பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 டிசம்பர், 2016

தோட்டத்திலிருந்து துரத்தப்பட்ட முதல்வர்.

கூடா நட்பு!! 

நண்பர்களே,

சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த இடத்தில்  திருமண வாழ்த்து செய்தியின் ஒரு பகுதியாக இந்த பேச்சு அடிபட்டது :-

இறைவன் படைத்த இந்த அழகான பூமிப்பந்தின் மீது அமைந்திருந்த அந்த வளமான நகரத்தின் மைய பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது அந்த எழில் கொஞ்சும் உன்னத தோட்டம்.

இல்லை என்று சொல்லுவதற்கு எதுவுமே இல்லை என்ற நிறையவுடன் விளங்கிய அந்த தோட்டத்தின் நடுவில் ஒய்யாரமாக  அமைக்கப்பட்டிருந்தது அழகு மிளிரும் ஒரு சொகுசு  மாளிகை குடி இருப்பு.

இன்பம் , மகிழ்ச்சி , ஓய்வு, நிம்மதி, மன அமைதி , சந்தோஷம், நிறைவு, தூய்மை, ஆரோக்கியம்,செழிப்பு, சிரிப்பு, பூரிப்பு  போன்ற நேர்மறையானவை  மட்டுமே கொட்டி குவித்து பராமரிக்க பட்டிருந்தது அந்த தோட்டமும் அந்த சொகுசு மாளிகையும்.

இப்படியாக இன்ப வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த அந்த தோட்டத்தில் ஒரு புதிய தோழமை ஊடுருவியது.

அங்கே நிலவும் ஏகாந்த சூழலில் மதி மயங்கிய அந்த தோழமை, அந்த தோட்டத்தின் வாசிகளின் வாசமதை கண்டு பொறாமைகொண்டது.

பொறாமையின் வீரியம் அதிகமாக  இந்த சுக வாசிகளை எப்படியாவது தமக்கு நண்பர்களாக்கிக்கொண்டால், தாமும் இங்கேயே தங்கி இந்த வளமான வாழ்வை அனுபவிக்கலாமே, முடிந்தால் தமக்கே சொந்தமாக்கிக்கொள்ளலாம் என சூழ்ச்சி வலை பின்ன தயாராகியது அந்த புதிய ஊடுருவல்.

இளகிய மனதும் , எவரையும் எளிதில் நம்பிவிடும் தூய உள்ளமும் கொண்டிருந்தனர்   அந்த தோட்டத்து  "ஆதி" வாசிகள்.

சந்தேகம் - கள்ளம் - கபடு-   வஞ்சகம், துரோகம், நய வஞ்சனை,ஏமாற்றம், சதி போன்ற வார்த்தைகள் கூட இந்த உலகத்தில் இருப்பதை அறியாத அந்த  தூய உள்ளங்கள் , நயமாக பேசி தங்கள் மனதில் இடம்பிடித்த அந்த ஊடுருவலின் வார்த்தைகளை எல்லாம் தெய்வவாக்கிற்கும் மேலான வாக்காக நினைத்து போற்றினர்.

இப்படி அவர்தம் சொல்லுக்கெல்லாம் மயங்கி அவரின் நட்பை வரமாக கருத்தியதன் விளைவாக அவரின் கட்டளைகளையும் சிரமேற்கொண்டு செயலாற்ற உடன் பட்டனர் அந்த வெள்ளை மனதின் உரிமையாளர்கள்.

ஒரு காலகட்டத்தில் அந்த ஊடுருவலின் ஆதிக்கமும் ஆளுகையும் தங்களை முழுமையாக கட்டுப்படுத்தி ஒரு வட்டத்திற்குள் ஆட்படுத்தியதைக்கூட உணர முடியாமல் மகுடிக்கு மயங்கும் நாகம்போல போலியான , வஞ்சகமான அந்த ஊடுருவலின் கைப்பாவைகளாக மாறிப்போனார்கள் அந்த அப்பாவிகள்.

காலமும் , சுய நினைவும் - கட்டுப்பாடும் கைமீறிப்போன நிலைமையில் பகுத்தறியும் ஆற்றலும் மழுங்கடிக்கப்பட்டது  அந்த ஊடுருவலின் மகுடி மயக்கத்தில்.

விளைவு,  படைத்தவன் சொல்லையே மீறி பல படுபாதக செயல்களுக்கு துணைபோனார்கள் அந்த சுக வாசிகள்.

வஞ்சம் என்று தெரியாமலே நஞ்சு வலையில் சிக்கி சீர்கேட்டின் பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர் அந்த பவித்திரர்கள்.

இடையில் ஒரு நாள் அந்த தோட்டத்தின் படைப்பாளி தமது படைப்புகளை பார்க்க வருகிறார்.

கூடா நட்பின் வழிகாட்டுதலின்பேரில் நல்வழி விட்டு அகன்று பொல்லாத வழியில் பயணித்துக்கொண்டு -  தமது சொல்லையும் மீறி இவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வாழ்வியல் முறைமைகளை கண்டு வெகுண்டெழுந்தார்   படைப்பாளி.

பார்த்துப்பார்த்து , செதுக்கி- செதுக்கி, இழைத்து இழைத்து உருவாக்கிய தோட்டத்தையும் அதில் தமது சாயலாக உருவாக்கி அன்பு செலுத்தி வாழ்வின் மேன்மைக்கான  எல்லா நன்மைகளை அளவின்றி கொடுத்து , எல்லாவற்றையும் ஏகத்திற்கு அனுபவிக்கும் உரிமையையும் கொடுத்து தமது செல்லமாக -  செல்வமாக  கருதிய இவர்கள், யாரோ ஒரு புதிய நட்பின் ஊடுருவலாலும் அவர்தம் துர்  போதனையாலும் இப்படி சீர்கெட்டு சிதைந்து கொண்டிருக்கிறார்களே, என் போதனைகளை மீறி விட்டார்களே  என கடும் கோபம்கொண்டு அந்த சுக வாசிகளை சபித்து அந்த உன்னத தோட்டத்தை விட்டே துரத்தி விட்டாராம் அந்த படைப்பாளி.

இப்படி துரத்தப்பட்ட அந்த தூய  உள்ளத்திற்கு சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் மனித குலத்தின் "முதல்வர்க"ளாக விளங்கிய முதல் மனிதன் "ஆதாமும்" முதல் மனுஷி "ஏவாளும்".

அவர்களின் நட்பை வஞ்சகமாக கவர்ந்த அந்த ஊடுருவல் ஒரு கரு நாக -சாத்தானாம்.

அந்த தோட்டம் "ஏதேன்" தோட்டமாம். 

தோட்டத்து வாசிகள் துரத்தப்பட்டபிறகும்  தொடர்ந்து அந்த தோட்டத்தில் வாசம் செய்ததாம் அந்த நாசகார நாக பாம்பு, தனக்கான  சாபத்தையும் சுமந்துகொண்டும், யார் காலை கடிக்கலாம் என்றும் யார் எப்போது தமது தலையை நசுக்கப்போகிரார்களோ என்ற அமைதி இல்லாத மன நிலையோடும்.

இந்த கதையை எங்கேயோ கேட்டதுபோல இருந்தாலும் மீண்டும் அது அந்த திருமண செய்தியின்போது கேட்டபோது புதிய கோணத்தில் அர்த்தம் உணர்த்தப்பட்டது.

அதாவது, கணவன் மனைவியாக இணைந்து  கட்டப்படும் கும்ப வாழ்வை சீர்குலைக்க சில கருநாகங்கள் நமது வாழ்வில் குறுக்கிட நேரும்போது அவர்களுக்கு செவி சாய்க்காமல் அவர்களது நட்பை கூடா நட்பாக கருதி விலகி வாழ கற்று கொள்ளவேண்டும்.

இல்லையேல் நமது முதல்வர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் நமக்கும் ஏற்படும். மேலும் அன்று தோட்டத்தில் புகுந்த அந்த நாகம் இன்றும் யாரை விழுங்கலம் என்று வகை தேடி இந்த உலகத்தில் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக கவனத்துடன் இந்த குடும்ப வாழ்வை பேண வேண்டும் என்ற புதிய விளக்கத்தோடு அந்த திருமண செய்தி அமைந்திருந்தது. 

இன்னும் எத்தனையோ ஆண்டுகள் ஏகாந்த வாழ்வை அனுபவிக்க இருந்தவர்கள் இப்படி அற்ப  - சொற்ப காலத்திலேயே தோட்டம் விட்டு   துரத்தப்பட்டு - சுகம் தொலைத்ததுபோல் நமக்கும் ஏற்படாமல் இருக்கவேண்டுமாயின் விழிகளோடு   இருப்பதோடல்லாமல் விழிப்புடனும் இருக்க கற்று கொள்ளவேண்டும் எனும் கூடுதல் விளக்கத்தையும் கூறி மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி  தமது செய்தியை முடித்தார் அந்த திருமண சிறப்பு விருந்தினர். 
  
நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம், நல்ல படிப்பினைதான் .
      வருகைக்கு மிக்க நன்றி தனப்பால்..
      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,,

    நல்ல வேளை நான் கூட ஏதோ வில்லங்கமான பதிவு போல என்று நினைத்து தான் படிக்க தொடங்கினேன்.
    அது இது இல்லை,,,ஹாஹாஹா
    அருமை நன்றி,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நல்அங்க" அகத்திற்கு சொந்தக்காரனாக என்னிடமிருந்து "வில்லங்க" பதிவா?
      ஆமாம் இதிலென்ன வில்லங்க சாயாலா இருக்கின்றது?... எனக்கு புரியவில்லையே?
      வருகைக்கு மிக்க நன்றிகள் பேராசிரியரே.

      கோ

      நீக்கு