பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 செப்டம்பர், 2016

டைட்டானிக் சாவிகள்!!

Thought பூட்!!

நண்பர்களே,

நம்ம ஊரில் சில கோவில்களில் இருக்கும் சில விசேஷித்த மரங்களில், மஞ்சள் கயிறுகளும் சில மரங்களில் தொட்டில்களும் கட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

இது அவற்றை கட்டுபவர்களுக்கு சொல்லப்பட்ட அல்லது அவர்கள் கேள்விப்பட்ட சில இறை நம்பிக்கை சார்ந்த செயல் என்று அறிவோம்,

அதேபோல மேலை நாடுகளிலும் சில வினோத விபரீத பழக்கங்கள் ஆங்காங்கே சில(ர்)  நம்பிக்கையின் அடிப்படியில்  கடைபிடிக்கப்பட்டு வருவதையும் நாம் அறிந்திருப்போம்.

இத்தகைய பழக்கங்களைவெறும் மூட நம்பிக்கைகள் என்று பொதுவாக சொல்லி தள்ளிவைக்க முடியாது, ஏனென்றால் அவற்றுக்கு  பின்னால் ஏதேனும் ஒரு அறிவியல் சார்ந்த விளக்கமோ அல்லது பயன்பாடோ  கண்டிப்பாக இருக்கும் என்று நம்ம ஊர் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

அதேபோல்  பாரீஸின் சில பகுதிகளிலும் சைனாவின் சில பகுதிகளிலும் ,வெனிஸின் பல  பிரதேசங்களின் இணைப்பு பாலங்களிலும்  சாரை சாரையாக விதவிதமான பூட்டுகள் தொங்கிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.  

பிரான்சிலும் சைனாவில் பார்த்தபோது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத இந்த பூட்டுகள் வெனிஸில் பார்க்கும்போதுமட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியது.

அதிலும் தடுக்கி விழுந்தால் பாலம் என்று இருக்கும் வெனிஸில் இந்த பூட்டுகள் அவ்வப்போது என் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்ததால் என் கருத்தையும் கவந்துவிட்டான்.

Image result for images of venice locks on bridges


சரி இதன் தாத்பரியங்களை  கண்டறியும்பொருட்டு விசாரணைகளை மேற்கொண்டதில் கண்டறியப்பட்ட  விஷயங்கள்:

இங்கே வரும் காதலர்கள் தங்கள் காதல் எப்போதும் பிரிக்கப்படக்கூடாது, என்றென்றும் நாம் காதலர்களாக இருக்கவேண்டும் எத்தனை காலங்கள் ஆனாலும் இந்த பூட்டுகள் இப்படி இந்த பாலத்தின்  விளிம்புகளில் இறுக்கமாக இணை பிரியாமல் இருக்கின்றனவோ அதுபோல நம் உறவும் இறுக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கி. பி 2000 ஆவது ஆண்டிலிருந்து இப்படி ஒரு வினோத நம்பிக்கையும்.

அதனடிப்படையில் உலகின் பல உல்லாச நகரங்களின் பாலங்களில் , இரும்பு கேட்டுகளில் , முக்கிய இடங்களிலுள்ள நினைவு மண்டபங்களின் கைப்பிடி கம்பிகளில் பூட்டுகள் பூட்டப்படுவது தொடர்வதாக சொல்லப்பட்டது.

காதலனும் காதலியும் தாங்கள் , "வாழ்விலும் ,தாழ்விலும் ,சுகத்திலும் துக்கத்திலும்,  இன்பத்திலும், துன்பத்திலும்  , மரணம் நம்மை பிரிக்கும்வரை இந்த பூ உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நாம்  ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழவேண்டும்" என்று மனதார வேண்டிக்கொண்டு, பிரத்தியேகமாக வாங்கப்பட்ட ஒரு பூட்டை தாங்கள் விரும்பும் ஒரு பாலத்தின் கைப்பிடியில் பூட்டிவிட்டு அந்த சாவியை அந்த பாலத்தின் அடியில் - தண்ணீரில் தூக்கி எறிந்துவிடுவார்களாம்.

ஒருவேளை சாவியை எவரேனும் பார்க்கும்படி வைத்துவிட்டால் அவர்கள் அந்த பூட்டை திறக்க நேரிட்டால்... நம் காதல் என்னவாவது?

நம் காதலின் மீது  யார் கண் பட்டாலும் பரவாயில்லை ஆனால் நம் காதல் பூட்டின் சாவி, யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது அதனால நம் காதல் ரோசா பட்டுவிடக்கூடாது.

