பின்பற்றுபவர்கள்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

பாத்ரூமில் தோலுரித்த பாம்பு

பாம்பின் சட்டை பாம்பறியும்

நண்பர்களே,  

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி கேட்டிருப்போம்.
படை நடுங்குமோ என்னமோ தெரியாது, ஆனால் நம்மில் பலருக்கு தொடை நடுங்கும் என்பது வெட்ட வெளிச்சம்.


Image result for pictures of viper snakes

சின்ன வயது, பெரியவயது என்னும் பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரு அச்சத்தையும் பயத்தையும் தரக்கூடியவை பாம்புகள்.

சில பாம்புகள் விஷமுள்ளவை சில பாம்புகள் விஷமற்றவை என்று பாகுபடுத்தபட்டிருந்தாலும் சாமானிய மனிதனுக்கு அவற்றை பகுத்துணர்ந்து அணுகுவதென்பது சாதாரண விஷயமல்ல.

இதுவரை எத்தனையோ பாம்புகளை  பார்த்திருந்தாலும் (தூரத்தில் இருந்துதான்), அவற்றை கையால் பிடித்தோ அல்லது விரல்களால் தடவையோ பார்த்ததில்லை சிங்கபூர் செல்லும்வரை.(இதைபற்றி பின்னர் பார்க்கலாம்)

கடந்த வருடம், தென் ஐரோப்பா கண்டத்தில் , மத்திய தரைகடலின் மையபகுதியில்  இத்தாலியின் சிசிலி பட்டணத்துக்கும் வட ஆப்பரிக்க நாடான துனிசியா விற்கும் இடையில் சுமார் 316 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மூன்று தீவுகளை தன்னகத்தே கொண்டு சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகையுடன், பல வரலாற்று பின்னணியையும், அழகிய இயற்க்கை காட்சிகளையும், தெளிந்த நீர்பரவும் இயற்க்கை கடல்கறைகளையும் கொண்டு உலக சுற்றுலா பயணிகளை  தன்பால் வா வா வென அழைத்து  கண்ணுக்கும் வயிற்றுக்கும் பலவண்ண விருந்து படைக்கும் ஒரு அழகிய, உலகத்திலேயே மிக மிக சிறிய, சுதந்திர குடியரசு நாடுகளில் ஒன்றான  "மால்டா"  தீவு  சென்றிருந்தோம்.

Image result for pictures of malta island

அங்கே சுமார் இருபது நாட்கள் தங்கி , அந்த நாட்டின் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து, பல தரப்பட்ட அழகிய பழங்கால கட்டிடங்கள், போற்றுதலுக்குரிய வழிபாட்டு தளங்கள், நீண்ட கடற்கரைகள்,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வருடாந்தர கோடை விழா கார்னிவல், விதவிதமான உணவுவகைகள்(நமது சென்னை உணவுகளும் சேர்த்துதான்) பலதரப்பட்ட மக்கள் இவைகளை ரசித்து எங்கள் விடுமுறையை கழித்துகொண்டிருந்தோம்.

நாங்கள் சென்றிருந்த சமயம், நல்ல கோடை காலம், சுமார் சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் வெயில் வஞ்சனை இல்லாமல் காய்ந்துகொண்டிருந்தது.

Image result for pictures of malta island

ஒருநாள் டால்பின், மற்றும் விலங்குகளின் பூங்காவிற்கு சென்றோம்.

திறந்தவெளி அரங்கம் என்றாலும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, வரிசையில் நின்று,எங்களுக்குரிய இடங்களில் அமர்ந்துகொண்டோம், அங்கே டால்பின் மீன்களின் சாகச விளையாட்டை கண்டு களித்தோம்.

அந்த பூங்காவின் ஒருபகுதி, ரெப்டைல்ஸ் எனப்படும் "ஊர்வன" பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டோம்.

அங்கே விதவிதமான ஊரும் பிராணிகளை கண்டோம்.

என்னதான் இந்திய வம்சாவளி(!!) என்றாலும் அங்கே வீசிய அனல் காற்றையும் சூட்டையும்  தாங்கமுடியவில்லை.

உடல் சூட்டையும் தாகத்தையும் தணித்துக்கொள்ள குளிர் பானங்கள், ஐஸ் கிரீம்கள், தண்ணீர் என அருந்திபார்த்தும் சூடு தணியாத நிலையில் , ஒரு கட்டத்தில் என் மேலாடை - டி சர்ட்டை கழற்றி (சிக்ஸ் பேக்கை காட்டவேண்டும் என்பதற்காக "மட்டும்" அல்ல) அதை தோளின் மேல் போட்டுக்கொண்டு ஏனைய இடங்களுக்கு சென்று மற்ற விலங்குகளின் காட்சிகளையும் சாகசங்களையும் கண்டு களித்தோம்.

மேலாடை இல்லாத  என்னை யாரும் காட்சி பொருளாக  பார்க்கவில்லை (பார்க்கும்படி இல்லை) என்பது ஒரு கூடுதல் தகவல்.

அப்படி பார்த்துக்கொண்டிருந்த  ஒருபகுதியில் விளக்கம் சொல்பவர்  சொன்ன தகவல் பெரும் ஆச்சரியமாக இருந்தது.

அதாவது பாறைகளும் வறண்ட பூமியும் சப்பாத்திகள்ளிகள்(அதன் பழத்தின் சுவை அலாதிதான்)
Image result for FRUITS AVAILABLE IN MALTA

 சர்வ சாதாரணமாக ஒரு பத்திலிருந்து முப்பது , நாற்பது அடி உயரம்  வரைகூட வளரக்கூடிய அந்த தீவில், மரம் செடி கொடிகள் நிறைந்த அந்த பூமியில், நல்ல வெப்பம் நிலவக்கூடிய நாட்டில்  கடந்த கீ.பி. அறுபதாம் ஆண்டிற்கு (AD 60) பிறகு எந்த ஒரு விஷ பாம்பையும் பார்க்கமுடியாது என்பதுதான்.

Image result for pictures of malta island

ஏன் பார்க்க முடியாது?

 இருந்தால் தானே பார்க்க முடியும்?

அப்படியானால் கீ.பி.அறுபதாம்   ஆண்டிற்கு முன் எப்படி இருந்தது?

பின்னர் எப்படி இல்லாமல் போனது?

தேச துரோகம் - அரச கட்டளைக்கு கீழ்படியாமை போன்ற பொய் குற்றசாட்டுகள் சுமர்த்தி ஒரு தெய்வ பக்திமானை, அந்த காலத்தில் பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த ரோம பேரசு, சிரசேதம் செய்வதற்காக பாலஸ்தீனத்தில் இருந்து  கடல் மார்க்கமாக பாய்மர சரக்கு  கப்பலில் சுமார் 300 ஆட்களோடு கிரீசின் வழியாக ரோமாபுரிக்கு கொண்டு செல்லும் வழியில் பலத்த புயல் காற்றின்   விளைவாக கப்பல் உடைந்து சிதற , இறைவனிடத்தில் வேண்டிகொண்டதால் அவர்களுள் ஒருவரும் மரித்துபோகாமல் நடுகடலில் தென்பட்ட ஒரு சிறிய நிலபரப்பை நீந்தி கரை சேர்ந்ததாகவும், அப்படி கரை சேர்ந்த மக்களுக்கு அந்த தீவிலுள்ளவர்கள் புகலிடம் தந்ததாகவும் அப்போது நிலவிய கடும் குளிரை போக்கும்வண்ணம் அருகிலிருந்த காய்ந்த விறகுகளை, கட்டைகளை சேகரித்து கொளுத்தி நெருப்பு மூட்டி குளிர்காய செய்தனராம்.

Image result for pictures of malta island

அப்போது மரணதண்டனை விதிக்கப்பட்ட அந்த தேவ மனிதன் அருகிலிருந்த ஒரு காய்ந்த மர கட்டையை நெருப்பில் போட எடுத்தபோது அதிலிருந்த கண்ணாடி விரியன் என சொல்லப்படும் கொடிய விஷ பாம்பு அவரின் கையை கடித்து அவர் கையோடு தொங்கிகொண்டிருந்ததை பார்த்து அருகிலிருந்த அந்த பழங்குடி மக்கள் அவ்வளவுதான் இந்த மனிதன் இன்னும் சில நொடிகளில் சாகப்போகின்றார் என நினைத்து பதற்றமடைய, அந்த மனிதரோ தனது கையை கடித்து தனது கையோடு சுற்றிக்கொண்டிருக்கும் அந்த விஷ பாம்பை அவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்த நெருப்பில் உதறிவிட்டாராம்.

என்ன ஆச்சரியம், கடிபட்ட அவருக்கு எந்த ஆபத்துமின்றி உயிர் பிழைத்ததை தொடர்ந்து, இனி இந்த தீவில் எந்த விஷபாம்பும் இருக்காது என அவர் கடவுளின் பெயரால் ஆணை இட்டு சொன்னாராம்.

 பிறகு மீண்டும் அவரை ரோமாபுரிக்கு அழைத்து செல்லும் வரை சில காலம் அந்த தேவ மனிதன் அந்த தீவில் தங்கி இருந்து பல அற்புதங்களை செய்தாராம்.

அவர் பெயர் "புனித பவுல் அடிகளார்" - கிறிஸ்த்து வாழ்ந்த காலத்தில் அவரோடு இணைந்து அருட்பணி செய்தவராம்

அன்று முதல் இன்றுவரை மருந்துக்கு கூட ஒரு விஷ பாம்பு  அந்த மால்டா நாட்டில் பார்க்க முடியாதாம்.

பாம்பு தோல் உரித்திருக்கும்  எந்த அடையாளமும் அன்றிலிருந்து இன்றுவரை  கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்கும் பார்க்க முடியாது என்ற தகவலின் ஆச்சரியத்துடன் தங்கியிருந்த விடுதி வந்து சூடு தணிய குளிக்க  பாத்ரூம் சென்றேன்.

அது ஒரு பழங்கால கட்டிட அமைப்புகொண்ட ஒரு பல அடுக்கு கொண்ட ஒரு பெரிய விடுதி, முடிந்தவரை தினமும் காலைமாலை இரண்டு வேலைகளிலும் சுத்தபடுத்தி பெருக்கி துடித்துதான் வைத்திருந்தனர்.

குளிக்க சென்ற எனக்கு , உயிரியல் பூங்காவில் சொன்ன பாம்புகளை குறித்த செய்தி மனதில் நிழலாடியது.

அதுவும் அந்த குளியல் அறையில் இருந்த கண்ணாடிகளை பார்க்கும்போது "கண்ணாடி விரியனின்" ஞாபகமும் வந்துபோனது.

பாம்பென்றால் படையும் தொடை நடுங்குமல்லவா?

கொஞ்சம் அக்கம் பக்கம்  பார்த்தவண்ணம் குழாயை திறந்து உடல் நனைத்து  சோப்புபோடும் சமயம் ..... அந்த குளியலரியின்  தொட்டியில் கொஞ்சம் மா நிறத்தில் நீள நீளமாக மெல்லிய , சன்னமாக தோல் உரிந்து கிடந்ததை பார்த்து பயந்து அந்த குளியலறை  தொட்டியிலிருந்து தாவி  துரிதமாக குளியலறையை விட்டு வெளியில் ஓடிவந்தேன் (டவலை  சுற்றிக்கொண்டுதான்) .

வெளியில் அறையில் இருந்தவர்களும் என் கூக்குரலால் பயந்து என்ன என்று கேட்க்க உள்ளே பார்த்ததை சொல்ல, அவர்களும் உள்ளே செல்ல பயந்து விடுதியின் மேலாளரை தொலைபேசியில் அழைக்க பரபரக்கும் சமயம், நான் என் உடம்பை அறையின் உள் இருந்த நிலை கண்ணாடியில் பார்த்தேன் , என் முதுகு பகுதியில் ஏதொ கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது.

என்ன இது ஏதேனும் விஷ ஜந்து கடித்திருக்குமோ என பயந்து கண்ணாடிக்கு மிக அருகில் சென்று இன்னும் உற்று பார்த்தபோதுதான் புரிந்தது...........

அது என் முதுகில்இருந்த தோல் உரிந்து இருந்தது.

இது எப்படி ஏற்பட்டது என யோசிக்கும்போது , காலை முதல் மாலைவரை மேல் சட்டை இல்லாமல் சல்மான் கானாக  வெய்யிலில் சுற்றியதன் விளைவு என்று.

அதற்குள் விடுதி மேலாளரும் அவரின் உதவியாளரும் வந்து கதவைதட்ட நடந்தவற்றை அவரிடம் சொல்ல அங்கே இருந்த அனைவரும் தோலுரிந்த கதையின் நிஜத்தை  தோலுரித்து சிரித்து மகிழ்ந்தனர்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

9 கருத்துகள்:

  1. செய்தி வியப்பு...

    சிக்ஸ் பேக் இருப்பதை இன்று தான் அறிந்தேன்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபால்,

      வருகைக்கும் என் சிக்ஸ்பேக்கை குறித்து வியப்பு தெரிவித்ததற்கும் மிக்க நன்றி, உங்களுக்கு ஓரிரு பேக்குகள் வேண்டுமானால் சொல்லுங்கள் இங்கே க்யூ அதிகமாகின்றது.

      பதிவை -- பாம்பை ரசித்தீர்களென நன்புகின்றேன்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. //சிங்கபூர் செல்லும்வரை//

    ஓகே ஓகே!

    சப்பாத்திக் கள்ளியின் பழத்தைச் சாப்பிடுவார்களா? எனக்குத் தெரியாது.

    ரசிக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்,

      வருகைக்கு மிக்க நன்றி.

      சப்பாத்திகள்ளியின் பழம் மால்டாவில் ரொம்ப பிரசித்தம். ஒவ்வொரு வீட்டிலும் இங்கு நாம் தென்னை வளர்ப்பதுபோல் அங்கே சப்பாத்தி கள்ளி மரங்களை(!!) வளர்க்கின்றனர் அழகிற்காகவும் பழத்திற்காகவும

      அடுத்து உங்களை சிங்கப்பூரில் சந்திக்கின்றேன்(??)

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. கரந்தையார் அவர்களுக்கு,

    வருகைக்கும் உங்கள ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ
    .

    பதிலளிநீக்கு
  4. ஹா...ஹா..ஹா.

    சிறுவயதில் விடுமுறையில் சொந்த ஊர் சென்ற போது சப்பாத்திக்கள்ளி பழம் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல ருசியாகத்தான் இருந்தது. ஆனால் அப்படியே வாயில் போட்டு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அதன் உள்ளே இருக்கும் விதையே முள் முள்ளாகத்தான் இருக்கும். எனவே சப்பாத்திக்கள்ளி பழத்தைச் சாப்பிடும்போது கையால் மெதுவாக சதைப்பகுதியை எடுத்து சாப்பிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துபாய் ராஜா,

      தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சப்பாத்திகள்ளியின் பழம் பற்றியும் தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி.

      ஆமாம் இது எளிமையான பழமாயிற்றே, ராஜாக்கள்கூட சாப்பிடுவார்களா?

      எமது மற்ற பதிவுகளையும் (ராஜாவுக்கு நேரமிருந்தால்)பாருங்களேன். தங்களின் 200வது படைப்பை படித்தேன், .

      நன்றி.

      கோ

      நீக்கு
  5. (சிக்ஸ் பேக்கை காட்டவேண்டும் என்பதற்காக "மட்டும்" அல்ல...// சரி நண்பரே அங்கு தமிழ்/இந்திய பட இயக்குனர் யாரும் இல்லையே!? இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஹீரோ சான்ஸ் நிச்சயம்!!! (உடனே ஹீரோனா அழகா இருக்கணும்னு எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டாம்..நாங்க எல்லாம் அழகா இல்லன்னாலும் ஹீரோனா கொண்டாடுவோம்ல....)

    குளியலறை தொட்டியிலிருந்து தாவி துரிதமாக குளியலறையை விட்டு வெளியில் ஓடிவந்தேன்// ஐயையே...ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சொல்ல நினைச்சப்ப....அந்த அடைப்புக் குறிக்குள்ள சொன்னது சே இவ்வளவுதானானு சொல்லிடுச்சு....ஆனாலும் இங்க சொல்லாம சொல்லிட்டொம்....

    அருமையான பதிவு...அது சரி கடைசில தோலுரிச்ச கதைய நீங்க மட்டும்தான் சொல்லிச் சிரிப்பீங்களா...நாங்கலாம் சிரிக்கக் கூடாதோ...நண்பரே!



    பதிலளிநீக்கு