பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 டிசம்பர், 2017

தேவைகள்.

பிச்சைமுத்து!!
நண்பர்களே,

பிச்சைக்காரர்களை பார்த்ததும் பொதுவாக நாம் நினைப்பது அவர்களுக்கு காசு கொடுக்கவேண்டும் அல்லது உணவு  தரவேண்டும் என்பதுதான்.

இது சரியான சிந்தனைதான்.

ஆனால் இந்த சிந்தனை பெருவாரியாக சரியென தோன்றினாலும் , நுட்பமாக கவனித்துப்பார்த்தால் காசும் உணவும் மட்டுமே ஒரு பிச்சைக்காரருக்கு போதுமானதாக அல்லது தேவையானதாக இருப்பதில்லை.

சமீபத்தில், சாலை ஓரத்தில் மூடப்பட்டிருந்த கடை அருகே  அமர்ந்துக்கொண்டிருந்த ஒரு நபரை நோக்கி வந்த வேறொரு நபர் தமது கையில் வைத்திருந்த ஒரு புதிய பிஸ்கட் பாக்கட்டை அந்த அமர்ந்திருந்த நபருக்கு கொடுக்க, அந்த நபரோ அதை வேண்டாம் என மறுத்துவிட்டார்.

பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு பிச்சைக்காரரின் அடிப்படித்தேவையே உணவுதான், அதிலும் நம்ம ஊர் போல பழைய சாப்பாட்டையோ அல்லது மூன்று நாட்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்டு வெளியில் தூக்கி எறியப்படவேண்டிய நிலையில் இருக்கும் குழம்பு ரசம் போன்றவற்றையோ கொடுக்காமல், விலை உயர்ந்த பிஸ்கட் பாக்கட்டை கொடுத்தால் வேண்டாம் என்று சொல்கின்றார் என்ன காரணமாக இருக்கும்?

அந்த பிஸ்கட் மனிதர் ஏமாற்றத்துடன் சென்ற பிறகு அந்த பிச்சை மனிதரிடம் சென்று சில நாணயங்களை கொடுக்க அவரருகில் ஏதேனும் தொப்பியோ அல்லது கூடையோ இருக்கின்றதா என பார்த்தேன்.

அப்படி ஒன்றுமில்லை, சரி அவரது கையில் கொடுக்கலாம் என எண்ணி என் கையை நீட்ட அவரோ எனக்கு காசு வேண்டாம் என கூற எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இதுவரை சந்தித்த பிச்சை மனிதர்களுள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றார் என நினைத்து அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

சற்று நேரத்திற்கு முன்பு உங்களுக்கு ஒருவர் பிஸ்கட் பாக்கட்டை கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டீர்கள் , இப்போது காசும் வேண்டாம் என்கின்றீர்களே, நீங்கள் உதவி நாடிதானே இங்கே அமர்ந்திருகின்றீர்கள் என கேட்டேன்.

அவரும் முகத்தில் ஒரு புன்னைகையுடனும் கண்களில் பிரகாசிக்கும் ஒளியுடனும் "ஆமாம், உதவி நாடிதான் அமர்ந்திருக்கிறேன், அதே சமயத்தில் உதவி என்பது காசாலும் உணவாலும் மட்டுமே செய்வதல்லவே" என்றார். .

புரியவில்லை என்றேன்.

எல்லோரும் உணவை கொடுத்தால் நாங்கள் எப்படி சாப்பிடுவது, மேலும் உபரியாக கிடைத்த உணவினை என்ன செய்வது , உணவுப்பொருட்கள் எத்தனை மலிவானதாக இருந்தாலும் நங்கள் அவற்றை மதிப்பு மிகுந்ததாகவே கருதுவோம். அவற்றின் தேவை எங்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் அவற்றை வீணடிக்கவும் முடியாது.

அதேபோல அன்றைய தேவைக்கு மிஞ்சி கிடைக்கும் பணத்தையும் எங்களால் சேமித்துவைக்கவும்  முடியாது அதற்கு அவசியமும் இல்லை.

