விளங்காத உண்மைகள்
நண்பர்களே,
முன் பதிவை வாசிக்க...விமான பயணத்தில்...3
அப்படி என்ன? அடுத்த ஒரு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்வோம் என்ற அனைத்து பயணிகளின் மனதிலும் , இதுவே நமது கடைசி பயணமோ என்று எண்ணுகின்ற அளவிற்கு நடுவானில் திடீர் என ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் பலமான கடும் காற்று வீசியதால் விமானம் இடது வலது என இரண்டு பக்கங்களும் நிலை தடுமாறி பயணிகள் இப்படியும் அப்படியும் சாய பெரும்பாலானவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அச்சத்தை வெளிப்படுத்த, கேப்டனிடமிருந்து வந்தது அந்த அவசர செய்தி.
"வானிலை மோசமாக இருக்கின்றது , யாரும் அச்சப்படவேண்டாம், எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள், கழிவறைக்கு யாரும் செல்லவேண்டாம் , யாரும் எழுந்திருக்க வேண்டாம், பணிப்பெண்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பவும்" என்பதே.
பக்கவாட்டில் அந்த சிறிய ரக விமானம் வலது இடது புறமாக குறைந்த பட்சம் 40 லிருந்து 45 டிகிரி வரை சாய்ந்து நிமிர்ந்து சாய்ந்து நிமிர்ந்து அதிர்வுடன் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த அசாதாரண சூழலில் உயிர் பயம் ஏற்படுவது இயல்பே.
நமக்கு ஏன் இந்த விமானத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டது ? விடாப்பிடியாக அல்லவா நாம் இந்த விமானத்திலேயே போகவேண்டும் என்று அடம் பிடித்து இடம் பிடித்தோம்.
ஒருவேளை கொஞ்சம் நிதானமாக நாளை வந்திருக்கலாமோ?
மனதில் பல எண்ண ஓட்டங்கள்.
இதற்கிடையில் பயணிகளுள் பலர் தங்களின் திகிலை பகிரங்கமாகவே வெளிக்காட்டினார்கள், தங்கள் இஷ்ட தெய்வங்களின் நாமங்களை சத்தமாக தொடர்ச்சியாக உச்சரிப்பதன் மூலம்.
விமானம் இன்னும் மோசமான நிலையில் பறந்துகொண்டிருந்தது. எங்கே கீழே விழுந்துவிடுமோ, மலைகளில் மோதி வெடித்து சிதறிவிடுமோ, கடலில் விழுந்து முழ்கிவிடுமோ என்றெல்லாம் மனம் யோசிக்க தொடங்கியது.
பயணிகளுள் சிலர் தங்களின் கடைசி செய்தியாக(!!) தங்கள் குடும்பத்தினருக்கு குரல் வழி பதிவுகளை தடுமாற்றத்துடன் தங்கள் கைபேசியில் பதிவு செய்யும் காட்சியும் காண முடிந்தது.
ஆம்ஸ்டர்டாமிலிருந்து லண்டலுக்கு அதிகபட்ச பயண நேரம் 1மணி 20 நிமிடங்கள்தான் என்றாலும் அந்த சூழ் நிலையில் ஏற்கனவே பல மணி நேரமாக பயணித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.
நண்பர்களே,
எவ்வளவுதான் மனோதிடமும் நேர்மறையான எண்ணங்களையும் கொண்டிருந்தாலும் அன்றைய சூழலில் நடு வானில் கட்டுப்பாடற்று நூல் அறுந்த பட்டம்போல் நாம் பயணிக்கும் விமானம் இங்குமங்குமாக நிலை குலைந்து பறக்கும்போது , பயம் , அச்சம், திகில், கலக்கம், மிரட்சி.... போன்ற உணர்வுகள் எவருக்கும் ஏற்படுவது இயல்புதான். எனக்கும் இவை எல்லாம் ஏற்பட்டதும் உண்மைதான். எனினும் இறையருள் ஒன்றையே நம்பி இருந்தேன் பாதுகாப்பான தரை இறங்குதலுக்காக எல்லோருக்காக - எல்லோர் சார்பாக வேண்டிக்கொண்டேன்.
இரண்டு விமானிகளின் கடும் போராட்டத்தாலும் பதட்டமில்லா செயல் திறத்தாலும் நடு வானில் பயணப் பாதையில் ஏற்பட்ட எதிர்பாராத இயற்கை சீற்றத்தால் விளைந்த turbulence எனும் அசாதாரணமான நேரத்தில் சாதுர்யமாக விமானத்தை செலுத்தி பாதுகாப்பாக அவர்கள் தரை இறக்கியது விமானத்தை மட்டுமல்ல, அதில் இருந்த 128 பேர்களின் மரண பயத்தையும்தான் என்றால் அது மிகை ஆகாது.
தரை இறங்கி ஓடுபாதையை கடந்து விமானம் முழுமையாக நிறுத்தப்பட்டதும் விமானிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் தங்களது பாராட்டை மகிழ்சி யை வெளிப்படுத்தும்வண்ணம் பயணிகளின் கைதட்டல்களும் நன்றி யுடனான வாழ்த்தொலிகளும் வானில் எங்களுக்கு மரண பயத்தை காட்டிய அந்த பெருங்காற்றுக்கு சென்று சேரும் அளவிற்கு அமைந்திருந்தது என்பதும் மிகை அல்ல என்றே சொல்ல வேண்டும்.
விமானத்திலிருந்து இறங்கும்முன் தங்களது இருக்கைகளில் இருந்து வெளியில் வந்து நின்றுகொண்டிருந்த விமானிகள் இருவருக்கும் ஒவ்வொரு பயணியும் கைகளை குலுக்கி அவர்களுக்கு நன்றி சொன்ன காட்சி உள்ளத்தில் நெகிழ்ச்சியை ஊற்றெடுக்க செய்தது.
ஒரு சிலர் அவர்களின் தோள்களை தட்டி அவர்களை பாராட்டிய விதம் வார்த்தைக்குள் அடங்கா பேருணர்வாக உணரப்பட்டது.
அதை தொடர்ந்து விமானத்தில் இருந்து வெளியில் வந்து குடியுரிமை கட்டுப்பாட்டு தளத்திற்கு வரும் வழியில் விமான நிறுவனத்தின் சார்பாக அனைத்து பயணிகளுக்கும், yes , அனைத்து பயணிகளுக்கும் மலர் கொத்தும் இனிப்பு பொட்டலங்களையம் கொடுத்து வரவேற்றது மகிழ்வைத்தந்தாலும், நாம் மேற்கொண்ட பயணம் எத்தகு ஆபத்தானதாக கருத்தப்பட்டிருக்கின்றது என்பதை உணர்த்தியது.
நண்பர்களே,
இந்த தொடர் பதிவின் முதல் பாகத்தில் சொன்னதுபோல், இத்தனை வருட விமான பயணத்தில் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை.
சில நேரங்களில் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதும் , முற்றிலுமாக சேவை ரத்து செய்யப்படுவதும், இன்னும் பல அசௌகரியங்கள் ஏற்படுவதும் கால நிலை மாற்றம், தொழில் நுட்ப கோளாறு, விமான ஓடுதளத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், வெள்ளம் , எரிபொருள் நிரப்புவதில் ஏற்படும் தாமதம், விமானம் இயக்கப்படுவதற்கான clearance கிடைப்பதில் ஏற்படும் தாமதம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் நமது பயணம் குறித்ததுபோல் நடக்காமல் போகலாம்.
அடுத்தடுத்து நாம் திட்டமிட்டிட்டிருக்கும் செயல்பாடுகளில் தடைகளோ தாமதமோ ஏற்படும் சூழலில், எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு துளிர்ப்பது கடினம்தான், எனினும் இதுபோன்ற அனுபவங்கள் இனி வரும் நம் பயணங்களில் நம்மை பக்குவப்படுத்தும் என்றும் எந்த தடை வந்தாலும் அவை யாவும் ஏதோ ஒரு நன்மைக்கே என்றும் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்ற நேர்மறையான சிந்தையை நம் மனதில் வளர்க்கும் என நம்புகிறேன்.
விமானம் தாமதமாவதும், ரத்து செய்யப்படுவதால், குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமை, அடுத்த connecting விமானத்தை பிடிக்க முடியாமல் போவது, குறிப்பிட்ட நேரத்தில் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியாமல் போவது,குழ்ந்தைகள் இருப்பின் அவர்களது உணவு தூக்கம் அசௌகரியங்களை எதிர்கொள்வது, உடல் ரீதியாக மனம் ரீதியா சவால்களோடு பயணிக்கும் பயணிகளின் உபாதைகள் போன்று எத்தனையோ விதமான சங்கடங்களை பயணிகள் எதிர்கொள்ளவேண்டி இருக்குமே என்றெண்ணி, விமான நிறுவனங்களும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் அனைத்து செயல்களையும் செய்து முடிந்தவரை பயணிகளின் பயணத்தை இனிமையானதாக மாற்ற முயலவேண்டும்.
ஏனோ தானோ என்று, வரைமுறைகளை கடந்து, கொள்ளளவிற்கு அதிகமாக பயண சீட்டுகளை முகவர்கள் மூலம் விற்பது, நேரத்திற்கு நேரம் விமான கட்டணங்களை உயர்த்திக்கொண்டு போவது, முன்கூட்டியே இருக்கையை உறுதி செய்ய தனி கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களை மறு சீராய்வு செய்து தவிர்ப்பது நல்லது.
இது போன்ற நடைமுறைகள் தொடர்ந்து விமான சேவையில் நடந்துகொண்டிருப்பதுதான் இன்னும் நம்மில் பலருக்கு விளங்காத உண்மைகளாகவே விளங்கிக்கொண்டு இருக்கின்றன.
பி.கு: லண்டலிலிருந்து ஆம்ஸ்டெர்டாம் செல்லும் விமானத்தின் விமானிகள் அறைக்குள்(காக்பிட்) அனுமதிக்கப்பட்டு விமானிகளோடு மகிழ்ச்சியாக அளவளாவும் சந்தர்ப்பமும் அவர்களோடு புகைப்படம் எடுத்துகொள்ளும் வாய்ப்பும் எனது இத்தனை ஆண்டு அனுபவத்தில் இதற்கு முன் கிடைத்ததில்லை, அதுவும் ஒரு இனிய அனுபவமே.
திறமையுடன் செயல்பட்டு பேராபத்திலிருந்து பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவந்து தரை இறக்கிய அந்த இரண்டு இளைய விமானிகளுக்கும் அமர்ந்திருந்த பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த பதிவை நன்றியுடன் சமர்ப்பித்து இத்துடன் இந்த தொடர் பதிவை நிறைவு செய்கிறேன்.
அடுத்த பதிவு வரும் வரை,
நன்றியும் வணக்கங்களும்.
மீண்டும்ச(சி)ந்திப்போம்.
கோ.
கடைசியில் எல்லாம் சுபம்... இது போன்ற அனுபவங்கள் நம்மை மிகவும் தவிக்க வைத்துவிடுகின்றன என்பதே உண்மை. அந்த நிலையில் எதுவுமே நம் கையில் எனும்போது இறைவனிடம் பாரத்தைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்க வேண்டியதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை என்பதும் உண்மை.
பதிலளிநீக்குசென்ற வருடம் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சிறிய விமானத்தில் இப்படித்தான் அதிக Turbulence ஏற்பட, பயணிகள் அலற ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே என்பதால் அதிக அளவில் கிலி ஏற்படவில்லை என்பதும் நிஜம்.
On a lighter vein, ஒரு முறை இப்படி Turbulence ஏற்பட, முதல் முறை பயணிக்கும் சிலர் பயந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த போது, அதில் ஒருவர், “பயப்படாதீங்க டே! விமானி கியர் மாத்தறதுனால தான் இப்படி ஆகுது! சரியாகிடும்!” என்று சொல்லி அனைவரையும் நகைக்க வைத்தார்.
வெங்கட்
பதிலளிநீக்குபயணம் சுபமாகவும் சுகமாகவும் முடிந்ததில் மெத்த மகிழ்சிதான்.
தாங்கள் குறிப்பிட்டதுபோல் முதல் விமான பயணம் மேற்கொள்ளும் போது இதுபோன்ற எதிர்பாராத பேரதிர்வுகள் நிகழ்ந்தால் அவர்களின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.
அதே போல அவர்களை சகஜ நிலைமைக்கு கொண்டு வர சக பயணி செய்த செயலும் பாராட்டிற்குரியது.
பொதுவாக இதுபோன்ற turbulence களின் தாக்கமும் வீரியமும் பெரிய விமானங்களை காட்டிலும் சிறிய ரக விமானங்களையே பெரிதும் பாதிக்கும் என்று நினைக்கின்றேன் .
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சிறிய ரக விமானங்களில் அமெரிக்காவின், நியூயார்க்,வாஷிங்டன்,வெர்ஜீனியா, பாஸ்டன் நியூ ஜெர்ஸி போன்ற பல மாநிலங்களுக்கிடையில் பயணித்தபோதும் ஏற்பட்டிருந்தாலும் இந்த பயணத்தின்போது ஏற்பட்ட துபோல் எப்போதும் ஏற்பட்டதில்லை.
வருகைக்கும் தங்களின் அனுபவ பகிர்விற்கும் மிக்க நன்றிகள்.
Hi sir,
பதிலளிநீக்குI'm still trying to understand how there were more people than seats sold.
It looks like a human error.
But about the flight turbulence, hats off to the pilot for managing it so well.
Hi sir,
பதிலளிநீக்குI'm still trying to understand how there were more people than seats sold.
It looks like a human error.
But about the flight turbulence, hats off to the pilot for managing it so well.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குHello Mahesh, hope you are well.
நீக்குThough it may come as a surprise to holiday-makers, most airlines intentionally overbook flights by selling more tickets than available seats for a journey. The practice is not illegal and is done because airlines anticipate a number of people that have bought tickets simply not showing up on the day of travel.
இதற்கு முந்தைய பகுதியும் வாசித்துவிட்டேன். எப்படியான பதற்றமாக சூழல். எப்படியோ இறுதியில் விமானிகள் இருவரும் அழகாகக் கையாண்டு பாதுகாப்பாகத் தரையிறக்கி உங்கள் எல்லோரையும் சேர்த்ததற்கு அவர்களுக்கும் நன்றி
பதிலளிநீக்குடர்புலன்ஸ் இப்படி ஏற்படுவதுண்டு என்றாலும் உங்களுக்கு ஏற்பட்டது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது.
மகன் ஒரு முறை சிக்காகோ சென்ற போது tornado வந்ததில் விமானம் ரொம்பவே அங்குமிங்கும் பறந்திருக்கிறது. விமானிகளும் எல்லோரையும் பாசிட்டிவாகச் சொல்லி சில அனுபவங்களையும் சொன்னார்களாம். என்றாலும் மற்ற பயணிகள் பலரும் இறைவனை அழைக்கத் தொடங்கி...பயத்தை வெளிப்படுத்தினார்களாம்...சிக்காகோவில் தரையிறங்க முடியாமல் சுற்றி இறங்கிய போதும் கூட rough landing ஆக இருந்தது என்றான்.
அது போல ஒருமுறை விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர்...கொஞ்சம் பெயர் பெற்றவர் இப்போது பெயர் மறந்துவிட்டது. பதிவு கூட எழுதியிருந்தேன் அவரும் இப்படி மிகத் திறமையாக விமானத்தைக் கையாண்ட விதம் சொன்னான்.
கீதா
வணக்கங்கள் பல.
பதிலளிநீக்குபதிவில் குறிப்பிட்டதுபோல் அமெரிக்காவின் உள் மாகாணங்களுக்கிடையில் பயணிக்கும்போதும் சிறிதளவிலான turbulence அனுபவித்திருந்தாலும் இந்த பதிவில் குறிப்பிட்டதுபோல் அதி தீவிர ஆட்டத்தை சந்திக்க வேண்டி இருந்தது.
விமானிகளின் திறமையை வெகுவாக பாராட்டியே ஆகவேண்டும்.
நீங்கள் அமெரிக்காவில் வசித்த காலங்களில் ஏதேனும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா?
வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.