பின்பற்றுபவர்கள்

புதன், 23 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...3

விளங்காத உண்மைகள் 

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...2

மூடா விழிகள், அங்கிருந்த தகவல் பலகைகளில், அடுத்து  புறப்படவிருக்கும் பல விமானங்கள் குறித்த செய்தியினை மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தன, சோர்வுற்ற என் மனதை மேலும் மேலும் வாட்டிக்கொண்டிருந்தன.

இப்படியாக கடிகார முற்களையும் கடுப்பேற்றிய விமான நிலைய அதிகாரிகளின் நடமாட்டத்தையும்  மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது  என்னுடைய கைபேசி சிணுங்கியது.

எடுத்துப்பார்த்ததில் ஒரு  குறுஞ்செய்தி வந்திருந்தது.

அந்த குறுஞ்செய்தி , என் அலுவலகத்தில் இருந்தா? டாக்சி  நிறுவனத்திலிருந்தா, என் வீட்டாரிடத்திலிருந்தா , பயண காப்பீடு நிறுவனத்திலிருந்தா அல்லது விமான நிறுவனத்திலிருந்தா என பதட்டத்துடன் செய்தியை திறந்து பார்த்தேன்.

அது யாரிடமிருந்து என்ன செய்தி....

பயண காப்பீட்டு நிறுவனத்திலிருந்து சில பக்கங்கள் கொண்ட  pdf  இணைப்புகளுடன் கூடிய நீண்டதொரு செய்தி.

சரி எப்படியும் இன்று நமக்கு இந்த ஊரில்தான் படுக்கையாக இருக்கும், நாளை வேலைக்கு செல்ல முடியாது, முன் பதிவு செய்து வைத்திருக்கும் ஊர்திக்கான  பணமும் விரயமாகபோகப்போகிறது  , எனவே காப்பீட்டு நிறுவனம் என்னென்ன விஷயங்கள் இருந்தால் என்னென்ன காம்பென்சேஷன் அவற்றை எப்படி பெறுவது அதற்கான என்னென்ன படிவங்கள் பூர்த்தி செய்யவேண்டும் என்னென்ன தஸ்தாவேஜிகள் இணைக்கப்படவேண்டும் போன்ற விவரங்களை பார்த்துக்கொண்டு இருக்கும்போது......

மேலும் ஒரு குறுந்தகவல் வந்திருந்ததற்கான  ஓசைகேட்டது.

படித்துக்கொண்டிருந்த செய்தியை பாதியிலேயே விட்டுவிட்டு அடுத்த செய்திக்கு தாவினேன்.

அது யாரிடமிருந்து .....

அது நான் பயணிக்க முன் பதிவு செய்திருந்த KLM விமான சேவை நிறுவனத்திலிருந்துதான்.

என்னவென்று பார்க்கையில், தடங்களுக்கும்,   விமான முன்பதிவில் ஏற்பட்ட குளறுபடிகளும் அதனால் ஏற்பட்ட தங்கள் மன உளைச்சலுக்கும் மிகவும் வருந்துகிறோம் மேலும் தங்களின் ஒத்துழைப்பிற்கு மிகவும் நன்றி. 

தங்களின் சிரமத்தை  ஓரளவிற்கு ஈடுசெய்யும் விதத்தில் தங்களின் டிக்கெட்டை upgrade செய்து business கிளாஸ்சில்  இடம்  தரும்படி நிர்வாகத்தினர் முடிவுப்படி உங்களுக்கு complementary யாக இந்த சலுகை  கொடுத்திருக்கிறோம்.

இன்று அல்லது நாளை எந்த விமானத்தில் நீங்கள் பயணித்தாலும் தங்களுக்கான இருக்கை முடிவானதும் இந்த upgrade செயல்படுத்தப்படும்.

தங்கள் பொறுமைக்கு எங்கள் நன்றிகள்.

இவர்களை upgrade செய்ய சொல்லி யார் கேட்டது ? இருக்கை  ஒதுக்கீடு என்னவாயிற்று?

நமக்கு வேண்டுவதெல்லாம்  குறிப்பிட்ட விமானத்தில் குறித்த நேரத்தில் பயணப்படுவதைதானே தவிர வேறு  எந்த உபசாரத்தையும் அல்லவே. 

மேற்கண்ட தகவல் எனக்கு எந்தவிதத்திலும் சந்தோஷத்தை கொடுக்கவில்லை, மாறாக வருத்தத்தையும் கோபத்தையுமே   தந்தது.

இப்படியே சில மணி நேரம் கடந்து கொண்டிருந்தது.

சரி ஆனது ஆகட்டும், எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும் இதில் நாம் செய்யவேண்டியது , நம்மாலான  முயற்சி  மட்டுமே என மனதை தேற்றிக்கொண்டு  அங்கிருந்த மாஸாஜ் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தேன், அந்த  இருக்கையோடு இணைக்கப்பட்டிருந்த இசைகேட்க்கும் கருவியை காதில் பொருத்திக்கொண்டு வழிந்தோடிய இசையை கேட்ட வண்ணம்.

அரை மணி நேரம் உடலுக்கான மசாஜ் செய்து கொண்டாலும் உள்ளம் என்னவோ சோர்வாகத்தான் இருந்தது.

அங்கிருந்து மீண்டும் தகவல் மற்றும் உதவி desk சென்று அங்கிருந்த இருவரிடத்திலும் ஏதேனும் updates உண்டா என பொதுவாக அதே சமயத்தில்   கொஞ்சம் குரல் உயர்த்தி கேட்டேன்.

பதில் என்ன சொல்வதென்று புரியாமல்  இருவரும் தங்களுக்குள் ஏதோ அந்நிய பாஷையில் பேசிவிட்டு, கணனியில் தேடிப்பார்த்து  எந்த தகவலும் இன்னும் update செய்யப்படவில்லை, மன்னிக்கவும் என கூறினார்.

இப்போது இன்னும் 4 மணிநேரம் பாக்கி இருந்ததால், நானும்  சற்று பொறுமை காப்போம் என எண்ணி  காலார நடந்து அங்கிருந்த  கடைகளுக்கு சென்று கண்களால் கொள்முதல் செய்து கொண்டிருந்தபோது ... தொலைபேசியின் சினுங்கள்.

ஏதோ தகவல்  வந்திருப்பதை உணர்ந்து  திறந்து பார்த்தால், கீழ்காணும் செய்தி அந்த விமான நிறுவனத்திடமிருந்து.

"Your seat has been confirmed on the flight KL XXX , you can get your boarding pass on our  website or via kiosk at the airport."என்றிருந்த செய்தி கண்டு உடனடியாக அந்த தகவல் மற்றும் உதவி  desk சென்று விவரம் சொன்னவுடன் எனக்கான போர்டிங் பாசை  பிரிண்ட் செய்து கொடுத்தார்கள் மீண்டும் கலவர நிலவரத்தை உண்டுபண்ணியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டே, அதே  சமயத்தில் என்னுடைய இருக்கை  upgrade செய்யப்பட்டதையும் ஊர்ஜிதப்படுத்தினார்கள் ஆனால் அதில்  எனக்கு ஒன்றும் பெரிய ஈடுபாடு இல்லை . ஏனென்றால் இத்தனை நாடகங்களும் வெறும்  ஒரு மணிநேர(217மைல்) பயணத்திற்கு மட்டுமே என்பதால்.

ஒரு வழியாக அதே  விமானத்தில் குறிப்பிட்ட நேரத்தில் விமான பணிப்பெண்கள் காட்டிய இருக்கையில் அமர்ந்து பயணித்துக்  கொண்டிருக்கையில், அவசர பட்டுவிட்டோமோ? அடுத்த விமானத்திலேயே வந்திருக்கலாமோ என்ற எண்ணம் மேலோங்கியது, எனக்குமட்டுமல்ல, சக பயணிகளுக்கும்தான்.

அது எதனால்?

பிறகு பார்ப்போம்.

அதுவரை,

நன்றியும் வணக்கங்களும் 

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.


4 கருத்துகள்:

  1. எப்படியோ விமானம் ஏறியதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே ,

      தொடர் வருகைக்கும் தொய்வில்லா ஊக்கத்திற்கும்மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. ஒரு விதத்தில் விரைவில் வேறு விமானத்தில் இடம் உறுதி செய்யப்பட்டது நல்லதே என்று தோன்றும் சமயத்தில் அப்படியல்ல என்று தோன்றும்படி என்ன நடந்தது. தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    Upgrade... இங்கே INDIGO விமானத்தில் ஒரு முறை கால தாமதம் ஆனபோது அனைவருக்கும் Complimentary Snacks என்று ஒரு பொதியை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தாமதம் - அதுவும் வேறு ஏதோ ஒரு விமானத்தில் கோளாறு, அதில் உள்ள பயணிகளையும் எங்கள் விமானத்தில் ஏற்றிவிட இந்த தாமதம் எனும்போது நிறைய சண்டைகள், உரத்த குரல் சம்பாஷணைகள் என இருந்தது. காலாகாலத்தில் புறப்பட்டு இருக்க வேண்டும் - யாருக்கு வேண்டும் இந்த பொதி என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் அனைத்து பயணிகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்

      விமானம் தேர்ந்தெடுக்கும் வரை நாம் ராஜாக்கள் , முடிவு செய்து பணம் செலுத்தப்பட்டதிற்கு பிறகு விமான நிறுவனம் நமக்கு ராஜாக்களாகி அவர்களின் கட்டுப்பாட்டில் நம்மை வைத்துக்கொள்கின்றனர்.

      வருகைக்கும் தங்களின் அனுபவ பகிர்விற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு