பின்பற்றுபவர்கள்

புதன், 10 டிசம்பர், 2014

எந்த தேசம் எந்தன் தேசம்?



ஏற்புரை - நினைவலைகள் 


நண்பர்களே, 

சமீபத்தில் , நான் எந்த தேசத்தில் இருக்கின்றேன் என சில வாசக அன்பர்கள் என்னிடத்தில் மின் அஞ்சல்  மூலம் கொஞ்சம்   கொஞ்சலாக கேட்டிருந்தனர்.


இதில் ஒளிவு மறைவிற்கு  என்ன இருக்கின்றது.

இந்த பதிவில் சொல்லி இருக்கின்றேன் பதிலை.

பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட எமது "நினைவலைகள்" கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவன்று, பல அறிஞர் பெருமக்கள் உரையாற்றி முடித்தபின்னர் ஏற்புரை வழங்க நான் அழைக்கப்பட்டேன், அது என் கடமையும்கூட.

அந்த நாள் நிகழ்த்திய ஏற்புரை  இன்று கொஞ்சம் எந்தன் நினைவலையில் மிதந்து  வந்ததை - நினைவு வலையில் மீண்டும் சிறைபடுத்தி உங்களின் மேலான பார்வைக்கு சமர்பிக்கின்றேன்.

அன்று கேட்க(கொடுத்துவைக்காதவர்கள்) வாய்ப்பில்லாதவர்கள் இப்போது கேட்டு உங்களின் கருத்துகளை பதிவு  செய்யுங்கள்.

இனி வருவது என்னுரை:

" ஆதியுமாய் அந்தமுமாய்
அனைத்துயிர்க்கும்   தந்தையுமாய்
ஜோதியுமாய் நீதியுமாய்
அகிலலோக அதிபனுமாய்

விண்ணிலே வீற்றிருந்தும்
விளங்காத விந்தையென 
மண்ணிலும் என்னிலும்
மாட்சியுடன் ஆட்சிசெய்யும்

மறை போற்றும் மாமணியே !
மாசில்லா திருசுடரே! - எம்மின்
கறை நீக்கி கரை சேர்ப்பாய்
கரம் குவித்து பதம் பணிந்தேன்.

எனை ஈன்ற அன்னையை வணங்குகின்றேன்
தனை உருக்கி எனை உயர்த்தி
உயர்வானம் சென்ற வாழும் -என்
தந்தையை வணங்குகின்றேன்.

அமிழ்தொத்த தமிழை வணங்குகின்றேன்
எனை தாங்கும் என் மண்ணை வணங்குகின்றேன்.

அழைப்பினை அங்கீகரித்து
அரங்கத்தை அலங்கரிக்கும் - உங்கள்
அத்துனை  போரையும்
அன்போடு வணங்கிவிட்டு

துவங்குகின்றேன்  என்னுரையை  ஏற்புரையாக- 
இதனை ஏற்பீராக.

எங்கு  சென்றாலும் நான் தமிழோடு வாழ்கிறேன் என்பதற்கு
இப்புதினமே சாட்சி என்றால் அது எள்ளின் முனையளவும் மிகையானதல்ல.


அன்று

வெள்ளையனே வெளியேறு என அவனை  துரத்திவிட்டு

 இன்று 

வெள்ளையனே கொஞ்சம் வெளியே இரு இதோ நானும் வருகின்றேன் என்பதுபோல்

வெள்ளையர் தேசத்தில் குடியிருந்தாலும், உள்ளமெல்லாம் தமிழின் ஆதிக்கம்தான்.

மத்திய உணவு இடைவேளை நேரங்களில் உண்ட உணவு செரிப்பதற்காய் 
பொழுதை கழிப்பதற்க்காய் கிறுக்கிய கிறுக்கல்கள் அல்ல இவை.

உண்ணும் உணவும் இன்னும் என் உணர்வும் தமிழால் வந்ததென்பதை
உணர்ந்து படைத்த செதுக்கல்கள் இவை.

லண்டன் தமிழ் தொலைகாட்சிக்காய் செதுக்கிய  எமது படைப்புகளோடு அனுப்பியிருந்த இணைப்பு கடிதத்தின் வாசகம், "தரமிருந்தால் ஒருதரம்  எமை அழைத்து பேசவும்" என குறிப்பிட்டிருந்ததை கண்டு அலையலையாய் அன்பு ஆணைகளிட்டு அடியேனை அடுக்கடுக்காக  எழுதவைத்து  லண்டன் நேயர்கள் சந்தையில் என் படைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கால்முளைத்த கத்தரிக்காய்கள் சந்தைக்கு வந்தாகவேண்டுமல்லவா?

மேலை நாட்டு தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்ததுபோல் என் மண்ணின் உள்ளங்களும் கவித்தேனை பருகவேண்டி என் உள்ளங்கையில் அள்ளிக்கொணர்ந்த நினைவலைகளின் முதல் துளிகள்  இவை.

பள்ளிபருவம்  முதல் பற்றுகொண்ட கவிதை  காதலை எனை சுற்றிலும் என் சிந்தனை முற்றிலும் பற்றிகொள்ளும் வண்ணம் ஆர்வ தீயை பற்றவைத்தவர்கள் பலர் அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிபடைக்கின்றேன்.

எந்த ஒரு பெரிய ஜீவ நதியின்  தொடக்கமும் கையளவு நீர்கசிவில்தான் ஆரம்பமாகும் என்பர் அதுபோல அடியேனின் இந்த முதல் முயற்சி சிறிய முயற்சியாக இருந்தபோதும் பன்னீர் தெளித்து பாராட்டி ஊக்குவிக்கும் உங்கள் அனைவருக்கும், குறிப்பாக என் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,பத்திரிகை தோழர்கள், என் பிரியமுள்ள நண்பர்கள், என் உடன் பிறப்புகள், உடலில்  பாதியும் உயிரின் மீதியுமான  குடும்பத்தினர் அனைவரையும் நன்றியோடு நினைத்துபார்கின்றேன் நழுவி விழும் ஆனந்த கண்ணீரால் கொஞ்சம் நனைத்துபார்கின்றேன்.

இதுபோன்று உங்களின் ஊக்கமும் பாராட்டும் என்னை இனியும் எழுததூண்டுவதாய்  உணர்ந்து உங்கள் அனைவருக்கும் மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றியினை கரம் கூப்பி தெரிவித்து என் ஏற்புரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.



நன்றி.

வணக்கம்.

ஜெய்ஹிந்த்.

கோ

9 கருத்துகள்:

  1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
    என்றனர் நம் முன்னோர்
    தாய் மண்ணை மறக்காத
    தாய் மொழியை விலக்காத
    தாங்கள் பாராட்டிற்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கரந்தையார் அவர்களுக்கு,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    கணியன் பூங்குன்றனார் எனது(நமது)தூரத்து சொந்தம் அல்லவா?


    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு

  3. தாயகம் கடந்தும் தமிழ் மணம் பரப்பும் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! பெருமையாகவும் இருக்கின்றது. நாங்கள் இங்கிருந்தாலும் எங்கள் தமிழ் எல்லாம் ஒளி குறைவான தமிழ்தான். தங்கள் தமிழ் ஒளி வீசுகின்றது. குன்றின் மீதிட்ட விளக்கு போல!
    அழகிய தமிழ் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது நண்பரே! தமிழ் இனிமை என்று சொல்லுவது உண்மைதான். தங்கள் ஏற்புரையும் இனிக்கின்றது. அழகிய தமிழால்! இந்தத் தமிழ் உங்கள் அறிவுடன் கலந்து உங்களுக்கு புகழ் பெற்றுத் தந்துள்ளதே!!!

    வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      என்னை பாராட்டவேண்டும் என்பதற்காக என் ஏற்புரையை உயர்வாக சொல்லவேண்டும் என்பதற்காக உங்களை உங்களின் எழுத்துகளை நீங்கள் தாழ்த்திகொள்வது ஏற்புடையதாக இல்லை, என் எழுத்து குன்றிலிட்ட தீபமாய் ஒளிர்வதாய் நீங்கள் சொல்வதும் அவ்வகையில்தான். ஒருவேளை அப்படியே உங்களின் சந்தோஷத்திற்காக என் எழுத்து குன்றின் தீப ஒளி என்றால் உங்களின் எழுத்துக்கள் குன்றுகளை (உள்ளங்களை) செதுக்கும் உளி என்பதும் சரியான திறனாய்வு.

      பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி

      நட்புடன்

      கோ.

      நீக்கு
  4. "அட பாவி" என்று என்னை நானே நொந்து கொள்கிறேன். இவன் அல்லவா தமிழன்! என்னே ஓர் ஆவல்.. என்னே ஓர் திறமை . என்னே ஓர் படைப்பு. அருமை. வாழ்த்துக்கள்!

    எனக்கு தமிழ் மேல் ஒரு தலை காதல் என்பது எவ்வளவு உண்மை என்று மீண்டும் புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் விசுவிற்கு,

      தமிழின் மீதுள்ளது ஒருதலை காதல் என்பதால்தான் நீங்கள் உங்கள் காதலுக்கு இத்தனை மரியாதை கொடுக்கின்றீர்கள், இன்னமும் உங்கள் காதலுக்கு உண்மை உள்ளவராக இருக்கின்றீர்கள்.

      "அப்பாவியாக" தமிழின்மீது ஒருதலை காதல் கொண்ட நீங்கள் உங்களை "அடப்பாவி" என்று நொந்துகொள்வது சரியல்ல.

      உங்களின் ஊக்கமும் பேராதரவும்தான் உங்களின் பாராட்டுக்கு என்னை பாத்திரவானாக்குகின்றது என்பதுதானே உண்மை.

      பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி

      நட்புடன்

      கோ.

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. ம்ம்,,,,,,,
    நல்லா இருக்கு,
    நன்றி
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு