில் எனக்கும் அம்மாவுக்கும் ஒரு வருத்தம்.
நான் எழுதி இருப்பதை படிக்கவோ அதை புரிந்து கொள்ளவோ எழுதி இருப்பது என்னவென்று கேட்கவோ உன்னால் முடியாதென்பதே.

நீ மூன்று வயதுவரை எல்லா பிள்ளைகள்போல நன்றாகத்தான் பேசிகொண்டிருந்தாய், உன் மழலை பேச்சை எவ்வளவு நேரமானாலும்  கேட்டுகொண்டே இருக்கலாம் போல அழகாக பேசிக்கொண்டு இருந்தாய் , ஆனால் அதற்க்கு பிறகு நமக்கு தெரிந்த மற்ற குழந்தைகளை போல சரளமாக பேசுவதை நிறுத்திக்கொண்டாய்.

இதற்க்கு இறைவனை குற்றம் சொல்லவில்லை, இதில் பெரும் பங்கு பெற்றோர்களாகிய எங்களுக்கும் இருக்கின்றது.

ஆரம்பத்தில் எல்லாம் போகப்போக  சரியாகிவிடும் என்று நாங்களும் மெத்தனமாக இருந்துவிட்டோம், இப்போது காலம் கடந்து விட்டதோ  என அஞ்சுகின்றோம்.

இதில் நீயும் கொஞ்சம் பிரயாசபட்டிருந்தால் இந்த நிலை நமக்கு ஏற்பட்டிருக்காது உன் முயற்சியும் முக்கியம் தான்.

இன்று நம் வீட்டுக்கு வரும் நம் நண்பர்கள் அவர்களின் குழந்தைகள் உன்னை பரிகசிக்கமாட்டார்கள் எனினும் அவர்களோடு உன்னால் அவர்களைப்போல பேச,படிக்க,எழுத முடியாமல் போகுமே என நினைக்கும் போது உள்ளம் கொஞ்சம் அழத்தான் செய்கிறது.

பரவாயில்லை பெற்றோர்களாகிய எங்களின் முயற்சி தொடரும், நீ நமது நண்பர்களின் மற்றும் உறவினர்களின் பிள்ளைகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கேனும் பேசும் நாள் வெகு விரைவில் வரும் என்று நம்புகின்றோம்.

இவ்வாறாக அந்த நண்பரின் மகளுக்கான பிறந்த நாள் வாழ்த்து செய்தி -  கடிதம் அமைந்திருந்தது.

கடிதம் படித்து முடிந்தவுடன் பர்த்டே கேர்ல்  தானே தன் கைப்பட செய்திருந்த கேக் வெட்ட அனைவரும் ஹாப்பி பர்த்டே பாட்டுபாட பின்னர் விருந்து ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம்தான்.

கேக்  வெட்டும்போது பிறந்தநாள் கொண்டாடும் அந்த சிறுமியின் விரலில் அந்த அன்பு பரிசு வைர மோதிரம் காணவில்லை, ஆம் அந்த மோதிரம் அவள் விரலில் ஜொலித்ததைவிட  வந்திருந்த விருந்தினர் கைகளிலேயே அதிக நேரம் இருந்தது அதன் அழகு அப்படி.பின் குறிப்பு:

அடடே....நண்பரின் கடிதத்தில் இருந்த ஒரு வார்த்தையை காட்சி பிழைப்போல படிக்க மறந்துவிட்டேன்.

மீண்டும் படிக்கிறேன் கேளுங்கள்:

இன்று நம் வீட்டுக்கு வரும் நம் நண்பர்கள் அவர்களின் குழந்தைகள் உன்னை பரிகசிக்கமாட்டார்கள் எனினும் அவர்களோடு உன்னால் அவர்களைப்போல தமிழில்  பேசபடிக்கஎழுத முடியாமல் போகுமே என நினைக்கும் போது உள்ளம் கொஞ்சம் அழத்தான் செய்கிறது.

நன்றி.

மீண்டும் (சி)ந்திப்போம்.

கோ


10 கருத்துகள்:

 1. ////இன்று நம் வீட்டுக்கு வரும் நம் நண்பர்கள் அவர்களின் குழந்தைகள் உன்னை பரிகசிக்கமாட்டார்கள் எனினும் அவர்களோடு உன்னால் அவர்களைப்போல பேச,படிக்க,எழுத முடியாமல் போகுமே என நினைக்கும் போது உள்ளம் கொஞ்சம் அழத்தான் செய்கிறது.////
  கண்கலங்க வைத்துவிட்டீர்கள் நண்பரே
  இயற்கையின் கொடுமை

  பதிலளிநீக்கு
 2. நண்பர் கரந்தையார் அவர்களுக்கு,

  பதிவை பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி, பதிவின் பின் குறிப்பை பார்த்தீர்களா?

  நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 3. நண்பரே! தாமதமான வருகை! மன்னிக்கவும்.உங்களுக்குப் பிடிக்காத வார்த்தை இருந்தாலும்....பயணத்தில் இருந்ததால் (கீதா) வலைப்பக்கம் வர இயலவில்லை....

  ஸ்வீட் 16 எங்களில் கீதா உங்களுக்குப் பதில் அளிக்கையில் தவறாமல் எழுதுவது தங்களுக்கு ஒரு பதிவு எழுத ஹஹஹஹஹ்...சும்மா....நண்பரே!

  முதலில் இழையோடிய நகைச்சுவையை ரசித்து வந்து கொண்டிருக்கும் போது....அந்த வார்த்தைகள் மனதை என்னவோ செய்துவிட்டது...நண்பரே! அந்தக் குழந்தைக்குப் பேசவோ எழுதவோ முடியாமல் போனாலும்...."என்றுமே ஸ்வீட் 16 தான் ஏன்சல் தான்....

  பதிவு அருமை....உங்கள் நடை (நீங்கள் நடப்பதைப் பார்த்ததில்லை...அதனால் இது உங்கள் நடை அல்ல....உங்கல் எழுத்தின் நடை) அருமை...ரசிக்க வைக்கின்றது! நண்பரே!

  பதிலளிநீக்கு
 4. அன்பிற்கினிய நண்பர்களே,

  தங்களின் வருகையை காணாமால் நான் தவித்த தவிப்பை வரிகளால் சொல்ல முடியாது. இனி ஊருக்கு போவதாயிருந்தால் அக்கம் பக்கம் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

  பதிவினை ரசித்தமைக்கு நன்றி, அந்த பதிவின் கடைசி பாகத்தை இன்னொரு முறை வாசியுங்கள்,அதாவது பின் குறிப்பை.

  இருவரும் நலமுடன் இருப்பீர்களென நம்புகின்றேன்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 5. "//இப்போது என் நினைவலைகளை கொஞ்சம் பின்னோக்கி நகர்த்தி பார்த்தால், அப்போது நான் மேனிலை முதலாமாண்டு படித்துகொண்டிருந்திருப்பேன்//"

  உங்களின் வயதை நான் கண்டுப்பிடித்து விட்டேனே...

  "//உடனே என் வயச கணக்குபோடாதீங்க பதினைந்து வயசு பொண்ண ஆசீர்வதிக்க நாற்பது வயசு ஆகியிருக்கனும்னு அவசியமில்ல புரியுதா? //"

  நாற்பது வயது ஆகியிருக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் 42வயது ஆகியிருக்கலாம் அல்லவா...

  நண்பரின் கடிதத்தை படித்துக்கொண்டு வரும்போதே தெரிந்தது, மகளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதை. அதை கடைசியில் ஆமோதித்துவிட்டீர்கள்

  அருமையான ஒரு பதிவு.

  தங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது நண்பரே, உங்களின் சிந்தனையும் எனது சிந்தனையும் நிறைய இடங்களில் ஒத்துப்போகிறது.
  அருமை. தொடர்ந்து வலைப்பதிவில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 6. சொக்கன்,

  பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

  தங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது நண்பரே, உங்களின் சிந்தனையும் எனது சிந்தனையும் நிறைய இடங்களில் ஒத்துப்போகிறது - ஒத்துக்கொள்கிறேன்.

  எனினும் என் வயதை யார் அறிவார்?

  வருகைக்கு நன்றி.

  சந்திப்போம்

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 7. நல்ல வேளை... சஸ்பென்ஸை நல்லதாக முடித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. தருமி ஐயா அவர்களுக்கு வணக்கம்.

  தங்கள் வருகை(எந்தன் பாக்கியம்) நல்வரவாகட்டும்.

  பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி,

  ஒரு சிலர் பதிவின் இருதிபகுதியை சரியாக புரிந்துகொள்ளாமல் பரிதாப பட்டனர், தாங்கள் சஸ்பென்சை உணர்ந்தமைக்கும் , தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 9. //தங்கள் வருகை(எந்தன் பாக்கியம்) நல்வரவாகட்டும்.//

  இதெல்லாம் ரொம்ப ‘ஓவருங்க’!

  ‘கைகாட்டி’ விசுவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. ஐயா தருமி அவர்களுக்கு,

  நல்லவேளை யார் அந்த பாக்கியம் என்று கேட்காமல், நமக்குள் எந்த பாக்கியும் இல்லாதவகையில் கணக்கை நேர் செய்துவிட்டீர்.

  கண்டிப்பாக கைகாட்டி விசுவிற்கு மிக்க நன்றி சொல்லவேண்டும், சொல்கின்றேன், சொல்வேன்.

  கோ.

  பதிலளிநீக்கு