பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மத்தாப்பு மனிதர்கள்

இனிப்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் .



உலகமெங்கிலும் வாழும் என் இனிய இந்திய சகோதர சகோதரிகளுக்கும்,நண்பர்கள், உறவினர்கள் யாவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.

அடுத்த நாள்  தீபாவளி....


வெளி ஊரில் ஆசிரியை பணிபுரிந்துகொண்டிருந்த சகோதரியை விடுமுறைக்காக  அழைத்து வரும்படி, ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி மாலை இரண்டு மணிக்கு நகரின் முக்கிய பேருந்து நிலையம் வந்தடைந்தேன்.

ஐம்பதுக்கும் மேலான பேருந்துகள் காத்திருந்த அந்த நிலையத்தில் நான் பயணம் செய்யப்போகும் ஊரின் பெயர் எந்த பேருந்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்று பார்க்கவே  எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.

ஒருவழியாக பேருந்தை கண்டுபிடித்தேன்.

ஆனால் அந்த பேருந்தில் ஓட்டுனரோ , நடத்துனரோ இல்லை, வாகனத்தை சுத்தம் செய்பவர் மட்டுமே ஓட்டுனரின்   இருக்கைக்கு எதிரிலிருக்கும் சன்னல் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தார்,அவருக்கு அருகில் ஒரு செண்டு மல்லிகைபூ கொஞ்சம் ஊதுபத்தி போன்ற பொருட்கள் இருந்தன.

அவர் அந்த வண்டியை சுத்தம் செய்து, அங்கிருக்கும் சாமி படத்திற்கு பூ படைத்து ஊதுபத்தி ஏற்றி , பயணிகளை உற்சாகமாய் வரவேற்கும் நோக்கத்தில் வண்டியை தயார் படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
 அப்போது மணி இரண்டரை.

அந்த கிளீனர் இருக்கும் பக்கமாக வண்டிக்கு வெளியே இருந்து,

 " அண்ணே வண்டி எப்போது  புறப்படும்” என்று கேட்டேன்.

அவர் சொன்னார்  “டிரைவர் வந்தபிறகு”.

“டிரைவர் எப்போது வருவார்?”

"கண்டக்டர் வந்தபிறகு"
.
அவரிடம் கேட்டேன்,"வண்டி எத்தனை மணிக்கு டிரைவர் எடுப்பார்?"

அவர் சொன்னார் 4.00 மணிக்கு என்று.

சரி இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கே என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டே கொஞ்சம் தள்ளி இருந்த மெயின் ரோட்டின் அருகிலிருந்த கடைகளின் அலங்காரத்தையும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வகைகளையும்,கண்கவர் இனிப்பு வகைகளையும், அலைமோதும் மக்கள் கூட்டத்தயும்  பார்த்து மகிழிந்தவண்ணம் கொஞ்சம் நடந்துகொண்டிருந்த என் கவனத்தை அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சி வெகுவாக ஈர்த்தது.

அந்த பெரிய பெரிய ஆடம்பரமான, அலங்காரமான அங்காடிதெருவின் எதிரில் இருந்த நடைபாதை கடைகளிலும் வியாபாரம்  ஜெகஜோதியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அதில் ஒருகடை துணிக்கடை.

சிறுவர் சிறுமிகளுக்கான ரெடிமேட் ஆடைகள் தரையில் பரப்பப்பட்டிருந்தது.
அதன் உரிமையாளர் எதிரிலிருக்கும் மிட்டாய் கடையின் குலாப் ஜாமுனை சுற்றி பறக்கும் தேனீயை போல சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்தார், அவர் கடையையும் லட்டை சுற்றி மொய்க்கும் எறும்புகள்  போல மக்கள் மொய்த்து கொண்டிருந்தனர்.

அந்த கூட்டத்தில் ஒருவர், ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில ஒரு நூல் புடவை (அப்படித்தான் தெரிந்தது), கொஞ்சம் கதம்பம் பூ , ஒரு சிறிய பொட்டலம் இனிப்பு (அப்படித்தான்தெரிந்தது). இவற்றோடு;

 அந்த கடைகாரரிடம் ஒரு சட்டையை காட்டி, "இது ஆறு வயசு பையனுக்கு சரியாயிருக்குமா?" என கேட்க்க, அந்த கடைகாரர் பேருக்கு அதை எடுத்து சட்டையின் நீல அகலத்தை பரிசோதித்துவிட்டு, "இது ஆறு வயசு பையனுக்குதான்" என கூறினார்.

“சட்டை என்ன விலை?”

