பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 டிசம்பர், 2014

ஜிங்கிள் பெல்! ஜிங்கிள் பெல்!!

எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா ஊர்களைபோலவே இங்கும் விழாகோலம்  கலை கட்டிவிட்டது.


நாடு முழுதும் உள்ள பெரும்பான்மையான  வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலக கட்டிடங்கள் , சிறிய டீ கடைகளிலிருந்து பெரிய பெரிய பல்பொருள் அங்காடிகள்சாலைகள், தெருக்கள்,சந்து பொந்து , மரம் செடி கொடிஎல்லாம் வண்ண விளக்குகளால் வகை வகையாக அலங்கரிக்கப்பட்டு ஊரே அல்ல அல்ல நாடே மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிகிடக்கின்றது.

கட்டிடங்களின் வெளியில் மட்டுமல்லாது, உட்  புறங்களிலும், ஒவ்வொரு, தளத்திலும் , ஒவ்வொரு துறைகளிலும்,இன்னும் சொல்லபோனால்,அலுவலகத்தின் ஒவ்வொரு டேபிளிலும்,அதன் மீது வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கணினிக்கும் அலங்காரம் செய்து தங்களின்  மகிழ்ச்சியை வெளிபடுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இதில், எந்த துறை, அல்லது எந்த தளம் மிக நேர்த்தியாக, கண்கவர் வண்ணம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதோ, அதற்க்கு சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த மாதமே,ஒவ்வொரு துறை அலுவலர்களும் தமது துறையை சார்ந்த அனைவருக்கும் என்னென்ன உணவு,பரிசுப்பொருள் , எங்கு சென்று உணவருந்துவது போன்ற திட்டங்களை வகுத்து அதற்கேற்றார்போல செயல் பட துவங்கி விட்டனர்.

எதற்கு இத்தனை குதூகலம்.

இது டிசம்பர் மாதம் அல்லவா?

இந்த மாத இறுதியில் வருகிறதே ஒரு மாபெரும் பண்டிகை அதை கொண்டாடத்தான் இத்தனை ஆரவாரம்.

இந்த பண்டிகை இங்கே ஒரு தேசிய பண்டிகை.

இந்த மண்ணில், பலதரப்பட்ட இன மொழி, மதங்களை சார்ந்தமக்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், இந்த நாடு ஒரு கிருத்துவ நாடாக தனது அடையாளத்தை நிலை நிருத்திகொண்டிருக்கின்றது என்பதே இத்தனை பெரிய அளவில் நாடு தழுவிய ஒரு கொண்டாட்டமாக இந்த பண்டிகை திகழ்வதற்கு காரணம்.

அப்படி என்ன பண்டிகையை இவர்கள் கொண்டாட இத்தனை ஆவலுடன் எதிர்   நோக்கி இருக்கின்றனர்?

அது ஏசு கிறிஸ்த்துவின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைத்தான்.

கிறிஸ்மஸ் என்றால் எல்லோருக்கும் விருப்பம் தானே.

எனது ஆரம்ப  பள்ளி , உயர்நிலை, மேனிலை பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள்  கிறிஸ்த்துவ  பாதிரிமார்களின் கல்வி நிறுவனங்களில் நிலைகொண்டிருந்ததால்தானோ என்னவோ எனக்கும் கிறிஸ்மஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்.

இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பாக, எல்லா ஊர்களிலும் உள்ள முக்கிய சாலைகளெங்கும் இரு மருங்கிலும் அழகான ஜோடனைகள் செய்து வைத்திருக்கின்றனர்..

கடைகள் எங்கும்   மக்கள் கூட்டம் அலைமோதுகிறது , தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்களுக்கான பரிசு பொருட்கள் வாங்குவதற்கு..

புதிதாக நகரங்களின் மைய பகுதிகளில் கிறிஸ்மஸ் மார்கெட் என்று சொல்லப்படும் பல தற்காலிக கடைகள் அமைக்கபட்டிருக்கின்றன., அந்த கடைகள் பெரும்பாலும்  ஜெர்மனி , பிரான்ஸ் போன்ற வெளி நாட்டவரின் கடைகளாகவும் சாதாரணமாக இங்கே எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடாத அரிதான கண்கவர் பொருட்கள் நிறைந்த கடைகளாகவும், ஜெகஜோதியாக காணப்படுகின்றன.


குறிப்பாக அந்த கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களை இதுபோன்ற தருணங்களில் மட்டுமே வாங்கி உண்ண முடியும்.

குளிர் காற்றும் பணியும் வாட்டிவதைக்கும் சீதோஷணம் நிலவினாலும் அதை பொருட்படுத்தாமல் கடை கடையாக ஏறி இறங்கி அங்கே விற்கும் புதிது புதிதான பொருட்களை பார்க்கவும் வாங்கவுமே மக்கள் விரும்புகின்றனர்.

அலுவலகங்களில் பல குழுக்கள் தங்களுக்குள்ளாக பல நிகழ்ச்சிகளை திட்டமிடுவார்கள், குறிப்பாக கிறிஸ்மஸ் டின்னர்.

இந்த டின்னருக்கென்று ஒவ்வொரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகமே தமது நிதி திட்டத்தில் ஒதுக்கி இருப்பார்கள்.

இது போன்ற துறை டின்னர் தவிர தலைமை  நிர்வாகதிற்க்கென்று ஒரு பட்ஜெட் ஒதுக்கீடும் உண்டு அதில் எல்லா துறை ஊழியரும் கலந்துகொண்டு உணவருந்துவார்கள்.

இந்த டின்னர் அல்லது லஞ்ச் விஷயங்கள் மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே ஆரம்பித்துவிடும்.

கிறிஸ்மஸ் ஷாப்பிங்  செய்ய, பல அரசு மற்றும்  தனியார் நிறுவனங்கள் , ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய அரை நாள் விடுப்பு கொடுக்கும். இதை ஊழியர்கள் அந்த மாதத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் பயன்படுத்திகொள்ளலாம்.

மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள்கிருத்துவர்கள் அல்லாதோர் வீடுகளிலும் கிறிஸ்மஸ்  மரங்கள், அலங்காரங்களை பார்க்கமுடியும்.

எல்லோர் வீடுகளிலும் கிறிஸ்மஸ் மரம்  அலங்கரித்து வைத்திருப்பார்கள்.

யார் வீடு விமரிசையாக உள்ளேயும், வெளியேயும் அலங்கரிக்கபட்டிருக்கிறது  என்பதில் சில வேளைகளில் பெரிய போட்டிகூட ஏற்படுவதுண்டு, ஏனென்றால் அவர்களின் வீட்டை குறித்து உள்ளூர் மற்றும் தேசிய தொலைகாட்சிகள் மற்றும் செய்தி தாள்களில் செய்திகளும் வீடியோ , புகைப்பட தொகுப்புகள் காட்டப்படும்.

கிறிஸ்மஸ் என்றாலே பிரத்தியேகமாக நினைவுக்கு வருவது,பரிசுப்பொருள்,வாழ்த்து அட்டைகள்.

விதவிதமான வாழ்த்து அட்டைகளை பார்க்க முடியும், இந்த வாழ்த்து அட்டைகளை, பரிசு பொருட்களை  அஞ்சலில் அனுப்புபவர்களின் வசதிக்காக எல்லா தபால் நிலையங்களிலும் விசேஷித்த கூடுதல் கௌன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கின்றன, அதிலும்  கிறிஸ்மஸ் சிறப்பு ஸ்டாம்புகள் அச்சடிக்கப்பட்டு பயன் படுத்தபடுகின்றன.

ஏற்கனவே சொன்ன மாதிரி எல்லா அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் , நிறுவனங்கள் , அங்காடிகளில், மாள்களில்  விசேஷித்த மின்விளக்கு அலங்காரங்களை செய்து, அதை பிரத்தியேக நாளில் துவக்கி வைப்பார்கள், அதாவது விளக்கை ஆன் செய்ய ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்வார்கள், அன்று சில பிரபல பாடகர்,அல்லது பிரபல இசை குழுக்களை வரவழைத்து அந்த விளக்குகளை கவுண்ட்  டவுன் செய்து துவக்கி வைப்பார்கள், அதனை நேரில் காண மக்கள் கூட்டம் அலை மோதும் எப்போதும்.

ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகள் நடைபெறும், விசேஷித்த நாடகங்கள் பிரத்தியேக திரைப்படங்கள் திரையிடப்படும், தொலைக்காட்சி, மற்றும் வானொலியில் இந்த மாதம் முழுவதும் கிறிஸ்மஸ் சமந்தமான நிகழ்ச்கிகள், பாடல்கள்,சமையல் நிகழ்சிகள், சொற்பொழிவுகள் தான் நிரம்பி வழியும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர் நிகழ்ச்சிகள், கிறிஸ்மஸ் கேரல்ஸ்,நாடகங்கள், சிறுவர் நிகழ்சிகள், ஐக்கிய விருந்து, சேரிட்டி நிகழ்சிகள் நடைபெறும்., ஆலயங்கள் உள்ளேயும் வெளியேயும் அழகாக அலங்கரிக்கபட்டிருக்கும்.

பல பெரிய ஷாப்பிங் மாள்களில் கிறிஸ்மஸ் தாத்தா சந்திப்பு ஏற்பாடு செய்யபட்டிருக்கும். அதாவது, கிறிஸ்மஸ் தாத்தா ஒரு அழகிய சிறப்பான மாளிகை போன்ற அமைப்பும் அலங்காரமும் கொண்ட தற்காலிகமாக தோட்டா தரணியின் பாணியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தின் உள்ளே ஒரு அறையில் அமர்ந்திருப்பார். அவரை காண கட்டணம் செலுத்தி வரிசையில் நின்று ஒவ்வொருவராக அல்லது ஒவ்வொரு குடும்பமாக செல்லவேண்டும், கிறிஸ்மஸ் தாத்தா அழகான சிகப்பு மற்றும் வெள்ளை நிற நீண்ட அங்கியுடனும், நீளமான வெள்ளை தாடியுடனும், வட்ட வடிவிலான கண்ணாடியும் அணிந்து சாந்த சொரூபியாக அமர்ந்துகொண்டு, புன்சிரிப்புடன், தன்னை பார்க்க வருகின்ற சிறியவர் மற்றும் பெரியவர்களுடன் சிறிது நேரம் உரையாடுவார் , பின்னர் அவரவர் வயதுகேற்ப ஏற்கெனவே அழகிய வண்ண பேப்பர்களால் பார்சல் செய்யப்பட்ட பரிசுபொருட்களை ஆளுக்கொன்றாய் கொடுத்து வாழ்த்து சொல்லுவார். தேவையானவர்களுக்கு தாத்தாவுடன் சேர்த்து புகைப்படமும் எடுத்து கொடுப்பார்கள்.  

கிறிஸ்மஸ் அன்றும் அதன் அடுத்த நாளும் தேசிய விடுமறை, எனினும் பெரும்பாலானவர்கள் அத்துடன் சேர்த்து தங்களின் ஆண்டு விடுமுறையையும் இணைத்து  நீண்ட நாட்கள் விடுமுறையை கொண்டாடுவார்கள்.

கிறிஸ்மஸ் காலங்களில் தங்களது உறவினர்கள், குறிப்பாக தூரத்திலுள்ள தங்கள் பெற்றோர்கள் உடன் பிறப்புகளை காணவும் அவர்களோடு ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு வரவுமே இதுபோன்ற விழா - விடுமுறை நாட்களை தங்களது நட்பும் உறவுகளும் விழாமல் பாதுகாக்க பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய ஆடம்பரமாக கொண்டாடும் இந்த நாளின் சிறப்பு நம் அனைவருக்கும் தெரிந்தவண்ணம், இது கிறிஸ்த்தவர்கள் தங்கள் தெய்வமாக  வணங்கும் ஏசு கிறிஸ்த்து பிறந்த அந்த டிசம்பர் இருபத்தைந்தாம் நாளின் நினைவாக.

ஆனால் கிறிஸ்த்து பிறந்தது, ஏழ்மை கோலத்தில், ஒரு மாட்டு தொழுவத்தில்.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு டிசம்பர் மாதம் 25 ஆம் நாள்  இஸ்ரேல் நாட்டின் ஆதிக்கத்துக்குட்பட்ட    பாலஸ்தீனத்தில் உள்ள சிறிய ஊராகிய பெத்லகேம் சென்றிந்தபோது ஏசுபிரான் பிறந்த  அந்த மாட்டு தொழுவம் இருந்த இடத்தில் குழந்தை ஏசுவை கிடத்தி வைத்ததாக கருதப்படும் அந்த புனித இடத்தை மண்டியிட்டு வணங்கி முத்தமிட்ட தருணம் வாழ்நாளில் மறக்ககூடுமோ? அந்த பயணம் பற்றி வேறொரு சந்தர்பத்தில் விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

ஏழ்மையை - எளிமையை உலகுக்கு உணர்த்த எளியவராக பிறந்த மகானின் பிறந்த நாளை மக்கள் ஆடம்பரம்மாக ஏகத்துக்கு வீணாக செலவுசெய்து கொண்டாடுவதை விட தங்களைவிட எழ்மையானவருக்கு தங்களாலான உதவிகளைசெய்து அவற்களின் வாழ்வில் ஒளியேற்றி வழி காட்டுதலையே இறைமகன் ஏசு விரும்புவார் என நினைக்கின்றேன்.

ஏன் இந்த டிசம்பர் இருபத்தைந்தை இந்த பதிவில் சொல்ல நினைத்தேன்?

ஒருவேளை வாசகர்களாகிய உங்களின் பேராதரவோடு வெற்றிநடை போடும் எனது 25 ஆவது பதிவு  இது என்பதாலா?

உலகெங்கிலும் கிறிஸ்மஸ் பண்டிகையை ஆவலுடன் கொண்டாட காத்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.

முதுகலை இரண்டாம் ஆண்டு எங்கள் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது இயற்றிய பாடல் இதோ:

“மலர்கள் மலர்ந்து ஆடுதே!
மகிழ்கொண்டாடுதே!
மான்கள் துள்ளி ஓடுதே!
குயில்கள் பாடுதே!
முயல்கள் குழிகள் விட்டு எழுந்து
எட்டி பார்க்குதே!
மகிபன் பிறந்த மகிழ்ச்சி கீதம்
எங்கும் கேட்குதே.!

தேவன் வந்த சேதி கொண்டு
தூதன் சொன்னதால்
ஆயர் பாடி அகமகிழ்ந்து
ஆர்பரித்தனர்
பாவம் போக்க பாரில் வந்த
பாலன் ஏசுவின்
பாதம் பணிந்து நாமம் போற்றி
நாமும் பாடுவோம்.

விண்ணில் விளைந்த  விந்தை ஒளியில்
சிந்தை மகிழ்ந்ததால்
கண்கள் குளிர மன்னர் மூவர்
மழலை தொழுதனர்.
மின்னும் பொன்னும் வெள்ளிபரிசும்
கேட்க்கவில்லையே
உண்மை பொங்கும் வெண்மை உள்ளம்
இன்ப  எல்லையே !.


 குளிரின் சாரல் வீசும் ஏழை
குடிலில் பிறந்தவர்
குறைகள் இல்லா தேவ ரூபன்
அழகில் சிறந்தவர்
தளிரின் முகத்தில் தவழும் கருணை
இரக்க தீபங்கள்
தரணி எங்கும் ஏற்றி பரனின்
பரணி பாடுவோம்".


"WISH  YOU ALL   A  VERY  MERRY  CHRISTMAS" .

நன்றி!

மீண்டும் (சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான ஒரு பதிவு! தேவனைப் பற்றிய பதிவு! அவருக்குப் படைத்த உங்கள் கவி வரிகளும் அருமை நண்பரே!. அந்த மாகானின் பிறப்பிடம் கண்டு வணங்கிய தங்கள் பயணக் குறிப்பைத் தரலாமே! தங்களுக்கும் எங்கள் அட்வான்ஸ்ட் மெரி கிறிஸ்மஸ்!

    பதிலளிநீக்கு
  2. அன்பிற்கினிய நண்பர்களே,

    ஜிங்கிள் பெல்லின் ஓசை உங்கள் செவிகளில் ஊடுருவி சென்றததை எண்ணி மகிழ்கின்றேன், எகிப்பது, இஸ்ரவேல், பாலஸ்தீன, பயண விவரங்களை பின்னொரு சந்தர்பத்தில் எழுத முயல்கிறேன்.

    பதிவினை பாராட்டும் உங்களுக்கும் என் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    வருகைக்கும் வளமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் விரிவான ஒரு பதிவு. நன்றாகவே அலசியிருக்கிறீர்கள். அந்த கவிதை அருமை நண்பரே,
    நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்து விஷயங்களும் இங்கும் இருக்கிறது.
    வெளிநாடுகளில் கிறிஸ்மஸ் விழாவை எப்படி கொண்டாடுவார்கள் என்று தெரிவதற்கு இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ள முடியும். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கன் அவர்களுக்கு,

      உடனே எமது பதிவினை படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

      சமயம் வாய்க்கும் போது மற்ற பதிவுகளையும் படித்து உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

      எமது சமீபத்திய பதிவுகள் "மாடிப்படி மாது",அலைகள் ஓய்வதில்லை"

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

      சாந்திபோம்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  4. white christmas பார்க்க, அனுபவிக்க ஆசை உண்டு ... கொம்புத்தேனாக போய்விட்டது .... ;(

    பதிலளிநீக்கு
  5. தருமி ஐயா அவர்களுக்கு வணக்கம்.

    ஏன் அப்படி சொல்கின்றீர்கள், ITS NOT TOO LATE ,

    பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி,

    கோ

    பதிலளிநீக்கு