Followers

Saturday, February 21, 2015

மௌன விரதம்.


நா காக்க !!

நண்பரோடு தொலைபேசியில் அளவலாவிக்கொண்டிருந்தேன். அப்போது  வேறொரு நண்பரின் நலம்  குறித்து விசாரிக்கையில் , அவர் கடந்த சில நாட்களாக விரதம் மேற்கொண்டிருப்பதாக தகவல் அறிந்தேன்.

Image result for picture of silence


விரதங்கள் என்பது ஆன்மீகதொடர்புடையவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அவை ஆன்மா தொடர்பான ஒழுக்க நெறி  பயிற்சி.

விரதங்களின்போது மனதை ஒருநிலைபடுத்தி, நற்காரியங்களை , நல் போதனைகளை, சிந்திப்பதும் ஆன்ம  பலம் கூட்டும் பயிற்சிகளிலும் ஈடுபடுவது சிறப்பு.

அதிகம் பேசுவதை காட்டிலும் அதிகம் கேட்பது சிறந்தது, அதிகம் கேட்பதை காட்டிலும் கேட்ட கொஞ்சத்தை பற்றி அதிகம் சிந்திப்பது நல்லது.

விரதங்களில் பலவகைகள் உண்டென்றாலும் நண்பர் மேற்கொண்டிருக்கும் விரதம் "மௌன விரதம்" என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது.

பொதுவாக மௌன விரதம் இருப்பவர்களின்  நடவடிக்கைகள் கொஞ்சம் விநோதமாக இருக்கும், அவர்கள் யாருடனும் பேசமாட்டார்கள், அவர்களின் தேவைகளை மற்றவர்களிடம் பரிவர்த்தனை செய்யவும் மிகவும் கஷ்ட்டபடுவார்கள்.

ஒருவேளை சைகைகள் மூலம் அவசர தேவைகளை சொன்னாலும் எதிரிலிருப்பவர்கள் அந்த சமிக்ஞைகளை துல்லியமாக புரிந்துக்கொண்டு பதிலளிப்பதும்   உதவுவதும் கொஞ்சம் சிரமமான காரியம் தான்.

இப்போதுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப்ப வளர்ச்சியின் காரணமாக, கைத்தொலைபேசியின் மூலம் குறுந்தகவல்களையும், மின்னஞ்சல் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தனது தேவைகளை மற்றவர்களுக்கு தெளிவாக புரிய வைக்க முடியும்..என்றாலும், மௌன விரத்தத்தின் புனிதம் , மனதின் ஒருநிலை படுத்துதல்  சற்று தடம் மாறிபோகவும் வாய்ப்புகள் அதிகம்.

அலுவலக நாட்களில் மௌன விரதங்கள் முடியாத ஒன்று.

ஆனால் இந்த மௌன விரதங்களால் பல நன்மைகள் உண்டென்பது நாம் அனைவரும் அறிந்ததே.

வீட்டில் நாம் யாருடனாவது சண்டையோ மனகசப்போ இருந்தால், ஒரே வீட்டில் இருந்துகொண்டு ஓரிரு  நாட்களுக்கு பேசாமல் இருப்பதுகூட ஒருவகையில் மௌன விரதம்தான், இது மேற்கொண்டு உறவுகளின் மனகசப்பை இறுக்கமாக்காமல் கொஞ்சம் இலகுவாக்க உதவும் என்று நினைக்கின்றேன்.

சில சமயங்களில் சிலரின் "மௌனத்தை" "சம்மந்தமாக"  நினைத்து பல முடிவுகளை சாதூர்யமாக தங்களுக்கு சாதகமாக  சிலர் எடுத்துவிடும் அபாயமும் இதில் உண்டு --உஷார்!!!! 

இப்போது நாடு இருக்கின்ற நிலைமையில்  மாதத்தில் ஒரு இரண்டு நாட்களுக்கு நம் அரசியல் வாதிகளும் அவர்களின் துதிபாடும் ஆன்மீக ஆலோசகர்களும் மௌன விரதம் இருந்தால் நாட்டில் நடக்கும் இன, மொழி, சாதி, சமய சம்பந்தமான கலவரங்கள் கொஞ்சமாவது குறைய வாய்ப்புகள் உண்டென நினைக்கின்றேன்.

 "நாவை அடக்கி ஆள்பவன் தன்னை இடரலுக்கு தப்புவிக்கின்றான்" 

இதை இப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், அதாவது, வட்டம் ,மாவட்டம், பஞ்சாயத்து, நகராட்சி  மாநகராட்சி தலைவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் போன்றோர் அவரவர் பதவியின் தன்மைக்கு ஏற்ப மாதத்தில்  இரண்டிலிருந்து பத்து நாட்கள் வரை மேடைகளிலும், பொது இடங்களிலும் பேசாமல் இருக்கும் படி ஒரு சட்டம் கொண்டுவந்தால்கூட அது நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒன்றாக அமையும் என்றே கருதுகின்றேன்.

"வாய் திறக்காமல் இருக்கும் அறிவீளிகூட புத்திமானாக கருதப்படுவான்" என்று ஒரு கூற்று உண்டு.

 ஒருவேளை அந்த மௌன விரத நாட்களில் இன்னும் ஏதேனும் நூதன முறையில் நாட்டில் லஞ்ச லாவண்யா மோசடி ,கலவரம் உண்டாக்க சதி திட்டங்கள் குறித்து மனதில் ஆழ்ந்து சிந்திக்கக்கூட நேரும் என்ற அச்சமும் உண்டாகின்றது.

உண்மையிலேயே, மன சாந்திக்காக, மன தூய்மைக்காக, ஆன்ம பலத்திற்காக, தனி மனித, சமூதாய, நாட்டு நலனுக்காக மௌன விரதம் இருந்து உன்னதமான  சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு, மேற்கொள்ளப்படும் மௌன விரதங்கள் பாராட்டுக்குறியவையே.

அந்த நேரங்களில், நாம் நம்மை பற்றியும், நமது நிறை குறைகள், நமது பழைய காலம், நமது வாழ்வில் இன்றுவரை நிகழ்ந்திருக்கும் பரிணாம வளர்ச்சி,நமது நண்பர்கள், நமது பெற்றோர், சகோதர சகோதரிகளின் அன்பு, தியாகம், நமது சின்ன வயது நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றி சிந்திப்பதும் அவர்களோடு நமக்கிருந்த - இருக்கின்ற உறவுகளின் மேன்மையினை பற்றியும், நம்மிடம் நமக்கே பிடிக்காத சில குணங்களை இனி வரும் நாட்களில் எப்படி சீராக்குவது போன்ற சிந்தனைகளிலும் ஈடுபடுவதும் மிகவும் சிறப்பு.

அதற்காக கடன் கொடுத்தவன் நம்மிடம் கொடுத்த காசை திருப்பிகேட்கும் நாளன்று , நான் இன்று மௌன விரதம் என்று எழுதி காட்டி தப்பிக்க நினைப்பவர்களும் உண்டு; ஆனால் அடுத்த நாள் என்று ஒன்று உண்டென்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

நண்பர் விளையாட்டாக சொன்னார், திருமணமான ஆண்கள் எல்லோரும்(??) வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் "கௌரவ மௌன விரதம்" இருப்பதாகவும் அதனால் பல வைகளில் அவர்கள் நன்மை அடைகின்றனர் என்றும் சொன்னார்.

அவர்கள் வீட்டில் பேசுவதே ரொம்ப ரொம்ப குறைவென்றும் அப்படி பேசினாலும் அதற்கான அங்கீகாரமோ பதிலோ, மரியாதையோ கிடைப்பதில்லை என்பதால் பேசாமல் இருந்து விடுவதாகவும் அதனால் தங்களின் மரியாதை, வீட்டிலுள்ள பிள்ளைகள் , உறவினர்கள், நண்பர்களின் மத்தியில், சேதமில்லாமல் காப்பாற்றபடுவதாகவும் சொன்னார். இது எத்தனைபேர் வீடுகளில் பலனளிக்கின்றது எனக்கு தெரியவில்லை.

கணவனின்  உறவினர்கள் வரும் நாள் பார்த்து சில மனைவிமார்கள் மௌனவிரதம் மேற்கொள்வதாகவும் நண்பர் ஒரு உபரி தகவல் சொன்னார் - ஒருவிதத்தில் நல்லதுதானே அது? 

இப்படித்தான் ஒரு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் - கருத்து மோதல்களால் இருவரும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருவரோடொருவர் பேசாமல் தங்களின்  தேவைகளை தாங்களே எப்படியோ சமாளித்து வந்தனராம்,  சமயங்களில் எழுத்து மூலமாகவும் விஷயங்களை பரிமாற்றம் செய்துவந்தனராம்.

 இதற்கிடையில் ஒருநாள் கணவன் தமது தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லவேண்டி இருந்ததாம். அதற்காக மனைவியிடம் தம்மை அடுத்த நாள் காலை 4.00 மணிக்கு எழுப்பும்படி ஒரு சீட்டில் எழுதி அந்த சீட்டை மனைவி பார்க்கும்படி சமையல் அறையில் வைத்துவிட்டு படுக்க சென்றாராம்.

அடுத்த நாள் காலை கோழியும் கூவியாயிற்று, பொழுதும் விடிந்து விட்டது, தூரத்தில் சுப்ரபாதமும் ஒலிக்கதுவங்கியது , கணவன் எழுந்திருக்க வில்லை.

காலை சுமார் 6.00 மணிக்கு துடிச்சிபுடிச்சி எழுந்த கணவன் கடிகாரத்தை பார்த்து கோபத்துடன் மனைவியிடம் வந்து "உன்னை காலை 4.00 மணிக்கு எழுப்ப சொல்லி சீட்டு வைத்திருந்தேனே பார்க்கலியா" என கடும்கோபத்துடன் கேட்க்க, மனைவியும் சொன்னாளாம்" நானும் மணி நான்காகிவிட்டது எழுந்துடுங்கனு சீட்டெழுதி உங்க கட்டில் அருகே வைத்தேனே நீங்க பார்க்கலையா?" என கேட்க்க மனகசப்பும் "மௌன விரதமும்" கலைந்து அங்கே   குபீர் சிரிப்பு எழ இருவருக்கும் இடையில் நிலவிய இறுக்கம் விலகி இறுக்கமான நெருக்கம் ஏற்பட்டதாம்.

Image result for picture of silence

நண்பர்களே, இதுபோன்று , மனைவி, பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், உறவினர்களோடு "கௌரவ - வறட்டு - மௌன விரதம்" யாரேனும் கடைபிடித்துக்கொண்டிருந்தால், கௌரவம் பார்க்காமல் உடனே மௌன விரதத்தை விலக்கி என்றும் போல நட்பையும் உறவுகளையும் பலபடுத்துவோம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 comments:

 1. இது சிறந்த வழியா இருக்கே...!

  சிரிப்பு சிறந்த மருந்து...

  ReplyDelete
  Replies
  1. தனப்பால்,

   ஆமாங்க நீங்க சொல்றதுதான் சரியான மருந்து.

   வருகைக்கு மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   Delete
 2. ஹஹஹஹ் ம்ம்ம் இந்த மௌனவிரதம் பதிவு எப்படி வந்தது என்பது தெரிந்துவிட்டது...தங்களின் நண்பர் யார் மௌனவிரதம் மேற்கொண்டார் என்பதும் எங்களுக்குத் தெரிந்ததே....

  மேற்கொள்ளப்பட்டது மனதிற்காக மட்டுமே....மட்டுமல்ல அது பல நல்ல விளைவுகளைத் தந்தது என்று சொல்லலாம்....தேவையற்ற வாக்குவாதங்களிலிருந்து விடுதலை. தேவையற்ற பேச்சுக்கள் இல்லை. தொலை தொடர்பு சாதனங்களையும் சைலண்டில்.... எதிர்மறை சிந்தனைகள் இல்லாமல், நேர்மறை சிந்தனைகள்...

  நீங்கள் சொல்லும் சில விஷயங்களும் சரிதான்....சைகை சில சம்யம் புரியாமல் போவது...

  அதற்குதான் நாங்க நிறைய டம்ப்ஸ்ரஸ் விளையாடி பழக்கம்ல....

  ReplyDelete
 3. அன்பிற்கினிய நண்பர்களே,

  உங்களுக்கும் அவர் யார் என்று தெரியுமா?

  வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் நன்றி

  நட்புடன்

  கோ

  ReplyDelete