பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 டிசம்பர், 2014

சொகாசூ!


அன்பார்ந்த நண்பர்களே!

இது என்ன தலைப்பு? 

இதற்க்கு என்ன அர்த்தம்?

எதை பற்றி சொல்ல போகிறோம்?

சரி அதை போகப்போக தெரிந்துகொள்வோம்.


கல்லூரியில் படிக்கின்ற காலங்களில், பல மாலை நேரங்களில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன், அருகிலிருக்கும் சில சிற்றுண்டி சாலைகளுக்கு நண்பர்களுடன் சென்று சிற்றுண்டி சாப்பிடுவது வழக்கம்.

எந்த சிற்றுண்டி விடுதிக்கு போகிறோம் என்பதை பொறுத்து என்ன சாப்பிடுவது என்பது முடிவாகும்.

யார் யார் என்ன சாப்பிடுகின்றோமோ அதற்கான பணத்தை அவரவர் எங்களில் யாராவது ஒருவரிடம் கொடுக்க வேண்டும் அல்லது எங்களில் யாராவது ஒருவர் பணத்தை செலுத்திவிட்டு பின்னர் மற்றவர்களிடமிருந்து வசூலித்துகொள்வதும் எங்களின் வழக்கம்.  

ஒரு குறிப்பிட்ட சிற்றுண்டி விடுதியில் எனக்கு பிடித்த சிற்றுண்டிகளில் ஒன்று சோலா பூரி.


ஆஹா ஹா....

அந்த வட்டவடிவிலான பெரிய பூரி  அது இரண்டு பக்கங்களும் நன்றாக உப்பிய நிலையில் சுடசுட கடாயில் இருந்து எடுத்த அடுத்த இரண்டாவது நிமிடம் நமக்கு முன் நம் மேசையில் ஒரு பெரிய எவர் சில்வர் தட்டில் அந்த தட்டின் வட்ட  வடிவில் வெட்டப்பட்ட வாழை இலையின் மேல் வைத்து  ஆவி பறக்க பரிமாறப்படும். 

அதற்க்கு தொட்டுக்கொள்ள கொண்டை கடலையில் செய்யப்பட்ட , வர்ணிக்க முடியாத சுவையுடன்  பட்டை , இலவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற  விசேஷித்த வாசனை வஸ்த்துக்கள் போடப்பட்ட மசாலா கொடுப்பார்கள்.


 ஒரு சோலாபூரிக்கு இரண்டு கப் மசாலா கொடுப்பார்கள் அந்த இரண்டு கப் மசாலாவையும் அந்த பெரிய பூரியின் பாதி சாப்பிட்டு முடிப்பதற்குள் முடித்துவிட்டு கூடுதலாக இன்னும் கேட்பேன்..

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கொடுப்பார்கள், அதை எவ்வளவு சாப்பிட்டாலும் சலிக்காமல் இருக்கும்.

சோலாபூரிக்கு பின்னர் ஒரு ஸ்ட்ராங்கான பில்டர் காபி.

ஆஹா..ஹா...ஹா அதன் சுவையும் திருப்தியும்  அலாதிதான்.

அதே போல வேறு ஒரு சிற்றுண்டி சாலையில் வெங்காய ஊத்தாப்பமும் தேங்காய் சட்டினியும், கார சட்டினியும்  சாம்பாரும் கொடுப்பார்கள்.


வெங்காயம் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அதனுடன், கடலை பருப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி,கருவேப்பில்லை,தேங்காய் துண்டுகள் இட்டு அடிப்பக்கம்  பொன்னிறமாகவும் மேல்புறம் திருப்பி போடப்பட்டதால் ஆங்காங்கே அந்த வெங்காயம் நன்றாக பொரிந்து  கொஞ்சம் கருகிய நிறமுமாக  காணப்படும், இப்போது நினைத்தாலும் நாக்கில் எச்சை ஊறுகிறது,  பின்னர் ஒரு மசாலா டீயும் ....என்னே ஒரு காம்பினேஷன்.

அடுத்த ஓட்டலில் பரோட்டா , வெஜிடேபிள்  குருமா.


பரோட்டா ஒன்று அதுவே  சும்மா பெருசா அந்த பிளேட் சைசில் இருக்கும் அதற்க்கு தோதாக பட்டாணி, உருளைகிழங்கு கேரட், பீட்ரூட் , காலி பிளவர்  குருமா.


அந்த குருமாவுக்காகவே கொஞ்சம் கொஞ்சமா அந்த பரோட்டாவின் தோலை உரித்து அந்த குருமாவில் மூழ்கடித்து பாதி பரோட்டாவிலேயே குருமாவை தீர்த்துவிட்டு மீண்டும் குருமா வாங்கி சாப்பிட்டு விட்டு ,பின்னர் அந்த ஓட்டலின் பாதாம் பால் குடித்துவிட்டு வருவது   எனக்கு பிடித்த உணவுகளில் ஒருசில.

அடுத்த ஓட்டலில் பேப்பர் ரோஸ்ட்.


உண்மையிலேயே அந்த தோசையை முழுவதுமாக பிரித்து சமன் செய்தால் திரு துளசிதரன் மற்றும் கீதா அவர்களின் பன்னிரண்டு பதிவுகளை ஒரே பக்கத்தில் அதுவும் ஏரியல் FONT -12 லில் அச்சடிக்கலாம். அடுத்தபக்கத்தில் நண்பர் விசுவின் ஒரு மாத பதிவினை கொஞ்சம் அதே  FONT  -10 இல் அச்சடிக்கலாம். அவ்வளவு பெரிய முறுகலான தோசையும், அதற்க்கு தோதாக பரங்கிகாயும் முருங்கை காயும் பருப்பும் சேர்த்து தயாரித்த சாம்பாரும், தேங்காய் சட்டினியும் புதினா துவையலும் .....அப்பப்பா.

எங்கள் கல்லூரிக்கு அருகில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சிற்றுண்டி சாலைகள் அப்போதே இருந்தன.


சில வேளைகளில் புதிய பெயர்களுடன் சில ஐட்டங்கள் அறிமுகபடுத்தப்படும்
பெயர்கள் வாயில் நுழையாவிட்டாலும், வாங்கி வாயில் நுழைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஒருவேளை இந்த பதிவின் தலைப்பு  கூட அதுபோன்று ஒருவகை புதிய சைனீஸ் உணவு வகையோ?

இப்படியாக நாளொரு ஓட்டலும் பொழுதொரு பரோட்டா, பூரி, ஊத்தாப்பம், தோசை என்று  மாலை பொழுதுகள் மிகவும் இனிமையாகவும் சுவையாகவும் சென்றுகொண்டிருந்தன.

இப்படி இருக்க புதிதாக திறக்கப்பட்ட  வேறொரு உணவு விடுதி கண்ணில்  பட்டது.

அது "மெஸ்" என்று அழைக்கப்படும் வீட்டு தயாரிப்பு உணவுகள் விற்கப்படும் ஒரு சிறு ஓட்டல். 

 மத்திய உணவும் இரவு உணவு மட்டுமே பரிமாறப்படும் அசைவ உணவு ஓட்டல்.

அதுவும் அன் லிமிடட் மீல்ஸ்  - ஐந்து ரூபாய் மட்டுமே.

புதிய மெஸ் என்பதால் அங்கேயும் நாங்கள் செல்ல நினைத்து வருகிற  புதன் கிழமை மத்திய உணவுக்காக செல்ல திட்டமிட்டோம்.

புதன் கிழமை எங்களில் யாருமே வழக்கமான - வீட்டு மத்திய உணவு கொண்டுவராமல் அந்த மெஸ் சுக்கு போனோம் மொத்தம் ஆறு பேர்கள்.

எல்லோரிடமும்  பஸ் கட்டணம் தவிர  அந்த அன் லிமிடெட் சாப்பாட்டுக்கான காசு மட்டுமே  இருந்தது எனவே அன்று மாலை சிற்றுண்டிவேண்டாம் என முடிவு செய்திருந்தோம்.

சிறிய அளவிலான ஒரு மெஸ். 

நீளமான - கொஞ்சம் உயரமான பெஞ்சுகளும் அதற்க்கு கொஞ்சம் கம்மி உயரத்தில் அமர்வதற்கான மர பெஞ்சுக்களும் அமைத்திருந்தனர்.

அன்பாக வரவேற்று அமர செய்தனர்.

உள்ளே நுழையும் போதே வாசனை மூக்கை துளைத்தது.

அந்த மெஸ்ஸில் கறிக்குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் குருமா எல்லாம் எல்லா சாப்பாட்டுக்கும் தருவார்கள் என்ற செய்தியும் எங்களின் ஆர்வத்தை கூட்டியிருந்தது.

அதாவது பிரத்தியேகமாக தயாரிக்கபட்டிருக்கும் எந்த உணவையும் வாங்க வில்லை என்றாலும் கூட மற்ற குழம்புகள் வழங்கப்படும், ஆனால் அதில் அந்தந்த குழம்புகளுக்குரிய அசைவம் (கறியோ மீனோ)  இருக்காது.

பரவாயில்லையே நமக்கு வேண்டியது வாசனைதானே?  

இதுவரை அதுபோன்ற ஒரு நறுமணத்தை அனுபவிக்காத நாங்கள் இன்று ஒரு பிடி பிடித்துவிடுவது என்று தீர்மானித்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெஞ்சில் அமர்ந்தோம்.

முதலில்  தண்ணீர், தலை வாழை இலை.

இலையை கொஞ்சம் தண்ணீர் தெளித்து கழுவிய பின்னர், உப்பு, ஊறுகாய், உப்பில் ஊறவைத்து எண்ணையில்  பொரித்து எடுக்கப்பட்ட  காய்ந்த மிளகாய் (பெயர் தெரியவில்லை) கோசும்  க-பருப்பும் போட்டிருந்த கூட்டு, வெண்டைக்காய் பொரியல்(என் பேவரிட்), கீரை அவியல், அப்பளம் வைத்தார்கள்.


அவற்றை ஒவ்வொன்றாக சுவைத்துகொண்டிருக்கும் போது, அசைவ தயாரிப்புகளான, வஞ்சர மீன் பொரித்தது, மட்டன் சுக்கா, மட்டன் மசாலா, சிக்கன் செட்டிநாடு, காடை ரோஸ்ட், ஆட்டு மூளை இவைகளை தாங்கிய ஒரு பெரிய தட்டை  இரண்டு கைகளிலும் சுமந்து வந்த மெஸ் ஊழியர் எங்கள் ஒவ்வொருவரரிடத்திலும் எங்களுக்கு அவற்றில் என்ன வேண்டும் என கேட்டார்.

 முதலில் அமர்ந்திருந்தவர் இவற்றிற்கு தனி விலையா என கேட்க்க அந்த ஊழியர் ஆமாம் என சொன்னதை நாங்கள் அனைவரும் கேட்டோம்.

பிறகு அந்த முதல் நண்பர் வேண்டாம் என சொல்ல நாங்கள் அனைவரும்கூட வேண்டாம் என சொல்லி விட்டோம்.

ஆனால் எங்களின் ஒரு நண்பர்(???) அவர் வரிசையில் நான்காவதாக அமர்ந்திருந்தவரிடம் அந்த மெஸ் ஊழியர் கேட்கும் போது காசில்லாமல் வேண்டாம் என்று சொன்னால்  அங்கே உணவருந்திகொண்டிருக்கும் மற்றவர்கள் நம்மை கேவலமாக நினைப்பார்களோ என்று எண்ணி கொஞ்சம் சத்தமாக " அடடே இன்று புதன்கிழமை நான் அசைவம் சாப்பிடுவதில்லை எனவே இன்று இவை எனக்கு வேண்டாம்" என்று எல்லோருக்கும் கேட்க்கும்படி கூறினார்.

இவர் சும்மா சொல்கின்றார் என எங்களுக்கு மட்டுமே தெரியும் ஏனென்றால் அவரை எங்கள் நண்பர்கள் மத்தியில் நன்றாகவே தெரியும் இதுபோல் கமெண்ட்டுகள் சொல்லி அடிக்கடி பலரின் கவனத்தை தம் பக்கம் திருப்ப முயற்ச்சிப்பவரென்று.

சரி இப்போது சுட சுட ஆவி பறக்க சாதம் வந்தது, எங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

தொடர்ந்து முதல் குழம்பு ," மட்டன் குருமா" எங்களில் முதல் மூவருக்கு கேட்டு கேட்டு பரிமாறினார்.

நான்காவது நபருக்கு பரிமாறாமல் ஐந்து ஆறாவது நபர்களுக்கு பரிமாறினார்.

 இடையில் இருந்த நான்காவது நண்பர் எனக்கு... என கேட்டபோது, "இதோ வருகிறேன்" என சொல்லி உள்ளே இருந்து "பருப்பு குழம்பை" கொண்டுவந்து அவருக்கு ஊற்றினார். 

" ஏன் எனக்கு அந்த குழம்பு ஊற்றவில்லை" என கேட்க்க அந்த ஊழியர் சொன்னார் கொஞ்சம் சன்ன மான குரலில், "சார் அது கவுச்சி கொழம்பு".

 இவருக்கு ஒன்றுமே புரிய வில்லை.

ஆனால் மற்ற எங்கள் எல்லோருக்கும் புரிந்தது.

தொடர்ந்து வந்த சிக்கன் குழம்பின்போதும் இவருக்கு அதே பருப்பு குழம்புதான்.

மீண்டும் அடுத்த ரவுண்டு சாதத்திற்கு எங்கள் எல்லோருக்கும் மீன் குழம்பு அந்த நண்பருக்கு மீண்டும் பருப்பு குழம்பு ஊத்தவந்த ஊழியரிடம், "கொஞ்சம் வத்தகொழம்பு இருந்தா கொடுங்க" என கொஞ்சம் ஈன குரலில் ஏறக்குறைய பரிதாபமான குரலில் கேட்க்க அந்த ஊழியரும் "சாரி சார் வத்தகுழம்பு புதன் கிழமைகளில் செய்வதில்லை , பருப்பு குழம்பு ஊத்தட்டுமா" என கேட்க்க "வேண்டாம் ரசம் இருந்தா கொடுங்கள்" என சொல்ல ரசம் ஊற்றப்பட்டது.

ஊற்றப்பட்ட ரசம் அவர் இலையிலிருந்து கொஞ்சமாகவும்   அசடு அவர் முகத்திலிருந்தும் அதிகமாகவும்  வழிந்தது.

நாங்கள் எல்லோரும் கறிக்குழம்பு,கோழி குழம்பு,  மீன் குழம்பு, பருப்பு சாம்பார், ரசம், மோர் குழம்பு என எல்லாவற்றையும் முழு திருப்த்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக பணத்தை செலுத்திவிட்டு வந்தோம், அந்த ஒரு நண்பனை தவிர.

இத்தனைக்கும் அந்த நண்பன் தான் இங்கே எல்லாவகை குழம்புகளும் வெறும் ஐந்து ரூபாய்க்கே கொடுப்பார்களாம் இன்று ஒரு பிடி பிடிக்கவேண்டும் என எங்களுக்கு பரிந்துரை செய்தவர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அந்த நண்பனை நாங்கள் மட்டுமல்லாது தகவல் அறிந்த மற்ற நண்பர்களும் கொஞ்ச நாளைக்கு அவரை "புதன் சைவ பூனை" என கிண்டலடித்துகொண்டிருந்தோம்.

அவரும் கொஞ்சம் ஓவரா சீன் போடறத தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தார் அப்போது.

இப்போ மீண்டும் ஆரம்பிச்சிட்டார்னு கேள்விபட்டேன்.

சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்.

 மீண்டும் தலைப்பை படியுங்கள்.

"சொகாசூ"?

கொஞ்சம் இடைவெளி விட்டு படியுங்கள்.

"சொ - கா - சூ" ?

புரியலையா? ம்ம்ம்.... அதேதாங்க!

"சொந்த - காசில் - சூனியம்".

சரி  அந்த நண்பன் யாராக இருக்ககூடும் ?

நீங்களும் கொஞ்சம் யோசியுங்கள்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 கருத்துகள்:

  1. அன்பிற்கினிய கரந்தையார் அவர்களுக்கு,

    நலமுடன் இருப்பீர்களென நம்புகின்றேன்.

    சோ செ சூ பதிவினி படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

    கொஞ்சம் நாளாக ஆளை காணோமே இந்தபக்கம்.

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
  2. நல்ல நாளும் அதுவுமா இந்த சோகமான பதிவு தேவையா?

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு மிக்க நன்றி விசு.

    யாருக்கு சோகம்?

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  4. சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டவரின் நிலையை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. சுவையான பகிர்வு! நன்றி! ஃபாலோயர் விட்ஜெட் இணைத்தால் பதிவுகளை தொடர வசதியாக இருக்கும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. தளிர்,

    வருகைக்கு நன்றி.

    அது என்ன ஃபாலோயர் விட்ஜெட்?

    அறிவுரை அவசியபடுகிறது.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  6. சொகாசூ க்கு அர்த்தம் இதுதானா....சரி நாக்கில் நீர் ஊற வைத்த்ட பதிவு.. மிகவும் ரசித்த பதிவு

    சோலா பூரி என்பது...அதற்குத் தொட்டுக் கொள்ளக் கொடுக்கப்படும் கடலையைய்த் தான் சோலே என்று ஹிந்திக்காரார்கள் சொல்லுவதைத்தான் சோலே/லா பூரி என்று தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் சொல்லுகின்றார்கள்....அருமையான டிஷ்.....(கீதாவின் ஃபேவரிட்)

    சரி சொசெசூ யாருங்க சொல்லிடுங்களேன்...

    நாங்கள் குறும்பட வேலையில் இருந்ததால் நேர்னமின்மை காரணமாக வர இயலவில்லை நண்பரெ! மன்னிக்கவும்...

    ஃபாலோயர் விட்ஜெட் என்பது ப்ளாகரின் லேஅவுட்டில் சென்று இணைத்தால் இணைக்க் முடியும். னண்பரே இல்லைஎன்றால் நீங்கள் கூகுள் ஆண்டவரைக் கேளுங்கள் சொல்லுவார். எப்படி இணைக்க வேண்டும் என்று.....



    பதிலளிநீக்கு
  7. அன்பிற்கினிய நண்பர்களே,

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    படபிடிப்பில் - படபடப்பில் இருப்பதால் தாமத வருகையானாலும் தங்கள் வரவு எந்தன் வரமல்லவா?

    இங்கே இன்னும் 30 நிமிடங்கள் உள்ளன புத்தாண்டு மலர.

    இந்த ஆண்டில் (2014) எனக்கு நிகழ்ந்த மறக்க முடியாத இன்ப நிகழ்வு உங்களிருவரின் அன்பும் நட்பும் தான்.

    இந்த நட்பும் அன்பும் வருகின்ற புத்தாண்டிலும் தொடரவேண்டும் என்பதே நான் வேண்டும் வேண்டுதல்.

    அன்பு நண்பன் விசுவின் மூலம் எனக்கு கிடைத்த உங்கள் உறவிற்கு நண்பனுக்கும் இதன் மூலம் நன்றிகள்.

    பாலக்காட்டிலும் சென்னையிலும் கொண்டாட்டம் துவம்கி இருக்கும்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    என்றும் நட்புடனும் நீங்கா நட்புடனும்

    கோ

    பதிலளிநீக்கு
  8. அப்பா பசி நேரத்தில் இந்த பதிவைப் படித்து ,,,,,,,,,,,,
    சூப்பர் தங்கள் வர்ணனை. சூப்பரா செய்வீங்க போல இருக்கு.
    சரிப்பா பசிக்குது சாப்பிட்டு பிறகு கருத்துப் போடலாம் என்று நினைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு மிக்க நன்றி. சொகாசு எல்லாம் சரியாய் செய்ய தெரியாது,

    சாப்டுட்டு வந்து மீதமுள்ள உங்கள் கருத்துக்களை பகிரவும்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு