படகுப் பயணம் !
நண்பர்களே,
சமீபத்தில் வெளியிடப்பட்ட தொடர்பதிவின் முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல், ஜார்ஜியாவின் தலைநகர் திப்லிசியிலிருந்து சுமார் 360 கி மீ தூரத்தில் கருங்கடற்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமான படுமிக்கு சுமார் 5 மணிநேரம் பயணிக்க கூடிய அடுக்கு மாடி தொடர் வண்டியில் பயணித்தேன்.
சுமார் 5 மணி நேரம் கழித்து ரயில் நிலையம் வந்து சேர்ந்ததும் ஆனந்த கண்ணீரோடு என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்க காலையில் இருந்தே காத்திருந்தது அந்த மிதமான மழை தூறல்; அப்போது மணி சுமார் மதியம் ஒன்று.
அங்கிருந்து டாக்சி மூலம் ஓட்டலுக்கு சென்று உடமைகளை வைத்துவிட்டு, கொண்டுவந்த வீட்டு சமையலில் உருவான கட்டுசோற்றை ஒரு கட்டு கட்டிவிட்டு கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்தபின்னர், சுமார் மாலை 4 மணி வாக்கில் கொஞ்சம் வாக்கிங் போகவேண்டுமென்றெண்ணி கால்நடையாக பயணப்பட்டு வந்து சேர்ந்த இடம் தான் இந்த அழகிய கருங்கடல் எனும் பெருங்கடலின் கடற்கரை நடைபாதை.
அந்த அழகிய கடற்கரையின் ஓரத்தில் வாகனங்கள் செல்வதற்கான சாலைகள் அமைத்திருப்பதுபோல் பாதசாரிகளுக்கும் மிதிவண்டி பயன்படுத்துபவர்களுக்குமென்று பிரத்தியேகமான சாலைகள் - தரமான வகையில் அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.அந்த கருங்கடலின் ஒருபகுதியின் மறுகரையெங்கும் அழகிய மலைகளால் சூழப்பட்டிருப்பது கூடுதல் பேரழகு.
அந்த கடற்கரை சாலைகளெங்கும் கண்கவர் பூந்தோட்டங்கள் , மரங்கள், அழகிய வடிவிலான கட்டிடங்கள், கலங்கரை விளக்கம் , ராட்சத ரங்கராட்டினம், குளிர்பான கடைகள் பிரத்தியேக பொருட்காட்சியகங்கள் போன்றவற்றோடு பல வகையான பிரமாண்ட மீன்பிடி படகுகள், கொஞ்சம் கரையை விட்டு சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் எண்ணெய் மற்றும் பொருட்கள் ஏற்றிச்செல்லும் சர்வதேச வணிக மற்றும் சர்வதேச பயணிகளுக்கான பெருங் கப்பல்கலின் அணிவகுப்பு , இவற்றுக்கு இடையில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி செய்யும் பல வடிவாலான சிறிய ரக படகுகள் கரையோர கடல் நீரில் மிதந்துகொண்டிருந்தன.
நடைபாதையில் நின்றுகொண்டிருந்த படகுப் பயண முகவர் ஒருவர் என்னை அணுகி படகு சவாரி செய்யவேண்டுமா என கேட்டார், ஆம் என்று சொன்னதும் அங்கிருந்து அவரது படகு நிற்கும் இடம் வரை அழைத்துவந்து, ஆடி அசைந்துகொண்டிருந்த ஒரு பிரமாண்டமான படகில் ஏற்றிவிட்டார்.
சுமார் 40 நிமிடங்கள் அந்த கருங்கடலின் பாதுகாப்பான அதே சமயத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எல்லை வரை அழைத்து சென்று படகு போகும் வழி நெடுக இருக்கும் பல கட்டிடங்களையும் அதன் சிறப்பு, முக்கியத்துவம் போன்றவற்றை குறித்த செய்திகளையும் அவ்வப்போது சொல்லிக்கொண்டு அந்த படகு பயணித்து சரியாக சூரிய அஸ்தமனமாகும் அந்த கண்கொள்ளா காட்சியை கருங்கடலில்மேல் படகில் பயணித்தவாறே பார்த்து ரசித்த காட்சி இன்னமும் என் மனதில் அலைஅலையாக எழும்பி நினைவுகளின் பக்கங்களில் நீரூற்றி அதன் ஈரம் நீர்த்துப்போகாமல் நிலைக்க செய்கிறது.
இன்னும் கொஞ்ச தூரம் அதாவது 20கி மீ வடக்காக சென்றிடுந்தால் துருக்கி கடற்கரையில் கால் வைத்திருக்கலாம்.
(சென்ற ஆண்டு இதே போன்று செப்டெம்பர் மாதத்தில் துருக்கி சென்றிருந்த சமயத்தில் இதே போன்றதொரு படகு பயணம் கருங்கடலின் மேல் செய்ததுவும் என் நினைவில் வந்து அலை வீசிச் சென்றது).
இந்த படகில் என்னோடு பயணித்த பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தாலும் நான் படகில் ஏறிய சில நிமிடங்களில் நட்புடன் புன்னகித்து நலம் விசாரித்து தங்கள் தொலைபேசியில் இருந்த play லிஸ்டில் இருந்து படகில் இருந்த ஒலிபெருக்கிவாயிலாக நம்ம பாலிவுட் திரைப்பாடலை ஒளிரவிட்டதோடு சூரிய அஸ்தமனமான காட்சியை என்னோடு சேர்த்து புகைபடமெடுக்க உதவியவர்கள் துருக்கியை சார்ந்த இளம் தம்பதியினர்.
படகு பயணத்தின்போது அங்கேயே தேநீர், குளிர்பானங்களை வழங்கி பயணிகள் கருங்கடல் நீரின் மேல் படகில் இருந்தாலும் எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து பத்திரமாக கரையிறங்க வைத்தனர்.
கரை இறங்கிய நேரம் அந்த நகரமே ஒளிவெள்ளத்தில் மூழ்கியதுபோல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த எல்லா கட்டிடங்களும் வளாகங்களும் கண்களை கவர்ந்து நெஞ்சுக்குள் வெளிச்சம் வீசியது.
அப்படியே அடுத்து பார்த்தது, ஒவ்வொரு இரவும் ஒன்பது மணி முதல் விடியற்காலை இரண்டு மணிவரை வண்ண விளக்குகளின் ஒளி பின்னிப்பிணைந்து மின்னித்ததுலங்கி, இசைக்கேற்றார்போல், வடிவங்கள் மாற்றி மாற்றி நடனமாடும் நீரூற்றுகள்.
இத்தனை காட்சிகளையும் காண கண்கள் ஆயிரம் போதுமா?
இன்னும் இருக்கின்றன தொடர்வதற்கு.
அதுவரை,
நன்றியும் வணக்கங்களும்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
பயணம் சிறப்பாகத் துவங்கியிருக்கிறது. பயணங்கள் பல விஷயங்களை கற்றுத்தரவல்லது. ஆதனால் பயணம் செய்வோம்.
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு. தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.
வெங்கட்,
பதிலளிநீக்குநலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
பதிவை பார் வாசித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றிகள்.