பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மயானா கொள்ளை- கொஞ்சம் வெள்ளை.

மயானா  கொள்ளை-  கொஞ்சம் வெள்ளை.

நூற்றாண்டுகளாக மேலை நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு வினோதமான விழா அல்லது பண்டிகை "ஹாலோவீன்" என்றழைக்கப்படும் ஒரு நாள்.


இந்த நாளில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் குறிப்பாக, சூரியன்  மயங்கி துறவு பூணும் வேலையில் அந்திகொஞ்சம் பிந்தி வந்தாலும் அதனை மிஞ்சி காரிருள் இரவு தலைதூக்கும் சமயத்தில், கருப்பு நிற வினோத உடைகளணிந்து, விகாரமாக முக அலங்காரம்(!!) செய்து, தலையில் நீண்ட கூந்தல் போன்று பொய் முடிசூடி, கண்களில் மை உதட்டில்  ரத்த சிவப்பில் சாயம் பூசி, விரல் நகங்களை நீளமாக அலங்கரித்து ஆண்களயிருந்தால், ஒரு மந்திர- தந்திர காரன் போலவும், பெண்களாயிருந்தால் ஒரு பில்லி சூனிய பெண்போலவும், பேய், பிசாசு, பூதம்(நான் பார்த்ததில்லை) நடந்த சம்பவத்தை தெரிந்து  கொள்ள - "ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம் படிக்கவும்". குழந்தைகள் தங்களை குட்டி பிசாசுகள் போலவும், குட்டி சாத்தன்கள் போலவும்(இவற்றையும் நான் பார்த்ததில்லை) விதவிதமாக தங்களை அலங்காரித்து கொண்டு, கூட்டம் கூட்டமாக சாலைகளில் நடந்து போவதையும் நம்மை கடந்து போவதையும்  இன்றைய நாளில் ஆங்காங்கே பார்க்க முடியும்.

இப்படி வேடமனிந்து, பார்பவர்கள் பயப்படும்படி தோன்றும் இவர்கள் குடும்பமாக(அப்பா பேயும், அம்மா பிசாசும், குழந்தை- குட்டி பிசாசுகளும்) வீடுவீடாக சென்று- கிறிஸ்மஸ் காலங்களை கிறித்துவர்கள் கீதங்களை இசைத்துக்கொண்டு வீடுவீடாக சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவார்களே  அதுபோல இவர்கள் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும், நண்பர் உறவினர் வீடுகளுக்கும் சென்று கதவுகளை தட்டி - முடிந்த வரை அவர்களை பயமுறுத்தி, பின்னர் அவர்கள் கொடுக்கும், இனிப்பு, பலகாரம், காசு போன்றவற்றை பெற்றுக்கொண்டு நன்றி சொல்லிவிட்டு செல்வார்கள்.



இவர்களின் கைகளில் கொடூரமான (போலி)ஆயுதங்கள் இருக்கும்.

இந்த விழாவை - பண்டிகையை கொண்டாடும் வீடுகளில் வினோதமான அலங்காரங்கள் செய்திருப்பார்கள், அதுவும் பார்பதற்கு, படு பயங்கரமாக இருக்கும். ஏதோ ஒரு மாய குகைக்குள் அல்லது ஒரு இருள் சூழ்ந்த மரங்கள் மிகுந்த, நாய்களும் நரிகளும் ஊளையிடும், ஆந்தைகளும்  கோட்டான்களும் அலறும்  ஒரு மயான பூமியில் நுழைதுவிட்டோமோ என உள்ளத்தில் ஒரு பீதியை உருவாக்கும்  இதயத்தின் ஒரு பாதியை உருமாற்றும்.

முக்கியமாக இவர்களின் வீடுகள் ஏறக்குறைய ஒரு கல்லறையின் அணைத்து கூறுகளையும் தன்னகத்தே அடக்கிய ஒரு ஹமானுஷ்ய கட்டிடம் போல் காட்சி அளிக்கும்.


இந்த பண்டிகையின் போது சிறப்பாக பங்குவகிக்கும் சில பிரதான பொருட்களுள் பூசணிக்காய் முதலிடம் வகிக்கும்.

பூசணிக்காய்களை குடைந்து பயமுறுத்தும் முகபாவனைகளை செதுக்கி அதன் உள்ளே  விளக்குகள் பொருத்தி வீடுகளை அலங்கரிப்பதும் , அவற்றை லாந்தர் விளக்கு போல ஒளியூட்டி கைகளில் ஏந்தி  வீடுவீடாக செல்லும்போது எடுத்து செல்வதும் வழக்கம்.

இதற்காக லட்ச கணக்கான பூசணிக்காய்கள் சந்தைக்கு வருவதும் வந்த சில மணி நேரத்திற்குள் விற்று தீர்வதும் இங்கே சர்வ சாதாரணம், விழா முடிந்து மறு நாளோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ அவைகள் வீணாக  குப்பை மேட்டிற்கு கொண்டுசெல்லப்படும்.


இப்படி கடையில் இருந்து விலைகொடுத்து வாங்கி, அதை கடைந்து, குடைந்து (ஹாலோ) பிறகு வீணாக்கபடுவதால் கூட இந்த பண்டிகை "ஹாலோ- வீண்"  என்றழைக்கபடுகின்றதோ ?


சரி இந்த விழாவின் பின்னணி என்ன?

சாமானியர்கள் இல்லை என்று சரித்திரங்கள் புகழ்ந்துரைக்கும் ரோமானிய பேரரசின் ஏகதிபத்திய காலத்தில். கிருத்துவம் தோன்றி தழைப்பதற்கு முன்பு  அங்கிருந்த மதத்தின் பெயர் பேகன்(pegan).  இந்த மதம் அல்லது கொள்கையின் அடிபடையில் இவர்கள் ஆவிகள், பேய் பிசாசு,மந்திரம் தந்திரம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையும் அசைக்க முடியாத ஈடுபாடும் கொண்டிருந்தனர்.

இதுபோன்ற ஆவிகளின் பாவத்துக்கு ஆளாகி அதன் கணக்கில் நாம் பாவிகள் என்று தீர்க்கப்படாத  வகையில் , அவைகளுக்கு சில பூசைகள்  செய்து அவற்றை சாந்தபடுத்தி வைத்திருந்தனர்.

சில வேளைகளில் அவைகள் கொஞ்சம் வேலைகாட்டும் போது அவைகளை அடக்கவும் , வீட்டை விட்டு வெளியேற்றவும்,வெண்கல பாதிரங்களைகொண்டு பெரும் சத்தங்களை உண்டாக்கியும்,கர்ண  கொடூரமான  சத்தங்களை எழுப்பியும் அவைகளை விரட்டுவதும் உண்டு(விரட்டுவதாக இவர்களாகவே நினைதிருபார்களோ என்னவோ)

ஆங்கில திரைப்படம் எக்சார்சிஸ்ட் படத்தில் அந்த பாதிரியார் பெருத்த சத்தமிட்டு ஆவியை வெளியேற்ற  செய்வாரே       அதுபோல சத்தமிட்டு ஆவிகளை ஒட்டுவார்களாம்.

நாளடைவில்  இந்த பழக்கம் - பேகன் வழிபாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறி, அறுவடைக்குப்பின் கொஞ்சம் ஓய்ந்திருக்கவும் , அந்த நேரத்தில் வரபோகும் குளிர்காலத்திற்கான உணவு பொருட்களை சேகரிக்கும் பொருட்டு, கால்நடைகளை வெட்டி பதபடுத்தி,

  கோடை முடிந்ததது என்பதையும் குளிர்காலம் தொடங்கபோகுது என்பதையும் கொண்டாடும் விதமாக , அதே சமயத்தில் கெட்ட ஆவிகள் , பேய் பிசாசுகளினால் எந்த ஆபத்தும் நமது மக்களையும் நம்  ஊரையும் பாதிக்காத வகையில் அவைகளை வீட்டைவிட்டும் ஊரைவிட்டும் விரட்டி அடிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர் கடைசி   நாளன்று இதுபோன்றதொரு விழாவினை ஐரோப்பிய   அமெரிக்க நாடுகள் கொண்டாடுவதுண்டு.


பிற்காலத்தில் இந்த நாளை தொடர்ந்து வரும் ஞாயிற்று கிழமை  இறந்து போன முன்னோர்களின் ஆவிகளின் - இளைபாறுதல்களுக்காகவும் அவர்களின்    நினைவாகவும்  ஒரு பிரார்த்தனையும் தேவ ஆலயங்களில் நடைபெறுவதுண்டு.


இந்த நாட்களில் தொலைக்காட்சி நிகழ்சிகளும் ஒளிபரப்பப்படும் திரை படங்களும் இந்த பண்டிகையை சார்ந்ததாகவும் தொடர்புடையதாகவும் தான் இருக்கும்.

பேய் படங்கள்  நிறைய பார்க்கலாம் ,இடையில்  பாத்ரூம் போகவேண்டுமானால் வீடு  முழுக்க விளக்கு எறியவேண்டும்எனக்கு!- வெள்ளைக்கார காஞ்சனாக்களோ சந்த்ரமுகிகளோ கண்ணில் படாமலிருக்க.


இவற்றை பார்க்கும் போது, நான் பிறந்து வளர்ந்த ஊரில் இதே போன்று ஒரு நிகழ்ச்சி- ஒரு கொண்டாட்டம் நடந்திருப்பது என் நினைவுக்கு வருகிறது, இன்னும் கூட அது போன்ற ஒரு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் என நினைக்கின்றேன்.


அதாவது, எங்கள் ஊர் மற்றும் அதனை சுற்றி உள்ள மற்ற ஊர்களில் இருந்து அழகாக அலங்கரிக்கப்பட்ட தேர்களும்  அதனதன் ஊர் மக்களும்,
அதில் பெரும்பாலோர் பேய் பிசாசு, காட்டேரி, ரத்த காட்டேரி, குட்டி பிசாசு (இவற்றை ஒன்றையும் நான்  நேரில் கண்டதில்லை- சொல் கேள்விதான்போன்று வேடமணிந்து , மிக மிக ஆவேசமாக ஆடியும் ஓடியும் வருவர், அப்போது அவர்களை பார்பதற்க்கே மிகவும் பயமாக இருக்கும் இத்தனைக்கும் இந்த தேரோட்டமும் பவனியும் பகலில் தான் நடைபெறும்.

இந்த  தேர் பவனியுடன்,மயிஆட்டம், ஒயிலாட்ட்டம், கரகாட்டம்,பொய்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம்,சுருள் பட்டா வீச்சு,கோலாட்டம் (பேயாட்டமும் தான்), மேல தாள முழக்கத்துடன் செல்லும்.

ஒரு சிலர் தங்கள் நேர்த்திகடங்களை நிறைவேற்றும் பொருட்டு உடலெங்கும் எலுமிச்சை தைத்தும், உடலில் கொக்கி குத்தி, அந்தரத்தில் தொங்கியும் செல்வர்.

வழியெங்கிலும், ஆங்காங்கே தாக சாந்திக்காக தண்ணீர், மோர் போன்ற பானங்கள் ஒழுங்கு செய்யபட்டிருக்கும்.

பிறகு அனைத்து தேர்களும் ஆற்றில் சென்று இறங்கும்(பெரும்பாலும் அந்த ஆற்றில் பெரும் வெள்ளமென வெறும் மணல் தான் நிரம்பியிருக்கும் (அப்போது -இப்போது அதுவும்  கொள்ளை பொய் இருக்கும் என தாராளமாக நம்பலாம்)

அதை  தொடர்ந்து பூசைகள்  நடக்கும், நேர்த்தி கடன்கள் செலுத்துவர், கொழுகொட்டை, சுண்டல், பொறி உருண்டை போன்றவற்றை சாமி சிலைகள் பொருத்தப்பட்ட தேர்களின் மேல் இறைப்பார்கள், கூடி இருக்கும்(நிதானத்தில் இருக்கும்) _பக்தர்கள்  அந்த உணவு பொருட்களை தங்களின் குடைகளை  திருப்பி பிடித்து அதில் சேகரிப்பார்கள்.

பின்னர் அந்த ஆற்றங்கரையில் இருக்கும் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம்   செய்து மெழுகி பூசி, கோலமிட்டு, பூதூவி, ஊதுபத்தி, சாம்ப்ராணி போட்டு தூபம் காட்டி, அதை சுற்றி உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அவர்களின் அத்துமாக்களை சாந்த படுத்திவிட்டு வீட்டுக்கு திரும்புவர்.


ஆற்றிலிருந்து திரும்பி வரும் வழியில் சிறப்பு வேடமிட்டவர்கள் மேள தாளத்துடன் வீடு வீடாக சென்று இனாம்-காசு   பெற்று செல்வார்கள்.

அன்று  இரவு ஊரில் நாடகம், தெருகூத்து, பாட்டு கச்சேரி, பட்டிமன்றங்கள் என ஊர் மக்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியோடிருபார்கள்.

இந்த விழாவில்கலந்து கொள்ள வெளி ஊர்களில் வாழும் அந்தந்த ஊரை சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் ஒரு வாரம் முன்னதாகவே ஊருக்கு  திரும்பி இருப்பார்கள்,, திரும்பிய பக்கமெல்லாம் புது முகங்களை காண முடியும்.


அந்த விழாவுக்கு "மயானாகொள்ளை " -- மயானத்துடன் தொடர்புடையதால் ,   என்று பெயர், அது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில்  கடுமையான சூட்டில் சிவராத்திரி அமாவாசை அன்று நடைபெறும்.


இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.

அங்கே நம்மவர்கள் இங்கே வெள்ளையர்கள்.

அவ்வளவுதான்.

நன்றி

மீண்டும் (சி)ந்திப்போம்


கோ

செவ்வாய், 28 அக்டோபர், 2014

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

 

தித்திக்கும் தீபாவளியை அதே நாளில் , குடும்பத்தினருடன் , உறவினர்களுடன்,நண்பர்களுடன், சுற்றத்தாருடன்,கூடி மகிழ்ந்து , புத்தாடை, பலகாரங்கள், இனிப்புவகைகள் குலதெய்வ வழிபாடு,

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பாரதி இன்றிருந்தால்....!!??



சமீபத்தில் வெளிவந்த சில தீபாவளி திரைப்படங்களை பார்த்து விமர்சன செய்தி சொன்னார்கள்  நண்பர்கள்.

 அவற்றில் சில சத்தமின்றி  'சுட்டவை' என்று ஓங்கி "கத்தி" கூக்குரலிட்டு சொன்னார்கள்.

சனி, 25 அக்டோபர், 2014

போனா வராது.... ஆனா....வரும்

 தலைப்பை இன்னொருமுறை வாசித்து பார்தால், அதன் தொடர்புடைய பல விஷயங்களை நாம் பட்டியல் இடலாம்( அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப.)

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மாறியது மாதம் மாற்றியது யாரோ?


வளைகுடா நாடு ஒன்றில் வாசம் செய்த நாட்கள் அவை.

சூரிய கதிர்களின் வீரியம் மிகுந்த நாடு. நம் இந்திய கோடை வெய்யிலை  விட  குறைந்தது மூன்று மடங்கேனும் மிகுந்த சூடான நாடு.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மத்தாப்பு மனிதர்கள்

இனிப்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் .



உலகமெங்கிலும் வாழும் என் இனிய இந்திய சகோதர சகோதரிகளுக்கும்,நண்பர்கள், உறவினர்கள் யாவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.

அடுத்த நாள்  தீபாவளி....

சனி, 18 அக்டோபர், 2014

அவர் பெயர் தங்கமணி





காதுக்கெட்டிய செய்தி கேட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றேன்.

அப்பா அம்மா இருவரும் இன்று காலை 5.00 மணிக்கு மேல்வீட்டில் இருக்கும் அங்கிள் காரில் ஆஸ்பிடல் சென்றிருக்கின்றனர்.

ஏன் யாருக்கு என்ன ஆச்சி?