Followers

Thursday, November 6, 2014

அது - இது - எது?


ஆதாமுக்கு "அது" இல்லையாமே?!!!


சில வருடங்களுக்கு முன் இத்தாலிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.


                       
அங்கே ரோம் நகரத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியம் எனப்படும் உள் விளையாட்டு அரங்கம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரோம பேரரசர்களும் ,அவர்களது குடும்பத்தினர், ராஜீய பிரதானிகள் மற்றும் விருந்தினர்கள் கண்டு களிக்கும்  வண்ணம் பல வீர தீர விளையாட்டுகள் நிகழ்த்தி காட்ட  ஒரு வட்ட  வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கம் அது.அதனுள் வீரர்கள், கடுமையான கோபமும் கொடூரமான பசியும் கொண்ட கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி,கரடி, யானை, வரி குதிரைகள், ஒட்டக சிவிங்கி , சிறுத்தை போன்ற விலங்குகளுடன் சண்டையிட்டு போராடி தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் படும் அந்த பாடுகள் பார்வையாளர்களுக்கு ஆனந்தம்.

  பல வேளைகளில் மிருகங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றன. ரோமர்கள் உலகின் எந்தெந்த நாடுகளில் தனது அரசாட்சி செய்தார்களோ அந்தந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மிருகங்களை இங்கே வைத்திருந்ததாக வரலாறு சொல்கிறது.

சில நேரங்களில் நிராயுதபாணிகளான  சிறை கைதிகளையும் இவர்கள் இது போன்ற கொடுமையான விளையாட்டுகளில்(!!)ஈடு படுத்தி இருக்கின்றனர்

இத்தகைய வரலாற்று சிறப்பு (!) வாய்ந்த அந்த கொலோசிய அரங்கத்தை  சுற்றிபார்க்க டிக்கெட் வாங்கவே பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது.

காத்திருக்கும் நேரத்தில் நம்மை மகிழ்விக்க, அங்குள்ள கலைஞர்கள் பழைய காலத்து ரோமர்கள் அணிந்திருந்தது போலவே, ஆடை அலங்காரம் , சிகை அலங்காரம், கத்தி, அம்பு, ஈட்டி, கேடயம்,போர்-வீரர் ,ராஜா , ராணி இளவரசி, ராஜ குமாரன் போன்ற வேடங்களை அணிந்து , இசை கருவிகளை இசைத்து பாடிகொண்டிருபார்கள்.

அவர்களோடு சேர்ந்து, அதே போல் வேடமணிந்து(தொப்பி, வாளுடன்) புகை படம் எடுத்துகொள்ளவும் அனுமதிப்பார்கள்.

குதிரைகள் பூட்டிய சாரட் சவாரியும் உண்டு.

 காலையில் ஒரு 8.00 மணிக்கு சென்றால் அந்த கொலோசியத்தையும் அதன் உள்ளே இருக்கும் அருங்காட்சி, ஞாபகார்த்த பொருட்கள் விற்கும் கடை , வரலாற்று குறிப்புகள்  முதலானவற்றை பார்த்து விட்டு வெளியில் வர குறைந்த  பட்சம் மாலை 5.00 மணியாவது ஆகிவிடும்.

அந்த கட்டிடத்தின் வடிவமைப்பு இன்றைய நவீன விஞ்ஞான , தொழில் நுட்ப்ப கட்டிட கலை நிபுணர்களையே பெரும் ஆச்சரியத்திற்குளாக்கும் அபூர்வ வகை கட்டிட கலையை சார்ந்தது. கீபீ 72 ஆம் ஆண்டு தொடங்கி கிபீ  80 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு ஏறக்குறைய 1942 ஆண்டுகளாக இன்னும் ஓரளவுக்கு கம்பீரமாக காட்சி அளிக்கும் அந்த கட்டிடம் சொல்லும் ஆயிரம் ரகசிய பதிவுகளையும் மானசீகமாக உணரமுடிந்தது.

நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மென்ட் கொலோசியத்திலிருந்து ஒரு பத்து நிமிட நடை தூரம்தான்.

எனவே, நாங்கள் ஒவ்வொரு நாளும் இரவு உணவிற்கு பின், கொலோசியம் வரை நடந்து சென்று அங்கு வண்ண விளக்குகளால் ஒளி ஊட்டபட்டிருக்கும் அந்த அழகான- அபூர்வமான- பிரமாண்டமான கட்டிடத்தை பார்த்து அதன் அருகில் அமர்ந்து ரசித்துவிட்டு பின்னர் வீடு திரும்புவோம்,

மீண்டும் ஊருக்கு போவதற்கு முன் இன்னும் ஓரிரு தடவைகள் இங்கே வரத்தானே போகின்றோம் என்று  மனதில் தீர்மானித்து, அடுத்த நாள் எங்கே செல்லபோகின்றோம் என்பதற்கான திட்டமிட்டோம்.

அதன்படி, மறுநாள் காலையில் வீட்டிலேயே சிற்றுண்டி முடித்துவிட்டு, தேவையான குடிநீர், நொறுக்கு தீனி முதலானவற்றை எடுத்துகொண்டு, உலக பிரசித்திபெற்ற, கத்தோலிக்க  கிறித்துவர்களின் புனிததலங்களில் முக்கியமான திருத்தலமாகிய புனித பீட்டர் பேராலயத்திற்கு சென்றோம்.

அனுமதி இலவசம்.. இதை ST PETER 'S BASILICA  என்று அழைக்கின்றனர். பசிலிக்கா என்னும் இலத்தீன் வார்த்தைக்கு பொது கட்டிடம் என்று அர்த்தமாம், நாளடைவில் ரோம் முழுவதும் கிறித்துவ நாடாக ஆனா பிறகு இதை  பேராலயமாக பிரதிர்ஷ்டை செய்து புனித இடமாக பாவித்து வருகின்றனர்

அதன்  உள்ளே நுழைந்தோம், அப்பப்பா .... என்னே ஒரு பிரமாண்டமான வடிவமைப்பு, எத்தனை நேர்த்தியான கலை அமைப்பு , எல்லாமே பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. பொன் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களில் செய்ய பட்ட விளக்கு தண்டுகள் , கிறித்துவ வேதாகம நிகழ்வுகளை சித்தரிக்கும் சிலைகள் ஓவியங்கள் பிரமிப்பை தந்தன.

அந்த ஆலயத்தின் இரண்டு பக்கங்களிலும் பொறுத்த பட்டிருந்த கடிகாரங்களில் ஒன்று  1777 ல் நிர்மாணிக்கப்பட்டது. அதன்  சுற்றளவு 7.5 மீட்டர்  அதன் எடை 10 டன் , இன்னும் சரியான காலத்தை காட்டிக்கொண்டிருக்கின்றது.

கிபீ 324 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் பிறகு கிபீ 15 ஆம்  நூற்றாண்டு திருத்தி கட்டப்பட்டது.


இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர்,சிற்பி,கட்டிட கலை நிபுணர் "மைக்கல் ஏஞ்சலோ".

இவர் தான் நாம் இப்போது பார்க்கும் இந்த நவீன  அருமையான கட்டிடத்தின் சிற்பி.

பிரமிப்புடன் அங்குள்ள நினைவு சின்னங்கள், சிலைகள், ஆவன குறிப்புகள் நிறைந்த நூலகம், தியான அறை, நினைவு பொருட்கள் விற்கும் கடைகள், மேல் கூரையின் அழகிய வண்ண ஓவியங்கள் அனைத்தையும் கண்டு களித்தோம்.

இந்த ஆலயத்தின் ஒரு விசேஷித்த பகுதியில் மிகவும் பாதுகாப்பாக உரிய சீதோஷன கட்டுப்பாட்டில் வைக்கபட்டிருக்கும் ஒரு புனித பொருள், ஏசு சிலுவையில் அறையபடுவதற்கு  முன்  அவரது ரத்தம் வியர்வை கண்ணீர் வழிந்த முகத்தை வெரோனிகா எனும் மாது தான் வைத்திருந்த லினன் துணியால் துடைத்தாராம்.

 பின்னர் அந்த துணியை பார்க்கும்போது ஏசுவின் முகம் அந்த துணியில் தெரிந்ததாம் , அந்த துணியை தான் பதபடுத்தி பாதுகாத்து வருகின்றனராம்.

மேலும் அந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு, உலகிலேயே  எண்ணிக்கையில் இரட்சணிய யாத்திரையாக இந்த ஆலயத்திற்கு தான் அதிகம் பேர் வருகின்றார்களாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த புனித தளத்தை விட்டு வெளியே வரவே மனசில்லாமல் வெளியில் வந்து , சுற்றியிருக்கும் வேறு இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.

அடுத்த நாள் உலக கத்தோலிக்க கிறித்துவர்களின் மத தலைவராக விளங்கும் போப் ஆண்டவரின் அரண்மனை அமைந்துள்ள வாடிகன் நகரம் சென்றோம்.

அந்த வரலாற்று சிறப்பும், புனித சிறப்பும் கொண்ட அவரது அரண்மனைக்கு சென்று அனுமதிக்க பட்ட வரம்பு எல்லை வரை சென்று பார்த்துவிட்டு, அதன் அருகிலேயே போப் ஆண்டவர் விசேஷித்த பிரார்த்தனைகள் செய்ய அமைக்கப்பட்டிருக்கும் பழமை வாய்ந்த சிறு ஆலயமாகிய சிஸ்டன் சாப்பெல்  (Sistine Chapel ) சென்றோம்.

  இது கிபீ 1473 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கிபீ 1483 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட ஒரு அழகிய சிற்றாலயம்.

இதில் அழகிய கலை வேலைபாடுகள் நிறைந்த ஓவியங்கள் சிற்பங்கள் , கலை பொருட்கள் , கைவினை பொருட்கள் உள்ளன.

கிபீ 1512 ஆம் ஆண்டு இதனை புதுபிக்கும் பொறுப்பு ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் இந்த ஆலயத்தின் சுவர்கள் மேற்கூரைகளில் விவிலிய அடிபடையிலான நிகழ்சிகளை அப்படியே தத்ரூபமாக தனது தூரிகையில் வரைந்திருக்கின்றார்.

 இவர் சுமார் இருபத்தைந்துஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியை இரவு பகல் பாராமல் ஒரு நாளைக்கு சுமார் 20 மணிநேரம் வரைகூட இருந்து வேலை செய்திருக்கின்றாராம்.

அந்த காலத்தில், எந்த ஒரு நவீன வசதிகளும் இல்லாத போதும் அழகான வண்ணங்களை உபயோகித்து இந்த உலக பிரசித்தி பெற்ற ஓவியங்களை வரைந்திருக்கின்றார்.

பெரும்பாலான நாட்கள் இவர் தனது கால்களை கட்டி தலைகீழாக தொங்கிக்கொண்டுதான் அந்த மேல் கூரையின் ஓவியங்களை வரைந்தாராம்.

அந்த மேல் கூரையில் வரையப்பட்ட ஓவியம் "கடைசி தீர்ப்பு" -  "FINAL  jUDGMENT "  எனும் ஒரு கருத்தை பறைசாற்றும் ஒரு ஓவியமாக திகழ்கின்றது.

இப்படி நாங்கள் மெய்மறந்த நிலையில் மைக்கல் ஏஞ்சலோவின் திறமையும் அவரது ஆற்றலையும் அங்கு அவர் செதுக்கி வைத்திருந்த மாஸ்டர் பீஸ் - சிற்பத்தையும் பார்த்துகொண்டிருந்த போது, பக்கத்தில் இருப்பவர்களின் பேச்சு எங்கள் கவனத்தை திசை மாற்றியது.

" ஆமாம், ஆதமுக்கு 'அது' இல்லையாமே?"

"அப்படியா? அப்போ அவரது ரெண்டு ஆம்பள பசங்க..... அவங்களுக்கு  மட்டும் எப்படி?"

"அவங்களுக்கு 'அது' இருக்கு ஆனா ஆதாமுக்கு இல்லன்னு தான் சொல்றாங்க"

"அதெப்படிங்க இருக்க முடியும் ,உலகத்துல இருக்கும் எல்லா மனுஷனுக்கும் 'அது' இருக்கும்போது ஆதாமுக்கு மட்டும் 'அது' எப்படி இல்லாம போகும்?"

"அது என்னமோ தெரியல அப்படிதான் இங்க எல்லோரும் பேசிக்கறாங்க "

அருகில் மைக்கேல் ஏஞ்சலோவின் மற்றுமொரு மாஸ்டர் பீசான ஆதாமின் படைப்பு- "Creation  of  Adam " ஓவியத்தை பார்த்தோம் , அதில் "அது" இருந்தது, எனினும் பலரும் பரவலாக முனுமுனுக்கும் அந்த விஷயம் எங்களுக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது.

இத போய் நாம யாருகிட்ட கேட்கமுடியும், ஒருபக்கம் கொஞ்சம் கூச்சமாகவும் ஒருபக்கம் ரொம்ப ஆவலாகவும் இருந்தது உண்மையை அறிந்துகொள்ள.

"சரி அதோ அந்த கைடு கிட்ட கேட்போம்" என்று சொல்லி அருகிலிருந்த கைடு கிட்ட போய், " ஆதாமுக்கு 'அது' இல்லன்னு சொல்லறாங்களே 'அது'  உண்மையா" என கேட்டோம்.

அவர் எங்களை கொஞ்சம் ஏற இறங்க பார்த்துவிட்டு, ஆமாம், கிறித்துவர்களின் வேதாகம அடிபடையில் ஆதாமுக்கு 'அது' இல்லை என்பது உண்மைதான் என சொன்னதும் எங்களுக்கு தூக்கி வாரிபோட்டது, ஒரு நிமிடம் தலை சுற்றியது, திகைப்பில் உறைந்துபோனோம்.

அதெப்படி  நீங்கள் ஆதாமுக்கு 'அது' இல்லையென்று சொல்ல முடியும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ   ஓவியத்தில் கூட  ஆதாமுக்கு 'அது' இருக்கின்றதே!

 அவர் எல்லா ஓவியங்களையும் தத்ரூபமாக, எல்லா நூல்களையும், வேதாமகத்தையும் பலமுறை ஆராய்ந்து பல வேத வல்லுனர்களையும், கல்விமான்களையும்,மத போதகர்கள், மத தலைவர்களையும் கலந்து ஆலோசித்து, எல்லா ஆய்வுகளையும் மேற்கொண்ட பின்னர் தான் இங்கும் புனித பீட்டர் பேராலயத்திலும்  உள்ள சிற்பங்களையும் ஓவியங்களையும் வரைந்தார்  என்று  வரலாற்று  குறிப்புகள் சொல்வதாக அறிவோம், அப்படிபட்டவர் வரைந்த ஆதாமின் ஓவியத்தில்'அது' இருக்கும் போது நீங்கள் எப்படி ஆதாமுக்கு 'அது' இல்லையென்பது உண்மைதான் என்று சொல்லுகின்றீர்கள் என கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கேட்டோம்.

அவரும் கொஞ்சம் நிதானமாக, ஆதாமின் படைப்பின் ஓவியம் இருந்த பக்கமாக எங்களை அழைத்து சென்று, அந்த ஓவியத்தை உற்று  பார்க்கும்படி செய்து எங்களிடமே சில கேள்விகளையும் கேட்டார் .


"ஆதாம் எங்கிருக்கிறார்?"

"தரையில்"

"அவரை தன் கரங்களால் தொடுபவர் யார்? "

"கடவுள்"

"கடவுள் ஆதாமை தொட்டு என்ன செய்வதாக சித்திரம் சொல்கின்றது?"

" மண்ணில் இருந்து உருவாக்கப்பட்ட ஆதமுக்கு , கடவுள் தமது சுவாசத்தை செலுத்தி உயிர் கொடுக்கின்றார்,பிறகு ஆதாமை தொட்டு ஆசீர்வதிக்கின்றார்"

"சரியாய்  சொன்னீர்கள், மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட ஆதாமுக்கு 'அது' எப்படி இருக்கும்?"

அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது.

நாங்கள் எங்களுக்குள்ளேயே அசடு வழிந்தோம்- இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் வழியபோகின்றீர்களே அதே போல.

இருந்தாலும், " மைக்கேல் ஏஞ்சலோ எப்படி ஆதாமுக்கு 'அது இருப்பதுபோல் வரைந்திருக்கின்றார்"? என கேட்டோம்.

அதற்கு அவர்," மைக்கேல் ஏஞ்சலோ நீங்கள் சொன்ன மாதிரி, எல்லா ஓவியங்களையும், சிற்பங்களையும், மிகவும் தத்ரூபமாகதான் வரைந்திருக்கின்றார், ஆனால் ஆதாமை வரையும் போது அவர் பயன் படுத்திய மாடல் ஆளை பார்த்து   தன்னை மறந்த நிலையில் அந்த மாடல் மனிதனை அப்படியே, வரைந்ததினால் அந்த மனிதனுக்கு இருந்த அத்தனையும், "அது" உட்பட,இந்த ஓவியத்தில் வந்துவிட்டது,

பிற்காலத்தில் அதை ஆராய்ந்து பார்க்கும்போது தான் அந்த தவறு தெரிந்தது, எனினும் "அதை"சரி செய்ய  வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டார்கள்.

ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா, அதுவும் இரவு பகல் பாராமல் அந்தரத்தில் தொங்கியவண்ணம் வரையும் போது , இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஒருவேளை இத்தனை புகழ் பெற்ற  ஓவியங்களை யாரேனும் கண்ணு வைத்துவிடுவார்கள் என தெரிந்து மைகேல் ஏஞ்சலோ திருஷ்டி போல இந்த தவறை வேண்டுமென்றே செய்தாரோ என்னமோ என்று எங்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அன்று மாலை, கொலோசியம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

ஆமாம், 'அது- இது -எது?  எத பத்தி சொல்றீங்க?

அதாவது, எந்த ஒரு மனிதனும் தாயின் வயிற்றில் இருந்து தான் பிறக்கின்றான், அப்படி பிறக்கும் மனிதனுக்கும் அந்த தாய்க்கும் இடையில் உறவாக ஒட்டிக்கொண்டிருப்பது தொப்புள் கொடி, அது துண்டிக்கப்பட்டு தாயையும் சேயையும் பிரித்து எடுப்பார்கள்.

நாளடைவில் அந்த தொப்புள் கொடி காய்ந்து வயிற்றின் அடிபகுதியில் ஒரு வடுவாக தாயின் தியாகங்களையும் அவரின் பாடுகளையும் அவர் நம்மை சுமந்து பெற்றெடுக்க செய்த அனைத்து மேன்மைகளையும் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நினைபூட்டும் புனிதஞாபக சின்னமாக நம்மில் நிலைத்திருக்கும் அந்த பகுதிதான் "தொப்புள்",

'அது' ஆதாமுக்கு கிடையாது, ஏனெனில் அவன் கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன், அவனுக்கு தாய் இல்லை. எனவே ஆதாமுக்கு 'அது - அதாங்க "தொப்புள்"  இல்லை.

(நீங்க என்னத்தை நினைத்தீர்களோ அந்த ஆதாமுக்கே வெளிச்சம்!!!)

இப்படி ஒரு விஷயம் இருப்பது நான் அந்த ஓவியத்தை பார்க்கும் வரை எனக்கு தோன்றவில்லை.


இந்த விஷயத்தை இப்போது சொல்வதற்கு காரணம்:

சமீபத்தில், மைக்கேல்  ஏஞ்சலோ வின் ஓவியங்களுக்கு சுமார் 4 மில்லியன் டாலர் செலவில், 7000 வண்ண சிறு விளக்குகளும் அந்த ஓவியங்கள் பழுதாகாமல் தடுக்க அதி நவீன குளிரூட்டும்  வசதியையும், காற்றோட்ட வசதிகளையும் செய்து, அந்த கலைஞனை பெருமை படுத்தவும்  , அவர் வரைந்த  ஓவியங்களின் 500 ஆவது ஆண்டு நினைவையும் கொண்டாடும் வகையில் சிஸ்டைன் சிற்றாலயத்தை புதுபித்திருக்கின்றனர்..  


இது மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களை பார்க்க வருகை தரும் ,வருடத்திற்கு 600 மில்லியன், பார்வையாளர்களின் சிறப்பு பார்வைக்கும், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்த பொக்கிஷங்களை பாதுகாத்து வைக்கவும் இந்த ஆண்டு இந்த ஆலயம் புதுபிக்கபட்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள - நான் பெற்ற  இன்பம்பெருக இவ்வையகம் எனும் கோட்பாட்டின் அடிபடையில் இந்த படைப்பு..

நன்றி வணக்கம்.

மீண்டும் (சி)ந்திபோம்

அன்புடன்


கோ

6 comments:

 1. ungalin Italy payana katturai arumai sir.
  puthiya thakavalkal pala theriwthu kolla mudinthathu.
  kurippaa Michelangelo patri.
  ***
  (நீங்க என்னத்தை நினைத்தீர்களோ அந்த ஆதாமுக்கே வெளிச்சம்!!!)////

  haahaahaa
  pathivu super sir thodarnthu ezuthungal!

  ReplyDelete
 2. Hello Mahesh,

  Thanks for visiting and for your comments.

  Hope you are well.

  Did you see my comment on your write up, about Arakkonam Marriage?

  Take care.

  KO

  ReplyDelete
 3. அருமையானத் தகவல்கள் அதுவும் கண் முன்னே நிறுத்தியது நாங்கள் கண்டது போல! "அது" விஷயம் எற்கனவே தெரிந்து இருந்ததால் "அது" என்று நீங்கள், நாங்கள் எதை நினைப்போம் என்று நினைத்து "அது" என்று எழுதியிருந்தீர்களோ அதை நினைக்கவில்லை! ஹஹஹ்ஹ...என்றாலும் "அது" என்று மிகவும் சுவாரஸ்யமாகத் தாங்கள் எழுதியுள்ளீர்க்ள்!

  இந்த இடுகையில் பல அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 4. திரு துளசிதரன் அவர்களுக்கு.

  வருகைக்கு மிக்க நன்றி.

  ஆதி முதல் அந்தம் வரை "அது - இது- எது" வில் நான் "அது" என்று "எதை" நினைத்து எழுதினேன் என்பது ஆதாமுக்கு "எது" இல்லையோ "அதை" மட்டும் தான். வேறு "எதையும்" இல்லை.

  உங்களுக்கு கொஞ்சம் லொள்ளு.... கொஞ்சம் இல்ல .....ஜாஸ்தின்னு ..........

  ஸ்கூலெல்லாம் எப்படி இருக்கு.

  அம்மையாருக்கு எனது அன்பும் வணக்கங்களும்.

  நன்றி.


  கோ

  ReplyDelete
 5. புதிய தகவல் அரசே,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தகவல் படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்

   வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

   கோ

   Delete