பின்பற்றுபவர்கள்

புதன், 30 அக்டோபர், 2024

கருங்கடல் ஓரத்தில் ...

அருங்காட்சி!!

நண்பர்களே,

பயண செய்திகள் தொடர்கின்றன...

முன் பதிவுகளை வாசிக்க....கருங்கடல் கண்ணாயிரம்

ஜார்ஜியாவின்  கடற்கரை நகரமாகிய படுமியில் காணவேண்டிய பல  விடயங்கள் பரவி இருந்தாலும் அவை அத்தனையையும் கண்டு மகிழ மனமெல்லாம் ஆசையாக இருந்தாலும் , நேரம் காலம் அடுத்தடுத்த பயண திட்டங்களால் அதிகவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்த்து ரசித்த ஒரு சிலவற்றை மட்டுமே இப்பதிவுகள் வாயிலாக மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.

அவற்றுள்  தென்மேற்கு ஜார்ஜியாவில் அட்ஜாரா மலை பிரதேசங்களில் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும்   அதிகமான ஆண்டுகளாக நடத்தப்பட்ட புதை பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சியின்போது  கண்டெடுக்கப்பட்ட கலை பொருட்களின் சிறப்பு, மதிப்பு, வயது போன்றவற்றை வரிசைப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான அட்ஜாரா அருங்காட்சியகம் ஒன்று.




குறைந்தது 300 - 400 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகின்ற கற்களால் ஆன  வேட்டை  கருவிகள், மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களோடு , கி மு  323 இல் பேரரசர் அலேக்சாண்டரின்  இறப்பிற்கும், கி பி 31 ல்  ரோமப் பேரரசின்   எழுச்சிக்கும் இடையே, பண்டைய கிரேக்க நாடு மற்றும் மத்தியதரைக் கடல் ஒட்டியப் பகுதிகளின் வரலாறுகளை கூறும் காலமாகிய ஹெலனிய காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகின்ற, மரம், இரும்பு , வெண்கலம், வெள்ளி  மற்றும் பொன்னால் ஆன கருவிகள், அணிகலன்கள், ஆபரணங்கள், கலை பொருட்கள்  என 28,500 க்கும் மேற்பட்ட பொக்கிஷங்களை சுமார் 8000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டிடத்தின்  ஒரே கூரையின் கீழ் பாதுகாத்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அட்ஜாரா அருங்காட்சியகத்தை காணும்போது மனித குலத்தின் அறிவாற்றல்  திறமை போன்றவற்றை எண்ணி எண்ணி பெருமிதமும் பேருவகையும் கொள்ளச்செய்தது. 



இரண்டு தளங்களை  கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் சாதாரணமாக தோன்றினாலும் அதன்  உள்கட்டமைப்புகளும் காட்சிப்பொருட்களும்  பிரமிப்புக்குரியவை. 

 28 ஆயிரத்திற்கும் மேலுள்ள அரிய பொருட்கள், ஓவியங்கள்,ஆடைகள், ஆபரணங்கள்,கலைப்பொருட்கள்,கடல் வாழ் உயிரினங்களின் எலும்பு கூடுகள், ஆடை பிண்ணும்  உபகரணங்கள், மிருக தோலில்   எழுதி வைக்கப்பட்ட  சுருள்கள் , கல்வெட்டுக்கள் போன்று எத்தனையோ பார்த்து பிரமிப்படைந்தாலும் அவை எல்லாவற்றிக்கும் மேலாக என்  கண்களுக்கு காட்சி அளித்து என்னை சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைத்த பலவற்றில் கீழ்காணும் இந்த மரத்தால் செய்யப்பட்ட சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஏர்கலப்பை என்றால் அது மிகையாகாது. 




அப்படியே நம்ம ஊரில் இப்போதும் பயன்படுத்தப்படும் ஏர்கலப்பைக்கும் இதற்கும் யாதொரு வித்தியாசமும் இல்லாமல் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது.

ஒருவேளை பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த விவசாய தொழில் நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது நம்ம முன்னோர்களோ என்றும்  எண்ணத்தோன்றியது.

அரசின் நேரடியான கட்டுப்பாட்டிலும் பராமறிப்பிலுமுள்ள இந்த காட்சியகத்திற்கு, மின்சாரம், சீதோஷண கட்டுப்பாடுகள், குளிர்சாதனங்கள் , பணியாளர்களின் ஊதியம்  போன்றவற்றை கணக்கிலிடும்போது, இவர்கள் நிர்ணயித்திருக்கும்   நுழைவு கட்டணம் ,  எப்படி கட்டுப்படியாகவும் என்று எண்ணவைக்குமளவிற்கு  மிக மிக குறைவே. இதில் சிறுவர்களுக்கு இலவசம், மாணவர்களுக்கு சலுகை விலையில்.

மது பண்டைக்கால கலாச்சாரம், பண்பாடு, தொழில் , வாழ்க்கை முறை, அறிவு கூர்மை, பரிணாமம், பரிமாணம்  போன்றவற்றை அடுத்தவருக்கும் அடுத்த ம்  தலைமுறை பிள்ளைகளுக்கும்  கொண்டுசெல்லவேண்டும் என்ற உயரிய நோக்கமே முதன்மையாக இருப்பதால் வியாபார - லாப நோக்கம் துளியும் இல்லாமல் இருப்பது பாராட்டிற்குரியது.

இந்த கருங்கடல் பட்டணத்தில் அமைந்திருக்கும்  அருங்காட்சியக விஜயம் இன்னும் பல காலங்கள் என் அகத்தை ஆக்கிரமிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

உலக மனித வரலாற்றில் மூத்தகுடிகளான  பெருமைமிகு நம்ம ஊர் விவசாய பெருங்குடிகளுக்கு சமர்ப்பனம் செய்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

பி.கு: இந்த கலப்பை புகைப்படத்தில் என் கைவண்ணம் லேசாக தெரிகிறதா? 

அடுத்து என்ன?

அதுவரை,

தீபாவளி நல் வாழ்த்துக்களோடு,

நன்றியும், வணக்கமும்,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக