பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 7 நவம்பர், 2014

சொர்கத்தில் நாய்கள்

சீசர்

உலகின் ஏதோ  ஒரு கோடியில் இருந்து   எழுதும் என்  பதிவுகளைபடித்து ரசித்து விமர்சனம் கொடுப்பதோடல்லாமல், விரும்பி கேட்டவை போல
சீசரை பற்றி விரைவில் எழுதுங்கள் என  
உலகெங்கிலும் உள்ள கோடிகணக்கான(???) வாசகர்களின் அன்பு கட்டளையை ஏற்று, இந்த பதிவினை எழுதுகின்றேன்.



நான் ஒருத்தர்னு சொன்னா அது ஒருகோடி பேருன்னு   அர்த்தம் , 


சீசர் பிறந்த கதை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்.

தெரியாதவர்கள் - தெரிந்து கொள்ள  பாபியும்அதன் பேபியும் படியுங்கள்.

தான் கண் மூடி இருந்த - பிறந்த நாளன்றே தன் தாயின் உடலை மண்மூடிய நிகழ்வு சீசருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தாயின் பாலோ, அரவணைப்போ,கதகதப்போ, நிறமோ, உருவமோ,அன்போ, பாசமோ அறியாத ஒரு துளிர் போல் தூங்கிக்கொண்டிருந்தது.

சீசர்   முதன் முதலாக குடித்த பால் தாய் பாபிக்கு வைக்கப்பட்டு  குடிக்காமலே விட்டுப்போன அந்த பால்தான்.

தாய் பாபிக்கும் சீசருக்கும், தொப்புள் கொடி உறவுக்கு அடுத்து உறவு பாலத்திற்கு உதவிய மற்றுமொரு அடையாள சின்னம், பாபியின் சாப்பாட்டு தட்டுதான்.

மனித குலத்தில் ஆங்காங்கே இதுபோன்றுகுழந்தை பிறந்ததும் தாய் இறந்துபோகும் துரதிர்ஷ்டமான சூழ்நிலைகள் ஏற்படுவது உண்டு.

இவ்வாறு, தான் பிறந்ததும் தன் தாய் இறந்து போனதற்கு, குழந்தை எப்படி காரணமாகும்?

எனினும், சில இரக்கமற்ற மனிதர்கள், இது போன்ற குழந்தைகளை பழிப்பதும்,தூற்றுவதும், ஒதுக்குவதையும், தாயை விழுங்கிய , எருமை வாகனத்தின் எஜமானன் பெயரை இவர்களுக்கு  சூட்டி , குறை கூறி,கேலி பேசி, பரிகசித்து பிஞ்சு உள்ளங்களை,கோடாரியால் கீறி,கொதிநீரை வார்த்து,பின்னர் சுண்ணாம்பு களிம்பு பூசி மகிழ்வார்கள் இவ்வுலகில்.

சீசர் விஷயத்தில் எங்கள் யாரிடமும் இதுபோன்ற பிற்போக்கு சிந்தனை அது இமை திறக்காமல் இருந்த அந்த நாள் முதல் கடைசிவரை இமைபோழுதும் எழுந்ததில்லை.

மாறாக பாபியின் மறு உருவமாகத்தான் சீசரை பேணி வளர்த்து வந்தோம்- இதுபோன்றதொரு ஈன புத்தி மானிட பிறவிகளிடம் இருப்பது அறியாமல் சீசரும் வளர்ந்தது- நாளொரு மேனியும் பொழுதொரு போஷாக்குமாக.

பாபியை போலல்லாமல், பிறந்தது முதல் எங்களோடேயே இருந்ததினால், அதன் அன்பு முழுமையாக எங்களை ஆட்கொண்டது.

அளவுக்கு மீறிய செல்வாக்குடனும், அதே சமயத்தில் தன் தாயை போல அடக்கமாகவும் நற்பண்புகளை சிதற விடாமல் நடந்து கொண்டது.

அதே வீடு, அதே தட்டு, அதே (பசுவின்) பால், அதே மருத்துவர், அதே உணவு  ஆனால் கவனம் மட்டும் கூடுதலாக செலுத்தி வளர்த்து வந்தோம்.

சீசருக்கு, பாபியை விட ஒரு படி கூடுதலாக, அப்பாவிடம் பாசம் அதிகம் , அவருக்கும் அப்படிதான்.

வழக்கம் போல அவர் கொடுக்கும் உணவை அமிழ்தமென  விரும்பி சாப்பிடும்.

அப்பா வீட்டுக்கு வரும்வரை காத்திருந்து தனது மகிழ்ச்சியை - அன்பை காட்டிய தன் தாயின் பாசத்தையும் விஞ்சும் வகையில், அப்பா வருகின்ற சாலையில் சென்று ஒவ்வொரு பேருந்தாக பார்த்துகொண்டிருக்கும்.

அப்பாவின் வருகை கண்டதும், ஓட்டமெடுத்து, வீட்டுக்குள் அங்குமிங்குமாக துள்ளி குதிக்கும்.

அதை கண்டவுடன்  வீட்டிலிருப்பவர்கள் அப்பா வந்துவிட்டார் என அறிந்து கொள்வோம்.

இதுபோன்ற செயல்கள் அன்றாடம் நிகழ்ந்தாலும் ஒவ்வொரு முறையும் சீசர் காட்டும் அன்பும் பாசம், குதுகலம் மகிழ்ச்சி,துள்ளலில் எந்த கள்ளமும் யாதொரு வித்தியாசமும் இருக்காது.

பாபி இறந்த போது யாரோ சொன்னார்கள், " யாருக்கோ வரவேண்டியதை(??) பாபி ஏற்றுகொண்டது என்று"

இதன் அர்த்தம் பின்னாளில் புரிந்தது:

அதாவது, காலனின் காலடி எங்கள் வீட்டிற்குள் பட்டிருக்கும், அதே சமயத்தில் நாய்களின் கண்களுக்கு மாத்திரமே "ஒரு சில" காட்சிகள் புலப்படும் , அப்படி  வாசலில் காவல் புரிந்திருந்த பாபியின் கண்களில் தெரிந்த காலனின் காலை பிடித்து கெஞ்சி, மன்றாடி, யாருக்காக இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க நினைத்தாயோ அவர்களுக்கு பதில் என்னை அழைத்து செல் என்றிருக்குமென.

பாபியின் மரணத்திக்கு பின்னர் பாபியுடன் செய்து கொண்ட ஒப்பந்த மீறலாக, மீண்டுன் காலனின் கடை கண் பார்வை எங்கள் கதவிலக்கம் மேல் பட்டிருக்குமோ?

இந்த நிலையில், அப்பா  மஞ்சள் காமாலையால் கொஞ்சம் கஷ்டபட்டார்.

இயற்கை மூலிகை, பச்சிலை மருந்துகள் மூலம் குணமடைந்தார் , எனினும் காமாலையின் போது கொடுக்கப்பட்ட உணவு , மற்றும்  பத்திய  முறைமைகளில் ஏற்பட்ட பாதிப்புகளின் வீரியம் அதிகமானதால் மீண்டும் உடல் நிலை மோசமானது.

(வாய்ப்பு வாய்க்கும் போது அவரது வாழ்வில் நிகழ்ந்த ஒரு அதிசய உண்மையை பிறகு சொல்ல முயற்சிக்கிறேன்)

எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பா உடல் நல குறைவால் அவதி பட்டதையோ மாத்திரை மருந்துகள் சாப்பிட்டதையோ , மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதையோ நங்கள் பார்த்ததில்லை.

எப்போதும் ஆரோக்கியமாகவும், உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடனும் , இனிப்பு காரம், புளிப்பு, மாமிசம் போன்ற எந்த உணவிலும் அளவாகவே இருப்பார்.

புகை, குடி போன்ற எந்த கெட்டபழக்கமும் அவரை அணுகவிடாமல் ஒரு தனிமனிதஒழுக்க சீலராக  வாழ்ந்து வந்தார்.

இதே போன்ற  நவம்பர் திங்கள்  பதினோராம் தேதி இரவு எட்டு மணியளவில் அவரை அருகிலுள்ள ஒரு "உலகபுகழ் பெற்ற" மருத்துவமனைக்கு , இடைவிடாமல் பெய்த   மழை தூறல்களுக்கு இடையில், ஆட்டோவில் அழைத்து சென்றோம் என்பது சிறுவனாக இருந்த எனக்கு நினைவு இருக்கின்றது, ஆனால் என்ன நடக்கின்றது என்ற நினைவு இல்லாதவராய் ஆட்டோவில் அம்மாவின் தோளில்  சாய்ந்து இருந்தார், அவர் அருகில் நான் அமர்ந்தேன்.

மருத்துவ மனையில் ஒருவேளை அட்மிட் செய்வதாயிருந்தால் உடனடியாக தேவைப்படுமே என்று ஒரு டவல்,மாற்று உடைகளடங்கிய ஒரு பையை அவசர அவசரமாக தயார் செய்து நடுவில் அமர்ந்திருந்த அப்பாவின்  கால்மாட்டில் என் சகோதரி  வைத்தார்கள்.

ஆனால் பையை சரியாக வைக்கமுடியவில்லை உற்று பார்த்ததில் அப்பாவின் கால்மாட்டில் சீசர் சுருண்டு படுத்திருந்தது தெரிந்தது. அது எப்போது ஆட்டோவில் ஏறியது என்று யாருக்கும் தெரியாது.

அதை கீழே இறக்க கொஞ்சம் நேரம் பிடித்தது, அந்த நேரத்தில் காலனின் கரம் அப்பாவின் கரத்தை இன்னும் அதிகமாக அழுத்தி பிடித்தது.

மருத்துவமனை  வந்து சேர மணி ஒன்பது ஆகிவிட்டது.

அதற்குள் எங்கள் உறவினர்கள் கொஞ்சம்பேர் ஆஸ்பிடலில் செய்யவேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தனர்.

அன்று  ஞாயிற்று கிழமை.

வழக்கமாக அவசர பிரிவுகளில் ஞாயிற்று கிழமைகளில் அதிகமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

எனவே டாக்டர் ஒருவர் வந்து பரிசோதித்து மருத்துவம் பார்க்க கொஞ்சம் நேரம் ஆனது.

முதலில் எக்ஸ்ரே , ப்லட் டெஸ்ட் போன்ற அடிப்படை சோதனைகளை செய்து பின்னர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றார்கள் அப்போது மணி இரவு 10:30.

வெளியிலே மழை தூரிகொண்டிருந்தது.

அப்பாவுடன் எங்கள் மாமா ஒருவரும் அந்த அவசர சிகிச்சை அறைக்குள் சென்றார் - அவர் அந்த ஆஸ்பிடலில் வேலைசெய்வதால் அவருக்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தனர்.

சரியாக அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்த டாக்டர் சொன்னார், " மன்னிக்கணும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை."

அப்பாவின் உயிரை காலன் களவாடி சென்றது பதினோராம் மாதம் பதினோராம் நாள்  இரவு பதினோரு மணி.

அவரை தொடர்ந்து எங்கள் மாமாவும் அழுதவண்ணம் வெளியில் வந்து அம்மாவை கட்டிபிடித்து கதறி அழுதார்.

அந்த நிமிடம் வரை இந்த  ஒரு நிலையை கொஞ்சமும் எதிர்பாராதிருந்த எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது, ஒரு பெரிய இடியே   எங்கள் தலையில்  விழுந்ததாக உணர்ந்து துடிதுடித்து போனோம்.

அம்மாவின் அழுகை - எப்படி சொல்வேன்.

