பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மனசெல்லாம் மலர் சோலை!!!

குருப்  போட்டோ!!

நண்பர்களே,

நம்மில் எத்தனைபேர்  நமது பள்ளி இறுதியாண்டு அல்லது கல்லூரி இறுதி ஆண்டில் நம்முடன் படித்த மாணவ மாணவியரும், பள்ளி கல்லூரி முதல்வர்கள் நமது ஆசிரியர்கள்  , அலுவலர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பத்திரபடுத்தி வைத்திருக்கின்றோம்?

வியாழன், 2 ஏப்ரல், 2015

வாசல் கதவை தட்டினாள் ராச லட்சுமி!!

காசு ... பணம்...துட்டு... மணி ....மணி....

நண்பர்களே,

தமிழ் நாடு, ஆந்திர, கேரளா, கர்நாடகா, நாகாலந்து, மணிபூர் , திரிபுரா,சிக்கிம் என மாநிலங்களின் பெயர்களை வரிசையாக கேட்க்க நேர்ந்தால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பல விஷயங்களுள் முக்கியமான ஒரு விஷயம், லாட்டரி.

செவ்வாய், 31 மார்ச், 2015

போதுமடா சாமி!!

இடி மேல் இடி.....

நண்பர்களே,

உலகில் அவ்வப்போது நிகழும் பல அசம்பாவிதங்கள், பேரிடர்கள், சாலை, ரயில்,கப்பல்,விமான விபத்துகளை குறித்து,  நாம்  அனைவரும் பெரும் துயருக்கு ஆளாகின்றோம்.

திங்கள், 30 மார்ச், 2015

ஸ்லிப்பான் சாரி!!!

'மேட் இன் இந்தியா'
நண்பர்களே,  

நம்மில் ஒரு சிலருக்கு ஒருசில விஷயங்கள் பிடிக்காது.  அதேபோல்தான் எனக்கு சாரி கொஞ்சம் கூட பிடிக்காது.

ஞாயிறு, 29 மார்ச், 2015

முரண்பாடுகள் !!

குழப்பம்

சனிக்கிழமை காலையிலிருந்தே வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,  ஆனால் மழை ஏதும் இல்லை.

ஆறு வயது மகன் தோட்டத்தில் விளையாடிகொண்டிருந்தான், சமையல் அறை சன்னல் வழியாக மகனை பார்ததவண்ணம் அம்மா சமையல் செய்ய   காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் சிறுவனின் அப்பா தன் மனைவியிடம், " எனது இந்த மூன்று பேண்டு மூன்று சட்டைகளை துவைத்து விடு திங்கள்கிழமை நான் தேர்தல் வேலைக்காக திண்டுக்கல் போகவேண்டும், மூன்று நாட்கள் அங்கேயே தங்கவேண்டும், அப்படியே, தேவையான, டவல்,பனியன் சோப்பு, பேஸ்ட், பிரஷ் போன்றவற்றையும் எடுத்து  பயண பையில் வைத்துவிடு, நான் சலூன் வரை போய்வருகின்றேன் என கூறிவிட்டு,  தோட்டத்தில் விளையாடிகொண்டிருந்த மகனுக்கு டாட்டா சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

மனைவியும் சமையல் வேலைகளை பாதியிலேயே  விட்டுவிட்டு  கணவன் கொடுத்துவிட்ட போன துணிகளை துவைத்து  தோட்டத்தில் காயபோட்டாள்.

Image result for pictures of drying clothes

பிறகு காற்று பலமாக வீசுவதால் தோட்டத்தில் இருந்த தன் மகனை வீட்டுக்குள் அழைத்துவந்து காற்றில் ஆடிய கதவுகளை அடைத்து மூடினாள். 

இதற்கிடையில் சலூனில் கூட்டம் நிரம்பி இருந்ததால் எதிர்பார்த்த நேரத்தைவிட கூடுதலாக சலூனில் காத்திருக்க வேண்டியதாயிருந்தது கணவருக்கு.

தனது முறை வந்தது, கணவன் அந்த சலூனின் சுழல் நாற்காலியில் அமர்ந்தார் " கட்டின் அண்ட் ஷேவிங்"

முடிவெட்ட ஆரம்பித்த சிறிது நேரத்தில் மடியின் கணம் தாங்காமல் மேக மூட்டை உடைந்து பெய்தது பேய்மழை.

பின்னர் ஷேவிங்.

 எல்லாம் முடிந்தும் கடையை விட்டு வெளிவர மழை அனுமதிக்கவில்லை.

வர நேரமாகும் என மனைவியிடம் சொல்ல தனது பேன்ட் பாக்கட்டில் மொபைல் எடுக்க கைவிட்டு துழாவினார், அப்போதுதான் நினைவுக்கு வந்தது, மொபைலை சார்ஜிங்ல் போட்டுட்டு வந்தது.

சரி மழை விடும்வரை இங்கேயே இருந்துவிட்டு போகலாம் என்று நினைத்து சலூனில் இருந்த ஒரு பத்திரிகையில் இருந்த செய்திகளை வாசித்துகொண்டிருக்க மழை கொஞ்சம் விட்டிருந்தது.

வீட்டிற்கு வந்த கணவன் மனைவியிடம் , பாத்ரூமில் சோப்பும் டவலும் எடுத்து வைக்கும்படி கூறினார். மனைவியும் எடுத்துவைத்துவிட்டு வந்தாள்.

குளித்து முடித்து வெளியில் வந்த கணவன், துணி துவைத்துவிட்டாயா என கேட்க்க  அப்போதுதான் நினைவுக்கு வந்தது மொட்டை மாடியில்  காயவைத்த துணிகளை  மழை வந்தபோது எடுக்க மறந்துபோன விஷயம்.

கணவனின் கேள்விக்கு பதில் சொல்லகூட நிற்காமல் அரக்க பறக்க தோட்டத்தில் சென்று நனைந்திருந்த துணிகளை தண்ணீர் சொட்ட சொட்ட  கொண்டுவந்ததை பார்த்த கணவனுக்கு கடுமையான கோபம் வந்தது.

மனைவியை கோபத்துடன் திட்டி துணிகளை ( பிடுங்கி) நன்றாக பிழிந்து  வீட்டின் உள்ளேயே தமது ட்ரெட்மில் (இப்போது பெரும்பான்மையான வீடுகளில் ட்ரெட்மில்கள் துணிகாயவைக்கத்தான் பயன்படுகின்றதாம்) மேல் பரப்பி காயவைத்துவிட்டு மீண்டும் மனைவியின் கவனக்குறைவை திட்டிக்கொண்டிருந்தார்.

திட்டு வாங்கிய மனைவி தனது கவனக்குறைவை நினைத்து வருத்தம் தெரிவித்துவிட்டு, விடுபட்ட சமையல் வேலையி ல் மும்முரமானாள்.

இத்தனையையும் பார்த்துகொண்டிருந்த அந்த சிறுவன் அம்மாவிடம் ஏன் உங்களை அப்பா திட்டுகிறார் என புரியாமல் கேட்க்க, அப்பாவின் துணிகள் மழை வரும்போது எடுக்காமல் விட்டுவிட்டேன் -  மழையில் நனைந்து விட்டது அதற்காகத்தான் அப்பா திட்டுகின்றார்.

ஆமாம் நீங்கள் தானே அதை முதலில் தண்ணீரில் நனைத்தீர்கள் பின்னர் மழையில் நனைந்துவிட்டது என சொல்கின்றீர்களே?

மகனுக்கு எப்படி புரியவைப்பது?

சொல்லுங்கம்மா....நீங்கள்தானே தண்ணீரில் நனைத்தீர்கள்?

அதாவது .. துணியில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய தண்ணீரில் நனைத்து சோப்புபோட்டு , பிரஷ்கொண்டு தேய்த்து பின்னர் அன்றாக அலசி வெய்யிலில் காயவைக்கவேண்டும் அப்படி காய்ந்த துணிகளை தான் உடுத்தவேண்டும்.

மகனுக்கு ஏதும் புரியவில்லை.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை.

காலையில் சுமார் பதினோரு மணி இருக்கும்.

அப்பா தனது அறையில் நேற்று துவைத்து காயவைத்த தமது துணிகளை இஸ்திரி போட்டுகொண்டிருந்ததை  சிறுவன் எட்டிப்பார்த்தான்.

பார்த்த சிறுவனுக்கு , நேற்று அம்மா சொன்ன விளக்கமே இன்னும் புரியாத நிலைமையில் இன்று அப்பா செய்வது மேலும் குழப்பத்தை உண்டுபண்ணியது.

அப்படி அவனது அப்பா என்னதான் செய்துகொண்டிருந்தார்?

நேற்று துணிகள் மழையில் நனைந்துவிட்டதற்காக அம்மாவை திட்டிய அப்பா இன்று அந்த  துணிகளை இஸ்திரி செய்யும் போது அவற்றின் மீது தண்ணீர் தெளித்து ...தண்ணீர் தெளித்து... இஸ்திரி செய்துகொண்டிருந்தார்.

Image result for picture of ironing clothes

என்ன இது துணிகளை அம்மாவே தண்ணீரில் நனைத்தார்கள் பின்னர் மழையில் நனைத்துவிட்டதாக அப்பா கோபப்பட்டார், இன்று அப்பவே ஏன் நீரில் நனைத்து இஸ்திரி செய்கின்றாரே?

என்ன நடக்கிறது என புரியாமல் இதைக்குறித்து அப்பா அம்மா இருவரிடமும் கேட்டு, அவர்கள் சொல்லும் விளக்கமும் தமக்கு கண்டிப்பாக புரியாது என்று எண்ணி இந்த குழப்பத்தை தனக்குள்ளாகவே புதைத்துக்கொண்டான்.

இந்த முரண்பாட்டால் சிறுவனுக்கு ஏற்பட்ட  குழப்பம் ஞாயமானதுதான் , ஆனால் செய்திதாளில் வந்த ஒரு செய்தியை நண்பரொருவர் என்னிடம் சொன்னது எனக்கு முற்றிலும் வேடிக்கையாக இருந்தது.

அதாவது "வட" நாட்டில் ஏதோ ஒரு அரசியல் தலைவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தாராம்.

அவரை ஜாமீனில் வெளிக்கொண்டுவர அவரது கட்சி தொண்டர்கள் எவ்வளவோ  முயன்றும் ஜாமீன் கிடைக்காததால்,கடைசியாக தமது தலைவருக்கு இருக்கும் வியாதியை காரணம் காட்டி, அவருக்கு சிறையில் இருந்தால் தகுந்த சிகிச்சை அளிப்பது சிரமம், எனவே அவரை அவரின் வியாதியின் வீரியத்தை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கும்படி செய்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிபதிகள், அவர்கள் சொன்ன காரணத்தை, மருத்துவ அறிக்கையின்   அடிப்படையில், ஏற்று ஜாமீன் கொடுத்தார்களாம்.

தமது தலைவர் வெளிவந்த மகிழ்ச்சியில் மிதந்த தொண்டர்கள் அந்த மகிழ்ச்சியை மற்றவர்களோடு  சேர்ந்து  ஊரில் உள்ள அனைவருக்கும் "இனிப்புகள்" கொடுத்து கொண்டாடினார்களாம்.  

ஆமாம் இதில் என்ன முரண்பாடு இருக்கின்றது?

இனிப்புகள் கொடுத்து கொண்டாடி  மகிழும் அந்த தொண்டர்களின்  அன்பு தலைவருக்கு  ஜாமீன் கிடைக்க காரணமாயிருந்த வியாதி "சர்க்கரை நோயாம்".

மேல் இடத்து அரசியல் வியா(வா)தி சமாச்சாரம் எல்லாம் நமக்கு எதற்குங்க?

நாம துணியை நனைத்து காய வைத்து பின்னர் தண்ணீரில் நனைத்து இஸ்திரி போடறத மட்டும் பார்த்தா போதும்ங்க என நண்பரிடம் சொல்லிவிட்டேன். 

 என்ன நான் சொல்றது சரிதானே?

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ



வெள்ளி, 27 மார்ச், 2015

பனையின் மழலை!!

"பேபி பாம் ட்ரீ - கிலோ £3.00"

நண்பர்களே,

வழக்கமாக நங்கள் குடியிருக்கும் பகுதியில் நம் இந்திய காய்கறிகள் ஒரு சில ஆசிய மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகளில் வியாழன் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில்தான் புதிதாக - பிரஷ்ஷாக  கிடைக்கும்.

எனவே நேற்று  மாலை அலுவலகம் விட்டு வரும் வழியில் இருந்த ஒரு இலங்கை  தமிழரின் மளிகை கடைக்கு சென்று, ஏதேனும் நமக்கு பிடித்த காய்கறிகள் புதிதாக வந்திருக்கின்றதா  என பார்க்க போனேன்.

அங்கே பலதரப்பட்ட மர கறிகள்  புதிய பொலிவுடன் அடுக்கி வைக்க பட்டிருந்தன.

கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.

இங்கே சாதாரணமாக நம் தமிழ் நாட்டில் என்னென்ன காய்கறிகள் உள்ளனவோ அவை அத்தனையும்  இங்கே கிடைக்கும், கறிவேப்பிலை வரை.(ஒரு பத்து அல்லது பனிரெண்டு கீற்றுகள்(கீற்றுகள் சரியா??) 100 ரூபாய். மற்றவற்றின் விலையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். 

வெண்டைக்காய் எனது பேவரிட், ஆனால் புதியதாக இல்லை, சரி நாளை வந்து வாங்கிக்கொள்ளலாம்  என நினைத்துகொண்டு அப்படியே மற்ற எல்லா காய்கறிகளையும் நோட்டமிட்ட என் கண்களில் அபூர்வமாக பட்டது "பனங்கிழங்கு".

ஆகா... எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்தது.

ஆரம்ப பள்ளிகூட நாட்களில் பள்ளியின் முகப்பில் பாட்டியின் கடையில்  தரையில் விரிக்கப்பட்ட கோணி பையின்மேல் பரப்பப்பட்ட  எலந்தம்பழம், நாகப்பழம், எலி மிட்டாய், கமர்கட்டு,புளிப்புமிட்டாய் அவற்றின்  மத்தியில் கூறு கட்டப்பட்ட  வேகவைத்த- வறுத்த  வேர்கடலை , கரும்பு ,வேகவைத்த  பனங்கிழங்கை பார்த்த ஞாபகம். 

Image result for pictures of panangizhangu

வெளியில் விற்கும் இது போன்ற எந்த பொருளையும் வாங்கி சாப்பிடகூடாது என்ற "தாய் சொல்லை"யும் தட்ட வைத்து நண்பன் ராஜ் குமாரோடு சேர்ந்து வாங்கி அதை எப்படி சாப்பிடுவது என்றுகூட தெரியாமல் , கரும்பை மெல்லுவதுபோல் மென்று வாயெல்லாம், பல்லெல்லாம் அதன் நாரு  மாட்டி அதை அப்படியே நாரோடு மென்று தின்று பின்னர் அம்மாவிடம் அடி வாங்கியநினைவுகளும், பின்னர் அம்மாவே மார்கெட் போய் வாங்கிவந்து வீட்டில் வேகவைத்து நாரு களைந்து சின்ன சின்னதாக உடைத்து சாப்பிட பழக்கி கொடுத்ததையும், இன்று இந்த கடையில் பார்த்த பனங்கிழங்கு என் மன கிடங்கிலிருந்த ஞாபக துகள்களை  எனக்கு நினைவு படுத்தியது.  

"சரி இந்த பனங்கிழங்கு என்னவிலை?"

"கிலோ 300 ரூபாய்."(£3.00)

"ஒரு கிலோவிற்கு எத்தனை வரும்?"

 "சுமார் பனிரெண்டு கிழங்குகள் வரும்" 

"இது எங்கிருந்து வந்தது?"

"இலங்கையில் இருந்து".

"சரி எனக்கு இரண்டு போதும் .. கொடுங்கள்."

கடைகாரர் எடைபோட்டு கொடுத்தார் அதில் இரண்டுமே  அடிபாகம் மிகவும் தடித்த கிழங்குகள் அவைதான் ருசியாக இருக்கும் என்று கடை காரர் சொல்லிகொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து ஒரு ஆங்கிலேயரும் அவரது மனைவியும் நான் இருந்த கடைக்குள் வந்து கடைகாரரிடம், பம்கின் (பூசணிக்காய் சூப்பு செய்வார்கள்)   வேண்டும் என கேட்க்க கடைகாரர் பூசணிக்காய்  அடுக்கி வைக்கபட்டிருந்த பகுதியை காட்ட அவர் என்னை தாண்டிப்போக நேர்ந்தது.

அப்போது என் கையில் இருந்த பனங்கிழங்கை காட்டி கடைகாரரிடம் இது என்ன வெஜிடபள் என கேட்டார்.
அதற்க்கு கடைகாரர் அது வந்து .... அது வந்து.... என அதன்  ஆங்கில பெயர் தெரியாமல் , என்னை பார்த்து சார் இது என்னன்னு கொஞ்சம் ஆங்கிலத்தில இவருக்கு சொல்லுங்க என்றார்.

 எப்போ இந்த கடைகாரரிடம் நான் ஷேக்ஸ்பியரின் பேரன் என்று சொன்னேன், இப்போ திடீர்னு பனங்கிழங்குக்கு ஆங்கில பெயர கேட்டா நான் என்னத்த சொல்றது?

"ஹாய் , திஸ் இஸ் பேபி பாம் ட்ரீ" .

"பேபி பாம் ட்ரீ"??

"எஸ் ....சேம்   லைக் பேபி கார்ன் ,பேபி ஸ்பினச்,பேபி டர்னிப், பேபி பொட்டேட்டோ..".

"ஒ ..... இன்ட்ரஸ்டிங்..இஸ் திஸ் எடிபில்?"

"யா.....அப்கோர்ஸ் .... குட் பார் ஹெல்த்."

"இஸ் இட் ?"

"திஸ் இஸ் புல்லி லோடட்  வித் ஆல் மினரல்ஸ் அண்ட் விட்டமின்ஸ்...."(என்னென்ன மினரல் விட்டமின்னு கேட்டா மாட்டிக்குவோம்)

"ஹவ்  டு குக் திஸ்?""

நானே இன்னிக்குதான் ட்ரை பன்னபோறேன் இதுல உனக்கு வேற டூஷன் எடுக்கணுமா என நினைத்துக்கொண்டே, 

ஐ தின்க் தி ஷாப் கீபர் கேன் எக்ஸ்ப்ளைன் பெட்டர்"

என்று சொல்லிவிட்டு நான் வாங்கிய பனங்கிழங்குக்கான பணத்தை கொடுத்துவிட்டு கடையை விட்டு நடையை கட்டினேன்.

வீட்டுக்கு வந்து ஒரு வழியாக பிரஷர் குக்கரில் வைத்து வேகவைத்து, நண்பன் ராஜ்குமாரை நினைத்துக்கொண்டே ஒரு முழு கிழங்கையும் சாப்பிட்டு முடித்தேன் அடுத்தது நாளைக்கு.

இன்றுமாலை மீண்டும் அதே கடைக்கு வெண்டைக்காய்  வாங்க போனேன்.

உள்ளே நுழைந்ததும்   என் கண்ணில் பட்டது அழகாக வண்ண எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு சிறிய பெயர் பலகை.

அந்த பலகை பனங்கிழங்கு அடுக்கி வைக்க பட்டிருந்த செல்ப் அருகில் வைக்கபட்டிருந்தது.

அப்படி  என்ன எழுதபட்டிருந்தது அந்த பலகையில்?

"பேபி பாம் ட்ரீ - கிலோ £3.00" (edible)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ







 










வியாழன், 26 மார்ச், 2015

சர்க்கரை மனிதம்!!

அபூர்வம்

நண்பர்களே,

கல்லூரி வாழ்க்கை முடிந்தது, முதுகலை பட்டப்படிப்பின் பரீட்ச்சைகளும் முடிந்துவிட்டன. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை , முடிவுகள் வருவதற்கு இன்னும் குறைந்த பட்சம்  இரண்டு மாதங்களாவது ஆகும்.

 அந்த இரண்டு மாதங்கள் கழித்து சமூகத்தில் நமக்கென்று ஒரு சிறப்பு  அங்கீகாரமும், பெற்றோர்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் கொடுக்கும் அந்த உன்னத நாளை எதிர்நோக்கி இருந்த அந்த வி .ஐ .பி(வேலை இல்லா பட்டதாரி)  நாட்களை கொஞ்சம் ஜாலியாக கழிக்கலாம் என்றிருந்த சமயத்தில் நகரின் மற்றொரு கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவருக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆவல்  மிகுதியால் அதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தார்.

 அவருக்கு ஒருசிலரின் உதவி தேவைபட்டதிநிமித்தம், முன் பின் அறிமுகமில்லாத என்னைபற்றி யாரோ(???) ஒரு புண்ணியவான் அவரிடம் சொல்ல அவரும் என்னை அணுக அந்த இரண்டு மாதங்களாக நான் அவரோடு இணைந்து அவருக்கான உதவிகள் செய்துகொண்டிருந்த நேரம், பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரம் என் அம்மாவின் கண்களில் பட , வர இருக்கும் பரீட்ச்சை  முடிவுகளின் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் (சுய கருத்துகணிப்பின்) உந்துதலினால் அந்த வேலைக்கு விண்ணப்பித்தேன்.

சினிமா நண்பருடனான நிகழ்ச்சி பதிவினை வேறொரு நாளில் சொல்கிறேன்

இந்தியாவில் முதுகலை பயின்றபின்னர் நான் பார்த்த மொத்த வேலைகள் இரண்டு. அந்த இரண்டு வேலைகளும் , தமிழகத்தின் தலை  சிறந்த தமிழ் நாளிதழ்களுள்  ஒன்றான " தினத்தந்தி"யில் வெளியான விளம்பரங்களை பார்த்தே  என்பதை இங்கே நன்றியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மிகவும் பெருமை படுகின்றேன்.

விண்ணப்பம் - ஷார்ட்லிஸ்ட் - நேர்முகத்தேர்வு - அடுத்து ஒரு இறுதி சுற்று  நேர்முகத்தேர்வு - பின்னர் வேலைக்கான உத்தரவு.

 தினத்தந்திக்கு நன்றி.

அது ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ,அந்த வேலையின் டைட்டில் "திட்ட அலுவலர்",(Programme Officer) கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள், சிறுதொழில் முனைவோருக்கான முன்னேற்ற திட்டங்கள் அரசு நிதி உதவியுடன்  கிராமப்புற வளர்ச்சிபணியில் தம்மை இணைத்திருந்து சமூகத்திற்கு நற்சேவை புரிந்த மருத்துவமனையுடன் கூடிய அந்த நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தேன்.

அரசு மானியத்துடன் நடைபெற்ற கிராம மேம்பாட்டு திட்டங்களுள் ஒன்றுதான் ,மழை இன்மை, மற்றும் வறட்சி  காரணமாக,விவசாயம் செய்ய முடியாமல் தவித்த விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு துணை புரியும் வண்ணம் மாற்று திட்டங்கள் செயல்படுத்தபட்டன.  அவற்றுள் ஆடு மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பு, கைவினை பொருட்கள் போன்றவற்றை செய்ய பயிற்சியும் அதற்கான உதவியையும் செய்வது.

அதேபோல, படிப்பை தொடர முடியாமல், பாதியில் விட்ட இளைஞர்களுக்கான, தொழில் கல்வி பயிற்றுவித்து வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தல் போன்றவையும் அடங்கும்.

இப்படி ஆடு மாடு கோழி வளர்பவர்களுக்கு, அதற்கான, கொட்டகைகள் அமைத்துகொடுத்து,தேவையான கால்நடைகள் கோழி குஞ்சுகளை கொடுத்து, அவற்றிற்கான தீவனங்கள், மருத்துவ உதவிகள், ஆலோசனைகள், மேற்பார்வை செய்தல், பின்னர், பால், இறைச்சி போன்றவற்றை நிறுவனத்தின் மூலமே வாங்கி விற்று அதன் பலன்களை அந்தந்த விவசாயிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் முன்னேற்றுவது என பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டுவந்தன.

அப்படி அந்த கால்நடைகளுக்கான தீவனங்களை நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்திருந்த தொழிற்சாலையிலேயே செய்யும் பணியும் நடைபெற்று வந்தது.

கால்நடைகளுக்கான தீவனங்களை  தயாரிக்க தேவைப்படும் அனைத்து மூலபொருட்களையும் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்து பயன்படுத்திவந்தனர் ஒரே ஒரு மூலபொருளை தவிர.

அதுதான் "மொலாசஸ்" என்றழைக்கப்படும், கரும்புச்சாரின் கசடு.

பொதுவாக சர்க்கரை ஆலைகளில் கரும்பை பிழிந்து அதை சர்க்கரை தயாரிக்க பதபடுத்தும் பல கட்டங்களுள் ஒன்று கரும்புசாரை காய்ச்சுவது, அப்படி காய்ச்சும்போது அந்த கொப்பரையின் மேலே மிதக்கும் நுரைபோன்ற அழுக்கு கலந்த -  சர்க்கரை தயாரிக்க தகுதியற்ற, தண்ணீராகவும் இல்லாமல் கடினமாகவும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட வடிவத்தில் ஏறக்குறைய வெல்ல பாகுபோல இருக்கும் அந்த கசடுதான் "மொலாசஸ்" என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Syrup Clarification System

இந்த மொலாசசை எல்லோரும் அவ்வளவு எளிதில் வாங்கமுடியாது, அதற்க்கு முறைப்படி அரசின் அனுமதிபெற்று, ஒவ்வொரு முறையும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மாத்திரமே, சென்னையில் உள்ள எழிலகத்தில் இருந்த கலால் துறை ஆணையரின் கையொப்பமிடப்பட்ட ஆணையின் அடிப்படையில் அவர்கள் நிர்ணயிக்கும் சர்க்கரை ஆலையிலிருந்துதான் பெற்றுகொள்ளவேண்டும்.

 அதை டேங்கர் லாரியில் தான் கொண்டுசெல்ல வேண்டும் அதுவும் அந்த ஆணையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் அவர்கள் குறிப்பிட்டுகொடுக்கும் சாலை மார்கமாகதான் கொண்டு செல்ல வேண்டும்.

ஏன் இத்தனை கட்டுப்பாடும் கெடுபிடியும் என்றால் இந்த மொலாசஸ் தான் எரிபொருள் - ஸ்பிரிட், மற்றும் மதுபானங்கள் தயாரிப்புக்கான அதி முக்கிய மூலபொருள் என்பதால், இது பெரும் கட்டுபாட்டிற்க்குறிய ஒரு பொருள்.

இந்த மொலாசசை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உரிய லைசன்ஸ் பெற்றிருந்தால் மட்டுமே  கொள்முதல் செய்ய முடியும்.


எங்கள் நிறுவனத்திற்கான(Rural Unit for Health and Social Affairs) மொலாசஸ் ஒதிக்கீடு, கிருஷ்ணகிரி அருகில் இருந்த(இப்போதும் இருக்கின்றதா என தெரியவில்லை) கேத்தாண்டபட்டி சர்க்கரை ஆலையிலிருந்து பெற்று கொள்ளும்படி அனுமதி கிடைத்தது.

அதை  முன்னிட்டு அடுத்த நாள்   அந்த ஆலைக்கு சென்றேன். அங்கிருந்த செயல் அலுவலரிடம் உத்தரவை காட்டி  சம்பிரதாயங்களை நிறைவேற்றிய பின்னர் அவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் உங்களுக்கு டெலிவரி கொடுக்கப்படும் எனவே நாளை மதியம்  மூன்று  மணிக்குள் டேங்கர் லாரியுடன்  வந்து விடுங்கள் என கூறினார்கள்.

டேங்கர் லாரிகள் கிரிஷ்ணகிரியிலேயே கிடைக்கும் என்ற அறிவுரையின்பேரில் நேராக டவுனுக்கு வந்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் சிலரை சந்தித்தேன், ஆனால், நமக்கு தேவைப்படும் நாளை மாலை மூன்று மணிக்குள் எந்த டேங்கர் லாரியும் கிடைக்காது எல்லா லாரிகளும் முன்னதாகவே வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டன என்ற தகவலினால் மிகவும் சோர்ந்துபோனேன்.

அப்போது ஒரு லாரி உரிமையாளர் சொன்னார் ஆம்பூரில்  ஒருவரிடம் டேங்கர் லாரி இருக்கின்றது வேண்டுமானால் அவரிடம் விசாரித்துபாருங்கள் என கூறி அவரின் பெயரை குறிப்பிட்டு பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஒரு ஏஜென்ட் நிறுவனத்தின் பெயரையும் சொன்னார்.

சரி இப்போது ஆம்பூர் போனால் இருட்டிவிடும் என நினைத்து அன்றிரவு கிருஷ்ணகிரியிலேயே அறை எடுத்து தங்கிவிட்டு காலை ஆம்பூர் நோக்கி பயணமானேன்.

எனக்கு  சொல்லப்பட்ட அந்த ஏஜென்ட் நிறுவனத்தை கண்டுபிடித்து அவர்களிடம் விஷயத்தை சொனனேன்.

 அவர்கள் சொன்னார்கள் அப்படி யாரும் எங்களிடம் பதிவு செய்த லாரி உரிமையாளர் கிடையாது,   துத்திப்பட்டு என்ற ஊரில் யாரோ ஒருவர் டேங்கர் லாரி வைத்துள்ளதாக கேள்விப்பட்டோம் நீங்கள் வேண்டுமானால்
 துத்திப்பட்டு போய் அங்கே விசாரித்துப்பாருங்கள் என சொல்லிவிட்டனர்.

துத்திப்பட்டு எங்கே இருக்கின்றது எப்படி போவது?

இங்கிருந்து வடக்காக பாலாற்றை கடந்து ஒரு அரை மணிநேரம் அல்லது முக்கால் மணி நேரம் சைக்கிளில் சென்றால் துத்திப்பட்டு போய்விடலாம் என்றார்கள்.

சைக்கிள் எங்கே கிடைக்கும்?  அருகிலிருந்த ஒரு சைக்கிள் வாடகை கடைக்கு சென்று துத்திப்பட்டு போகவேண்டும் ஒரு சைக்கிள் வாடகைக்கு வேண்டும் என்றேன்.

தெரியாதவர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்றார் கடைகாரர்.

வேண்டுமானால் என் வாட்ச்சை பணயமாக வைத்துகொண்டு கொடுங்கள் என்றேன்.

 கடைகாரர், சரி சரி வாட்ச் எல்லாம் வேண்டாம் எடுத்துகொள்ளுங்கள் என கூறி அனுமதித்தார், சைக்கிள் கிடைத்தது, பணயம் ஏதுமின்றி.

இப்போது  எதிரில்  வருபவர்களை வழி கேட்டுகொண்டே விழி பிதுங்க சைக்கிளை மிதித்துக்கொண்டே பாலாற்றில் 'இறங்கினேன்' , தண்ணீர் இல்லா ஆற்றில் சைக்கிள் , மாட்டுவண்டி, இருசக்கர மோட்டார் வண்டிகள் போகுமளவிற்கு வழி தடம் இருந்தது . அப்போது எங்கு பார்த்தாலும் பெருமளவிற்கு மணல் நிரம்பி பரவி இருந்த ஆற்றில் இப்போதைய  நிலைமை என்னவாக இருக்கும்?  

ஒரு வழியாக துத்திப்பட்டு எல்லையை அடைந்தேன். அங்கிருந்து
நான் தேடிவந்த நபரின் வீட்டை மிக எளிதில் அடைந்துவிட்டேன்,  அந்த ஊரிலேயே டேங்கர் லாரி வைத்திருந்தவர் அவர் மட்டுமே.

திறந்திருந்த கதவை தட்டி, "சார்...."

உள்ளே இருந்து வந்த ஒரு நடுத்தர வயதுடைய, பார்க்க மிகவும் வசீகரமாகவும் கம்பீரமாகவும் அதே சமயத்தில் சாந்தமாகவும் நெற்றியில் சந்தனம் குங்குமம் அணிந்த  மனிதரைகண்டு, "வணக்கம் சார்.. என் பெயர்....."

"வாங்க , உள்ளே வாங்க.....  என்னம்ம்மா ....  தண்ணி கொண்டா..."

"சார்... என் பெயர்....."

அதற்குள் மங்களகரமான தோற்றத்தில் புன் சிரிப்புடன் ஒரு பித்தளை சொம்பில் தண்ணீருடன் வெளிவந்த ஒரு பெண்மணி, தண்ணீர் சொம்பை என்னிடம் கொடுத்து "கை கழுவிக்கொள்ளுங்கள்" என சொல்லி உள்ளேயே இருந்த ஒரு பாத்ரூமை காட்டினார். 

என்ன இது நான் யார் என் பெயர் என்ன என்றுகூட சொல்லவில்லை, என்னை அவர்களுக்கு முன்னே பின்னே தெரியாது, எதற்க்காக வந்திருக்கின்றேன் என்று கூட இன்னும் சொல்லவில்லை அதற்குள் தண்ணீர் கொடுத்து கைகழுவுங்கள் என்று சொல்லுகின்றார்களே,  ஒருவேளை இவர்களின் குடும்ப சம்பிரதாயமாக யார் வந்தாலும் கைகழுவிய பிறகுதான் பேசுவார்களோ என நினைத்து, அவர்கள் காட்டிய அந்த பாத்ரூமிற்கு சென்று கைகளை கழுவிக்கொண்டு வெளியில் வந்தேன்.

அப்போது மணி ஏறக்குறைய மதியம் பன்னிரெண்டை நெருங்கிகொண்டிருந்தது.

அங்கே பாய் மடித்துபோடப்பட்டு   அதனருகில் வாழை இலை, டம்ளரில் தண்ணீர் வைக்கபட்டிருந்தது, சுற்றிலும் சாப்பாட்டு பாத்திரம், குழம்பு பாத்திரம் இன்னும் பல சின்ன சின்ன பத்திரங்களில் உணவுபொருட்கள் நிறைந்து காணப்பட்டது.

அந்த பாயின் ஒரு பக்கத்தில் நான் தேடிவந்த அந்த நபர் அமர்ந்திருக்க, அவர் என்னைப்பார்த்து அருகில் வந்து அமரும்படி செய்கை காட்டினார்.

நானோ "என்னங்க இது நான் ...."

முதல்ல சாப்பிடுங்க மற்றவற்றை பிறகு பேசிக்கலாம் என்று கூறி தன் மனைவியிடம்  உணவை பரிமாற சொல்லிவிட்டு, "நீங்க அசைவம் சாப்பிடுவீர்களா" என்றார்.

சார் ... என்னங்க நீங்க........"

அதற்குள், சாதம், சாம்பார் , உருளைகிழங்கு பொரியல், கீரை பொரியல்  ஊறுகாய், அப்பளம்... என அனைத்தும் எனக்கான இலையில் பரிமாறப்பட்டது.

"சார் என்ன பண்றீங்க... எனக்கு....நான் ....உங்க...."

ஏம்மா போய் முட்டை பொரித்துகொண்டுவா,

முட்டையும் ஆம்லெட்டாக வந்தது, அது எனக்கு மட்டுமே வைக்கப்பட்டது... "சார் உங்களுக்கு..."

"நீங்க சாப்பிடுங்க... இன்னைக்கு நான் சைவம் மட்டுமே... "

நான் என்னசெய்வதென்றே தெரியாமல், என்ன நடக்கின்றது என்றும் புரியாமல், வேறு யாரையாவது எதிபார்த்திருந்து அது நான் தான் என்று தவறாக நினைத்து உபசாரம் நடக்கின்றதோ.... ஒருவேளை உண்மை தெரிந்தால் நிலைமை தர்ம சங்கடமாகிவிடுமே....சாப்பிடலாமா? வேண்டாமா... இவர்கள் வேறு என்னை பேசவே விடவில்லையே?
என யோசித்து தயங்கிய என்னை,  "சாப்பிடுங்க என்ன யோசனை?"

"அது ஒன்னுமில்லைங்க....நான் சொல்றத கொஞ்சம்...."  

"என்னங்க கொஞ்சம் கொஞ்சமா எடுத்துனு நல்ல அள்ளி சாப்பிடுங்க.."

இவ்வாறு சாப்பாடு, சாம்பார், கூட்டு பொரியல், முட்டை, ரசம், மோர் என சாப்பிட்டு முடித்தபின்னர், மீண்டும் அதே பித்தளை சொம்பு -  தண்ணீர் -  பாத்ரூம் - கைகழுவிக்கொண்டு வெளியில் வந்தேன்,  நாற்காலிக்கு பக்கத்தில் இருந்த சிறிய ஸ்டூலில் வாழைபழங்கள் கூடவே வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு.(நண்பர்களே இதில் எந்த ஒன்றையும் நான் மிகைபடுத்தி சொல்லவில்லை என்பதை நீங்கள் நம்புவீர்கள் என நான் நம்புகின்றேன்.)

"ஆங்..... இப்போ சொல்லுங்க நீங்க யாரு, என்ன விஷயமா இங்கே வந்திருக்கின்றீர்கள்?"

நான் கையில் இருந்த ஈரத்தை துடைத்ததை விட இந்த ஈர உள்ளம்  கொண்டவர்களின் விருந்தோம்பலையும் அன்பையும் நினைத்து கண்கள் உதிர்த்த கண்ணீர் ஈரத்தையே அதிகமாக   துடைக்க வேண்டியதாயிருந்தது.   .         
"ஐயா மிக்க நன்றி, நான் யார் என்று கூட தெரியாமல் என்னை எதையும் பேசவிடாமல், முதலில் என்னை சாப்பிடவைத்து நீங்கள் காட்டிய அன்பிற்கும் உபசரிப்புக்கும் நான் மிகவும் தலை வணங்குகின்றேன், இதுபோன்றதொரு விருந்தோம்பலை நான்  கதைகளில்கூட கேட்டறிந்ததில்லை, இங்கே நடப்பது எல்லாமே எனக்கு நிஜமா கற்பனையா என்று உணரமுடியாத , நம்பமுடியாத நிலைமையில் நான் இருக்கின்றேன்"

"என்னங்க  நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு சொல்லுங்க என்ன விஷயம்"

 விஷயத்தை சொன்னேன், அவரும் தனது லாரி கொஞ்சம் பழுதடைந்திருப்பதாகவும் அதை பழுது பார்க்க விட்டிருப்பதாக சொல்ல எனக்கு என்னசெய்வதென்றே புரியாமல் கொஞ்சம் தயங்கினேன்.

 அவர் தொடர்ந்தார்.....   "ஆனால் டேங்கர் நன்றாக இருக்கின்றது எனவே லாரி வேறு ஏதேனும் ஒழுங்கு செய்துகொள்ளலாம்" என சொல்லிவிட்டு அவரது வீட்டு தொலைபேசியில் யாரையோ அழைத்து ஒரு லாரியை அவரது தோட்டத்திற்கு அனுப்ப சொல்லிவிட்டு, " நீங்கள் கவலை படவேண்டாம் வாங்க தோட்டம் போகலாம்" என கூறி அவரது தோட்டத்திற்கு அழைத்து சென்றார், அங்கே ஒரு மரத்தில் சங்கிலியில் இணைக்கப்பட்டு  தொங்கிகொண்டிருந்த டேங்கரை காட்டினார்.

ஏன் மரத்தில் கட்டி தொங்கவிடபட்டிருக்கின்றது? எப்படி அதை கீழே இறக்குவார்கள்?  இப்படி யோசித்துகொண்டிருந்த நேரத்தில்  அவர் சொல்லி வைத்திருந்த லாரி, சபரி மலைக்கு மாலைபோட்ட ஒரு டிரைவர் சாமியால் சரியாக மரத்திலிருந்த டேங்கருக்கு கீழே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.

Image result for pictures of tanker lorries

டேங்கரை புள்ளியின் உதவியுடன் லாரியில் சரியாக இறக்கி இறுக்கமாக கட்டப்பட்டு நேராக கேதாண்டபட்டி சர்க்கரை ஆலைக்கு மாலை 4.00 மணிக்குள் வந்துவிட்டோம், பின்னர் ஆறுமணியளவில்(சாமி சர்க்கரை ஆலையிலே  மாலை குளியலை முடித்தபின்னர்) எங்களுக்குண்டான மொலாசசை நிரப்பிக்கொண்டு இரவு சுமார் 10.00 மணிக்கு எங்கள் நிறுவனத்தின் தரை டேங்கரில் (பூமியில் தொட்டிபோன்ற டேங்கர்கள் இரண்டு இருந்தன) நிரப்பிவிட்டு, வண்டி மற்றும் டேங்கர்   வாடகையை நாளை மறுநாள் வந்து வாங்கிகொள்வதாக கூறிவிட்டு அவரும்  அந்த சாமியும் திரும்பி போய்விட்டார்கள்.

இவை எல்லாமே எனக்கு கனவுமாதிரியே இருந்தது அடுத்தநாள் மீண்டும் அந்த அபூர்வ மனிதரை பார்க்கும்வரை.

அடுத்த நாள் அலுவலகம் வந்தவர் என்னிடம் கேட்ட வாடகைப்பணம் நாங்கள் இதுவரை கொடுத்துவந்த வாடகை பணத்தில் பாதிக்கும் குறைவாகவே இருந்தது, அதற்க்கு அவர் சொன்ன பதில் "வாயில்லா பிராணிகளுக்கான தீவனம் தயாரிக்கதானே இந்த மொலாசசை கொண்டுவந்தீர்கள்  , 'வேறு'  பானங்களை தயாரிக்க அல்லவே எனவே  இதுபோதும்" என கூறி என் கையை குலுக்கி எனக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு ,"ஆம்பூருக்கு எந்த வேலையாக வந்தாலும் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க" என சொல்லிவிட்டு அவரோடு வந்திருந்த அவரது நண்பரோடு மோட்டார் சைக்கிளில் ஏறி கை அசைத்தவாறே சென்றுவிட்டார்.

நானும் கண்ணிமைக்காமல் அந்த மனித தெய்வத்தை கண்ணிலிருந்து மறையும் வரை வியப்புடன் பார்த்துகொண்டிருந்தேன்.

அவர் பெயரை நான் இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் இது நான் இன்னும் அவரை மறக்கவில்லை என்பதன் அடையாளமாகவும்,அவருக்கு  நான் செலுத்தும் நன்றி காணிக்கையாகவும் அமையுமென்பதால்.

அவர் பெயர் 'துத்திப்பட்டு' கிருஷ்ணமூர்த்தி. இப்போது ஏறக்குறைய 70 வயதாகி இருக்கும் என நினைக்கின்றேன்.

 இந்த பதிவை , ஆம்பூர், வாணியம்பாடி, துத்திப்பட்டு,வேலூர் பகுதிகளில் இருப்பவர்கள் வாசிக்க நேர்ந்தால், ஐயா கிருஷ்ண மூர்த்தி அவர்களிடம்  தயவாக சொல்லுங்கள் என் அன்பையும் வணக்கத்தையும் விசாரிப்புகளையும். அப்படியே அவரின் நல செய்திகளையும் எனக்கு எழுதுங்கள் ப்ளீஸ்.

ஐயா! எப்படி இருக்கின்றீர்கள்? என்னை நினைவிருக்கின்றதா?

உங்களை போன்ற ஒருவரை (உங்கள் துணைவியாரையும் சேர்த்து) இந்த உலகத்தில் நான் சந்தித்தேன் என்ற பெருமையுடனும் சந்தோஷத்துடனும் இந்த பதிவை உங்களின் அன்புள்ளத்திற்கு அர்ப்பணம் செய்கின்றேன்.

பி.கு: ஐயா, தங்களை குறித்து நான் எழுதியதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றாலும் என் 'நினைவு தப்பும் முன்' உங்களை பதிவுசெய்யவேண்டும் என்று என் உள்மனது உறுத்திகொண்டிருந்ததால் எழுதிவிட்டேன், தவறாயின் தயவாக மன்னித்துகொள்ளுங்கள் - மன்னிப்பீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.