AI Vs NI
நண்பர்களே,
புறாவழி,வாய்மொழி,கடிதம்,அஞ்சல்,தந்தி,ரேடியோ, கருப்பு வெள்ளை, வண்ண தொலைக்காட்சி,தொலைபேசி, சாதா கைப்பேசி, முகம் பார்த்து பேசும் கைப்பேசி,, ஸ்மார்ட் கைபேசி, கணினி, மடிக்கணினி ,ஈமெயில், இன்டர்நெட்
போன்று அவ்வப்போது மனித மூளை வளர்ச்சியின் பரிணாமங்களின் அடிப்படையில், தகவல் பறிமாற்ற முறையில் ஏற்பட்டிருக்கும் பரிமாணங்களும் படிப்படியாக மாறிக்கொண்டே வருவதை செவி வழி செய்தியாக கேட்டும் கண்கூடாகவும் பார்த்து வருகிறோம்.அதன் சமீபத்திய பரிணாமமான, வாட்சாப் , கூகுள், சாட் ஜி பி டி போன்ற படிநிலைகளும் படிப்படியாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில், ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் AI எனும் ஒரு புதிய தொழில் நுட்பம் மனித செயல்பாட்டை , வேகத்திறனை,பரிகசிக்கும் வகையில் அசுர வேகத்தில் உலகை ஆட்கொண்டுவருவதும் கண்கூடு.
எத்தனை அறிவியல் தொழில் நுட்பம் இந்த பிரபஞ்சத்தில் கோலோச்சினாலும் அதற்கான ஒட்டுமொத்த பாராட்டை பெறுபவர்கள் என்னமோ அதனை கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்து அதன் பயன்பாட்டு பறைசாற்றி பகிரசெய்யும் மனித மூளைதான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவை அத்தனை அறிவியல் சார்ந்த, வியக்கத்தக்க விந்தைகள் நாளுக்கு நாள் அதன் வீரியத்தையும் , உபயோகத்தையும் விரிவாக்கம் செய்து உலகை வியக்க வைத்துக்கொண்டிருந்தாலும் இவை அத்தனைக்கும் செயற்கை நுண்ணறிவு என்றுதான் பெயர்.
செயற்கை என்பது மனிதனால் உருவாக்கப்பட்டு செயல்பட வைப்பது என்பதுதான் அடிப்படை அர்த்தப்புரிதல்.
செயற்கை என்பது நாளுக்கு நாள் மாற்றம் அடைந்துகொண்டே போகும். எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை கட்டுப்பாடு, கரை, விளிம்பு, நீளம், அகலம், உயரம் , கன பரிமாணம் உண்டு.
ஆனால் இயற்கை அல்லது பிரபஞ்சம்,அல்லது, அமானுஷ்யம் என்றெல்லாம் அழைக்கப்படும் விந்தைக்குரிய, வியப்பிற்குரிய, வினோத - மனித சிந்தனைக்குள் சிக்காத பல, இந்த பிரபஞ்ச வலி மண்டலம், காற்று மண்டலம், மழை வெயில் , கடல், காற்று சூறாவளி, வெள்ளம், புயல், சுனாமி, எரிமலை, எறி கற்கள், விண் மீன், சூரியன், சந்திரன் , நட்சத்திரம், கோள்கள், அண்டம், கீழுலகம் , ஏழுலகம் , மேலுலகம், மரம் செடி கொடி, காடு, மலை, ஆறு , கடல் ஜீவ ராசிகள், மனிதன், என்று நாம் ப்பார்க்கின்ற கேள்விப்படுகிற இதுபோன்றும் இன்னும் நம் கவனத்திற்கு வராத பெயர்தெரியாத பல வினோத விந்தைகளுக்கு யாரை எந்த நுண்ணறிவை நாம் போற்றிக் கொண்டாடக்கூடும்? பாராட்டக்கூடும்?
நம்பமுடியாத விந்தை செயல்களை எந்த மனித மூளையின் நுண்ணறிவும் செய்தற்கறிய பல விடயங்களை தமது வாழ்வில் அனுபவிக்கும் சிலரால் மட்டுமே மனித மூளைக்கும் அவனது திறமைக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இந்த பிரபஞ்சச்தில் இருப்பதை அறிய முடியும்.
அதுதான் இயற்கை(யின்) நுண்ணறிவு - Nature's Intelligence!
அவ்வகையில் கனவு, உள்ளுணர்வு போன்று மனிதனால் கட்டுப்படுத்த இயலாத பல விடயங்கள் நமக்கு ஏற்படுவது எந்தவகை நுண்ணறிவு. சிலர், தீர்க்கதரிசனமாக சொல்லுவது அப்படியே நடந்திருப்பது எந்தவகை நுண்ணறிவு? இதில் வான சாஸ்த்திரம் , வானிலை முன்னறிவிப்புகள் சேராது.
இந்த விடயத்தை பதிவாக்க காரணமான ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் ஒன்றாக படித்தோம், கல்லூரி வாழ்க்கை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தோம்.
அவரின் பெயர், அவர் எந்த ஊரிலிருந்து வந்து விடுதியில் தங்கி படித்தார், அவரது முக தோற்றம், உடல் வாகு போன்றவை நினைவிருந்தாலும் , அவரை பற்றிய எந்த எண்ணமும், சிந்தனையும் எனக்கு ஏற்பட்டதே இல்லை.
ஏறக்குறைய அப்படி ஒரு ஆள் என் வாழ்வில் இருந்தாரா என்று கேட்க்குமளவிற்கு அவரை முழுமையாக மறந்திருந்தேன்.
இப்படி இருக்க, ஒரு இரவில், உறக்கத்தில் வந்த கனவில் அவர் வந்தார் , அதே முகம் அதே உடல் வாகு அதே புன்னகை.
என்ன , இத்தனை ஆண்டுகள் கழித்து இவர் ஏன் என் கனவில் என்று அடுத்த நாள் யோசிக்கக்கூட நேரமில்லை.
அப்போது, இங்கே,விடியற்காலை மூன்று மணி இந்தியாவில் சுமார் 7.30 மணி.
என்ன நடந்தது அந்த விடிந்தும் விடியாத காலைப்பொழுதில்?
பிறகு தொடர்கிறேன்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக