பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 நவம்பர், 2014

பேருந்து பயணம்.

பேருந்து பயணம்.

பல வேளைகளில் தினமும் பேருந்து  பயணத்தையே இங்கு பெரும்பாலோர் விரும்புகின்றனர்.



கட்டணம் ஓரளவுக்கு  அதிகம் என்றாலும் அதில் பல சௌகரியங்கள் இருப்பதே இந்த பேருந்து பயணத்திற்கான காரணங்கள்.

நடுத்தர குடும்பமாயிருந்தாலும் வீட்டுக்கு குறைந்த பட்சம் இரண்டு கார்களாவது இருக்கும்.(எங்களிடம் ஒன்னே ஒண்ணுதான் இருக்கு - நாங்கள் எந்த தரம் என யூகித்துகொள்ளலாம்)

எனினும் பெரும்பாலோர் கார்களை பயன்படுத்தாமல் பேருந்துகளையே பயன்படுத்த விழைகின்றனர்.

அதற்க்கு என்ன காரணம்?

முதலாவது, ஒருவர் பயணித்தாலும் ஒரே நேரத்தில் ஐம்பது பேர்கள் பயணித்தாலும் பேருந்து செலவழிக்கும் எரிபொருள் ஏறக்குறைய ஒரே அளவுதான்,அதே சமயத்தில்  ஆளாளுக்கு ஒரு காரில் பயணித்தால் எவ்வளவு எரிபொருள் செலவாகும்?

எனவே காரில் பயணிக்கும்போது ஏகப்பட்ட எரிபொருள் செலவு இருப்பதை பேருந்து பயணம் தவிர்க்கின்றது.

அடுத்து  ஏகப்பட்ட கார்கள்  வெளியிடும் கார்பன் எமிஷனின் அளவு குறைக்கபடுகிறது, அதனால் சுற்றுப்புற மாசு காட்டுபாட்டிற்குள் இருக்கின்றது, ஓசோனின் ஓட்டை அடைக்கப்பட வில்லையென்றாலும், இன்னும் கிழிஞ்சி கிருஷ்ணகிரி வரை போகாமலும் ( ஆமாம்   அது என்ன கிருஷ்ணகிரி.... சாமீ .....எனக்கொரு உம்ம்ம தெரிஞ்சாகனும்  சாமீ...) அகலமாவது தடுக்கபடுகின்றது.

சாலைகளில் பயணிக்கும் கார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதால் போக்கு வரத்து நெரிசல் பயண தாமதம் கட்டுபடுத்தபடுகிறது அதனால் பெருமளவு சாலை விபத்துகள் தடுக்கபடுகின்றன.

மேற்கூறிய அனைத்தும் பொதுவான நன்மைகளாக இருக்கும் பட்சத்தில், பயணிகளின் தனிப்பட்ட வசதிகள் எனென்ன?

காலையில் எழுந்தவுடன், காரை துடைத்து(எல்லா நாளும் அல்ல), குறிப்பாக பனி காலங்களில், கார்களை மூடியிருக்கும் பனி மலைகளை வாட்டும் குளிரில் நின்றுகொண்டு(குல்லா க்ளவுசுகளை அணிந்த்துகொண்டு) மூக்கு  ஒழு விக்கொண்டு, கைகள் விறைத்து போகுமளவிற்கு ,கரண்டிபோன்ற பிளாஸ்டிக் ஸ்க்றேப்பர்களை கொண்டு   சுரண்டி எதுத்து, காரை கஷ்டப்பட்டு திறந்து, என்ஜினை  ஆன் செய்து (அதிர்ஷ்ட்ட காற்று நம் பக்கம் அடிக்கும்பட்ச்சத்தில் )ஹீட்டர  கொஞ்சநேரம் ஆன் செய்து வைத்துவிட்டு,, இருக்கைகள் சூடான பிறகு, வைப்பர்களை இயக்கி காட்சிகள்  ஓரளவுக்கு தெளிவாக தெரியும் வரை காரிலேயே அமர்ந்திருந்து பின்னர் ஓட்டிச்சென்று, பிரதான சாலைக்குள் நுழைவதற்கு ஒவ்வொரு காலையும் குறைந்த பட்சம் ஒருமணிநேரமாவது தேவைப்படும்.

 இப்போ சொன்னதெல்லாம் இந்த ஒருமணிநேரத்தில் ஆகவேண்டுமென்றால் அதற்க்கு கொஞ்சமாவது சுமார் மூஞ்சி குமார் மாடல் வண்டியாக இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் என்மூஞ்சி( வேற யார்மூஞ்சிய உதாரணத்துக்கு சொல்லமுடியும் பாக்ர எல்லாரும் சோக்காதான இருக்காங்க) போன்ற கார்கள் உள்ளவர்கள் போராடி ஓய்ந்தபிறகு, தமது ஒப்பந்தத்தில் உள்ள சர்வீஸ் நிறுவனத்தை அழைத்து அவர்கள் வரும் வரை காத்திருந்து பின்னர் அவர்கள் ஸ்டார்ட் செய்து கொடுக்கும் வரை பொறுமையாக இருந்துபின்னர் அந்த நாளை தொடங்குவது என்பது ஏற்கனவே இருக்கின்ற மன அழுத்தத்தை அதிகபடுத்தி அந்த நாளே ஒரு (யார்மொகத்தில  விழிச்சோம்னு நெனைக்கிற அளவுக்கு போய்டும்) கடுப்பான நாளாக மாறிபோகும்.

மேலும் காரை கவன மாக ஓட்ட வேண்டும், சாலை விதிகள் மீறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், செல்போன் பேச்சு   கூடாது, எரிபொருள், பார்கிங் இடம், பார்கிங் கட்டணம் , சிக்னல், சாலை நெரிசல் ,மழை, மூடுபனி, போன்ற நெருக்கடிகளை சமாளித்து வேலை இடம் வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்,இந்த அழகில் வேலையில் எப்படி மனம் ஒன்றும்.

மாலை வீடு திரும்புவதிலும் இதே போன்ற நெருக்கடிகள் உள்ளன, குறிப்பாக குளிர்காலங்களில் மாலை மூன்றுமணிக்கே சூரியன், குளிர்தாங்க முடியாமல், மேக கம்பள போர்வைக்குள் முடங்கிபோவான், சூரியனுக்கே குளிர் தாங்க முடியலனா நாம எல்லாம் என்னாவது? நிலவும் உடனே வெளியில் வர பெரிய தயக்கம் காட்டி தாமதமாக ஒரு ஆறு மணிக்குத்தான் தலையை கொஞ்சம் வெளியில் காட்டும்.

இதுபோன்ற நெருக்கடிகள், பிரச்சினைகளால் பெரும்பான்மையான மக்கள் அரசு போக்குவரத்து பேருந்துகளையே நாடுகின்றனர்.(தனியார் பேருந்துகள் துரித பயண-டவுன் பஸ்கள் கிடையாது.)

இந்த பஸ் பயணத்தின் நன்மைகள் என்ன என்று மீண்டும் சொல்லவதற்கு பதில், மேற்சொன்ன விஷயங்களுக்கு எதிமரையாக யோசித்துகொள்ளவும்.

 SETRA S 431 DT / 1122 / 122 / T 927 / 3x vorhanden double decker bus - photo 2

அவை தவிர, பேருந்துகளில் பயணம் செய்வது, ரொம்ப ரொம்ப ரிலாக்சான , பாதுகாப்பான பயணமாக அமைகிறது.

ஓட்டுனர் நம்மை பத்திரமாக கூட்டிச்செல்வார், கண்டக்டர் கிடையாது  எச்சை தடவி(??) டிக்கெட் கிழித்து தர, சீரான வேகத்துடன் செல்லும், குறிப்பிட்ட இருக்கைகள் அல்லது கொஞ்சம் கூடுதலான பயணிகளையே அனுமதிப்பார்கள், படிக்கட்டு பயணம் இல்லை.

எல்லா பேருந்துகளும், கதவுகள்  கொண்டன, டெம்பரேச்சர்  கட்டுப்பாடுள்ளவை, ஓட்டுனரின் அனுமதி இன்றி யாரும் ஏறவோ இறங்கவோ முடியாது.

பயணிகள் வரிசையில் நின்றுதான் ஏறுவார்கள், இறங்கும் போதும் , இறங்குபவர்களுக்கு முன்னுரிமை.

நிறுத்தம் வருவதற்குமுன் மணி அடித்தால் வண்டி நிற்கும், ஒவ்வொரு இருக்கைக்கும் அருகில்  மணி  அடிக்கும் வசதிகள் உள்ளன. மேலும் பெரும்பான்மையான பேருந்துகளில், அடுத்த ஸ்டாப் எது என்று சொல்லி பயணிகளை தயார் பட்டுத்தும் ஒலிபெருக்கியுடன் கூடிய டிஜிட்டல் தகவல்  பலகை இருக்கும்.

பெரும்பாலான பேருந்துகள் இரண்டு அடுக்கு வண்டிகளாக இருக்கும், வண்டியில் அமர்ந்தவண்ணம் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணிக்கலாம்,பயணிக்கும் தூரத்தை பொறுத்து, பாட்டுகேட்டுக்கொண்டோ, லாப்டாப்பை இயக்கிக்கொண்டோ, செல்போனை நோன்டிக்கொண்டோ(??) போகலாம், அனைத்து வண்டிகளிலும், இன்டர்நெட் வசதிகள் உள்ளன.

சி சி டீவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

பேருந்துகள் செல்ல எல்லா பிரதான சாலைகளிலும் பிரத்தியேகமான  தனியான தடம் உள்ளன, அவற்றில் மற்ற வாகனங்கள்,ஆம்புலன்சுகள், டாக்சிகள் ,தவிற வேறு வாகனங்கள் செல்ல அனுமதிகிடையாது, மீறுபவர்களுக்கு அடுத்தநாளே ஆப்பு.

பேருந்துகளில் அன்றைக்கான காலை மாலை செய்திதாள்கள் இலவசமாக கொடுக்கப்படும்.

நாள் முழுக்க பயன்படுத்தத்தக்க ஒரு நாள் டிக்கட்டை வாங்கிகொண்டால் அன்றைக்கு முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை `பேருந்துகளில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

மிக முக்கியமாக, இடமிருந்தால் யார் வேண்டுமானாலும் யார் பக்கத்திலும்(!!!???ம்ம்ம்ம் ஜொள்ளு ....தொடைங்க(!)  அதாவது துடைங்கனு சொல்லவந்தேன்) அமர்ந்து   பயணிக்கலாம். ஒரு சில பிரத்தியேகமான இருக்கைகளை தவிர, அவை முதியவர், மற்றும் மாற்று திறனாளிகளுக்கானவை.

குழந்தைகளுடன் ப்ராம் வண்டிகளில் வரும் தாய்மார்களுக்கு பிரத்தியேக இடம்  உண்டு, அவர்கள் அந்த தள்ளு வண்டிகளுடன் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் அவர்களின் வசதிக்காக படிகட்டுகள் தரை மட்டத்துக்கு தாழ்த்தப்படும்.

ஒருவேளை, பேருந்து வழியில் பழுதுபட்டால், கொஞ்ச நேரத்தில் மாற்று பேருந்து வந்து சேவையை தொடரும்.

என்ன  ஒரு குறைனா:
பேருந்தில் இஞ்சிமொரப்ப கிடைக்காது, வெத்திலை போட்டு ஜன்னல்வழியா துப்பி சாலையில்  போகிறவர்கள் மீதும், நமக்கு பின் சீட்டில் அமர்ந்திருப்போர் மீதும் அசிங்க படுத்தமுடியாது, துண்டையோ  செருப்பையோ போட்டு இடம் பிடிக்க முடியாது  என்கிற குறையை தவிர மற்றபடி  சுகமான , பாதுகாப்பான, பொருளாதார ரீதியாக, சுற்றுப்புற சுகாதார ரீதியாக, காலம் நீண்ட பயணமாக இல்லாமல் காலை நீட்டிக்கொண்டு ரிலாக்ஸ்டாக பயணம் செய்ய பேருந்து பயணமே சிறந்தது என்பதால் இங்கே)??) பெரும்பான்மையானவர்கள் பேருந்து பயணத்தையே நாடுகின்றனர், வேறு நாடுகளில் எதை  நாடுகின்றனர் - என்ன நிலைமை?

இன்னும் இந்த பேருந்து பயணத்தின் நன்மைகளை சுகங்களை சொல்லிகொண்டே போகலாம் அப்படி நான் சொல்லிக்கொண்டே இருந்தால் என் பேருந்து என்னிடம் சொல்லிக்கொள்ளாமலே போய்விடும்  எனக்காக அவர்கள் நிறுத்த மாட்டார்கள் , எனவே இத்துடன் நான் நிறுத்துகின்றேன்.

வணக்கம்,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

13 கருத்துகள்:

  1. நல்ல பதிவு, பிள்ளை. இங்கிலாந்திலும் சரி மற்றும் பல ஐரோப்பா நாடுகளிலும் பேருந்துகள் மிகவும் பிரபலம். ஜெர்மனியில் வாழும் என் அக்காவின் இல்லத்திற்கு செல்லும் போது அங்கே போது மக்கள் பேருந்தை எவ்வளவு அழகாக பயன் படுத்துகின்றார்கள் என்பதை கண்கூடாக பார்த்து ரசித்து இருக்கின்றேன்.

    இங்கே அமெரிக்காவில் கூட நியூயார்க் மற்றும் சில நகரங்களில் நல்ல பேருந்து வசதி உண்டு. ஆனால் நான் வசிக்கும் இடத்தில, பேருந்து என்பது மருந்திற்கு கூட கிடையாது. பேருந்தை விடுங்கள். எங்கள் பகுதியில் ஒரு வாடகை வண்டி (டாக்ஸி) பார்ப்பது கூட அரிது.

    இன்னும் சொல்ல போனால், கடந்த 10 வருடங்களில் அடியேன் எந்த ஒரு பேருந்திலெயும் போக வில்லை என்பது தான் உண்மை.

    அதனால் தான் இந்தியா செல்லும் போது, பேருந்தை மிகவும் அதிகமாக உபயோகிப்பேன். கல்லூரி நாட்களில் பேருந்தில் செல்லும் போது, அருகே அமர்ந்துள்ள (நமக்கு உட்கார இடம் இல்லாததினால்) நம் வகுப்பு மாணவியரிடம் நம் புத்தகத்தை வைத்து கொள்ளுமாறு கொடுத்தோம் என்றால், அதை பொறாமையோடு பார்க்கும் மற்ற நண்பர்களின் எரிச்சல் இன்றும் நினைவிற்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பனே,

      கல்லூரி நாட்களைபோலவே இப்போதும் பேருந்தில் என்னோடு இணைந்து பயணித்தமைக்கு மிக்க நன்றி,

      ஜெர்மனி அக்காவுக்கு எனது வணக்கத்தை சொல்லவும்.

      நியூ யார்க் நகர பேருந்துகளில் பயணித்த அனுபவம், அது இன்னும் என் மனதில் பசுமையாக நிலைகொண்டிருக்கின்றது.

      எனக்கு நியூ யார்க்க பேருந்துகளைவிட அந்த மஞ்சள் நிற டாக்சிகள் தான் அதிகமாக பிடித்திருந்தது, ஒவ்வொருமுறை பயணித்து இறங்கும்போதும் பெரும்பாலான ஓட்டுனர்கள் , நன்றி காட் ப்ளஸ் யூ என வாழ்த்தியது இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றது.

      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு
  2. அருமையான, நகைச்சுவைப் பேருந்துப் பயண விவரணம்! ஜொள்ளுடன் ஒழுகி வந்தாலும்....பஸ்ல பார்த்து போங்க....சே கொடுத்துவைத்தவர்....ஹஹ்ஹ்!!

    சாமீ....கிருஷ்ணர் கிரியைத் தூக்கிக் கொண்டு உங்க ஊருக்கு வந்து கூடாரம் போட்டுட்டாரோ? இங்க சுற்றுப்புறம் ரொம்ப கேவலமாகிவிட்டது என்று!!!

    இங்க எல்லாம் இப்படிப்பட்ட சௌகரியமான பேருந்துப்பயணம் எதிர்பார்க்க முடியாது. அங்க என்ன, இங்கேயே கூடா ஒரு வீட்டுக்கு 4 கார் கூட வைச்சுருக்காங்க...வீட்டில் உள்ள நபர்களைப் பொறுத்து.

    அங்கு அரசு நன்றாகச் செயல்படுவதால் இதெல்லாம் சாத்தியமாகின்றது....இங்கு?

    பேருந்தில் இஞ்சிமொரப்ப கிடைக்காது, வெத்திலை போட்டு ஜன்னல்வழியா துப்பி//

    சொர்கமே என்றாலும்...நம்மூரைப் போல வருமா...பாட்டுதான் நினைவுக்கு வந்தது.....சும்மா பாட்டுக்குத்தான் இது பொருந்தும்...

    இதைப் பற்றி பல உறவினர்கள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் இருப்பதால் அறிவோம். கீதாவிற்கு சிறு அனுபவம் உண்டு கலிஃபோர்னியாவில் ஒரு வருடம் இருந்த அனுபவம்.

    மிகவும் ரசித்தோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அன்பிற்கினிய நண்பர்களே,

      பேருந்தில் என்னோடு இணைந்து பயணித்தமைக்கு மிக்க நன்றி,

      இங்கிலாந்திலும் உறவுகள் இருப்பதாக சொன்னது என்னையும் சேர்த்துதான் என்றறிந்து உணர்ச்சிபெருக்கில்- மகிழ்ச்சியில் பஸ்ஸிலிருந்து குதிக்க பார்த்தேன் நல்லவேளை கதவுகள் அடைக்கபட்டிருந்தன.

      சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? வரும்ம்ம் .......ஆனா....... கொஞ்சம் லேட்டா வரும்.

      ஆதங்கம் என் அடிமனதில் படிந்திருக்கின்றது.

      வருகைக்கு நன்றி உங்கள் இருவருக்கும்.

      கோ

      நீக்கு
  3. கோயில்பிள்ளை அவர்களின் பதிவு கண்டு கில்லர்ஜியின் பிள்ளைமனம் கொள்ளை போனது எல்லாம் சரிதான் நண்பரே,,, ஆனால் நம்து நாட்டில் இவையெல்லாம் வரும் காலம் எப்போது அதுவரை நாமும் பேருந்தில் துண்டைப்போட்டும், செருப்பை வைத்தும் இடம் பிடித்தே ஆக வேண்டும் வேறு வழியில்லை.
    நண்பரே தாங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்.
    தங்களின் அனுமதி கிடைத்தால் இந்தப்பதிவின் இணைப்பை எமது நண்பர்கள் டொயோட்டா, நிஸ்ஸான், பென்ஸ், செவ்ரோலெட் கார் கம்பெனி உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கலாமென நினைக்கிறேன் தங்களின் அனுமதிக்காக....
    அன்பன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பனே,

      பேருந்தில் என்னோடு பயணித்தற்க்கு நன்றிகள் பல.

      இவையெல்லாம் நம்ம ஊருக்கு எப்பவோ வந்திருக்க வேண்டும், இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

      மேலும் உங்களின் நண்பர்களான டொயோட்டா, நிஸ்ஸான், பென்ஸ், செவ்ரோலெட் கார் கம்பெனி உரிமையாளர்களுக்கு எமது இணைப்பை அனுப்பிவைக்க என்னுடைய பரிபூரண சம்பந்தம்.

      நன்றி,

      சந்திப்போம் மீண்டும்.

      கோ

      நீக்கு
  4. திரு கரந்தையார் அவர்களுக்கு வணக்கங்கள்,
    பேருந்து பயணத்தில் மீண்டும் உங்களின் பின்னூட்டம் கண்டு கொண்டாட்டம்.
    எப்படி இருக்கின்றீர்கள்?.
    அன்புடன்
    கோ

    பதிலளிநீக்கு
  5. அண்ணாச்சீ..'நீங்கள் எந்த தேசத்தில் இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  6. நெல்லை தமிழனே,

    நான் எந்த தேசத்தில் இருக்கின்றேன்? விரைவில் ஒரு பதிவில் சொல்கின்றேன், பதிவில் கண்களை பதியவையுங்கள்.

    விரைவில் வருகிறது உங்கள் கேள்விக்கான பதில்.

    வருகைக்கு நன்றி.

    நட்புடன்.

    கோ.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அரசரே,
    தங்களின் பேருந்து பயணம் பற்றிய பதிவு அருமை,
    ஆனால் இந்த குறையெல்லாம் இங்கு களைய அந்த நிறையெல்லாம் இங்கு வரனும், வந்தால் சரியாகும் என நம்புவோம்,
    வரும் ஆனா வராது,,,,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் என்னோடு பேருந்தில் பயணித்தமைக்கும் நன்றிகள். எத்தனையோ தேவையற்ற விஷயங்களை மேல் நாடுகளில் இருந்து பதிவு எடுத்தாற்போல் பின் பற்றும் நாம் இதுபோன்ற தேவையான விஷயங்களை பின்பற்றினால் என்ன?

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு