பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஆனந்த கண்ணீர்!!!

ஒளி தியாகி

அழுதால் அழிந்துவிடுவேன் என தெரிந்தும் அழ தயாராகும் மெழுகுவர்த்தியை குறித்தே இன்றைய பதிவு.


தன்னை யாரோ கொளுத்தி அதனால் பலனடைகின்றனரே என எண்ணி  அழுகின்றனவே என மெழுகுவர்த்திகள்  உருகுவதை பலரும் சொல்ல கேட்டிருப்போம்.(இல்லையென்றால் நான் சொல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள்)

இன்று இருளான ஒரு அறையில் (மின் விளக்கு- பல்பு ப்யுசானதால்-என்னதான் எனர்ஜி சேவிங் பல்பு என்றாலும்   எவ்வளவுதான் எனற்கி இருக்கும்?) மெழுகு வர்த்தியின் துணை மிகவும் தேவைப்பட்டதால், ஒரு மெழுகு வர்த்தியை எடுத்து பற்ற வைத்தேன்.


அந்த மெழுகை கொளுத்தியவுடன் சூழ்ந்திருந்த காரிருள் மறைந்து சுற்றியிருந்த அனைத்து பொருட்களும் தெளிவாக தெரிந்தன.

பின்னர் அதை ஒரு மேசை மீது வைத்துவிட்டு எடுக்க வேண்டிய பொருளை நோக்கி சென்று அந்த பொருள் வைக்கபட்டிருந்த பெட்டியை திறந்து பொருளை சரிபார்த்து எடுத்துக்கொண்டு மெழுகு வைக்கபட்டிருந்த மேசை அருகே வந்தேன்.

அதை மிகவும் அருகிலிருந்து கூர்ந்து கவனித்தேன்,



அளவில் சிறிய அந்த மெழுகு வர்த்தி அளவில் பெரிய அந்த அறை முழுவதும் வெளிச்சம் பரப்பி, இருளின் அச்சத்தை போக்கியதுமன்றி பார்வைக்கு பொருட்கள் புலப்படும்படி செய்த அந்த மகத்தான விந்தையை எண்ணி வியந்த அந்த நேரத்தில் அந்த மெழுகின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை கவனிக்க தவறவில்லை.

மெழுகின் ஆயுள் முடியபோகின்றதே என எண்ணி துரிதமாக வந்தவேலையை முடித்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டேன்.

அப்போதுதான் உரைத்தது அந்த மெழுகுவர்த்தி உருகவில்லை அது அழுகின்றது என்று.

அடடா, நம் சுய நலத்திற்க்காக ஒரு மெழுகுவர்த்தியை அழித்துவிட்டோமே , தன்னை இப்படி இவன் அழித்து விட்டானே என நினைத்து , சூடு தாங்கமுடியாமல், அந்த மெழுகு வர்த்தி அழுகின்றதோ?


மானசீகமாக அந்த மெழுகு வர்த்தியிடம்  பேச்சு கொடுத்தேன் .

தயவாக என்னை மன்னித்துவிடு, நீ இப்படி அழிவாய் என தெரிந்தும் நான் உன்னை என சுய நலனுக்காக எரித்துகொண்டிருக்கின்றேன், ஆனால் நீ அழுவாய் என நான் கொஞ்சமும் நினைக்கவில்லை, ரொம்ப சாரி.

இதோ இப்பவே நீ எரிவதை அனைத்து உன் எஞ்சிய உடலையும்  உயிரையும் நான் காப்பற்ற போகிறேன்   என சொல்லி என் உதடுகளை குவித்து ஊதி அணைக்க முற்பட்ட வேலையில்......

அந்த மெழுகுவர்த்தியும் என்னிடம் மானசீகமாக பேசியது.

இத்தனை கனிவுடனும், கரிசனையுடனும் என் மீது இரக்கப்படும் உன்னை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது, ஆனால் நீ நினைக்கும் படி நான் என்னை யாரோ அழிப்பதற்காக  அழவில்லை.

என்னால் பலனடைதவர்கள் கையாலேயே அழிய நேருகின்றதே என நான் நினைத்து அழுவதாக  இந்த கண்ணீருக்கு  நீங்கள்  அர்த்தபடுத்திகொள்வது  சரியல்ல.

என்னால் யாருக்கோ எந்தவிதத்திலேயோ பயனுள்ளவனாக இருக்கின்றேனே, நான் பிறந்த பலனை அடைந்து விட்டேனே என எண்ணி நான் சிந்தும் சிந்த கண்ணீர் அழுகையின் கண்ணீரல்ல. இது ஆனந்த கண்ணீர்.

நான் இன்னும் கொஞ்சநேரத்தில் இந்த உலகை விட்டு பிரிய போகின்றேன்.

 எனினும் , நான் இந்த உலகத்தில் பிறந்தேன், வாழ்ந்தேன், கொஞ்சமாவது என்னால் முடிந்த நன்மையை செய்தேன் என சொல்லிக்கொள்ள என் எச்சமாக - மிச்சமாக நான் விட்டுச்செல்லும் இந்த கண்ணீர் துளிகளின் வடுவைதவிர, வேறு எந்த நினைவோ இல்லையென்றாலும் நான்  விட்டுச்செல்லும் இந்த கண்ணீர் துளிகள் என்னை என் பணியை , கடமையை சரிவர ஆற்ற பேருதவிசெய்த உன்னை நினைத்து.

 உனக்காக நான் சிந்திய ஆனந்த கண்ணீரின் வடுக்களேயன்றி, நான் சோகத்தில் , அல்லது என்னை கொளுத்தியதால் ஏற்பட்ட நெருப்பு காயத்தால்  உண்டான வேதனையால் துடித்த -  வடித்த சோக கண்ணீர் அல்ல என சொன்னது.

அந்த மெழுகு வர்த்தியின் பெரிய மனதை எண்ணி, என் மனதுருகி, எரிந்ததுபோதும் உன்னை இனியும் அழியவிடமாட்டேன் என் சொல்லி மெழுகின் அருகே என் உதடு குவித்து  மீண்டும் ஊத இன்னும் கொஞ்சம் அருகில் செல்லவும் அந்த மெழுகின் ஒளி இரண்டு மூன்றுமுறை வேண்டாம் வேண்டாம் என சொல்வதுபோல் அசைந்து  முழுவதுமாக உருகி அணைந்துபோனது.

இப்போது அந்த மெழுகின் தியாக உள்ளத்தையும், அதன் பெருந்தன்மையையும் உருகி அழிந்தததைகூட  ஆனந்த கண்ணீரென பிரகடனபடுத்தி இடம்தெரியாமல் கரைந்து போன அந்த மெழுகுவர்த்தியை எண்ணி என் மனம் கரைந்து-கறைந்து   கண்ணீர் வடித்தது-  ஆனந்த கண்ணீர்.

இந்த மெழுகைப்போல் தன்னலமற்ற பொது தொண்டாற்றும் மனித நேயமிக்க மனிதர்கள் எங்கேனும் இருப்பார்களானால் இந்த பதிவு அந்த மனிதர்களுக்கு அர்ப்பணம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

  1. இந்த மெழுகைப்போல் தன்னலமற்ற பொது தொண்டாற்றும் மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கு,

      மெழுகைபோல் தன்னலமற்ற மனிதர்கள் இருப்பதாக சொன்ன தகவலுக்கும் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி. இந்த பதிவு அவர்களுக்கே அர்ப்பணம்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. இந்த மெழுகைப்போல் தன்னலமற்ற பொது தொண்டாற்றும் மனித நேயமிக்க மனிதர்கள் எங்கேனும் இருப்பார்களானால் இந்த பதிவு அந்த மனிதர்களுக்கு அர்ப்பணம்.//

    மிகவும் அருமையான் பதிவு நண்பரே! ஆழமான கருத்துள்ள பதிவு. மெழுகை தியாகத்திற்கு சொல்லுவது வழக்கமென்றாலும், மெழுகு ஒளிர்ந்து கரைவதை வைத்து எப்படி ஒரு அற்புதமான படைப்பை எழுதியுள்ளீர்கள்!! பாராட்டாமல் இருக்கமுடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பார்ந்த நண்பர்களே,

      மெழுகின் ஒளியில் பயணித்து பதிவை பாராட்டியமைக்காக எனது நன்றிகள்.
      எம்மோடு உங்களின் பயணம் தொடர்வதை எண்ணி என் மனமும் வடிக்கின்றது - ஆனந்த கண்ணீர்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. மெழுகு வர்த்தி எறிகின்றது, எதிர் காலம் தெரிகின்றது ! என்ற பாடல் நினவிற்கு வருகின்றது. மேலை நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தாமே இந்த மெழுகுவர்த்திக்கு இப்படி ஔர் பதிவு போட்டால் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் வாழும் பதிவர்கள் இல்லத்தில் மெழுகுவர்த்தி ஒரு குடும்ப அங்கச்தினர் ஆயிற்றே? அவர்கள் எப்படியெல்லாம் இந்த மெழுகுவர்த்தியை நேசிக்க வேண்டும்.

    சிறந்த பதிவு, தன் அழிவில் மற்றவர் வாழ்வு.. .அதுவும் அந்த மெழுகுவர்த்தி தான் "பிறவி பயனை" அடைந்தேன் என்று சொல்கையில், விரலை திரியாமல் மெழுகுவர்த்தியின் நெருப்பில் வைத்தது போல்.. சாட் என்று ஒரு சூடு.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு,

      பதிவின் ஒளியில் பயணித்து மெழுகின் மேன்மையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  5. மெழுகிற்காய் அழுத அரசருக்கு,
    வணக்கம்,
    மெழுகு அதன் மரபு இயல்பு ஒளி கொடுப்பது,
    தாங்கள் அழுதது தான் வித்தியாசம்,
    ஆனால் நான் வாங்கும் மெழுகு அதனை ஏற்றாமல் அப்படியே வைத்துள்ளேன்,
    பதிவு அருமை,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு மிக்க நன்றி.

    வாங்கி வைத்துள்ள மெழுகை எப்போது ஏற்றுவீர்கள், அதன் ஆனந்தத்தை ஏன் தள்ளி போடுகின்றீர்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசருக்கு வணக்கம்,
      அது அழகிற்காய் ,,,,,,,,,,,,,,
      என் மெழுகைப் பொறுத்தவரை நான் அதனை ஏற்றாமல் என்னுடன் வைத்து இருப்பது தான் ஆனந்தம்,
      நன்றி.

      நீக்கு