எனவே யார் கண்ணிலும் படாதவண்ணம் அந்த சாவிகளை தூக்கி தண்ணீரில் எறிந்துவிடுவார்களாம்.

இதுபோன்று ஆளாளுக்கு பூட்டை கொண்டுவந்து காதல் என்ற பேரில் பூட்டிவிட்டு போவதால் நாளடைவில் அந்த பூட்டுகளின் பாரம் தாங்காமல் பாலங்கள் பலவீனமாவதை உணர்ந்த சில நாடுகள் அவற்றிக்கு தடை விதித்ததோடல்லாமல் அந்த பூட்டுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு இருக்கின்றனவாம்.

தற்போது வெனிஸில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த பூட்டு வழக்கத்திற்கு பூட்டு போடும்படி ஆங்காங்கே போராட்டங்கள் நடத்துவதாலும் நகரின் அழகு, சுற்று சூழல், மாசு கட்டுப்பாடு, பாலங்களின்  பாதுகாப்பு கருதியும், அரசு இந்த பூட்டு பழக்கத்திற்கு ஒரு பூட்டுப்போட்டு இருப்பதாகவும் செய்திகள் சொல்லப்பட்டன.

Image result for images of venice locks on bridges

இப்படி நகரின் எல்லா பாலங்களிலும் கண்ட மேனிக்கு பூட்டு போடவேண்டாம் என சில தன்னார்வ தொண்டர்கள் நகரின் ரியோல்ட்டா, புனித மார்க் திடல், அகாடமியா போன்ற இடங்களில்," உங்கள் காதலுக்கு சங்கிலி தேவை இல்லை", "வெனிசுக்கு உங்கள் குப்பைகள் தேவை இல்லை" போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட   துண்டு   பிரசுரங்களும் விநியோகித்து  வருகின்றனர் என்ற செய்தியும் அறிந்தேன்.

அதுவும் சரிதானே, பின்ன எத்தனை இதயங்களைத்தான் அந்த பாலங்கள் தாங்கும்?

அதேபோல பூட்டு விற்கும் கடைகளுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டும் இதுபோன்று  இனி  எவரும்  பூட்டு போடாதபடி காவலர்கள் தங்களை கண்களுக்கு பூட்டு போடாமல்  கண்காணிப்பதாகவும் , மீறி பூட்டு போடுபவர்களை உள்ளே அடைத்து பூட்டுபோடுவதாகவும்(??!!) செய்தி அறிந்து அந்த பூட்டுகளை தொட்டுக்கூட பார்க்காமல் தூரத்தில் இருந்தே செல்ஃபீ எடுத்துக்கொண்டு நீரில் மூழ்கிப்போய் இருக்கும் அந்த காதல் - டைட்டானிக்  சாவிகள் தெரிகின்றனவா என எட்டிப்பார்த்துவிட்டு அந்த இடம் விட்டு எட்டி நடந்தேன்

இப்படி பூட்டப்பட்ட பூட்டுகளின் சாவிகள் டைட்டானிக் கப்பல் போல நீரில் மூழ்கி இருப்பதை ஜேம்ஸ் கேமரோன்  போன்ற இயக்குனர்கள் கண்டுபிடித்து திரைப்படமாக்கினால்  இன்னும் சுவாரசியமாக இருக்குமே. 

(என்ன இருந்தாலும் நான் சொல்றமாதிரி சுவாரசியமாக இருக்காதுதான்  கொஞ்சம்   அ ட்ஜெஸ்ட்   பண்ணி பொருத்துக்கணும்.)

பின் குறிப்பு:

டைட்டானிக் படத்தில் வரும் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் போன்று யாரேனும்   இந்த "டைட்டானிக் சாவிகள்" படத்தில் நடிப்பதாக இருந்தால், கால் வலிக்க வலிக்க நடந்து திரிந்து சுற்றிப்பார்த்து  இந்த யோசனையை சொல்லும் நான் கதாநாயகனாக நடிக்க கால்ஷீட் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

அடுத்து என்ன? ... .  கையை பிடித்துக்கொண்டு கூடவே வாருங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

4 கருத்துகள்:

 1. நல்ல தகவல். எல்லா நாட்டிலும் இப்படி சில நம்பிக்கைகள்.....

  பதிலளிநீக்கு
 2. சரிதான் திறக்காத பூட்டுக்கள்னு தமிழில் டப் செய்திடலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா,

   நீங்க ப்ரொடியூஸ் பண்றீங்களா?

   ரொம்ப நாள் கழித்து வருகை புரிந்ததற்கு மிக்க நன்றி.

   நலம்தானே.

   கோ

   நீக்கு