"பணத்துக்கு பங்கம்".
நண்பர்களே,
மணமகன் அல்லது மணமகள் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தாலும் நடக்கலாம், ஆனால் தங்கம் இல்லாமல் எந்த திருமணத்தையும் நினைத்துப்பார்க்க முடியுமா என்றால் சந்தேகமே.
எத்தனை வறுமையான பின்னணி உள்ளவர்களும் வாழ்வில் ஒரு சம நிலைக்கு வரவேண்டும் எனும் உயரிய நோக்கோடு, அரசாங்கம் கொண்டுவந்து ஆங்காங்கே செயல் படுத்தி வரும் பல திட்டங்களை நாம் அவ்வப்போது அறிய முடிகிறது.
அவ்வகையில் ஏழை எளிய மக்களின் திருமணத்திற்காக புடவை சட்டை வேட்டி சீர் வரிசைகளையும் கொடுத்து அவர்களது வாழ்வில் குடும்ப வாழ்வின் துவக்கம் ஒளிமயமானதாக அமையவும் அவர்களது மணவாழ்வில் மகிழ்சி என்றும் தங்க வேண்டும் என்பதற்காகவும் தங்க தாலியும் வழங்கும் ஒரு ஒப்பற்ற திட்டத்திற்கு,"தாலிக்கு தங்கம்" எனும் பெயருடன் ஒரு சிறப்பு திட்டம் இருப்பதை நாம் அறிவோம்.(இன்னும் இருக்கின்றதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).
தங்கம் எத்தனை விலை உயர்ந்த உலோகம் என்பதை உலகறியும்; ஒரு குன்றுமணி அளவு தங்கம் என்றாலும் அதன் விலை அத்தனை அதிகம். எனவே தான் கடைகளில் எடை போட்டு வாங்கும் காய்கறிகளைக்கூட என்னப்பா தங்கம்போல எடைபோடுகிறாய் கொஞ்சம் சேர்த்து போட்டுக்கொடு என்று சொல்வதை கேட்டிருப்போம்.
அதேபோல வேறு எந்த பொருளை வாங்கும்போதும் அதன் விலை அதிகமாயிருந்தால் தங்கம்போல விலை வைத்து விற்கிறார்கள் என சொல்ல கேட்டிருப்போம்.
அதேபோலதான் சென்ற வரம் ஒரு உணவு விடுதிக்கு நண்பர்களாய் சென்றிருந்தோம்.
இன்றைக்கு என்ன ஸ்பெஷல்?
பல பண்டங்களின் பெயரை அடுக்கிக்கொண்டே கடைசியில் ஒரு "ஐட்டத்தின்"(அதாவது ஒரு உணவின்) பெயரை சொன்னதும் சரி அதையே வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து ஆர்டர் கொடுத்துவிட்டோம்.
பதினைந்து நிமிடங்களில் கொண்டு வந்து மேசைமீது வைக்கபட்டது.
பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
அளவு?
ஒரு பெரிய வட்டவடிவிலான எவர் சில்வர் தட்டு.
அதில்,
சுமார் 30 கிராம் எடை உள்ள மஞ்சள் கலர் தண்ணீரில் வேகவைத்த புலவு என்று பெயர்வைக்கப்பட்ட சாதம் ஒரு உள்ளங்கை அளவிலான சிறிய தட்டில்.
அதிக பட்சம் 25-40 மில்லி (லிட்டர்) நிறை கொண்ட சிறிதும் பெரிதுமான எவர் சில்வர் கிண்ணங்கள் மூன்று
ஒன்றில் தயிரும் வெங்காயமும் போட்ட ரைத்தா.
அடுத்த கப்பில் பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் போட்ட ஒரு குருமா.(அதில் ஒரு துண்டு உருளை கிழங்கு மூன்று துண்டு பீன்ஸ் எட்டு பச்சை பட்டாணி, நான்கு சிறிய துண்டு கேரட்).
அடுத்த கப்பில் ஒரு சிறிய துண்டு கோழி கறியுடன் கூடிய கிரேவி.
தட்டின் மீதமுள்ள காலி இடங்களின் ஒரு பகுதியில் ஒரு Naan-bread.
சுமார் மூன்று அங்குல நீளம் கொண்ட நெருப்பில் வாட்டிய கோழி துண்டு இரண்டு.
சிறிய வடிவிலான ஆட்டிறைச்சி துண்டுகள் இரண்டு ( இந்த துண்டுகளின் அளவை துல்லியமாக சொல்லவேண்டுமாயின், ஒரு எட்டு வயசு பையன் ஒவ்வொரு துண்டையும் அப்படியே வாயில் போட்டு எந்த உபாதையுமின்று மெல்லாமலேயே விழுங்கிவிடலாம்)
அடுத்து ஒரு சிறிய ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டினால் என்ன அளவு இருக்குமோ அந்த அளவிலான ஒரு சிகப்பு நிற மெருகேற்றிய(செயற்கை நிறம் தான்) தந்தூரி அடுப்பில் சுடப்பட்ட கோழி துண்டு..
மற்றும் நீள வாக்கில் வெட்டப்பட்ட சிறிய அளவு எண்ணையில் பொறிக்கப்பட்ட வெங்காய சீவல்களும் இருந்தன.
இத்தனையும் அந்த பெரிய தட்டின் மூன்றில் ஒரு பதிக்குள்ளேயே அடங்கிவிட்டது.
முதலில் பார்க்கும்போது இது ஒருவேளை starter ஆக இருக்குமோ என நினைக்க தோன்றியது.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு பில் கொண்டுவர சொன்னோம்.
பில் amount ஐ பார்த்தவுடன் கொஞ்சம் தலை சுற்றியது. ஒரு சாப்பாடு £21.99 அதாவது நம்ம ஊர் கணக்குப்படி ஒரு சாப்பாடு இரண்டாயிரத்து இரு நூறு ரூபாய் மூன்று பேருக்கு £66.00.
(விலை நிலவரம்:பத்து கிலோ பாசுமதி அரிசி £12.00 ஒரு முழு கோழி £3.00, காய் கறிகள் ஒரு கிலோ £6.00, Extra வெர்ஜின் ஆலிவ் ஆயில் 1 லிட்டர் £4.00-6.00)
என்னப்பா தங்கம் விலை கொடுக்கவேண்டி இருக்கின்றதே என சலித்துக்கொண்டே ஒரு வேளை கம்பியூட்டர் பிழையாக இருக்குமோ?
அப்படி என்ன இந்த உணவில் அப்படி ஒரு சிறப்பு என bill-ஐ உற்றுப்பார்க்கும்போதுதான் "சர்வர்" சொன்னது நினைவிற்கு வந்தது அந்த உணவின் பெயர், "தாலி".
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
விலை பார்த்து தாலியை அறுப்பது போல் இருந்தாலும்...
பதிலளிநீக்கு"தாலி" மங்களகரமானது என்று நினைத்து பெருமைப்பட வைக்கிறது நண்பரே...
இந்த உணவை தாழி என்றுதான் அபுதாபியில் பார்த்து, கேட்டு சாப்பிட்டு இருக்கிறேன்.
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. அபுதாபி தாழி சிறப்பாக இருந்திருக்குமே.
நீக்குஓ...!
பதிலளிநீக்குஹா... ஹா...
வருகைக்கும் தங்கள் தெய்வீக சிரிப்பிற்கும் மிக்க நன்றி தனப்பால்.
நீக்குகடைசியில் "தாலி" ஹாஹாஹாஹா ஓ வட இந்திய உணவகமா!!
பதிலளிநீக்குகாரட் எத்தனை பட்டாணி எத்தனைனு கணக்கு வேறு எண்ணி வைச்சிருக்கீங்களே!!! ஒரு வேளை வந்தவர் "கோ" காமதேனு "கோ" என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ!!!!!!!
கீதா
இந்தியன் உணவகம் என்றுதான் இருந்தது, நீங்கள் சொல்லித்தான் அது வட இந்திய ஐட்டம் என தெரிகிறது. ஓட்டல் காரர் நினைத்தால்கூட அந்த குருமா கப்பில் இன்னும் கூடுதல் காய்கறிகளை போட்டிருக்க முடியாது அந்த சின்ன கப்பில். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
நீக்குஉணவின் பெயர் "தாலி"? என்பது புரியவில்லை. ஆனால் ஒரு மதிய உணவின் விலை அரை கிராம் தங்கத்தின் விலை!
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆமாம் எனக்கென்னவோ அது அநியாய விலை என்றுதான் படுகிறது.
நீக்குவருகைக்கு மிக்க நன்றிகள் மீண்டும்.
கோ!
பதிலளிநீக்குநெடுநாட்களுக்கு பின்...
வணக்கம்!
இதை "தாளி" என்று தான் அழைப்பார்கள். எங்கள் வீட்டின் அருகில் உள்ள அஞ்சப்பருக்கு என்றாவது செல்கையில் நான் "வெஜிடேரியன் தாளி " மட்டும் வாங்குவேன்.
நமக்கு தான் கடிச்சிக்க ஏதாவது வேண்டுமே, அதற்காக ஒரு டபுள் ஆம்லெட்.
இந்த பதிவை பார்க்கையில், கல்லூரி நாட்களில் முனியாண்டி விலாஸின் சர்வர் , ஒரு ட்ரே முழுக்க தலை கரி, போட்டி, ஈரல் என்று காட்டி "எது வேண்டும்?" என்று கேட்கையில்,
பட்ஜெட் பற்றாக்குறையை வெளியே சொல்ல முடியாத காரணத்தினால் இன்னைக்கு செவ்வாய் , இன்னைக்கு புதன் இன்னைக்கு வெள்ளி அதனால் கவுச்சி வேண்டாம் என்று வாரத்தின் ஏழு நாட்களும் கூறியது நினைவிற்கு வந்தது.
தொடர்ந்து எழுதவும்.
Visu
நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்பில் வந்தமைக்குறித்து மகிழ்சி. நீங்கள் சொல்லிய மலரும் நினைவுகள் ஏற்கனவே "சோ கா சூ" பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: சொகாசூ! (koilpillaiyin.blogspot.com)
நீக்குஆகா
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.
நீக்குவித்தியாசமான சிந்தனை.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் ஐயா.
நீக்குதாலி என்னும் ஹிந்தி வார்த்தைக்கு தட்டு என்ற அர்த்தம் உண்டு! நம்மூரில் ஃபுல் மீல்ஸ் என்று சொல்லுவது போல இங்கே அனைத்தையும் கலந்து கொடுப்பதுதான் தாலி. வட இந்தியாவில் சில இடங்களில் தாலி மீல்ஸ் என்றும் சொல்வது உண்டு. இங்கே அப்படியான தாலி மீல்ஸ் வாங்கினால், அதில் இரண்டு சப்பாத்தி அல்லது பூரி அல்லது நான், ஒன்று அல்லது இரண்டு கரண்டி சாதம், ஒரு மிக்ஸ் வெஜ் சப்ஜி, ஒரு தால், ராய்தா மற்றும் கொஞ்சமாக பச்சைக் காய்கறிகள், ஊறுகாய் கொடுப்பார்கள். ஸ்பெஷல் தாலி என்றால் கூடுதலாக ஒரு இனிப்பும் பனீர் போட்ட ஒரு சப்ஜியும் கிடைக்கும். நூற்றி ஐம்பது ரூபாயிலிருந்து 500 600 ரூபாய் வரைகூட இப்படியாக தாலி கிடைக்கும்.
பதிலளிநீக்குதாலிக்கு அர்த்தம் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி வெங்கட். நீங்கள் சொல்லும் ஐட்டங்கள் இங்கு அதே போன்ற விலையில் கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என யோசிக்கும்போதே எச்சில் ஊறுகிறது. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
நீக்குசாப்பிட வந்தவரை தங்கமாக நினைத்திருக்கலாம் அல்லது தாலி என்ற பெயரில் தாளித்து விட்டார்களோ சிவசங்கரன்
பதிலளிநீக்குதங்கமனம் கொண்டவர்கள் என அறிந்திருப்பார்கள் என புரிகிறது அதனால்தானோ இந்த "தாளிப்பு".
நீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.