எல்லாமே ஒரு மூன்று  மணிநேர இடைவெளியில் நடந்து முடிந்திருந்தது.

அப்பாவின் உடலை ஆஸ்பிடலில் அதற்கான பாதுகாப்பு அறையில் வைக்க ஏற்பாடு செய்துவிட்டு அனைவரும்  அப்பா இல்லாமல் சோகசுமைகளை நெஞ்சில் சுமந்து வீடு வந்தோம்.

ஆட்டோவிலிருந்து வலுகட்டாயமாக இறக்கி விடப்பட்ட சீசர் நாங்கள் வரும் வரை எங்களுக்காக - அப்பாவையும் சேர்த்து- வாசலிலேயே காத்துகொண்டிருந்த்து.   

நாங்கள் அழுதுகொண்டு வந்ததை பார்த்து வீட்டிலிருந்த சகோதரிகள் கதறி அழுதனர்.

எங்களின் அழுகையை கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் கூடிவிட்டனர்.

இந்த நிலைமையில் சீசர் இங்குமங்குமாக ஓடி ஓடி யாரையோ தேடிகொண்டிருந்தது

யாரைஅப்பாவை.

எங்குதேடியும் பார்க்க முடியாததாலும், வீட்டில் நிலவும்  சோக சூழ்நிலையை உணர்ந்ததாலும், சீசர் அப்பாவின் கட்டிலின் கீழ் சென்று படுத்துகொண்டது.

மறு நாள் காலை  எங்கள் உறவினர்கள் அப்பாவின் அறையை சுத்தம் செய்ய கட்டிலை அகற்றும் போது, சீசர் அங்கு மெளனமாக படுத்து கிடப்பதை பார்த்து அதை வெளியில் வரும்படி சொன்னார்கள்.

அதன்படி வெளியில்  வந்த சீசரை பார்க்கும்போது, அதன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்திருப்பதை பார்க்க முடிந்தது, அதாவது, கடந்த இரவெல்லாம் அப்பாவை நினைத்து சீசர் அழுதுகொண்டிருந்ததை உணர - பார்க்க முடிந்தது.

அந்த நாயின் சோகம் - பாசம் - அன்பு வந்திருந்த  எல்லோராருக்கும் ஒரு ஆச்சரியமாக இருந்தது.,

உணவு அருந்த மனமில்லாமல்  கொடுக்கப்பட்ட உணவு அப்படியே அதன் தட்டில் இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அப்பாவின் உடல் வீட்டிற்கு  கொண்டுவரப்பட்டது.

ஆம்புலன்சில் இருந்து இறக்கபடுவதர்க்குமுன் சீசர் அந்த ஆம்புலன் வண்டிக்குள் ஏறி அப்பாவின் உடலை தனது முன்னங்கால்களால்  பிராண்ட ஆரம்பித்தது.

பிறகு உடல் இறக்கப்பட்டு வீட்டு ஹாலில் ஒரு பெஞ்ச் மீது வைத்தபிறகு அந்த,பெஞ்சுக்கு கீழேயே படுத்து கொண்டது  இன்னும் அதன் கண்களின் கண்ணீர் நிற்கவில்லை.

அதன் பிறகு நடந்த எல்லா சம்பிரதாய நிகழ்ச்சிக்கு பின் அப்பாவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைத்து கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முக்கியமானவர்களில் சீசரும் ஒருவர்.

உடலை குழியில் வைத்து மண்ணை நிரப்பும் நேரம் , யாருமே எதிபார்க்காத ஒரு நிகழ்ச்சி நடந்தது.

மண்ணை கொண்டு அந்த கல்லறை குழியை மூடிகொண்டிருக்கையில் திடீரென சீசர் அந்த குழிக்குள் பாய்ந்து மூடப்பட்ட அப்பாவின் உடலை ன் முன்னங்கால்களால் தோண்ட ஆரம்பித்தது.

பின்னர் ஒருவழியாக அதனை வெளியில் எடுத்து வீட்டுக்கு அழைத்து சென்றோம்.

தொடர்ந்து சீசர் எங்களைப்போலவே உணவிலும் , உறக்கத்திலும் நாட்டமில்லாதவனாக இருந்தது.

மூன்றாம் நாள் பால் வைக்க கல்லறைக்கு செல்ல நாங்கள் ஆயத்தமாகும் வேலையில் சீசரை காணவில்லை.

எல்லா மூலை முடுக்குகளில் தேடியும் சீசரை காணவில்லை.

சரி எங்காவது தோட்டத்து பக்கம் போய் இருக்கும், வந்துவிடும், நாம கல்லறைக்கு போயிட்டு வந்துடலாம் என அனைவரும் கல்லறைக்கு பால் கொண்டு சென்றோம்.

கல்லறை எங்கள் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

நாங்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் ஏறி கல்லறைக்கு கொஞ்சம் முன்னதாகவே இறங்கி நடக்க ஆரம்பித்தோம்கல்லறை  வரை  வாகனம் செல்ல பாதை  இல்லாததால்.

அப்படி நாங்கள் நடந்து செல்லும்போது தூரத்திலிருக்கும் அப்பா புதைக்கப்பட்ட இடத்தை பார்த்தோம் அங்கே.....கல்லறையை சீற்படுத்திகொண்டிருந்த  காவலாளியுடன்  ஏதோ  ஒரு நாய் இருப்பது தெரிந்தது.

ஆனால் நாங்கள் கிட்டே சென்றபிறகு தான் தெரிந்தது அது சீசர் என்று.

எங்களை பார்த்தவுடன் எங்களோடு வந்து சேர்ந்துகொண்டது.

அந்த காவலாளி எங்களிடம் இது உங்க நாயா என்று கேட்டார்.

ஆமாம் என்றோம்.

இந்த நாய் நேற்று இரவிலிருந்து இங்கேயே இருந்தது எவ்வளவு விரட்டியும் போக மறுத்தது என்று அவர் சொல்லவதை கேட்டவுடன் அதன் மீது எங்களுக்கிருந்த அன்பு மரியாதை பன் மடங்கு உயர்ந்தது.

அதன் பிறகு காலன் கொண்டுவந்த சோக ரணங்கள்  காலம் கொண்டுதந்த  களிம்பு மருந்தினால் கொஞ்சம் கொஞ்சமாக ஆற  ஆரம்பித்தது.

பழையபடி இல்லையென்றாலும், எந்த குறையுமின்றி சீசரின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்துகொண்டிருந்தது.

அதற்கும் முன்புபோல ஆரோக்கியம் சிறப்பாக இல்லை.

ஒருவருடம் எப்படி போனதென்றே தெரியவில்லை அதற்குள் இன்னும் ஒருவாரத்தில் அப்பாவின் முதலாமாண்டு நினைவு நாள் வந்தது.

அந்த நாளை சிறப்பாக அனுசரிதோம்.

அன்றைய நாள் அப்பாவின் படம் அருகே வாழை இலையில்  பரிமாறபட்ட உணவை மொத்தமாக பிசைந்து  , எங்கள் பெரியப்பா , எங்கள் அனைவருக்கும் அவர் கையாலே ஒவ்வொரு உருண்டை உருட்டி கொடுத்தார், அதே போல சீசருக்கும் ஒரு உருண்டையை அதன் தட்டில் வைத்து கொடுத்தார்- அதுவும் எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் தானே.


அப்பாவிற்கு படைத்த உணவின் அந்த உருண்டையை , அப்பா இருந்தபோது , அவர் கொடுத்தால் எப்படி விரும்பி சாப்பிடுமோ அதே ஆர்வத்துடன் சாப்பிட்டது.

அது முடிந்த அடுத்த நாள் , அப்பாவின் அறையில் , அப்பா பயன்படுத்திய கட்டிலின் கீழே சீசர் ..... தன் உயிரை  விட்டிருந்தது.

ஒருவேளை முந்தினநாள் இறந்திருந்தால் எஜமானரின் நினைவு நாள் நிகழ்ச்சி பாதித்திருக்குமோ என்றெண்ணி தனது உயிரை அடுத்த நாள் வரை இறுக்கி பிடித்திருந்தது போலும்.

 அது இறந்த நாள் பனிரெண்டாம் தேதி , பதினோராம் மாதம்.

தாய் பாபியை  புதைத்த இடத்திலேயே சீசரையும் புதைத்து அதற்கும் மூன்றாம்  நாள் பால் ஊற்றினோம்.

அதன் பிறகு  எத்தனையோ நாய்களை வளர்த்திருந்தாலும், பாபியும் அதன் பேபியுமான சீசரும் எங்களோடு காண்பித்த அளவுகடந்த ஒரு பிணைப்பை நாங்கள் வேறு எந்த நாயிடமும் இன்றுவரை கண்டதில்லை.

இன்னும் இரண்டொரு தினங்களில் அப்பாவின் நினைவு நாள் வருகிறது - நவம்பர் பதினொன்னு.

இந்த மாதம் பதினோராம் தேதி எங்கள் அப்பாவுக்குமுப்பதாம் ஆண்டு நினைவு நாள்சீசருக்கு அடுத்த  ஆண்டு 

இறக்கின்ற மனிதர்களுக்கு மட்டுமா சொர்க்கத்தில் இடம்? ஏன் விலங்குகளுக்கு இருக்ககூடாதா?

அதன் நம்பிக்கையின் அடிபடையில், என் அப்பாவுடன் பாபியும், சீசரும் கூட சொர்கத்தில்தான் இருப்பார்கள் என நான் நம்புகின்றேன்

அப்பாவின் ஆன்மாவும், பாபி, சீசரின் ஆன்மாக்களும் இறைவனின் திருவடிகளில் இனிதே இளைப்பாற - சாந்தி அடைய நான் இன்று வேண்டிகொள்கின்றேன்.

முடிந்தால் நீங்களும் வேண்டிகொள்ளுங்களேன்.

நன்றி.

வணக்கம்

மீண்டும் (சி)ந்திப்போம்.


கோ.

6 கருத்துகள்:

  1. இறைவனின் திருவடிகளில் இனிதே இளைப்பாறட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

      உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. ஐயா! மனதை நிரப்பி உலுக்கிய அருமையான ஒருபதிவு! சீசர்! உங்கள் உணர்வுகளையும், சீசரின் உணர்வுகளையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகின்றது! ஏனென்றால் எங்களிடமும் டைகர், (துளசியிடம்) கண்ணழகி, ப்ரௌனி (கீதாவிடம்) என்று செல்லங்கள் இருப்பதால். மிக அருமையான எழுத்து நடையில் சீசர்! (முதல் ஆரம்பமே அட்டகாசம் போங்கள்!! செம பில்ட் அப்!!ஹஹஹஹ்)

    பதிலளிநீக்கு
  3. திரு துளசிதரன் அவர்களுக்கு.

    வருகைக்கு மிக்க நன்றி.

    சீசரின் அன்பை பாராட்டி எழுதியிருந்தீர்கள் மிக்க நன்றி.

    உங்களிடமும் அந்த ஜீவன்கள் இருப்பதால் உங்களால் எளிதில் ரசிக்க முடிந்தது.

    பாம்பின் கால் பாம்பறியும்.

    ஆமாம் , நீங்க நல்ல பாம்பா, இல்ல செல்ல பாம்பா?

    வீட்ல எல்லோரும் சுகமா?

    நன்றி.


    கோ

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கோ,
    மனம் கனக்கிறது,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பதிவு உங்கள் மனதை பாத்தித்ததை குறித்து எனக்கும் வருத்தம்தான்.

    கோ

    பதிலளிநீக்கு