வறுமையிலும் இழி நிலையிலும் இருக்கும் என்னை நீங்கள் கவனித்ததாக சொல்வதும் என்னோடு இத்தனை நேரம் சம்பாஷித்துக்கொண்டிருப்பதையும் நினைக்கும்போது மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களைப்போன்ற மனிதர்களை பார்ப்பதுகூட அறுவெறுப்பு, எங்கள் அருகில் வருவதுகூட கவுரவ குறைவு என்று எண்ணி ஒதுங்கி செல்லும் மனிதர்கள் மத்தியில் இது  போன்ற உங்களுடைய  விசாரிப்புகளும் எங்களையும் சக மனிதர்களென்று எண்ணி அருகில் வந்து எங்களோடு சம்பாஷிப்பதும், நாங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளுக்கு செவி மடுப்பதும் எங்கள் முகத்தில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் மகிழ்ச்சியை வழிய செய்யும்.

பின்னர் ஏன் இங்கே அமர்ந்து இருக்கின்றீர்கள் நீங்களும் மற்றவர்களைப்போல நடந்து சென்று மற்றவர்களோடு பேசலாமே?

நாங்களும் மற்றவர்களைப்போல மக்களோடு  சேர்ந்து பயணித்தால் நாங்கள் எப்படி தனித்து அடையாளப்படுவோம்.  நாங்களும் சாமானிய மக்கள்போலவே அல்லவா  கருதப்படுவோம்.  அப்படியே நாங்கள் எங்களருகில் வருபவரிடம் பேச்சு கொடுக்க நினைத்து ஓரிரு வார்த்தைகளை முழுமையாக முடிக்குமுன்னரே எங்களை விட்டு விலகி சென்று விடுவதால் இப்படி ஓரிடத்தில் அமர்ந்து இருக்கும் சூழ் நிலை உருவாகிறது.

அவரோடு பேசிக்கொண்டிருந்தது எனக்கும் கொஞ்சம் மன மகிழ்ச்சியை தந்ததாக அவரிடம் சொல்லிவிட்டு சில்லறைக்கு பதிலாக காகித பணத்தை கொடுத்தேன் , அதையும் வாங்க மறுத்தவர் என்னோடு கைமட்டும் குலுக்கினால் நான் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்  என கூறினார்.

வியந்துபோன நான் அவருக்கு கை கொடுத்தேன் அப்போது அவர் சொன்னார்  என் பெயர் க்றிஸ் , இன்று என்னுடைய பிறந்தநாள்.

அதை கேட்ட எனக்கு மகிழ்ச்சியை விட ஒரு மெல்லிய  சோகம் மனதில் இழையோட அந்த வீடற்ற பிச்சை மனிதரிடம் சொன்னேன் உங்களுக்கு நான் ஏதேனும் உதவ ஆசைப்படுகிறேன் என்றேன்.

அதற்கு அவர் எழுத்து நின்று "இத்தனை நேரம் என்னோடு பேசி கொண்டு இருந்ததே எனக்கு நீங்கள் செய்த பெரும் நன்மை என கூற அவரை கட்டி பிடித்து தோள்களை தட்டி கொடுத்து விட்டு அவ்விடம் இருந்து கடந்து சென்றேன்.

நண்பர்களே,

உலகில் உள்ள எல்லோருமே காசிற்காகவும் உணவு உடை இருப்பிடத்திற்காகவும் மட்டுமே ஏங்குவதாக நினைத்துக்கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு,  கால சூழ்நிலையின் கோர சதியால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட  அந்த பிச்சை மனிதரின் ஏக்கம் நல்ல தெளிவை ஏற்படுத்தும் என்பதற்காகவே இந்த பதிவினை எழுத நினைத்தேன்.

அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் இதயங்கள் உள்ளனவே.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

3 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஆம் மனிதம் மலரட்டும்!!

   வருகைக்கு மிக்க நன்றிகள் நாகராஜ்.

   கோ

   நீக்கு
 2. மிக மிக அருமையான பதிவு கோ! ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள். நாம் அவர்களுடன் தோழமையுடன் அன்புடன் பேசுவதை மட்டுமே விரும்புபவர்களும் உளர்.

  உங்களுக்கும் பாராட்டுகள். கோ அவருடன் பேச்சுக் கொடுத்து அவரை மகிழ்வித்தமைக்கு

  பதிலளிநீக்கு