“இருபது ரூபாய்

இவர் தனது மேல் சட்டை பாக்கட்டில் இருந்த அனைத்து காசையும் திரட்டி எண்ணிப்பார்த்து, கொஞ்சம் விலைய  குறைத்து கொடுங்க என கேட்க்க, அந்த கடைகாரர் தனது இருக்கம்மான முகத்தோடு கண்டிப்பாக சொன்னார் , “விலையெல்லாம் குறைக்க முடியாது, வேணும்னா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணு”.

இவர்,  “என்னிடம் பதினாறு ருபாய் தான் இருக்குஎன் மகனுக்கு தீபாவளிக்காக  வாங்கறேன் கொஞ்சம் தயவு பண்ணி கொடுங்க” என கேட்டும், அந்த கடைகாரர் கொடுக்க மறுத்ததுமின்றி , இவரை புறக்கணிக்கவும் கண்டுக்கொள்ளாமலும், தனது வியாபாரத்தில் குறியாய் இருந்தார்.

ஒரு அரை மணிநேரம்மாவது அவர் இந்த கடைகாரரிடம் கெஞ்சி இருப்பார்.

 நமக்கு பஸ்சுக்கு பதி நாலு ரூபாய்தான் ஆனாலும் என்னிடம்  இருப்பது பதினைந்து ரூபாய், (அம்மா கொடுத்த இருபதில், ஒரு கூல் drink  மூனுரூபாய், ஒரு இஞ்சி மொரப்பா- எனக்கு ரொம்ப தூரம் பஸ்ல போனா சில நேரம் வாந்திவரும் -ரெண்டு ரூபா), இப்போ இவருக்கு நாலு ரூபா கொடுத்தால் , பஸ்சுக்கு காசு குறையுமே.

காசு குறைந்தால் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு

கொஞ்சம் முன்னதாகவே இறங்கி நடந்து போகலாம் என முடிவுசெய்து

 நேராக அந்த கடைகாரரிடம் போய், அந்த சட்டையை இவரிடம் கொடுங்க மீதி பணத்த நான் தரேன் என சொல்ல  நினைத்து அந்த நடைபாதை கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நான் அந்த கடையை அடையும்முன்னே , அந்த நபர் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தார்.

நானோ கொஞ்சம் வேகமாக நடந்து அவரை , நிறுத்தினேன்.

“நீங்க தானே அந்த கடையில சட்டைய விலை கேட்டது?”
“ஆமாம்”.
“அந்தகடைகாரர் உங்கள கூப்பிடுகிறார்”

“அவர்தான்  தர மாட்டேன்னு சொன்னாரே.”

“தெரில, இப்போ உங்கள கூப்பிட சொன்னார் அதான் நான் உங்கள நிறுத்தினேன்.”

அவர் மீண்டும் கடையருகே வந்து நின்னதுமே, அந்த கடைகாரர்  அவரை  மேலும் கீழுமாக பார்த்தார்.

உடனே நான் கடைகாரரிடம்  சொன்னேன், “அவர் கேட்ட சட்டையை கொடுங்க”

நானே அதை அந்த நபரிடம் கொடுத்து , "இந்த சட்டைதானே"?

"ஆமாம்"

மீண்டும் கடைகாரரிடம், " இதை ஒரு பையில போட்டு கொடுங்க".

அவரும் கொடுத்தார்.

அதை அந்த  நபரிடம் கொடுத்துவிட்டுகாசு கொடுங்க” என்றேன்.

அவரும் அவரிடமிருந்த பதினாறு ரூபாயை எடுத்தார்.

அவரிடமிருந்து நான் வாங்கிகொண்டு, “சரி நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு, என்னிடமிருந்த பணத்தில் நான்கு ரூபாயை சேர்த்து அந்த கடைகாரரிடம் கொடுத்தேன்.

வாங்கிக்கொண்ட கடைகாரர், என்னிடம் கேட்டார்,” அவர் உனக்கு சொந்தமா?”

“இல்லை, கொஞ்சம் வறுமையில் இருப்பார்போலும் அதான் கொஞ்சம் உதவலாமென்று....”

நான் சொல்லி முடிப்பதற்குள், அந்த கடைகாரர்,

“யாரோ ஒருவருக்காக சம்மந்தமே இல்லாத நீ இந்த சின்ன வயசில(??) உதவி செய்யறப்போ, நான் ஏன் செய்ய கூடாது என நீ நினைத்திருப்பாய்;

கடையில் கூட்டம் அதிகமயிருக்கும்போது, ஒருத்தருக்கு நான் விலை குறைத்து கொடுத்தால் , எல்லோரும் விலை குறைத்து கேட்பார்கள் , அதனால் தான் நான் கொஞ்சம் கறாராக இருந்தேன், என சொல்லியவாறே,

 நான் உபரியாய் கொடுத்த அந்த நான்கு ரூபாயை என் கைகளில் திணித்துகொண்டே , உன் பெயரென்ன” என கேட்டார்.

நான் சொன்னேன், “ரொம்ப நன்றிங்க.”

“என் பெயர் கோ”, என சொல்லிக்கொண்டே தூரத்தில் சந்தோஷமாக நடந்து பொய் கொண்டிருந்த அந்த நபரை பார்க்க எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

மீண்டுமாக அந்த நல்ல கடைகாரருக்கு நன்றி சொல்லிவிட்டு என் பேருந்தில் ஏறி பயணித்தேன்.

அந்த பயணமும் அந்த ஆண்டின் தீபாவளியும் நெய்யில் வார்த்து தேனில் ஊறவைத்த வெல்ல "அதிரசத்தை" விட மிகும் இனிமையானதாகவும்- மத்தாப்பு , சுருசுரா,பட்டாசு , சங்குசக்கரம், பாம்பு மாத்திரைகள், ராக்கெட் போன்றவை கொடுத்த மகிழ்ச்சியைவிட பலமடங்கு அதிக மகிழ்ச்சியாகவும் இருந்தது.




அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களுள் சிலர் பார்பதற்கும் பேசுவதற்கும், வெடித்து சிதறும் அணுகுண்டுகளை போல தோன்றினாலும், அவர்களின் உள்ளங்களிலும் மத்தாப்பூக்கள்   அவ்வப்போது பூத்து  குலுங்கும் மத்தாப்பு மனிதர்கள்  ஆங்கங்கே பலர் இருக்கின்றனர்  என்பதற்கு அந்த நடைபாதை கடைகாரர் ஒரு சிறந்த உதாரணம்.


பட்டாசை பார்த்து கொளுத்துங்கள்,இனிப்பு வகைகளை வெளுத்து கட்டுங்கள் (எளியவருக்கும் பகிர்ந்தளித்து)


"இவ்வண்ண பெருவிழாவில் வனப்புடனே மகிழ்ச்சி  வெள்ளம்
எண்ணமெலாம் வழிந்தோடி வாழ்வில் ஏற்றங்கள் பெருகிடவே
சின்னவன்(??) நான் வாழ்த்துகின்றேன்- அதுவும்
 சின்சியராய் வாழ்த்துகின்றேன்
சிறப்புடனே வாழ்கவென்று!".

மீண்டும் உங்கள் அத்தனை பேருக்கும் என் இனிப்பான தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு:

இந்த நிகழ்ச்சி நடந்தபோது நான் அரை கால் சட்டை அணிதிருந்தேன்.(வயதை கணித்துக்கொள்ளுங்கள்)

நன்றி மீண்டும் (சி)ந்திப்போம்.

கோ

8 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கலுக்கு இந்த நிகழ்வு நடந்தப்போ எவ்வலவு வயசு சார்?

    பதிவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நிகழ்ச்சி நடந்தபோது நான் அரை கால் சட்டை அணிதிருந்தேன்.(வயதை கணித்துக்கொள்ளுங்கள்)

      நீக்கு
  3. அருமையான தீபாவளி கதை. ஒன்றே செய்ய வேண்டும் அதுவும் நன்றே செய்யவேண்டும் என்பதை விளக்கும் கதை. இது எல்லாம் முடிந்த பின் மீதம் இருந்த பணத்தை நாம் எல்லாரும் எப்படி செலவு செய்தோம் என்பதையும் கொஞ்சம் வில்லாகி சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. உள்ளங்களிலும் மத்தாப்பூக்கள்
    அவ்வப்போது பூத்து குலுங்கும் மத்தாப்பு மனிதர்கள்
    நிறைவான தீபாவளி வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி


      இவ்வண்ண பெருவிழாவில் வனப்புடனே மகிழ்ச்சி வெள்ளம்
      எண்ணமெலாம் வழிந்தோடி வாழ்வில் ஏற்றங்கள் பெருகிடவே
      சின்னவன்(??) நான் வாழ்த்துகின்றேன்- அதுவும்
      சின்சியராய் வாழ்த்துகின்றேன்
      சிறப்புடனே வாழ்கவென்று!".

      அன்புடன்.
      கோ

      நீக்கு
  5. வணக்கம் கோ,
    அரைக்கால் சட்டை செய்த சேட்டை கொஞ்சம் இல்லை போலும்,
    ம்ம் நான் சொன்னது சரி தான்,,,,,,
    தாங்கள் அப்பவும் இப்படி தான்,,,,,,,,,,,,
    அருமையான பதிவு ,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அப்பவும் இப்படி தான்
    கோ

    பதிலளிநீக்கு