Followers

Wednesday, October 15, 2014

கலாமுக்கு சலாம்.பிறந்த நாள் காணும் மேதகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு எந்தன் இதயபூர்வமான நல் வாழ்த்துக்கள்.Dr. Abdulkalam .,Life / Learning Quotes – Inspirational Quotes, Pictures and Motivational Thought . <<< Home >>>

உங்களை  முதன் முதலில் இந்திய திரு நாட்டின் முதல் குடிமகன் அந்தஸ்த்து வந்தடைந்ததையும் , நீங்கள் நமது இந்திய தேசத்தின் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கையும் வியந்து நான் அனுப்பிய வாழ்த்து செய்தி அடங்கிய அஞ்சலை நான் வசிக்கும் நாட்டின் தபால் நிலையம் கொண்டு சென்று இதற்க்கு எவ்வளவு அஞ்சல் தலை ஒட்டவேண்டும் என கேட்டேன்.

அவர்கள் சொன்ன மதிப்பிற்கு அஞ்சல் தலை வாங்க பணம் கொடுத்தேன், பிறகு அவர்களே அஞ்சல் தலையை ஒட்டி என்னிடம் கொடுக்காமல் தாங்களே அஞ்சல் செய்வதாக உள்ளேயே வைத்துக்கொண்டார்கள்.

நானும் மகிழ்ச்சித்யுடன் வீடு திரும்பினேன்.

நீண்ட நாட்களாகியும் உங்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை.

பிறகு நாங்கள் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தோம், இருந்தும் ஒவ்வொரு நாளும் பழைய வீட்டிற்கு சென்று எங்களுக்கு வரும் கடிதங்களை பெரும்  பொழுது, அதில் உங்கள் கடிதம் இருக்கின்றதா என ஆவலுடன் பார்ப்பேன்.

நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர், எவ்வளவு பொறுப்பும் கடமைகளும் உள்ளவர், என் கடிதம் போல் கோடிகணக்கான கடிதங்கள் உங்களுக்கு வந்திருக்கும், அவற்றிற்கெல்லாம் பதில் எழுத உங்களுக்கு  ஏது நேரம் என நினைத்து நான் என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

பின்னர் தான் அறிந்துகொண்டேன்,நான் அனுப்பிய கடிதத்தின் விலாசம்," தங்களின் பதவியின் பெயர், ராஷ்ட்ரபதி பவன், புது டெல்லி" என்றிருந்ததால் அதை சோதனைக்குட்படுத்த முடக்கிவிட்டார்கள் என்று.

ஆண்டுகள் பல ஆனாலும் என் நினைவில் இருக்கும் அந்த வாழ்த்து கடிதத்தின் வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது.

அதை இந்த சந்தர்பத்தில் வெளி கொண்டுவருவதில், உள்ளபடியே உள்ளம் மகிழ்கின்றேன் , நெஞ்சம் நெகிழ்கின்றேன்.

வாழ்த்தோடு இணைத்த கடிதம்:

ஐயன்மீர்,

தங்கள் தலைமையில் தாயகம் என்றறிந்து மட்டற்ற மகிழிச்சியும்,மனமெல்லாம் களிப்பும் களிமேல் உவகையும் கொள்கின்றோம்.

எங்களின் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் உள்ளார்ந்த வாழ்த்துகளையும் உங்களுக்கு சேர்ப்பிக்க இந்த கடிதத்தோடு இணைத்துள்ளோம், "கலாமுக்கு சலாம்".

இக்கடிதம் தங்கள் பார்வைக்கு கிடைத்ததென்பதை  நாங்கள் அறிந்து மகிழும் வண்ணம், தங்களின் திருகரத்தல் இடப்பட்ட கையொப்பம் தாங்கிய தங்களின் புகைபடம் ஒன்றை தயவாக , சமயம் வைக்கும்போது, அனுப்பிவைக்கும்படி வேண்டிகொள்கிறோம்.

தங்களின் பதில் கடிதத்தை காண அனையிடகூட ஆவல் பெருக்கோடு காத்திருக்கின்றோம்.
நன்றி அய்யா.

இவண்.

கோயில்பிள்ளை.


வாழ்த்து:

கலாமுக்கு சலாம்.

அரசியலார் மட்டுமே என்றென்றும்
ஆக்கரமித்த பொறுப்பதனை - இன்று
அறிவியலார் அலங்கரித்தீர்
ஆர்பரித்தோம் அகமகிழ்ந்தோம்!

எளிமை பொறுமை திறமை
இவையே உங்களின் அருமை
எளியோர் எற்றம் பெருகையிலே - நாட்டின்
எதிர்காலம் பெற்றிடுமே வலிமை!

வானத்தை முட்டும் உந்தன்
உயர்தர வியத்தகு சாதனைகள் - நம்மின்
மானத்தை காத்து மதிப்புயர செய்ததினால்
மண்டியிட்டு வணங்குகின்றோம் -உமது
மகோன்னத பாதங்களை

மன்னவர் ஆட்சியில் பொற்காலம்
வரலாற்று நூல்களில் படித்ததுபோல்
என்னவர் காலமும் இந்நாட்டில்
மின்னிதுலங்கிட வேண்டுகின்றோம்

வறுமை கோடு  என்றதொறு
வலிமை கோடு இருக்கிறதே - அதை
வெறுமையாக்கி சமன் படுத்தி - நல்ல
வெளிச்சம் கொண்டு நீர் வரவேண்டும்.

ராமரையும் பாபரையும்
ரக்க்ஷா  பந்தனில் இணைத்து - புது
ராஜ்ஜியத்தை கட்டிடவே
ஆனமட்டும் முயன்றிடுவீர்  - அதில்
ஆழ் கடல் முத்தொன்றை வென்றிடுவீர்.

நல்லுள்ளம் கொண்ட எங்கள்
நாயகராம் டாக்டர் கலாம்
பல்லாண்டுகள் வழகவென்று
வாழ்தியே வணங்குகின்றோம்.

சேர்க்கலாம் உம்மோடு நமது கரம் - பின்னர்
பார்க்கலாம் நம் நாட்டின் உயர்ந்த தரம்- எனும்
நம்பிக்கை துளிர்க்கின்றது.

ஆயிரம் பிறை காண ஆண்டவன்
அருள்புரிய வேண்டுகின்றோம்.

வாழிய  வாழிய பல்லாண்டு!
வலுவான உடல் நலம்  கொண்டு!!

நன்றி
வணக்கம்.

வாசகர்களுக்கு:

அய்யா கலாமிடமிருந்து பதில் கடிதம் வரவில்லையே என்ற கவலை , இன்று இதை உங்களிடம் சமர்பித்த மகிழ்ச்சியில் மூழ்கடிக்கப்படுகிறது.

மறக்காமல் எழுதுங்கள் உங்களுக்கு இந்த பதிவு காண  கிடைத்திருந்தால்.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.2 comments:

 1. கோ,
  வாழ்த்துக்கள்,
  அருமையான பா,
  நிறைய இருக்கு சொல்ல, இடம் இல்லை இங்கே,
  ம்ம்,
  நன்றி.

  ReplyDelete
 2. சொல்லுங்கள், என்னிடம் இடமிருக்கு நிறைய

  கோ

  ReplyDelete