பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மாடிப்படி மாது

எதிர் நீச்சல்.

நண்பர்களே,

தலைப்பை பார்த்தவுடன், நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது, அமரர் திரு. நாகேஷ் கதாநாயகனாக நடித்து திரு கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில்,
திரு வி.குமார் மற்றும் திரு எம் எஸ் விஸ்வநாதன்(ஒரு  பாடல்) இசையமைப்பில் கருப்பு வெள்ளையில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த திரைபடமாக தமிழில் வெளிவந்து பின்னர் ஹிந்தியிலும் படமாக்கப்பட்ட அந்த அருமையான திரைப்படம் தான்.

அதில் அனாதையான மாடிப்படி மாது(பதிவர் அல்ல) தான் ஒரு உன்னத நிலையை அடைய எத்தனை தூரம் எதிர் நீச்சல் அடித்தார் என்பதை அந்த திரைப்படம் பார்த்தவர்கள் நன்கு அறிவார்கள்.

நாம் அனைவரும் அறிந்தவண்ணம், திரைப்படங்களின் கதை கரு பெரும்பாலும் கற்பனையின் விதைகளாகவே  இருக்கும்.

பின்னர் அதனை மெருகேற்றி, பல வடிவங்களில் மாற்றி, பல நிகழ்ச்சிகளை கோர்த்து, தேவைக்கேற்ப காட்சி அமைப்புகளை உருவாக்கி ஒரு கதையை உருவாக்கி, அதன் பின்னர் கதை இலாக்க எனப்படும் ஒரு குழுவினர் அந்த கதையை மேலும் விவாதித்து, ஒரு முடிவுக்கு வந்தபின்னர் அந்த கதை ஒரு முழு வடிவம் பெரும்.

சில நேரங்களில் படபிடிப்பு ஆரம்பித்தபின்னரும், கதை அமைப்பு, காட்சி அமைப்புகளில் தங்களின் விருப்பத்திற்கேற்ப இயக்குனர் மாற்றங்களை செய்வார்கள்.

சுருக்கமாக சொன்னால், எந்த ஒரு திரைப்படமும் முன்னதாக பலமுறை அடித்து திருத்தி பலநாட்கள் யோசித்து, பலரின் கருத்துக்கள், விவாதங்களுக்கு உட்படுத்தப்படுத்தி முடிவுசெய்யப்படும்  ஒரு  கற்பனை கதைதான்.

ஆனால், எந்த ஒரு கற்பனைக்கும்,ஒப்பனைக்கும்,முன்னோட்டதுக்கும், திட்டங்களுக்கும், குழு விவாதத்துக்கும், ஒத்திகைக்கும்,கொஞ்சமும் இடமின்றி நம்மின் பலரின் வாழ்க்கையில் பல போராட்டங்கள், துன்பங்கள், பல காட்டாற்று வெள்ளமென வாழ்கையின் சூறாவளிகள்,சுழல் காற்றுகள், இடி மின்னல்கள் தாக்கி இருக்ககூடும்,அல்லது நமக்கு தெரிந்தவர்களின் வாழ்கையில் நிகழ்ந்திருக்ககூடும்.

அப்படி நான் கேள்விப்பட்டு பின்னர் கண்கூடாக கண்டும், காதுகளின் வழியாக சம்பந்தப்பட்டவர்கள் மூலம்மாக கேட்ட ஒரு எதிர் நீச்சலை பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு பதிவாக இதனை உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.

நாங்கள் குடியிருந்த பகுதியில் வாழ்ந்த ஒரு பெரிய கூட்டு குடும்பம், அதில்  பல சிறு குடும்பங்கள். அவற்றுள் ஒரு குடும்பத்தில், குடும்ப தலைவர் இறந்துபோக இனியும் கூட்டுக்குடும்ப முறை சரிபட்டு வராது என தீர்மானித்து,சொத்துக்களை பிறிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

சொத்து பிறிக்கும்போது  கணவனை இழந்து ஆறு வயதான மகனோடு விதவையான அந்த தாயிக்கு நியாயமான பாகம் கொடுக்கப்படாமல் அவர்கள் மற்ற பங்காளிகளால் வஞ்சிக்கப்பட்டனர்.

காலம் செல்லசெல்ல அந்த விதவை தாய் தன் மகனை பராமரித்து தன் காலத்தை ஒட்டுவது மிகவும் சிரமாக இருந்தது.

நாளடைவில் படிப்பறிவில்லாத அந்த தாய் கூலிவேலைக்கு செல்ல , குடும்பத்தில் போதிய வருவாய் இன்றி வறுமை சூழ்ந்துகொண்டது.

இந்த நிலையில், அந்த தாய் வேலை  செய்யும் இடத்தில் இதே போன்ற மற்ற சில  நபர்களின் குழந்தைகள் ஒரு சில ஆசிரமங்களில் வளருவதை அறிந்து விவரம் சேகரித்து  சிலரின் உதவியுடன் தன் மகனையும் எதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிட முடிவுசெய்தார்கள்.

தன் முடிவை  மகனிடம்  கண்ணீருடன் சொல்ல தாய்  மணம் மாறாத , ஆசிரம் என்றால் என்னவென்று அறியாத, இந்நாள்வரை தாயை கொஞ்சமும் பிரிந்து அறியாத அந்த சிறுவன் அம்மாவை இறுக்க அனைத்து கட்டிக்கொண்டு ஆசிரமம் செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கின்றான்.

பல நாட்கள் இருவருக்கும் இடையில் நடந்த பாச போராட்டங்களும், வறுமையின் போராட்டங்களும் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்தது.

தாயிற்கும் மகனை பிரிய மனமில்லைதான் எனினும், எத்தனை காலம் மகனை வறுமையில் வளர்த்து  காப்பாற்ற முடியும் என எண்ணி தாய் தன் முடிவில் கடினமனாள்.

ஆனால் அவர்கள் நினைத்தபடி எந்த ஆசிரமத்திலும் தன் மகனுக்கு இடம் கிடைக்கவில்லை. 

அந்த நேரத்தில் பல மையில்  தூரத்தில் இருந்த ஒரு நடுத்தர வசதிகொண்ட முன்பு எப்போதோ பார்த்திருந்த  ஒரு குடும்பத்தினர் தாங்கள் இந்த பையனை தங்களுக்கு  தெரிந்த ஒரு போர்டிங் பள்ளியில் சேர்த்துவிடுவதாக கூறி, பையனுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவனை அழைத்து சென்றனர்.

எங்கிருந்தாலும், ஒரு இரண்டு வேலை சாப்பாடாவது என் மகனுக்கு கிடைக்கட்டுமே என தனது மனதை திடபடுத்தி மகனை அனுப்பிவைத்தாள், கண்களின் கண்ணீரை துடைத்துகொண்டாள்., ஆனால் தன் இதயம் வடிக்கும் கண்ணீரை துடைக்க வழியின்றி தினந்தோறும் துடித்துபோனாள்.

கடித தொடர்போ(எழுத படிக்க தெரியாததால்), தொலைபேசி வசதிகளோ இல்லாத  அந்த காலகட்டத்தில், பிள்ளையை அழைத்துசென்றவர்களின் தொடர்பும் இல்லாத சூழ்நிலையில், பங்காளிகளின் உதவிகளும், உறவும் அற்றுப்போன நிலையில் அந்த தாயின் நிலைமையையும் மகனின் நிலைமையையும் எண்ணிப்பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.

இரண்டு மாதங்கள் கழித்து இவர்களின் ஊர்பக்கம் ஏதோ   வேலையாக வந்த மகனை அழைத்து சென்றவரின் ஊர்காரர் அந்த விதவைதாயை பார்த்து நலம் விசாரிக்கவும் தன் மகனின் நலனை அந்த தாயிடம் சொல்லவும் வந்திருந்தார்.

வந்தவர் சொன்ன விவரங்கள் தாய் மனதை இன்னும் வேதனைக்குள்ளாக்கியது.

அதாவது, அவரின் மகனை அழைத்து சென்றவர்கள் மகனை எந்த விடுதியிலும் சேர்க்க வில்லையென்றும்,,அவர்களின் உடல் ஊனமுற்ற மகளுக்கு துணையாக இருக்கும்படி இந்த பையனை  தங்களின் வீட்டிலேயே வைத்துகொண்டிருப்பதாகவும்  பையன் நன்றாக இருப்பதாகவும் சொல்லி அவர்கள் கொடுத்தனுப்பிய கொஞ்சம் காசை அந்த தாயிடம் கொடுத்துவிட்டு வந்தவர் கிளம்பிவிட்டார்.

வேதனை தன் விளிம்பை தாண்டி அழுகையாக பெருக்கெடுத்தது, எனினும் பாசமற்ற பங்காளிகளின் பரிகாசத்துக்கு இடம்கொடுக்காமல்,மனதை தேற்றி கொண்டு தொடர்ந்து தன் அன்றாட கூலிவேலையான கட்டிட வேலைக்கு சென்று மண் பாரத்தோடு  தன் மனபாரத்தையும் சுமந்துவந்தாள்.

அடுத்து இரண்டு மூன்று மாதங்களில் வந்த தீபாவளி பண்டிகையின் போது மகனை அழைத்துக்கொண்டு அந்த தூரத்து குடும்பத்தினர்  வந்திருந்தனர், பலகாரங்கள், புதுத்துணிகள், கொஞ்சம் ரொக்கம் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் கழித்து வருவதாக கூறி சென்றனர்.

பல மாதங்களாக முகம் பார்க்காது தவித்திருந்த தாயின் நெஞ்சத்தில் பால் வார்க்கப்பட்டது. உச்சி முகர்ந்தாள், கட்டி அணைத்தாள் கன்னங்களில் முத்த சின்னங்கள் பதித்தாள், மடியில் வைத்து கொஞ்சினாள்.

மகனின் உள்ளங்கைகளை சாடையாக பார்த்தாள், வீட்டு வேலைகள் அதிகம் செய்வதால் உள்ளங்கை கடினமாக இருக்கின்றதாஎன.

மகனின் கைகளை தன் கன்னத்தில்   வைத்து கண்ணீர் சிந்தினாள், மகனும் தாயை பார்த்து கட்டியணைத்து முத்தமிட்டான்.

மூன்று நாட்கள் தாயுடன் இருந்து தீபாவளியை கொண்டாடிவிட்டு, மீண்டும் அழைத்து செல்லபட்டான்.

இவ்வாறாக வருடத்தில் இரண்டு பண்டிகைகளான பொங்கல், மற்றும் தீபாவளி சமயத்தில் தாயும் மகனும் சந்தித்துகொள்வார்கள் ஆனால் அதுவும் காலபோக்கில் மாறிவிட்டது.

இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருபண்டிகை என்று சுருங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றாகிவிட்டது.

தான் தவறு செய்துவிட்டோமோ  என அந்த தாய் பலவேளைகளில் நினைத்ததுண்டு,   எனினும் ஏதோ ஒரு இடத்தில் ஓட்டை இல்லாத கூரை வீட்டில் பசி இல்லாமல் இருக்கின்றானே என நினைத்து ஆறுதல் அடைந்தாள்.

இப்படி காலங்கள் சென்றுகொண்டிருந்தன. அவ்வப்போது மகனிடமிருந்து வரும் கடிதத்தை தபால் காரரிடமே படிக்கசொல்லி கேட்டுக்கொள்வாள்.

மகனை படிக்கவைப்பதாக சொல்லி அழைத்துசென்றவர்கள் இப்படி வீட்டு  வேலைக்கு வைத்துகொண்டார்களே என நினைத்து வழக்கம்போல் மனதில் அழுவாள், கண்களால்  அழ கண்ணீர் இல்லாததால்.


ஒரு காலகட்டத்தில், அக்கம் பக்கத்தவரும்,இவர்களின் உறவினர்களும், பங்காளிகளும், அப்படி ஒரு மகன் இருந்ததையே மறந்து விட்டனர் ஏனென்றால் மகன் தயை பிரிந்து ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.

இந்த ஏழை விதவை தாய்மட்டும், அவ்வப்போது மகனிடமிருந்து வரும் கடிதத்திலும் கொஞ்சம் பணத்திலும் தனது வாழ்கையை ஒட்டிக்கொண்டிருந்தாள்.

வயதும் ஆகிவிட்டது, முன்புபோல தொடர்ந்து தினமும் வேலைக்கும் போகமுடிவதில்லை.

இந்த சூழ்நிலையில்,ஒருநாள்,மகனை அழைத்து சென்றவர்கள் இந்த தாயை காண வந்திருந்தனர் மகன் வரவில்லை , ஏன் மகன் வரவில்லையா என கேட்டதற்கு, இல்லை அவனை வெளிஊருக்கு அனுப்பி இருக்கின்றோம் இன்னும் இரண்டு மாதங்களில் உங்களை வந்து பார்ப்பான் என கூறி கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு  சென்றனர்,

இரண்டு மாதங்கள் கடந்து சென்றன.

ஒரு நாள் அதிகாலை இவர்களின் வீட்டு முன்பு ஒரு அரசு சுகாதார மையத்தின் ஜீப் வந்து நின்றது.

அதிலிருந்து இரண்டுபேர் இறங்கிவந்து அந்த அம்மா தங்கி இருந்த குடிசைவீட்டு கதவை தட்டினர்.

தூக்ககலக்கத்தில் கதவை திறந்த அந்த தாய் வந்திருந்த இருவரையும் உள்ளே வரவழைத்து , கொஞ்ச நேரத்தில்  ஒரு மினி ஒப்பாரியே வைத்துவிட்டாள். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தங்களது பங்காளிகள் உட்பட வெளியில் அரசு துறை ஜீப் மற்றும் உள்ளே ஒப்பாரிபோன்ற சத்தம் கேட்டு , என்னமோ ஏதோ என நினைத்து இவரின் வீட்டுமுன் கூடிவிட்டனர்.

அதில் ஒருவர் வீட்டிற்கு உள்ளே சென்று விசாரிக்கையில் வந்திருந்த இருவரில் ஒருவர் அந்த தாயின் மகன் என்று அறிந்து மகனிடம் நலம் விசாரித்தார்.

பிறகு அந்த மகனுடன் வந்தவர் சொன்னார் நாங்கள் இந்தபக்கம் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்தை ஆய்வு செய்ய வந்துள்ளதாகவும் அப்படியே இந்த அம்மாவையும் பார்த்துவிட்டு போகலாமென்றும் வந்தோம் என்றார்,

சரி நீங்கள் ஒருவேளை அரசுத்துறை ஊழியராக இருக்கலாம் ஆனால் இந்த தம்பி எப்படி உங்களுடன்,?

என்ன அப்படி கேட்கின்றீர்கள், இவர்தான் அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் புதிய மருத்துவர் என கூறவும் ஜீப்  டிரைவர் தன் மகன் வாங்கிவந்த புதுத்துணி, நகை மற்றும் இனிப்பு வகைகள்  அடங்கிய பையை கொண்டுவந்து வீட்டின் உள்ளே வைக்கவும் அந்த தாயின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து கண்ணீர் சுரந்தது, இப்போது வந்தது ஆனந்த கண்ணீர் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

மகன் தன்னை அழைத்து சென்றவர் தன்னை அவர்களின் மகனாகவே பாவித்து வளர்த்து நல்ல கல்வி கொடுத்து, தன்னை மருத்துவருக்கு படிக்கவைத்து அரசுத்துறையில் வேலையையும் பெற்று தந்ததை நன்றியோடு சொல்ல கூடியிருத்த அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அந்த சத்தத்தில் விழி திறக்காமலிருந்த கதிரவன் மெல்லவெளியில்வர காரிருள் மறைந்து  புத்தம் புதிய காலை புலர்ந்தது , அந்த தாயின் - அந்த தனயனின் வாழ்விலும்தான்.

இன்னமும் அந்த அண்ணன் அரசு மருத்துவமனையில் தான் வேலை செய்கின்றார், மிகவும் , சாந்தமானவர், அமைதியானவர், நல்ல இடத்தில் திருமணம் செய்துகொண்டார், அம்மாவை இனி ஒருகாலும் பிரியமாட்டேன் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.


இவர் இந்த நிலைமையை எட்டிபிடிக்க எத்தனை எதிர் நீச்சல் போட்டிருப்பார் என்பதை எந்த திரைப்பட கதாசிரியரும் கற்பனை செய்ய கூடுமோ.

 பங்காளிகள் மற்றும் உறவினர்கள் தங்கள் தவறை உணர்ந்து இவர்களின் பூர்வீக சொத்துக்களை ஞாயமான முறையில் இவர்களுக்கு அளித்து இன்றும் உறவுடன் வாழ்ந்துவருகின்றனர்.

இவரை இந்த நிலைமைக்கு கொண்டுவந்த அந்த தூரத்து ஊர்காரரை நேரில் சென்று பார்த்து அவரின் கால்களில் விழுந்து வணங்கி தனது நன்றியை அந்த விதவைத்தாய் தெரிவித்தது ஒரு துணை செய்தி.

நன்றி.

மீண்டும் ச (சி)ந்திப்போம்.

கோ

12 கருத்துகள்:

  1. கண்ணீரை வர வழைக்கும் கதை.
    இவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் எந்த அளவுக்கு நம்பிக்கையோடும் வைராக்கியத்தோடும் வாழ்ந்திருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
    அந்த நல்ல உள்ளங்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி அனிதா அவர்களுக்கு,

      பதிவினை படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி,

      ஆம் இந்த எதிர் நீச்சல் போராட்டத்தில் பங்குவகித்த அந்த தாய், தாமரை இலை தண்ணீராக கிடைக்கப்பட்ட அந்த குடும்பத்து உதவிகரம்,தன் எதிர்காலம் எப்படி ஆகுமோ என்ற போராட்டங்களின் மத்தியிலும் இறைவன் தம்மை ஒருபோதும் கைவிடமாட்டன் என்ற திடமான நம்பிக்கையும் அவர்களின் நன் முயற்சியும் நல வாழ்விற்கு வகை செய்தன,

      அந்த நல்ல உள்ளங்களை வாழ்த்திய உங்கள் நல்ல உள்ளத்திற்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்.

      சிந்திப்போம்.

      கோ

      நீக்கு
  2. கடவுளே! முதலில் அப்படியே நெஞ்சைப் பிழிந்து விட்டது! வாசிக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம் நண்பரே! மனதை உலுக்கியது. மருத்துவர் என்றதும் அவர் வளர்ந்த விதமும் அறிந்த பிறகுதான் மனதில் மகிழ்வு வந்தது. வளர்த்தவர்களை வாழ்த்தியது. கடவுள் இருக்கின்றார் என்ற நல்லவர்கள் வடிவில் என்ற எங்கள் ஆழமான நம்பிக்கை வலுவுற்றது. அவர் தன் தாயை பிரியாமல் இனியேனும் இருக்க வேண்டும். இறைவனுக்கும் நன்றி. நிச்சயமாக எதிர்னீச்சல்...குளத்தில் அல்ல பெரிய கடலில்...ஆழமான கடலில்....பெரிய அலைகளை எதிர்த்து எதிர்நீச்சல்.....

    சொல்லிய விதமும் மிக அருமை! நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      பதிவு உங்கள் மனதை பாதித்ததை எண்ணி வருந்துகின்றேன்.

      இந்த பதிவில் இன்னும் சில நிகழ்வுகளை நான் சொல்லாமல் விட்டதும் நல்லதுதான் என நினைக்கின்றேன்,

      கடவுளின் திருவிளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

      நல்ல உள்ளங்களுக்கு நல்லவையே நடக்கும் என்ற நம்பிக்கை வேரில் கொஞ்சம் நீர்பாய்ச்சவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

      நல்லவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதால்தான் அவ்வப்போது மழையும் பொழிகின்றது.

      சென்னையிலும் பாலக்காட்டிலும் நல்ல மழையாமே?!!!!!!

      நலமுடன் இருப்பீர்களென நம்புகின்றேன்.

      நன்றி

      நட்புடன்

      கோ.

      நீக்கு
  3. தூரத்து உறவினர் போற்றப்பட வேண்டியவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கு,

      வருகைக்கும் தங்களின் மேலான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      ஆம் அந்த தூரத்து ஊர்காரர் பாராட்டுக்குரியவரே.

      அந்த மருத்துவர் அண்ணன் புதிதாக கட்டிய வீட்டிற்கு அவர்கள் சூட்டிய பெயர் அவருக்கு உதவிகரம் நீட்டி அவரை உருவாக்கிய அந்த நல்ல மனிதரின்..........உடல் ஊனமுற்றிருந்த - தன் சொந்த அக்காவாக பாவித்த அந்த பெண்ணின் பெயர்தான்- நன்றியை வேறு எந்த விதத்தில் அவர் சொல்லியிருக்ககூடும்?

      நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  4. நெகிழ வைத்த பதிவு. ஆனால் ஏன் அந்த உறவினர் இவரது மகனைப் படிக்க வைக்கவில்லை என்று சொல்ல வேண்டும்? இத்தனை முறை வந்த மகனாவது உண்மையைச் சொல்லியிருக்க மாட்டானா?

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் அவர்களுக்கு,

    முதலில் என் பதிவை படித்ததற்கு என் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.

    ஒவ்வொரு முறை தன் மகன் தாயை பார்க்க வரும்போதெல்லாம் தான் நன்றாக இருப்பதாகவும் கண்டிப்பாக சொல்லிருப்பார் மேலும் ஒரு கால கட்டத்தில் தான் பள்ளிக்கூடம் போவதாகவும் கூட சொல்லி இருக்கலாம் ஆனால் அந்த கல்வி அறிவற்ற ஏழை தாய்க்கு கல்வியின் எந்த நிலை - எந்த படி (Stage - கிரேட் )என்று சொன்னாலும் புரிந்திருக்குமா என தெரியாது.

    மேலும் கடைசி பல வருடங்கள் தாயை பார்க்க வரவில்லை, அதே சமயத்தில் கடிதத்திலும் தான் மருத்துவம் படிப்பதாக தன் மகன் தெரிவிக்கவில்லை ஏனென்றால் எந்த நேரத்திலும் தனக்கு எதுவும் நேரலாம் ஏனென்றால் அடுத்தவரின் தயவில் தாம் வாழ்கின்றோம், அவர்கள் நாளைக்கே நீ படித்தது போதும் வேறு ஏதாவது வேலைக்கு போ என சொல்லிவிட்டால்? எனவே ஊர்ஜிதமில்லாத - ஒரு certainty இல்லாத வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் தன் தாய்க்கு எந்த ஆசை வார்த்தைகளையோ - நன்பிக்கையையோ கொடுக்க மனமில்லாதவராக தன் படிப்பு விஷயங்களை சொல்லாமல் இருந்திருக்கலாம்.

    அந்த தூரத்து ஊர்காரர் ஏன் அவரின் மகனை படிக்க வைக்கவில்லை?

    முதலாவதாக அவருக்கு மகன் இல்லை, மாறாக மகள் மட்டுமே, அதுவும் சிறுவயதில் இளம்பிள்ளை வாதம் போன்ற நோயினால் உடல் ஊனமுற்றும் கல்வியில் கவனம் செலுத்தும் பக்குவமான மனவளர்ச்சி இல்லாமலும் இருந்ததால்தான் இந்த சிறுவனை தன் மகளுக்கு உதவியாகவும் அவளுக்கு ஒரு தம்பியாக - துணையாகவும் தன் வீட்டில் வைத்து வளர்க்க முன் வந்தார்.

    மேலும் தன் மகளை நல்ல படிப்பு படிக்க வைக்க முடியாவிட்டாலும் ஊரார் பிள்ளையான இந்த சிறுவனை ஊட்டி வளர்த்தால் தன் மகளுக்கு ஒரு ஆசிர்வாதமாக இருக்குமே என்றுகூட இந்த சிறுவனை படிக்கவைத்து இருக்கலாம்.

    பதிவு எழுதும் போது சில கிளை நிகழ்ச்சிகள் காலம் மற்றும் பதிவுகளின் நீட்ச்சியை மனதில் கொண்டு தவிர்க்கபடுவதால் ஏற்படும் சில சந்தேகங்கள் நியாயமானவையே.

    உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  6. உண்மையை தாயிடம் நிச்சயம் சொல்லி இருக்கவேண்டும். உதவி செய்தவரை இத்தனைக் காலம் தவறாக நினைக்க வாய்ப்பு கொடுத்தது தவறல்லவா? ஒரு வேலை அந்தப் பெண்மணி இடையில் இறந்து போய் இருந்தால் உண்மை தெரியாமலேயே அல்லவா போய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் முரளிதரன்.

    மகனை வளர்த்தவர்களின் பெருந்தன்மையே இதற்க்கு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது, ஒரு உன்னத நிலைமைக்கு கொண்டுவந்த பிறகு சொல்லிக்கொள்ளலாமென்று மகனிடம் சொல்லி இருக்ககூடும்.

    பின்னூட்ட பதிலில் குறிப்பிட்டிருந்ததுபோல மகன் வேறொருவரின் தயவில் வாழ்வதாலும் படிப்பதாலும் எப்போது வேண்டுமானாலும் தமது படிப்பை தொடரமுடியாமல் போகும் நிலை வந்தால் அம்மாவின் ஆசையில் பேரிடி விழ நேர்ந்தால் என்ன ஆவது என்றுகூட மகன் நினைத்திருப்பான்.

    எது எப்படியோ, இது எல்லாம் "அவன்"(இறைவன்) செயலன்றி "இவன்"(கோ) செயலன்று .

    பதிவினை ஆழ படித்து அலசி பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

    நட்புடன்.
    .
    கோ

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அரசே,
    எங்கே என் பின்னூட்டம்????
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் எப்படியோ விடுபட்டிருக்கும் என்று நினைக்கின்றேன், வேறொன்று அனுப்புங்கள் வெளி இட காத்திருக்கிறேன்.
      வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

      கோ

      நீக்கு