பின்பற்றுபவர்கள்

புதன், 8 அக்டோபர், 2014

ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்

அது ஒரு தனியார் பள்ளிக்கூடத்துடன் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதி.எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த அந்த குளுகுளு நகரத்தின் கடை கோடியில்  சுமார் 8 ஏக்கர் நிலபரப்பில் , பள்ளி கட்டிடம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து  300 அடி தூரத்தில் மூன்று மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தில் அமைந்தது தான் அந்த விடுதி.


அதில் மாணவர் தங்கும் அறைகள் , பிரார்த்தனை கூடம்,நூலகம்,சாப்பிடும் இடம், சமையல் அறை, பண்டக பாதுகாப்பு அறை ,உடல் நலம் இல்லாதவர் தற்காலிகமாக தங்கும் அறை, வார்டன் அறை, இசை அறை, பார்வையாளர் அறை, போன்ற பல உள்கட்டமைப்பு வசதிகளையும்,விளையாட்டு மைதானம், நீச்சல் குளங்கள்,மீன் குளங்கள்,விளை  நிலங்கள் (நெல் முதலான பயிர்கள் சாகுபடி செய்வார்கள்), தென்னை மரங்கள், மா மரங்கள், பூ மரங்கள் மட்டுமின்றி கறவை மாடுகளுக்கான (விடுதியின் பால் தேவைக்காக) பட்டிகள்,பணியாளர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் இவை அத்தனையும் ஒருங்கே அமையப்பட்ட உயரமான சுற்று  சுவர்களாலும் , பெரிய இரும்பு கதவுகளாலும் மட்டுமின்றி கூர்க்கா மற்றும் வெளிநாட்டு வகையறா நாய்களும் கொண்ட பிரமாண்டமான வளாகம் அந்த விடுதி.

சுமார் 300 மாணவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் பாதுகாப்பும் நிறைந்த விடுதி என்பதால் பெற்றோர் மத்தியிலும் மாணவர் மத்தியிலும் பெரும் மதிப்பை சம்பாதித்த ஒரு விடுதி.

இந்த விடுதியில் கடுமையான(விடுதி இட்லியை போல) பல சட்டதிட்டங்கள், எனினும் சில சட்ட தளர்வுகளும் இருந்தன- விடுதியில் வழங்கப்படும் வெல்லம் கலந்த தேநீர்போல. 

அவற்றுள், மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் இரவு உணவிற்கு பின்னர் 11 மணி வரையில் அறைகளில் மின் விளக்குகள் பயன் படுத்திக்கொள்ளலாம், ஆட்டம் பாட்டம் என ஜாலி யாக இருக்கலாம்,மற்றவர் அறைகளுக்கும் சென்று அரட்டை அடிக்கலாம் போன்றவை.

(இதில் உள் குத்து ரகசியம் உண்டு- ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமைகளில் பெற்றோர் வந்து பிள்ளைகளை சந்திக்கும் பொழுது நடக்கும் கடுமையான சட்ட திட்டங்களும் அதனால் பிள்ளைகள் அடையும் மன உளைச்சலையும் பெற்றோர்களிடம் சொல்லாமல் மறக்கடிப்பதற்காக)

அது போன்றதொரு மூன்றாம் வெள்ளிக்கிழமை இரவு தான் இன்று.

வழக்கம் போல இரவு உணவிற்கு பின்னர் சலுகைகளை எள்ளின் முனையளவும் மிச்சம் வைக்காமல் மாணவர்கள் கொண்டாடி தீர்த்து- களைத்து தங்கள் தங்கள் அறைகளுக்கு  சென்று விளக்குகளை அணைத்துவிட்டு  படுத்துக்கொண்டார்கள்.

ஒரு அறையில் சுமார் 8 பேர்கள் தங்கும்படியான வசதிகள் கொண்ட அறைகள்.

அதில் ஒரு அறையில் படுத்த படியே கதைகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் கொஞ்சம் சோகமாக சொன்னான் , நாளைக்கு எங்க வீட்ல இருந்து யாரும் வரமாட்டாங்க என்றான். 

ஏன் என மற்றவர்கள் ஏகோபித்த குரலில் கேட்க்க, அமாவாசைக்கு அடுத்த நாள் எங்க நிலத்தில புதுசா ஒரு கிணறு வெட்ட பூசை செய்ய எங்க குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோட போறாங்கலாம் அதனால நாளைக்கு வரமாட்டாங்க என்றான்.

அப்படீனா இன்னைக்கு அமாவாசையா என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு, நண்பனின் சோகத்தை திசை திருப்ப, இப்போ பேச்சின் போக்கு பேய் கதைகளை நோக்கி நகர்ந்தது.

ஆளாளுக்கு ஒவ்வொரு கதைகளாக சொல்லிக்கொண்டே இருக்கையில், நம்ம சோக நண்பன், சரி நான் தூங்க போறேன், அதுக்கு முன்னாடி பாத்ரூம் போகணும் யாரவது என் கூட வாங்க என்று கேட்டான்.

அதுவரை பேய் கதைகளை கேட்டதாலேயோ என்னமோ யாரும் கூட வர விரும்ப வில்லை.இவனுக்கும்  தளத்தின் வலது கோடிவரை தனியாக செல்ல தைரியம் இல்லை.

இவனின் கெஞ்சும் பரிதாபத்தை நினைத்து கொஞ்சம் மனதிறங்கி துணைக்கு வந்தான் ஒரு நண்பன்.

தங்கள் அறையிலிருந்து வெளியில் வந்து வலது பக்கம் இருக்கம் பாத்ரூம் செல்ல ஒரு 7 அறைகளை தாண்டி பாத்ரூமுக்குள் நுழைந்து விளக்கு போட சுட்சை ஆன் செய்ய விளக்கு எரியவில்லை, பழுதாகி இருக்கும், எனினும் இருட்டில் தட்டி தடவி தயாராகும் நேரத்தில் வெளியில் இருந்தவன் தூக்க கலக்கத்தில் ஏதோ முனுமுப்பாக சொல்ல,

உள்ளே இருந்தவன் மரண ஓலமிட்டு உச்ச கதியில் "பேய்".."பேய்".."பேய்" என கத்திக்கொண்டே வெளியில் வர பாதி தூக்கத்தில் காவலுக்கு வெளியில் நின்றவன் அவனைவிட இன்னும் அதிக சத்தத்துடனும் பீதியுடனும் "பேய்".."பேய்"...என கத்திக்கொண்டே வராண்டாவில் ஓட, 

பின்னால் வந்தவன் , முன்னால் ஓடுபவன் “பேயை” பார்த்துவிட்டுத்தான் அலறி ஓடுகின்றான் என நினைத்து ஓட, முன்னால் ஓடுபவன்  தன்னை “பேய்” துரத்துவதாக எண்ணி இன்னும் அதிக வேகமாக ஓடி பக்கத்திலிருந்த அறை கதவை மோதியதில் அந்த அறையில் இருந்தவர்களும் அலறி கத்த, அதை கேட்டு அடுத்தடுத்த அறைகளில் உள்ளவர்களும் கத்த, கொஞ்சம் கொஞ்சமாக விடுதி முழுவதையும்  கூச்சலும் பயமும் திகிலும் இருட்டோடு போட்டிபோட்டுக்கொண்டு முழுமையாக ஆக்ரமித்தது.

இந்த மாபெரும் அவல ஓலத்தை கேட்ட வார்டனும் இரவு காவலாளிகளும் ஓடிவந்து வராண்ட ஹால் விளக்குகளை போட்டு கதவுகளை தட்டி என்ன என்ன  என்று கேட்க்க யாருமே கதவுகளை திறக்காமல் பயத்தில் உறைந்திருந்தனர்.

எனினும் வார்டனும் செக்யூரிட்டி காவலர்களும் இரவுமுழுதும் விளக்குகள் எரிய காவல் இருந்தனர்.

மறு நாள் காலை வார்டன் வந்து " நேற்று நடந்தது என்ன, யார் எதை பார்த்தது? " என்று கேட்டார் .

நம்ம சோக நண்பன் சொன்னான், "நேற்று நான் பாத்ரூமில் இருந்தப்ப கூட வந்தவன் பேயை பார்த்திருக்கான் சார், பார்த்துட்டு , என்னகிட்ட "பேய்டா" னு  பயந்துகிட்டே சொன்னான் சார், நானும் பயந்துபோய் அலறிக்கொண்டே ஓடிவந்துட்டேன் " என்றான்.

கூடவந்தவனோ, நான் எப்படா “பேய” பார்த்தேன் , நீதான பாத்ரூம்ல இருந்து "பேய் "னு  கத்திகிட்டு வெளியில ஓடிவந்த என்று இவன் சொல்ல, துணைக்கு வந்தவன், கொஞ்சம் நடந்தவற்றை நினைவு படுத்தி சொன்னான்: 

சார் நான் இவன சீக்கிரம் ஒன்னுக்கு" பேய்டா"  தூக்கம் வருதுன்னு சொன்னேன் அத இவன் "பேய்டா" னு நான் சொன்னதா காதுல கேட்டுடுட்டு என்ன பயமுருத்திட்டான்  சார், நானும் இவன்தான் "பேய" பார்த்துட்டு கத்துரான்னு நெனச்சி பயந்து ஓடினேன்  சார் என்றான்.

நடந்ததை கேட்டு எல்லோரும்  "பேய்" விட்டு மன்னிக்கவும் வாய் விட்டு சிரித்து வரவிருக்கும் பெற்றோர்களை எதிர் நோக்கி காத்திருந்தனர்.

பெற்றோர் வரசையில் முதலில் இருந்தது நம்ம "உச்சா" நண்பனின் பெற்றோர்தான், 

குலதெய்வம் கோவிலுக்கு விடியற்காலை 4.00 மணிக்கெல்லாம் பூசை செய்துவிட்டு வந்துவிட்டோம் இந்தா நம்ம குலதெய்வம் கோயில்  திருநீறு என்று அவன் நெற்றியில் வழக்கம் போல பூசி விட்டார்கள்  நடந்ததை ஏதும் அறியாதவர்களாய்.

. அன்றுமுதல் அந்த  விடுதியில் "பேய்டா" என்ற வார்த்தை மட்டுமே அவ்வப்போது உலவிவந்ததே தவிர எந்த ஒரு "அமானுஷ்ய" சக்தியும் "அனாவசியமாக" அந்த விடுதியின் வளாகத்திற்குள் வந்ததாக இன்றுவரை ஒரு அதிகார பூர்வ தகவலும் இல்லை.

அப்படி இருந்தால் சொல்லி அனுபுகிறேன்.

சரி நான் "பேய்" சாரி போய்வரட்டுமா?

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்.


கோ.

12 கருத்துகள்:

 1. ஆரம்பத்தில் இருந்தே என் பதிவுகளில் "பேய் அறைந்த கதையை, மற்றொரு நாள் கூறுகிறேன் என்று சொல்லி வந்தேன். இன்று இன்று நீ உன் பாணியில் இந்த பேய் கதையை சொல்லி இருகின்றாய். இதை வைத்து இன்னும் ஒரு மூன்று மாதம் தள்ளி விட்டு, பிறகு தைரியத்தை வளர்த்து கொண்டு என் பேய் கதையை சொல்லுகிறேன்.

  ரசித்த பதிவு. தொடர்ந்து எழுதவும்..

  பதிலளிநீக்கு
 2. கலகலப்பான அனுபவத்தை மிகவும் அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் சார், நல்ல இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு.. டொடருங்கள்... தொடர்கிறோம்..

  பதிலளிநீக்கு
 3. (இதில் உள் குத்து ரகசியம் உண்டு- ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமைகளில் பெற்றோர் வந்து பிள்ளைகளை சந்திக்கும் பொழுது நடக்கும் கடுமையான சட்ட திட்டங்களும் அதனால் பிள்ளைகள் அடையும் மன உளைச்சலையும் பெற்றோர்களிடம் சொல்லாமல் மறக்கடிப்பதற்காக)/// ippadi ellam kuda yosippayangala school nirvaakam sir?

  mothathil unga pathivai rasichen.

  பதிலளிநீக்கு
 4. வாய் விட்டு இரசிக்க...
  நீண்ட நாட்களுக்குப் பின் இந்த பதிவு!
  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு,
   வருகைக்கு மிக்க நன்றி, வாய்விட்டு சிரித்த பாய்க்கு (சகோதரனுக்கு)
   மீண்டும் நன்றி.மற்ற பதிவுகளையும் படித்து கருத்துகளை கூறவும்.

   நட்புடன்

   கோ.

   நீக்கு
 5. அரசருக்கு வணக்கம்,
  அந்த சோக நண்பன் தாங்கள் தானே,
  தங்களின் மற்ற பதிவுகளை நான் படிக்கலாமா?
  ஆனாலும் இப்படி பேய் பிடிக்க கூடாது,
  நன்றி அரசே,

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் மிக்க நன்றி.

  அந்த சோக நண்பன் நான் அல்ல.

  என் பதிவுகள் படைக்கப்பட்டதே நீங்கள்(ரசிகர்கள்) படிக்கத்தானே.எதற்கு அனுமதி.அப்படியானால் இதற்க்கு முன் வாசித்த எம் பதிவுகளுக்கு யாரிடம் அனுமதி பெற்றீர்கள். சரி சரி போனால் போகுது படித்துக்கொள்ளுங்கள்.

  நீங்கள் ஏதேனும் இதுபோன்று "யாரையாவது பிடித்த" அனுபவம் உண்டா?

  பதிலளிநீக்கு