பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மாறியது மாதம் மாற்றியது யாரோ?


வளைகுடா நாடு ஒன்றில் வாசம் செய்த நாட்கள் அவை.

சூரிய கதிர்களின் வீரியம் மிகுந்த நாடு. நம் இந்திய கோடை வெய்யிலை  விட  குறைந்தது மூன்று மடங்கேனும் மிகுந்த சூடான நாடு.


யார் செய்த புண்ணியமோ,எத்தனை சூட்டை (ஆடை) அணிந்திருந்தாலும் இத்தனை சூட்டை (வெட்பம்) ஒருபோதும் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமின்றி,வேலை செய்த நிறுவனமும் தங்கி இருந்த வீடும் ஒரே கட்டிடத்துக்குள் அமைந்திருந்தது.

நான்காவது மாடியில் குடியிருப்பு, தரை  தளம் முதல் மூன்றாம் தளம் வரை நிறுவன அலுவலகங்கள்.

மொத்த கட்டிடமும் குளிர் சாதன வசதி கொண்டது.

எனவே காலையில்(விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் சூரிய உதயம்கதிரவன் தோன்றினாலும் உச்சி வானத்தில் உலா சென்றாலும், மாலையில் கீழ் வானில் ஊர்ந்து மறைந்தாலும் கட்டிடதிற்குள்ளே இருக்கும் எங்களுக்கு எப்போதும்குற்றாலம் தான்.

(இந்த தருணத்தில்  வெளியில்-வெயிலில் வேலைசெய்த கள பணியாளர்களின் - கட்டிட மற்றும் சாலை தொழிலாளர்களின் கஷ்டத்தை நினைத்து பார்த்து வருந்துகின்றேன்)

அலுவலக வேலையாக, வங்கி மற்றும் வேறு நிறுவனங்களுக்கு செல்வதாயிருந்தாலும், குளிர் சாதன வசதி கொண்ட கார்கள், அவற்றில் பயணித்து , செல்ல வேண்டிய இடத்தில இறங்கி நேராக அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தால் அங்கேயும் குளிரூட்டப்பட்ட வளாகம்தான்.

எல்லா கடைகளும்,வணிக வளாகங்களும் , ஆலயங்கள், கலைகூடங்கள் எல்லாமே குளிரூட்டப்பட்டிருக்கும்.

பாலை நாடு என்றாலும் பசுமைக்கு கொஞ்சமும் பஞ்ச மில்லை(எல்லாம் நம் சகோதரர்களின் உழைப்பும் வியர்வையும்)

சாலை நெடுகிலும், இரு மருங்கிலும் வளர்ந்து பூத்து காய்த்து குலுங்கும் பூ மரங்களும் , பேரீச்சை மரங்களையும் பார்க்கின்ற போது, இது பாலை நிலமா இல்லை பாலூறும் நிலமா என்ற சந்தேகம்  எழும்,  அந்த சாலையில் பயணிக்கையில் மனதில் மணளளவு சந்தோஷம் கொடுக்கும்.

அலுவலக வேலை காலை ஏழு மணி முதல் நண்பகல் பன்னிரெண்டுவரை, இடையில் பன்னிரண்டு முதல் மூன்று மணிவரை ஓய்வு - மீண்டும் மூன்று முதல் ஆறு மணிவரை வேலை.

இப்படி சனிக்கிழமை  முதல் வியாழன் பன்னிரெண்டுவரை (ஒரு வாரம்) வேலை.

வியாழனில் அரை நாள் மட்டுமே வேலை - வெள்ளிக்கிழமை ஓய்வு - மீண்டும் சனிக்கிழமை வார தொடக்கம்.

இப்படியாக அந்த வளைகுடா நாட்டில் சுமார் எட்டு  ஆண்டுகள், கடவுளின் ஆசியாலும் சில நல்ல உள்ளங்களின் ஆதரவோடும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

அன்று வியாழக்கிழமை, வழக்கம் போல் சுமார் பத்து மணியளவில் வங்கிக்கு -வழக்கத்திற்கு மாறாக அன்று அலுவலக காரை விடுத்து , என்னுடைய காரில்  சென்று பணிகளை முடித்து திரும்புகையில் நேரம் சுமார் பதினொன்று நாற்பது.

 அலுவலகம் வந்து சேர இன்னும் முப்பது நிமிடங்கள் ஆகும் அதற்குள் அலுவலக வேலை நேரம் முடிந்துவிடும் .

எனவே வெளியில் இருந்தே எனது சக அலுவலருக்கு தொலை பேசியில்( ஏறக்குறைய ஒரு மினி (செங்)கல்  போன் -சாரி  செல் போன்தொடர்பு கொண்டு , வார இறுதிக்கான வாழ்த்துகளை சொல்லிவிட்டு  , பார்க்கலாம் சனிக்கிழமை என்று சொல்லி  தொடர்பை துண்டித்தேன்.

 சென்ட்ரல் மார்கெட்டுக்கு பக்கத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்று , முறத்தில் அள்ளி கொட்டும் கடல் நண்டும், ஐஸ் என்றால் என்னவென்று அறியாமலே கடலிலிருந்து வந்த பதினைந்தாவது  நிமிடத்திலேயே தன் புனித ஜீவனை மனித  ஜீவன்களுக்காக கொடுக்க காத்திருக்கும் வஞ்சர மீன்களை வாங்கிக்கொண்டு , அப்படியே கொஞ்சம்  இறால் மீன்களையும் வாங்கிக்கொண்டு அனைத்தையும் காரின் பின் புறத்தில்  மீன் வாசனையோ மீன் ரத்தமோ   மீன் மார்கெட்டின் எந்த அழுக்கும் காரில் பட்டு விடாத படி பக்குவமாக வைத்தேன்.

ஜப்பான் தயாரிப்பு - டோயோட்டோ கரோனா - தானியங்கி - கார் , வாழ்நாளில் நான் எனக்காக வாங்கிய எனது முதல் கார்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா ?

தினமும் காலையில் ஒரு வங்காள  தேசத்து  சகோதரன்  வந்து  துடைத்து வைப்பார்- சில வேளைகளில் அலுவலக காவலரும் துடைப்பார்.

வெள்ளி கிழமைகளில் நானே தண்ணீரால் கழுவி சுத்தம் செய்வேன்.

, காரை ஓட்டிக்கொண்டு , சின்ன வயசில் ஆற்றில் மீன்பிடிக்க சென்றவன் ஆற்று வெள்ளத்தில்  மூழ்கி இறந்துவிட்டதாக(அந்த கதை நடந்திருத்தால் இந்த கதை சொல்ல ஆள் இருந்திருக்குமா?) கிடைக்கப்பட்ட  தவறான தகவலின் அடிபடையில் ( அதை இன்னொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்- மகேஷ்   ஞாபக படுத்துங்கள்!), எங்கள் ஊரில் , எங்கள் வீட்டில் ஏற்பட்ட அல்லோலகல்லோலத்தை நினைத்து சிரித்துக்கொண்டே, காரை ஓட்டிக்கொண்டு மார்கெட்டில் இருந்து முக்கிய சாலையை அடைந்து , இரு புறமும் தாலா மூன்று வழி சாலையில் பயணித்து கொண்டிருந்தேன்.  

அங்கே நம்ம ஊர் போலன்றி சாலையில் வலது பக்கமாகத்தான் வாகனங்கள் ஓட்ட வேண்டும்.

அப்படி வலது பக்க மூன்று வழி சாலைகளுள் மத்திய சாலையில் நான் பயணித்து கொண்டிருந்தேன்.

ஒரு பத்து நிமிட பயணத்திற்கு பின் சாலையின் ஓரத்தில் சில போக்குவரத்து காவலர்கள் சில பல வாகனங்களை நிறுத்தி , அந்தந்த ஓட்டுனர்களிடம் வாகன ஓட்டுனர் உரிமம் , வாகன , சாலை வரி வில்லை (Road  Tax  Disc), வாகன காப்பீடு, ,வாகன தகுதி சான்று போன்ற விவரங்களை பரிசோதித்துகொண்டிருந்ததை, தூரத்திலிருந்தே உணர்ந்து கொண்டேன்,


எனது வாகனத்தை பொருத்தவரை, என்னை பொருத்தவரை எல்லா ஆவணங்களும் சரியாய் இருந்தன.

 காரில் மட்டுமே கணம் இருந்ததே தவிர மடியில் எந்த கணமும் இல்லாதால் வழியில் பயமின்றி, என் பயணம் தொடர்ந்தது.

காவலர்கள்  இருக்கும் இடத்தை என் கார் கடக்கும்  சமயத்தில் எனக்கு இடதுபுறம் ஒரு நிசான் கார் போய் கொண்டிருந்தது.

காவலரில் ஒருவர் அந்த காரை வலது புறமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தும்படி சமிக்ஞ்சை செய்தார்.

அந்த கார் மிகவும் அழுக்காக - ஏறக்குறையா கழனியிலிருந்து  சாலைக்கு வந்த ட்ராக்டர் போல சேரும் சகதியும் பூசினாற்போல  காட்சி அளித்தது.

அதற்காகதான் அந்த வாகனத்தை  சோதனை செய்ய நிறுத்தும்படி காவலர்கள் சொல்லியிருக்கின்றனர்.

ஏற்கனவே சொன்னதுபோல் அந்த கார் எனக்கு இடதுபுறமிருந்ததால் அவர் வலது பக்கம் திருப்புவதற்காக சிக்னல் போட்டார்.

நான் அவருக்கு வழி கொடுக்காமல் நேராக சென்றிருக்கலாம், ஆனால் நமக்கு தான் கொஞ்சம் இருக்கும் இரக்க குணம் அவ்வப்போது மிஞ்சுமே(!).

சரி பாவம் அந்த நிசான் காரர் இன்று யார் முகத்தில் விழித்தாரோ? என பரிதாபபட்டு, அவர் வலது பக்கம் திருப்புவதற்கு வசதியாக, நானும் வலது ஓரத்திற்கு வண்டியை திருப்பி கொஞ்சம் வேகத்தை குறைத்து அவருக்கு வழிவிட்டேன்.

எனது வண்டியும் ஓரமாக வருவதை பார்த்த காவலர்களுள் ஒருவர், என் அருகில் வந்து என் வண்டியையும்  நிறுத்த சொன்னார்.



எனக்கு ஏனென்று புரியாவிட்டாலும், நமக்குத்தான் மடியில் கணமில்லையே.

வாகனத்தை நிறுத்தி என்னவேண்டும் என கேட்டேன்.

முதலில் சம்பிரதாய ஆவணங்களை காட்டும்படி கூறினார், நானும் பதட்டமின்றி எல்லாவற்றையும் எடுத்து காட்டினேன். (நமக்குதான் மடியில் கணமில்லையே)


அவர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த ரசீது போன்ற ஒரு புத்தகத்தில் , என் காரின் பதிவு எண்,  ஓட்டுனர் உரிமத்தின் வரிசை எண் போன்ற அனைத்து  விவரங்களையும் எழுதிகொண்டிருந்தார்.

எனக்கு ஏன் என்று புரியாமல் , அவரிடம், எல்லா ஆவணங்களும் சரியாகத்தானே இருக்கின்றது , அதுவும்  என் கார் சுத்தமாகதானே இருக்கின்றது பிறகு ஏன் என்னை நிறுத்தி ஏதேதோ எழுதிகொண்டிருக்கின்றீர்கள் என, ரொம்ப ... இல்லை இல்லை.. கொஞ்சம் குரலை உயர்த்தி கேட்டேன் ( நமக்குதான் மடியில் கணமில்லையே)

அதற்க்கு பதிலாக அவரும் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“இது என்ன மாதம்” என்று.

(அந்த நாட்டில் மத நம்பிக்கையின் அடிபடையில் நோன்பு இருக்கும் மாதத்தில், பகல் நேரங்களில் பொது இடங்களில் யாரும் எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடது (தண்ணீர் உட்பட).

வாயில் சுவிங்கம் கூட மெல்லக்கூடது, அப்படி செய்தால் அவர்களின் மத, மற்றும் அவர்கள் கடைபிடிக்கும் நோன்பின் மாண்பை நாம் பரிகசிப்பதாக அர்த்தம், அதற்க்கு சட்டப்படி தண்டனையும் உண்டு- இது மற்றவர் உணர்வுகளுக்கு மதிபளிக்கும் நாகரீக  செயலும்கூட)

அப்படியும் இது நோன்பு இருக்கும் மாதம் அல்லவே.

பின் எதற்க்காக இது என்ன மாதம் என்று கேட்டார் என்று தெரியாமலேயே , அவர் கேட்ட கேள்விக்கு, " இது ஆகஸ்ட் மாதம் " என்றேன்.

அவரும், உங்களின் எல்லா ஆவணங்களும் சரியாகதான் இருக்கின்றன , உங்கள் காரும் சுத்தமாகத்தான் இருக்கின்றது ஒன்றைதவிர......

அவர் சொன்ன  அந்த ஒன்றை கேட்டதும் எனக்கு உண்மையிலேயே ஒரு'கணம்' மடியில் கொஞ்சம் 'கணத்தது', கொஞ்சம் ...இல்லை...இல்லை ரொம்ப அதிர்ச்சியாகும் இருந்தது.,

"உங்கள் சாலை வரி (Road  tax ) கடந்த மாதமே அதாவது ஜூலை மாதமே  காலாவதி ஆகிவிட்டது, 

நீங்கள் அதை புதுப்பிக்காமலே இன்றுவரை வாகனத்தை ஒட்டிக்கொண்டிருக்கின்றீர்கள் என கூறிய வண்ணம்,அவர் இதுவரை எழுதிக்கொண்டிருந்த குறிப்புகள் அடங்கிய தாளின் நகலை அந்த புத்தகத்திலேயே விட்டுவிட்டு ஒரிஜினல் தாளை என்னிடம் கொடுத்து, நாளை மறுதினம் இந்த அபராததொகையை செலுத்திவிட்டு இன்னும் ஒருவாரத்திற்குள் உங்கள் சாலை வரியை புதுபிக்கவேண்டும் என கூறினார்,

அதிர்சிக்குள்ளான நான் அவரிடம் சொன்னேன், " எனது காரின் சாலை வரி  ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் முடிவடைகின்றது என்று நான் எனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருக்கின்றேன் , அதெப்படி ஜூலையில் முடிந்திருக்கின்றது?”

அவரும் என்னிடம் காரின் உட்புற கண்ணாடி ஸ்க்ரீனில் ஒட்டப்பட்ட அந்த டிஸ்கை காண்பித்து , இது  ஜூலை மாதத்தோடு  முடிந்திருப்பதாக நிரூபித்தார்.

 அதுவரை  காரிலேயே அமர்ந்திருந்த நான்(நமக்குதான் மடியில கணமில்லையே) சுட்டெறிக்கும் வெயிலில் காரை விட்டு  வெளிவந்து அவர் சுட்டிக்காட்டிய டிஸ்கை சூரிய கதிரின் பளீச்சிடும் வெளிச்சத்தில் என் கண்களை கொஞ்சம் சுருக்கி கைகளை துணைக்கழைத்து நெற்றியில் வைத்து பார்த்தேன்.

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்(ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்) என்பதுபோல் அவர் காட்டிய எனது டிஸ்கில் ஜூலை மாதத்தோடு  காலாவதியானதை  என் கண்களும் கண்டன.

இப்போது என் வீராப்பு குறைந்து, அவரிடம் பக்குவமாகபேசி  மன்னிப்பு கோரி , அவர் கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு வீடு வந்தடைந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் வாங்கி வந்த மீனிலும் நண்டு ஏறாவிலும், கவனம் செல்லவில்லை , அதன் ஞாபகமும் வரவில்லை, ஏனென்றால் நடந்ததை நினைத்து மனம் ரொம்பவே வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

மத்திய உணவு கூட அருந்தாமல் நடந்ததையே நினைத்துகொண்டிருந்தேன், எல்லா விஷயத்திலும் உஷாராக(!!??) இருக்கும் நாம் எப்படி இந்த ஒரு காரியத்தில் கவனமின்றி இருந்துவிட்டோம் என நினைத்து வருந்தினேன்.

நான் தங்கியிருந்த தளத்தில்  எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும்  சில உடன் ஊழியர்களிடம் காவலர்களோடு நடந்ததை சொன்னேன்.

அவர்களும்  இதுபோன்ற தங்களது அனுபவங்களை சொல்லி கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவமாக:

ஒருமுறை அவர் நோன்பு மாதத்தின் போது பல் வலியால் அவதி பட்டத்தையும் , அந்த நேரத்தில் தபால் நிலையம் சென்று ஊருக்கு ஒரு பார்சல் அனுப்ப வரிசையில் நின்றுக்கும்போது பல் வலியின் உபாதையை தாங்க  முடியாமல் தனது கைகுட்டையால் வாயை மூடி கைகளால் அழுத்தி பிடித்திருந்ததை   அருகிலிருந்தவர் பார்த்து , இவர் எதோ மறைத்து  சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக நினைத்து  இவரை  திட்டி எச்சரிக்கை செய்ததையும் , பின்னர் போலீஸ் வரை சென்று -   இவர் பல் வலியையும் தாங்கிக்கொண்டு விளக்கமளித்து நிரபராதி என்று நிரூபிக்க பட்ட கஷ்டத்தையும் சொல்லி சிரித்தார் ,எனக்கு சிரிப்பு வரவில்லை.

அப்போதுதான் ஒருவர் கேட்டார்,  ஏன் நீங்கள் அந்த வழியாக வந்தீர்கள் , வங்கியிலிருந்து வீடு வருவதற்கு வழக்கமான வழியில் வந்திருக்கலாமே  என்று.

நான் சொன்னேன் மீன் மார்கெட்டிலிருந்து அந்த ரூட்டில் தானே வரமுடியுமென்று.

 ஓஹோ மீன் மார்கெட் போயிருந்தீர்கள?

அப்போதுதான் காரில் வைத்த மீன் வகையறாக்கள் நினைவுக்கு வந்தது.

உடனே மீன் பையை எடுக்க ஓடிச்சென்றேன்.(இல்லையென்றால் சனிக்கிழமை அபராத தொகை கட்ட போகும்போது, மீன் வாடையை காரணம்  காட்டி வேறு ஏதாவது அபராதம் விதித்துவிட்டால்???)

சரி, ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு , சாப்பிட்டுவிட்டு  நண்பர்களோடு தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்த்தும், திரை படங்களை பார்த்தும் அன்றைய தினம் அப்படியாக கழிந்தது.

மறு நாள்  வெள்ளிக்கிழமை.........

காலையில் எழுந்து முதல் வேலையாக காரை கழுவ  தேவையான பொருட்களோடு கீழே வந்தேன்.

காரின் "உள்ளே-வெளியே" கழுவி பின்னர் உலர்ந்த துணியால் துடைத்து கொண்டிருந்த என் கவனம் - பார்வை - சிந்தை- எண்ணம்.... எல்லாம் காரின் டிஸ்க் பக்கம் திரும்பியது.

அதில் ஜூலை மாதத்தை குறிக்கும் எண் 7 என்பது  பார்வைக்கு நேராக இருந்தது , சற்று உற்று பார்த்தேன் , அப்போதும் 7 தான் தெரிந்தது  மற்ற எழுத்துக்கள் எல்லாம் தலை கீழாக இருப்பது போன்று தெரிந்தது.

 தொழில் ரீதியாக அரபு எண்கள் எல்லாம்  பத்துபடிக்கும்மேல் அத்துபடி.

அந்த டிஸ்க் முழுவதும் வளைகுடா நாட்டின் மொழியான அரபு மொழியில் எழுதபட்டிருந்தது. அரபு மொழி படிக்க தெரியாவிட்டாலும் , அந்த டிஸ்க் தலைகீழாக இருப்பதாக பட்டது.(சாப்பாட்டில் உப்பு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பதை அறிய சமையல் கலை தெரிந்திருக்க தேவையில்லை அதுபோல)

உடனே காரின் உட்புறமாக சென்று அந்த டிஸ்க்கை நேர் செய்தேன்.
என்ன ஆச்சரியம் .....

டிஸ்க்கை நேர் செய்த பின்னர் ஜூலை மாதம் ஆகஸ்ட் மாதமானது,

 என்னுடைய கணக்கு சரி என்றுணர்ந்து மகிழ்தேன், மனதில் ஒரு நிம்மதி.

போக்கு வரத்து காவல் துறையினர்  அவர்களின் வேலை சுமை, வெய்யில், சோர்வுகள் , காலை முதல் பல வாகனங்களை சோதனை  இட்டது போன்று இடைவிடாது பணிபுரியும் போது இதுபோன்று தவறுகள் நிகழ்வது சகஜம் தான் என்று சனிக்கிழமை போக்குவரத்து அலுவலகம் சென்று அபராதத்தை தள்ளுபடி செய்யும் போது அங்கிருந்த வேறொரு காவல் அதிகரி என்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்டார் என்பது வேறு விஷயம். ( நமக்குத்தான் மடியில் கணமில்லையே ).


சரி ஜூலை மாதம் எப்படி ஆகஸ்ட் மாதமானது என்று திகைபோற்க்கு:

அரபு எண்கள் பூஜ்யம் முதல் ஒன்பது வரை  இப்படியாக வடிவமைந்திருக்கின்றன

Arabic and Western Numerals
١
٢
٣
٤
٥
٦
٧
٨
٩
٠
1
2
3
4
5
6
7
8
9
0
 :
இப்போது புரிந்திருக்கும் மாதம் மாறியது எப்படியென்று.

இடுகையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது போல் தினமும் வந்து காரை சுத்தம் செய்யும் வங்காள தேசத்து சகோதரன்  முன்னாடி இருக்கும் கண்ணாடியை துடைக்கும் போது இந்த மேக்னடிக்  டிஸ்க் தன் பொசிஷன் மாறி எட்டு எழானதை  பின்னர் ஆராய்ந்து  அறிந்தேன்.

மன கலக்கத்திலிருந்து மகிழ்ச்சி பெருக்கெடுத்த அன்றைய நாளின் மதிய உணவில் பிரதானமாக பங்கு வகித்தது வஞ்சர மீன் குழம்பும் நண்டு வறுவலும்.(எறா  இரவுக்கு).

நன்றி!

 மீண்டும் (ச)சிந்திப்போம்.

கோ.







 





10 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. இந்த அரபி எண்களினால் நான் பட்ட பாடுகளை வைத்து தின தந்தியில் வரும் சிந்துபாத் போல தொடர் கதை எழுதலாம். நன்றாக இருந்தது. அது சரி, நான் தம்மை காண அங்கே வரும் போதும் நண்டும் வஞ்சிரமும் தான் மதிய உணவாக படைத்தீர். அந்த இரவு வேளை இறாலை எனக்கு மறைத்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு,

      தாங்கள் வந்தபோது,

      மீன்குழம்பின் (விசு)வாசம் அந்த குடியிருப்பின் நாலாபுறமும் வீசி மனந்ததென நீங்கள் சரஸ்வதி ஆன்டியை வெகுவாக பாராட்டீர்கள். மேலும் அன்றைய இரவு உணவிற்காக எறாவை புது கோணத்தில் ஆன்டியுடன் இணைந்து சமைத்ததே நீங்கள் தான் என்பதை நான் மட்டும் எப்படி மறக்காமல் இருக்கின்றேன்?

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
    2. ருசியாக இருந்ததே அந்த உணவு, அதுதான் இதுவோ...

      நீக்கு
  2. தங்களின் அணுபவம் ரசித்தேன் சார்.

    சீக்கிரம் ஸீசர் பற்றி எழுதுங்க சார்.
    மற்ற கதை பிரகு
    ஞாபக படுத்துரேன் சார்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கோ,
    அருமை, மீன்கள் என்னவாயிற்று,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி. மீன் என்ன ஆனது என்பதை பதிவில் சொல்லி இருக்கின்றேன், மீண்டும் படித்துப்பாருங்கள்.

      மீன் செத்தா கருவாடு என்று கண்ணா தாதன் சொல்லி இருக்கின்றார், ஆனால் மீன் உலர்ந்தால்தான் கருவாடு, செத்தவுடன் எப்படி கருவாடாகும் , குழம்பு வேண்டுமானால் ஆகலாம். மீன் பிடிக்குமா? சோ மீன்.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் கோ,
    பதிவில் படித்தேன்,,,,,,,,,,,,,,,,,,
    நல்ல கண்பிடிப்பு மீன் கருவாடு காலம்,,,,,,,,,,,,
    ஐ மீன் மீன் பிடிக்காது,,,,,,
    தங்கள் இன்றைய பதிவின்
    தங்கள் கார் பெயர்,,,,,,,,,,,,,
    இதுவா?
    டோயோட்டோ கரோனா
    குச்சி ஐஸ், ஒரு ரவுண்ட் க்கு பயந்து இல்லை என்றால்,,,,,,,,,,,
    சாமி கண்ணைக்குத்தும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. லிஸ்ட்ல இல்லாத பெயரை சொல்லி இருக்கின்றீர்கள் ,

    யார் கண்ணை?

    கோ

    பதிலளிநீக்கு
  6. அப்படியா,
    எனக்கு எப்படிப்பா தெரியும்,
    என் கண்ணைக் குத்தாது,
    சொன்னாலும் குச்சி தான்,
    தாங்கள் வரும் போது பார்ப்போம்
    நினைவில் இருந்தால்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நினைவில் கண்டிப்பாக இருக்கும்.

    கோ

    பதிலளிநீக்கு