பின்பற்றுபவர்கள்

சனி, 23 ஏப்ரல், 2022

சிங்க குகைக்குள்ளே ....

 சிங்கிளாக!!!

 நண்பர்களே,

பல நாட்கள்  பசியோடு உறுமிக்கொண்டே இருக்கும் சிங்கத்தின்  குகைக்குள் ஒரு மனிதன் செல்வதாயின் அதற்கு பெருந்துணிச்சலும் அதீத  மன தைரியமும் இருக்கவேண்டும்.  

அப்படி சென்று , நக  கீறல்கூட இல்லாமல் முழுமையாக திரும்பி வருவதென்பது மிக மிக அபூர்வமும் வியப்புமிக்க ஆச்சரியமுமான நிகழ்வே .

இப்படி இருக்க, பார்க்கும் இடமெங்கம் சிங்கிளாக இல்லாமல்   கூட்டம் கூட்டமாக குடி இருக்கும்  சிங்க குகைக்குள் சென்று சிறு சேதாரமு மின்றி மீண்டு(ம்) வருவதென்பது ஆச்சரியத்தின் உச்சம்.

பேராபத்தையும் , பெரும் சேதத்தையும் விளைவிக்கும் வீர தீர செயலை செய்யும்போது இப்படி சிங்க குகை விஜயத்தை உவமையாக சொல் வதுபோல்தான் , எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவாக்க நானும் இந்த உவமையை எடுத்துக்கொண்டேன்.

அப்படி என்ன நிகழ்வு?

சென்ற  மாத துவக்கத்தில் ஆப்ரிக்காவின் வடக்கு கடல் எல்லையில் இருந்து சுமார் 80 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் -  அட்லாண்டிக் பெருங்கடலில்  , ஸ்பெயின்  தேசத்தின் ஆளுகைக்கும் அதன் கடல் எல்லைக்கும் உட்பட்ட Canary தீவுகளில் ஒரு தீவில் ஒரு வாரம் தங்கி இருந்தேன்.

அந்த தீவு சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களின் கடல்களுக்கடியில் ஏற்பட்ட டெக்டானிக்(Tectonic) தகடுகளின் பிளவின் காரணமாக உருவானதாக ஆராய்ச்சியாளர்களின் வரலாற்று குறிப்புகள் விளம்புகின்றன.

மன  ரம்மியமான கடற்கரை, காய்ந்தமாடு கம்பங்கொல்லையை  பார்பதுபோன்று, குளிர் பிரதேசத்தில் வாழும் என்போன்றோருக்கு அந்த தீவின் இதமான -  சூடான தட்பவெட்பம் மிகவும் இனிமையானதாக இருந்தது.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த கடற்கரை சாலைகள், நடை பாதைகள், கடை தெருக்கள், பிரதான சாலைகள், அழகிய வடிவிலான   கட்டிடங்கள்,  வீடுகள், அனைத்து கட்டிடங்களும்   நாட்டின் ஒழுங்குபடியம் UNESCO வின் பாதுகாப்பு விதிகளின்படியும்    வெள்ளை  நிறமன்றி வேறு நிறமறியா வெள்ளை தீவாகவே மாற்றப்பட்டிருந்த நேர்த்தி.

இதுபோன்ற சிறப்பு கொண்ட  தீவின் ஒருபகுதி மிகவும் கவனமாகவும்  - தீவிரமாகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டும்  வருகிறது.

அப்படி என்ன அந்த பகுதியின் சிறப்பு?

ஏற்கனவே அந்த  தீவு கடலடியில் ஏற்பட்ட பூகம்ப  அதிர்வலைகளால் உருவாகி இருந்த நிலையில் 1730 க்கும் 1736 க்கும் இடையில்  சிலிர்த்தெழுந்த சிங்கங்களென சீறிப்பாய்ந்த  தொடர் எரிமலை வெடிப்புகளும் - சீற்றங்களும்  அந்த பகுதி முழுமைக்கும் இப்படி ஒரு சிறப்பு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

வெடித்து சிதறி - உருகி ஓடிய எரிமலை குழம்புகள் பாறைகளாக  இறுகிய நிலையில் ஒட்டு மொத்த தீவையும் ஆக்கிரமித்திருப்பதால்  கட்டிடங்களை தவிர சீரமைக்கப்பட்ட  கட்டிட வளாகங்கங்களை தவிர ஏனைய நிலப்பரப்பு முற்றிலும் கருப்பு நிறத்தில் காட்சி அளிப்பது  அந்த தீவின் கூடுதல் ஒரு சிறப்பு.

தீவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாதுகாக்கப்பட்ட அந்த இடத்திற்கு " திமான்பயா தேசிய பூங்கா (Timanfaya National Park)என்று பெயரிட்டிருக்கின்றனர்.

சுமார் 51 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அந்த பகுதி முழுவதும் ஆறி இறுகிய  எரிமலை குழம்புகளால் உருவான மண் மற்றும் பாறைகளால் மட்டுமே ஆனது; அங்கே ஒரே ஒருவகை புல்லை  தவிர வேறு எதுவும் வளராது என்பதும் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதும் அதன் கூடுதல் சிறப்பு.

1993ஆம் ஆண்டு UNESCO வால் இந்த பகுதிமட்டுமன்றி ஒட்டுமொத்த தீவும் ஒரு உயிர்கோளம்(Biosphere) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்சொன்ன தேசிய பூங்காவில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் பல எரிமலைகள் இருக்கின்றன, அவற்றை பாதுகாப்புடன் பார்க்க பிரத்தியேகமான நேரங்களில்  பொதுமக்களுக்கு  கட்டணத்துடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது.

புகைபடங்கள், திரைப்படங்கள், ஆவணபடங்கள், தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமே பார்த்திருந்த எரிமலையை நேரில் பார்க்கமட்டுமின்றி அதன்மீது ஏறி நிற்கும் ஒரு அபூர்வ சந்தர்ப்பம் (once in lifetime) எனக்கு ஏற்பட்டதை என்றும் மறக்க இயலாது.

நகரத்தின் மையத்திலிருந்து மகிழுந்தில் சுமார் அரை மணிநேர பயணத்திற்கு பின் தேசிய பூங்காவின் நுழைவு வாயிலை அடைந்து நுழைவு கட்டணம் செலுத்திய பிறகு அங்கிருந்து இன்னுமொரு ஐந்து நிமிட பயண தூரத்தில் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டிருந்த பேருந்தில்(coach) ஏறி ஒரு திகிலான பயணம்.

பேருந்தின் சக்கரங்களுக்கு மட்டுமே இடமிருக்கும் வகையிலான மிக ..மிக.. மிக குறுகலான, வளைந்து நெளிந்து, செங்குத்தாக மேல் நோக்கியும் . அதே சமயத்தில் சடாரென நீளும் பள்ளமான பாதைகளிலும் பயணிக்கும் ஒரு திகிலான பயணம். 

ஒட்டக பயணமும் இருக்கின்றது, அவற்றிற்கான பாதைகள் பேருந்து வழித்தடங்களை தவிர்த்து வேறு பாதைகள்.

தார் சாலைகள்போல் அமைக்கப்பட்டிருந்த சாலைகளின் இருபுறமும் கிடு கிடு பள்ளங்கள். அந்த பேருந்து சாரதிகள் பிரத்தியேக பயிற்சி பெற்றவர்கள்; வேறு யாராலும் இத்தகைய  சாகசம் நிறைந்த பணியை செய்ய முடியுமா என்பது சந்தேகமே. பயணிகளுக்கு வழி நெடுகிலும் ஆங்கிலத்திலும் ஸ்பெயின் மொழியிலும் விளக்கங்கள் சொல்லிக்கொண்டே வருகின்றனர்.

சுமார் முக்கால்  மணிநேர திகில் பயணத்திற்கு பிறகு, இன்றளவும்  சீறிக்கொண்டு நெருப்பை கக்கிக்கொண்டிருக்கும் பல எரிமலைகளை  மிக அருகிலிருந்து பார்வையிட அனுமதிக்கின்றனர்.

சுமார் 200 முதல் 1120 டிகிரி Farenheit அளவிலான வெட்பமான நெருப்பை உமிழும் இடங்களை பிரத்தியேக  பயிற்சிபெற்ற ஊழியர்கள்  சுற்றுலா பயணிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டுகின்றனர்.

ஒரு எரிமலை குகையின்  வாயில்  ஒரு பக்கெட்  தண்ணீரை ஊற்றிவிட்டு பாதுகாப்பான இடம் நோக்கி வேகமாக ஓடிவிடுகிறார்; ஒரு இரண்டு அல்லது மூன்று செகண்டுகளுக்குள் அந்த தண்ணீர் அதீத சூட்டோடு வானத்திற்கு எரிவாயுவுடன் இணைந்து  பீச்சி அடிக்கப்படுகிறது. அதேபோல வேறொரு குழியில் காய்ந்த புல்  பூண்டு சருகுகளை  கையில்  வைத்தருக்கும் ஒரு நீளமான கம்பி கொண்டு திணிக்க அது குபீரென பற்றி எரிகிறது.

அதேபோல அங்கு இருக்கும்  உணவு விடுதிக்குள் பாதுகாக்கப்படும்   ஒரு எரிமலை கிணறு இருக்கின்றது.  அதன்மேலே இரும்பினால் ஆன ஒரு க்ரில் போன்ற மூடி இருக்கின்றது அந்த க்ரிலின்  மீது உணவு மற்றும் மாமிசங்களை  வைத்து இயற்கையான எரிமலை சூட்டில் சமைத்து  வாடிக்கையாளர்களுக்கு  வழங்குகின்றனர்.

அந்த பகுதியில் எங்குவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எரிமலை சீற்றம் அடையலாம் என்று அறிந்தபோது உள்ளபடியே "பில்டிங் ஸ்ட்ராங்கு ... பேஸ்மட்டம் வீக்கு" எனும் நிலைமைதான். பெரிய அளவிலான எரிமலை சீற்றங்கள் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாக ஆவண பதிவுகள் சொல்கின்றன.

இப்படியாக சுமார் இரண்டு மணிநேரம் இயற்கையின் வினோத விந்தை பிரதேசத்தில் (ஒருபுறம் பார்த்தால் சீறும் கடல் மறுபுறம் பார்த்தால் சீறும்  எரிமலை) இருந்துவிட்டு மீண்டும் திரும்பும் போது  " பல நாட்கள் பசியோடு சீறிக்கொண்டிருக்கும் சிங்ககூட்டத்தை  அதன் குகைக்குள்ளேயே சென்று சந்தித்துவிட்டு(மிதித்துவிட்டு) வீறு நடைபோட்டு வெற்றியோடு திரும்பியது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.

அந்த பூங்காவில்(??) உணவு , தேநீர், நினைவு பொருட்கள் கடை, wifi வசதி, வாகன நிறுத்தும் இடங்கள்  மற்றும் ஓய்வு அறைகளும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த ஸ்பெயின் தீவின் பெயர் லான்சராட்டி (Lanzorate)

தேசிய பூங்காவின் சில புகைப்பட காட்சிகள்.



திமான்பயா தேசிய பூங்கா உங்களை அன்போடு வரவேற்கிறது (ஸ்பானிஷ் மொழி தெரியாதவர்களுக்காக)


பூமி குழியில் நீரூற்றிய சில நொடிகளில் வான் நோக்கி பாயும் வெந்நீர்/ எரி  வாயு  சீற்றம்.


உறங்கிக்கொண்டிருக்கும் பழுத்த(கொழுத்த) சிங்க குகை .


கனன்றுகொண்டிருக்கும் எரிமலையின் கண் சிமிட்டல்.

 


கிடு கிடு பள்ளங்கள்மீது செங்குத்தாக போடப்பட்டிருக்கும் நெடுந்தொலைவு பேருந்து பாதை 


எரிமலை அடுப்பில் கறி சமையல். 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.


16 கருத்துகள்:

  1. சிறப்பான, வித்தியாசமான ஒரு பயணம் குறித்த தகவல்கள் படிக்கத் தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கோ. பதிவினை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் வெங்கட்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பார்த்த விடயங்களில் சிலவற்றை ஞாபகம் வந்தவரைக்கும் "திக்கி... திக்கி", பதிவிட்டதை பார்த்து "திக் திக்" என்று இருப்பதாக கருத்திட்ட தனபாலுக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  3. சிறந்த பயணம். படங்களும் அழகாக இருக்கின்றன.

    பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திட்ட உங்களுக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும்.

      நீக்கு
  4. சாலையின் படம் வெகு அழகு. அது போல எரிமலை குழி பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதே.

    அட அந்த எரிமலை தணலில் உணவு கிரில் சமையல்!! நல்ல ஐடியா..
    மற்றொரு புறம் கடல்...ரம்மியமான இடம் என்று தெரிகிறது.

    அழகான இடத்திற்குச் சென்றுவந்திருக்கீங்க கோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே மிக அழகான ரம்மியமான இடம்தான்.பின் வரும் நாட்களில் இன்னும் சில அனுபவங்களை பதிவாக்க முயற்சிக்கிறேன்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. எரிமலைக் குறிப்புகள் - திகிலான அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (கொஞ்சம்) திகிலான இடம்தான் அது. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கோ,

    வணக்கம்.

    சிங்க குகைக்குள் எங்களையும் அழைத்து சென்றதற்கு நன்றி. கூடவே பயணித்தது போல் இருந்தது.

    என்னதான் எரிமலை அடுப்பின் மீது கறிசமைத்தாலும், கல்லூரிநாட்களில் நாம் சமைத்த மீன் வறுவல் சுவை வருமா?

    கோவிட் பின்னர் நீங்கள் சென்ற முதல் விடுமுறை என்று நினைக்கின்றேன். அனைவரும் சுகம் தானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விசு.
      ஆம், "கோ"விடுக்கு பிறகு உள்ளூர் பயணங்களன்றி "கோ" விமானம் ஏறி பயணித்த முதல் விடுமுறை பயணம் இதுதான்.

      எரிமலை க்ரில் உணவு ஒரு புது அனுபவம் என்றாலும் கல்லூரி நாட்களில் சமைத்த MEEN வருவலின் சுவை MEENடும் வராதுதான்.

      நாங்கள் அனைவரும் நல்ல சுகம்., தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  8. இயற்கை எங்கும் எப்போதும் அழகு அதை பெரிதாக கொல்ல ஒன்றும் தோன்ற வில்லை.ஆனால் அதை தொலைதூரத்தில் உள்ள ஒருவன் அதன் வெப்பத்தையும் உயிர்ப்புடன் உள்ள எரிமலையை என்னி மனதில் பதற்றத்தையும் ஏற்படுத்தும் மொழி நடை அருமை. எம்மையும் அழைத்து சென்ற உணர்வை தந்தமைக்கு நன்றி. மேலும் இத் தருணங்களை எமக்கு ஏற்படுத்துவீராக. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உளமார.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு