பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 டிசம்பர், 2014

அவள் யாரோ!!!!.



அன்பு நண்பர்களே,


கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு, தமிழ் துறை சார்பாக முத்தமிழ் கலை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.


எனக்கும் தமிழ் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையெனினும், என் துறையில் என்னோடு பயின்ற நண்பர் ஒருவருக்கு தமிழ் துறை மாணவர்கள் சிலர் நண்பர்களாயிருன்தனர்.

விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கையில், என் நண்பனுக்கும் தமிழ்த்துறை மாணவர்களுக்குமிடையில் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கின்றது.

அதாவது, தமிழ் துறை மாணவர்களை காட்டிலும், தமிழில் ஆர்வமும் புலமையும் அதிகம் உள்ளவர் வேறு துறையில் தான் அதிகம் என்பதே அந்த வாக்குவாதத்தின் பிள்ளையார் சுழி.

கடுப்பான தமிழ் துறை மாணவர்கள் என் நண்பனிடம், அப்படியானால் உங்கள் துறையில் உள்ள யாரையாவது நாங்கள் சொல்லும் வார்த்தைகளை பயன் படுத்தி ஒரு கவிதை எழுதி நாளை கொண்டுவர முடியுமா? என்றிருக்கின்றனர்.

அதற்கென்ன என் நண்பன் இருக்கின்றான் அவனிடம் சொல்லி நாளை கவிதையுடன் வருகின்றேன் என்ன வார்த்தைகளை கொண்டு கவிதை எழுத வேண்டும் என்று சவால்  விட்டிருக்கின்றார்.

அவர்களும் ஏதோ தங்கள் வாய்க்கு வந்த சில வார்த்தைகளை  சொல்லி  இருக்கின்றனர்.

அந்த வார்த்தைகளை ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டு  என் நண்பன் அன்று மாலை என்னை பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். அந்த நண்பர் வேறு யாரும் இல்லை உங்களுக்கு பரீட்சயம் ஆனவர்தான்.

(அவரை நினைவு படுத்திக்கொள்ள அவர் பெயர் தங்கமணி வாசியுங்கள்.)

வந்தவர் மிகுந்த படபடப்புடனும், நிதானமிழந்தவராகவும் காணப்பட்டார்.

என்ன என்று விசாரித்ததில் நடந்த விஷயத்தை கூறினார், சரி யாரிடம் சொல்லலாம் என நான்கேட்டேன், அவருக்கு மிகுந்த கடுப்பாகிவிட்டது.

என்ன கோ, உன்னை முன் நிறுத்தி தான் நான் அந்த மாணவர்களிடத்தில் சவால் விட்டு வந்திருக்கின்றேன், இப்போ போய் தமாஷ் பண்ற?!

 என்ன பண்ணுவியோ  எனக்கு தெரியாது, நாளை காலையில் கல்லூரிக்கு வரும்போது கவிதையுடன் வா என சொல்லிவிட்டு அவர் கொண்டு வந்திருந்த அந்த கிறுக்கல்கள் தாங்கிய ஒரு தாளை என்னிடம் நீட்டினார், நான் அதை பிரித்து படிபதற்குள் நண்பர்  டாட்டா சொல்லிட்டு புறப்பட்டுவிட்டார். 

அவர்  கொடுத்துவிட்டு  சென்ற தாளில்,

"பல்லி, அல்லி ,துல்லி, மல்லி, புள்ளி."..என்ற  வார்த்தைகள் இருந்தன.

எனக்கு கொஞ்சம் மயக்கம் வந்தது.

இந்த வார்த்தைகளை கொண்டு எப்படி கவிதை எழுதுவது?

நண்பர்  தன்  சவாலை வெல்லவேண்டும் அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்த கூடாதே என்ன செய்யலாம்.

அன்று இரவு தீவிரமாக யோசித்து ஒரு கவிதை என்ற பெயரில் ஏதோ எழுதிக்கொண்டு காலை கல்லூரிக்கு  போய் நண்பரிடம் கொடுத்தேன்.

வாங்கி படித்துவிட்டு நேராக அவரின் தமிழ்த்துறை மாணவர்களிடம் கொண்டு காட்ட வேகமாக சென்றார்.

அன்று முத்தமிழ் கலைவிழாவின் தொடக்கநாள், அதனால் தமிழ் துறை மாணவ நண்பர்கள் கொஞ்சம் பிசியாக இருந்தனர்.

என் நண்பன் நேராக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் , முனைவர் ...( பெயர் வேண்டாம்.) அவர்களிடம் சென்று , ஐயா இன்றைய நிகழ்ச்சியில் மேடையில் ஒரு கவிதை வாசிக்க அனுமதி வேண்டும் என மிகவும் பவ்வியமாக கேட்டிருக்கின்றார்.

அவரோ வந்திருக்கும் அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருடன் உரையாடிகொண்டிருந்திருக்கின்றார்.

நிகழ்ச்சி இன்னும் ஓரிரு மணிநேரத்தில் துவங்க இருக்கும் இந்த நேரத்தில் புதிதாக எந்த நிகழ்ச்சியும் பட்டியலில் சேர்க்க முடியாது என கூறியும் என் நண்பர் விடாபிடியாக அவரிடம் கொஞ்சம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டாராம்.

தமிழ்த்துறை தலைவரும் கொஞ்சம் இறங்கி வருவதுபோல், சரி முதலில் அதை நான் பார்க்கவேண்டும் என சொன்னவுடனே , கையில் இருந்த அந்த வெள்ளைத்தாளை பேராசிரியரிடம் நண்பர் கொடுத்திருக்கின்றார்.

படித்தவர் நண்பனை பாராட்டி பரவாயில்லையே தமிழல்லாத துறை மாணவரிடம் இப்படி ஒரு தமிழார்வமா,என பாராட்டி இருக்கின்றார்.

அதற்க்கு என் நண்பர், ஐயா இது நான் எழுதவில்லை, என் நண்பன் கோ எழுதியது என சொல்ல அந்த கவிதை தாளை வந்திருந்த சிறப்பு விருந்தினரிடம் பேராசிரியர் காட்ட  அந்த சிறப்பு விருந்தினர் மிகவும் ரசித்து பாராட்டி கவிதை எழுதிய என்னை பார்க்கவேண்டும் என கூறியதாக என் நண்பர் என்னிடம் வந்து சொல்ல நம்பமுடியாத நான் பேராசிரியரின் அறையை நோக்கி ஓடி அந்த சிறப்பு விருந்தினரை கண்டு வணங்கி அவரின் நேரடி பாராட்டை பெற்றதும், அந்த கவிதை தாளில் அவரின் ஆட்டோக்ராப் வாங்கினதையும் பின்னர் மேடையில் அவரின் முன்னினையில் அந்த கவிதையை வாசித்ததும் இன்னும் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கின்றது.

ஏன் அந்த நிகழ்ச்சி இன்னும் என் மனதில் பசுமையாக படிந்திருக்கின்றது?

ஏன் எனில் அன்றைக்கு எங்கள் கல்லூரிக்கு முத்தமிழ் கலைவிழாவினை துவக்கி  வைத்து  ஒரு அந்தி மழை பொழிந்தாற்போல சிறப்புரை ஆற்ற வந்திருந்ததவர் இன்றைய "கவிபேரரசு திரு. வைரமுத்து" அவர்கள்.

அவரின் வைர (மோதிர) விரல்களால் குட்டுபடவில்லை மாறாக வெரி குட் என கையொப்பமிடப்பட்ட அந்த கவிதை காகிதம் இன்னமும் என்னிடம் பத்திரமாக ஊரிலுள்ள பெட்டகத்தில் பாதுகாக்கபட்டுவருகின்றது.

அன்றைக்கு மேடையில் வாசித்த அந்த கவிதையின் மூலம் மாற்று கருத்துகொண்ட தமிழ்த்துறை மாணவர்களும் எங்களின் நெருங்கிய நண்பர்களாயினர்.

 அங்கே அன்றைக்கு மேடையில் வாசித்த அந்த கவிதை இதோ இங்கே உங்களுக்காக.

"எங்கே அவள் ?"

பல்லியங்கரங்கள் அனைத்தும்
பக்குவமாய் ஒலிஎழுப்ப
புள்ளினம் ஒன்று சேர்ந்தது   
புகழ்ந்து பாட்டிசைக்க

மெல்லிய இடையை தாங்கி
மெல்ல நடந்த அவள் 
அல்லியின் கொடிபோலே
அழகாக தெரிகின்றாள்

துல்லியமாய் அளந்த மூக்கும்
துடிப்புடன் காணும் உடலும்
பல்லோ முத்து பரளோ
பார்ப்போர் புகழ்ந்துரைக்க

மல்லிகை மலரை சூடி
மயக்கும் மாலை நேரத்தில்
புல் நிறைந்த பூங்காவில் 
புன்னகையுடன் அமருகின்றாள்

அல்லி கொடி அவளை 
அள்ளி அணைத்திடவே
புல் நிறைந்த பூங்காவை - நான் 
பூனைபோல் சென்றடைந்தேன்

கல்லுக்குள் ஈரமென 
காட்சி தந்த தேவதையை
கட்டி அணைக்கையிலே - -ஐயகோ.....
கலைந்ததுவே ....என் கனவு!!!


நன்றி,

மீண்டும் ச (சி)ந்திப்போம்

கோ

16 கருத்துகள்:

  1. nalama sir ningal?
    thodarnthu examsvanthukkondiruppathal pathivukal padikka mudiyaamal pokirathu.
    eppadiyo ungalin pathivai padithathil mikka maklichi sir.

    ----

    ஏன் அந்த நிகழ்ச்சி இன்னும் என் மனதில் பசுமையாக படிந்திருக்கின்றது?

    ஏன் எனில் அன்றைக்கு எங்கள் கல்லூரிக்கு முத்தமிழ் கலைவிழாவினை துவக்கி வைத்து ஒரு அந்தி மழை பொழிந்தாற்போல சிறப்புரை ஆற்ற வந்திருந்ததவர் இன்றைய "கவிபேரரசு திரு. வைரமுத்து" அவர்கள்.

    wow super vazthukal sir.
    avarin 3aam ulaka por and thannir thesam padichi iruken.
    kavithaikal padithathu kidaiyathu.

    ---

    ungalin kavithai super sir!
    thodarnthu ezuthungal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள மகேஷ்.

      நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வரவு, இருந்தாலும் மீண்டும் வந்ததற்கும், பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

      படிப்பில் முழு கவனமும் இருக்கட்டும்.

      பதிவுகளை பின்னர் பரீட்சைகள் முடிந்து பார்த்துகொள்ளலாம்.

      எக்ஸாம் முடிந்தபின்னர் விட்டுப்போன பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்தால் போதும்.

      வாழ்த்துக்கள் வெற்றி சிறக்க.

      கோ

      நீக்கு
  2. கவிதை மிகவும் அருமை நண்பரே... வாழ்த்துகள் கொடுத்த வார்த்தைகளை வைத்து கவிதை எழுதவது என்பது சிரமமான செயலே நண்பருக்காக எழுதி... அவரின் மானத்தையும் காப்பாற்றி விட்டார்கள்.

    நண்பரே வைரமுத்துவின் கவிதைகளுக்கு நான் அடிமை என்றுகூட சொல்லிக்கொள்வேன் ஆனால் இவணெல்லாம் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏய்க்கிறான்
    குறிப்பு இவணுக்கும், எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகறாரோ தனிப்பட்ட விரோதமோ இதுவரை கிடையாது
    ஒரு கல்லூரி விழா நிகழ்ச்சிக்காக மாணவர்கள் அழைத்தமைக்கு கடைசி தருணத்தில் நிபந்தனை வைத்து கழுத்தை அறுத்தவன்
    அதன் இணைப்பு தங்களுக்கு கண்டிப்பாக அனுப்புகிறேன் தேடிக்கொண்டு இருக்கிறேன். இதெல்லாம் வதந்தி என்று சொல்லி விடாதீர்கள்.
    தமிழன் இல்லாதவனை தமிழன் என்று புகழ்ந்து பாட்டு எழுதும் இவன் தமிழனா என்பதே எமது கேள்வி
    குறிப்பு இன்றும் நான் வைரமுத்துவின் கவிகளுக்கு அடிமையே.... அவனுக்கு அல்ல...
    உள்ளதை உள்ளபடி எழுத நினைக்கும் உண்மையான உங்கள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கில்லருக்கு,

      பதிவினை படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.

      உங்களின் ஆதங்கத்தை படித்தேன்.

      சினிமா கவிஞரின் படைப்புகள் அந்தந்த சினிமாவின் கதைகளை சார்ந்தது, ஒரு ஆண் கவிஞர் பெண் பாடுவதாக ஒரு பாடல் எழுதினால் அவன் பொய் சொல்வதாக அர்த்தமாகாது, தன்னை பெண்ணாக உருவகபடுத்தி அந்த கதையில் வரும் பெண்ணின் மனநிலைமையை கற்பனை செய்து அந்த கதையின் சூழலுக்கேற்ப பாடல் எழுதி அவர்கள் பணம் சம்பாதிப்பவர்கள்.

      தமிழன் அல்லாதவரை தமிழன் என்று எழுத மாட்டேன் என சொல்வதற்கு வைர முத்து என்ன பாரதியா?
      சினிமாவில் பணம் பண்ணும் நோக்கம் கொண்ட எவரும் உண்மைகளை, எதார்த்தங்களை எட்டாத தூரத்தில் வைத்துவிட்டு தான் தங்களின் அறிவையும் ஆற்றலையும் அடுத்தவரின் கற்பனைக்கு ஏற்றாற்போல் வளைத்துகொள்கின்றார்கள்.

      எனக்கும் வைரமுத்துவிற்கும் எந்த உறவோ பகையோ இல்லையென்றாலும், எவரையும் அவன் இவன் என்ற ஏகவசனத்தில் - ஒற்றை சொல்லில் சொல்லாமலிருப்பது நமக்கு கௌரவம் என கருதுகின்றேன்.

      நீங்களும் அவர் இவர் என சொல்லியிருந்தால்

      "இன்னா செய்தாரை ஒருத்தல்; அவர் நாண
      நன்னயம் செய்துவிடில்"

      எனும் வள்ளுவ பெருந்தகையின் தெள்ளிய வரிகளோடு நாம் வாழ்வதாக இருக்குமே.

      அறிவுரை அல்ல ஒரு ஆலோசனைதான்.

      மேலும் எந்த ஒருவரின் படைப்பையும் ஆராதிக்கலாம் ஆனால் அடிமைகளாவதும் தவிர்க்கப்படவேண்டும் என்பது எனது கருத்து.

      மேலும் உள்ளதை உள்ளபடி எழுத நினைக்கும் உங்களின் நேர்மையை பெரிதும் பாராட்டுகின்றேன்.

      அதே சமயத்தில் "இடக்கறடக்கள்" எனும் பண்பையும் துணைக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.

      என்னோடு நட்புடன் பகிர்ந்துகொண்டது சரிதான் இது உங்கள் மற்ற பதிவுகளில் , மேடைபேச்சுகளில் வெளிபடாமல் பார்த்துகொள்ளுங்கள். .இதுவும் ஆலோசனைதான் அறிஉரை அல்ல.

      உங்கள் கோபம் ஞாயமானதுதான் நான் நம்புகின்றேன், சாட்சி தேடி நேரம் வீணடிக்காமல் பதிவுகள் நோக்கி உங்கள் பாதம் பயணிக்கட்டும்.

      வாழ்த்துக்கள்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. அட அட அட .. என்னே ஒரு கற்பனை .. என்னே ஒரு கவிதை... என்னே ஒரு மலரும் நினைவுகள்.

    அட்டகாசமான இந்த கவிதையை இன்னொரு முறை படித்து ரசிக்க கொடுத்து இருக்கும் இந்த பதிவிற்கு நன்றி....

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பனே,

      கவிதையும் அதன் முன்னணியில் குறிப்பிட்டிருந்த கவிதைக்கான பின்னணியையும் படித்து ருசித்து பாராட்டிய உனக்கு மிக்க நன்றி.
      உனது உற்ச்சாகம் தானே என்னை ஊக்கபடுத்தி பதிவுகளை ஆக்க வழிசெய்கின்றது? "ச்வீட் சிக்ஸ்டீன்" பார்தீர்கள?

      நன்றி.

      கோ

      நீக்கு
  4. அன்புள்ள மகேஷ்.

    நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வரவு, இருந்தாலும் மீண்டும் வந்ததற்கும், பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

    படிப்பில் முழு கவனமும் இருக்கட்டும்.

    பதிவுகளை பின்னர் பரீட்சைகள் முடிந்து பார்த்துகொள்ளலாம்.

    எக்ஸாம் முடிந்தபின்னர் விட்டுப்போன பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்தால் போதும்.

    வாழ்த்துக்கள் வெற்றி சிறக்க.

    கோ

    பதிலளிநீக்கு
  5. நண்பர் கரந்தையாரின் வரவும் வாழ்த்துக்களும் கறந்த பாலின் சுகந்த வாசத்துடன் என் மனதில் உங்கள் வார்த்தைகள் வார்க்கப்பட்டன.

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
  6. நண்பரே! லயித்துவிட்டோம்....அழகிய வரிகளாலே கனவு நாயகியைப் படைத்துவிட்டீரே! அன்று கூட நண்பர் விசு சொன்னார் "கோ" அருமையான எழுத்தாளர். என்று....அது உண்மையே! அருமையான கவிதை நண்பரே! பார்த்தோம்! ரசித்தோம்! பக்கம் வந்து நேரடியாகப் பாராட்ட முடியாத தொலைவில் இருக்கின்றீரே! ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  7. அன்பிற்கினிய நண்பர்களே,

    கனவு நாயகியை மீண்டும் பார்க்க எத்தனையோ முறை கண்ணை மூடி பார்த்தேன் ஆனால் இப்போதெல்லாம் நாயகியை தவிர மற்ற எல்லா மூஞ்சிகள்தான் ??? !!!! கனவில் வருகின்றன அதையும் சகிச்சிகிட்டு பார்க்கவேண்டியதையிருக்கு ஏன்னா ரொம்ப வேண்டியவங்க மூஞ்சியா இருக்கே?

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை நண்பரே. மீண்டும் மீண்டும் அந்த கவிதையை மூன்று முறை படித்து ரசித்தேன்.
    மலரும் நினைவுகளை கூறி, படிப்பவர்களின் மலரும் நினைவுகளையும் கிளறிவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. சொக்கன்,

    பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிவு நீங்கள் மூன்றுமுறை படிக்குமளவுக்கு இருந்ததை எண்ணி மகிழ்கின்றேன்.

    விரும்பினால் தங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

    வருகைக்கு நன்றி.

    சந்திப்போம்

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அரசரே,
    இந்த பதிவு படித்து நான் பின்னூட்டம் இட்டு இருந்தேனே, காணவில்லை,
    எங்க புல் நிறைந்த பூங்கா,,,,,,,,,,,,,,,,,
    ம்ம்
    சரி சரி
    அருமையான கவிதை, பதிவும், எனக்கும் அந்த கவிஞரின் பிடிக்காது,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றிகள். ஏற்கெனவே பின்நூட்டம் அளித்ததாக சொல்லி இருந்தீர்கள், அதெப்படி விடுபட்டதோ தெரியவில்லை. தவறு நேர்ந்திருக்கலாம் இனி எந்த தவறும் நேராமல் பார்த்துக்கொள்கிறேன். கவிதை பிடித்தமைக்கு நன்றி, ஏன் அந்த கவிஞரை பிடிக்காது?

      கோ

      நீக்கு
  11. ஐய'கோ' என்கிற வரியில் கவிஞரின் பெயர் வரும்படி முத்திரையும் பதித்து விட்டீர்களே...   கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கோணத்தில் நான் பார்க்காமலே விட்டுவிட்டேனே."கோ"

      வருகைக்கும் தங்கள் ரசனையான கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ ராம்.

      நீக்கு