பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...2

விளங்காத உண்மைகள்.

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...

விமான நிலையத்தில் இருந்த தகவல் பலகை சொல்லிய கேட் எண் பிரகாரமான இடத்திற்கு வந்து அங்கிருந்த  டிக்கெட் மற்றும் கடவு சீட்டு  பரிசோதகரை  அணுகி எனக்கான விமான போர்டிங் கார்டை கேட்டேன்.

அவர் எனது முன் பதிவு விவரங்களை சரிபார்த்தபின் , உங்கள் விமான பயணம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது எனினும் தங்களுக்கான இருக்கை இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

எனவே   விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் எங்கள் அலுவலர்களுள்  ஒருவர் உங்களை தொடர்புகொள்வார் எனவே காத்திருங்கள் என்றார்.

என்னது விமானம் புறப்படுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்தான் எனது இருக்கை  ஊர்ஜிதப்படுத்தப்படுமா?

ஏன் இப்படி?  நான் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே எனது பயண முன்பதிவையும் அதற்கான கட்டணத்தையும் கட்டி இருக்கும்போது என் இருக்கை இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறீர்களே, என்ன காரணம்? என கேட்டதற்கு அந்த அலுவலர் சொன்ன பதில்:

"இந்த விமானத்தின் இருக்கைகளின் எண்ணிக்கையைவிட பயணிகளின் எண்ணிக்கை கூடுதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எனவே அவர்களுள் எவரேனும் வரவில்லை என்றால் அந்த இருக்கை தங்களுக்கு அளிக்கப்படும்,  

அப்படி இடமில்லை என்றால் நீங்கள் இங்கேயே  தங்குவதற்கான ஒழுங்கு செய்து தருவோம், மேலும் அடுத்த நாள் காலை செல்லும் விமானத்தில் நீங்கள் அனுப்பி வைக்கப்படுவீர்கள் , சிரமத்திற்கு மன்னிக்கவும் என்றார்". சர்வ சாதாரணமாக.

அதெல்லாம் முடியாது நான் குறிப்பிட்ட அந்த விமானத்தில் கண்டிப்பாக பயணம் செய்தாகவேண்டும் , அடுத்த நாள் நான் வேலைக்கு செல்லவேண்டும்  இந்த விமானத்தின் பயண நேரத்திற்கிற்கேற்ப  எனது வீட்டிற்குசெல்வதற்கான வாகனம் ஒழுங்குசெய்துஅதற்கானகட்டணமும்செலுத்திவைத்திருக்கின்றேன், நான்  தங்கள் மேலாளரிடம் பேசவேண்டும் , உங்களின் நிர்வாக சீர்கேடு எனக்கு மன  உளைச்சலை தருகிறது எனது இந்த 7 மணி நேரம்  மற்ற பயண  திட்டங்களை கெடுக்கிறது  என்றேன்.

இந்த விமானம் இல்லை என்றால் அதற்கு முன் செல்லும் வேறு விமானத்தில் எனக்கு ஒழுங்கு செய்யுங்கள் என  கேட்டதற்கு,  இதற்கு முன் விமானம் இப்போதுதான் சென்றது அடுத்த விமானம் நாளை காலையில்தான் இருக்கின்றது எனினும் எங்களால் முடிந்தளவிற்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம் என்றனர்.

பயணம் ஊர்ஜிதமாகாமல் , விமான நிலையம் விட்டு வெளியில் சென்று  சில மணிநேரம் கடைத்தெருக்களில் காலம் செலவழிக்க மனமில்லாமல் அங்கேயே வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டி இருந்தது.

என்னை சமாதானம் படுத்தும் வகையில் மேலாளர் என்னிடம் பேசினார், கவலைப்படாதீர்கள் எங்களால் முடிந்த அளவிற்கு நீங்கள் முன்பதிவு செய்திருக்கும் விமானத்திலேயே அனுப்ப பார்க்கிறோம் ஒருவேளை முடியாத பட்ச்சத்தில் நீங்கள் ஓட்டலில் தங்கியிருந்து அடுத்த நாள் செல்லவேண்டி இருக்கும்.  முழுமையான தகவல் உங்களுக்கு சீக்கிரமே தெரிவிக்க முயல்கிறோம் அதுவரை எங்களின் வி ஐ பி லாஞ்சில் தங்கி  ஓய்வெடுங்கள், சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என கூறிவிட்டு வி ஐ பி லாஞ்சுக்கான அனுமதி பாஸ்  ஒன்றை கொடுத்துவிட்டுசென்றார்.

சுவாரசியம் ஏதுமின்றி, கடுங்கோபத்துடன் லாஞ்சில் சென்று ஒரு காபி குடித்துக்கொண்டு  எனது அலுவலகத்திற்கு தற்போதைய நிலவரத்தை குறிப்பிட்டு,  ஒருவேளை பயணம் தாமதமானால் நாளை என்னால் வேலைக்கு வர முடியாது என்றதொரு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். 

அதே போல முன் பதிவு செய்திருந்த டாக்சி நிறுவனத்திற்கும் எனது வீட்டுக்கும் நிலவரம் குறித்த  தகவல் அனுப்பி இருந்தேன் 

இதற்கிடையில் என் மொபைலில்  பயண  காப்பீடு  குறித்து என்ன சொல்கிறது என  காப்பீடு நிறுவனத்தின் அலுவல் பக்கத்தில் சென்று எனது விவரங்களை பதிவு செய்து அவர்களின் பதிலுக்காக காத்திருந்தேன்.

எல்லோரை போல என்னால் இயல்பாக எதையும் ரசிக்கமுடியவில்லை.

என்னுடைய நேரம் விரயமாவதையும் திட்டமிட்டிருந்தபடி வெளியில் செல்லமுடியாததாலும் இருக்கை  இன்னும் முடிவாகாததாலும் அந்த இரவு எந்த ஓட்டலில் தங்கி விடியற்காலை எழுந்து தயாராகி விமான நிலையம் வரவேண்டி இருக்குமோ என்ற சிந்தனை கலவை ஏற்படுத்திய தாக்கத்தால் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருந்தேன்.

நல்ல வேளை  ஒரே ஒரு சிறிய பெட்டி  மட்டுமே என் மொத்த உடமையாக இருந்ததாலும்   அது என்னுடனேயே இருந்ததாலும்   பெட்டி  வேறு விமானத்தில் சென்றுவிடுமோ என்று கவலை இல்லாமல் இருந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் இந்த விமான நிறுவனத்தின் பேராசையால் ஏற்பட்ட விரலுக்கு மிஞ்சிய  வீக்கம் போல அதிக எண்ணிக்கையில் பயணசீட்டுகள் விற்கப்பட்டதை எண்ணி கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தேன்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது எனினும் இன்னும் 6 மணிநேரம் இருக்கின்றது திட்டமிட்டிருந்த என் விமானம் புறப்பட.

விமான நிலைய அதிகாரிகள் இப்படியும் அப்படியும் நடந்து என்னை கடக்கும் போதெல்லாம் நம்மை நோக்கித்தான் வருகிறார்கள், நமக்கான நல்ல செய்தி சொல்லத்தான் வருகின்றார்கள் என நினைத்து   ஒவ்வொரு முறையும் ஏமாந்துபோனேன். 

சரி என்னதான் நடக்கும் பார்க்கலாம் என மனதை தேற்றிக்கொண்டு அமர்ந்தவண்ணம் கண்களை மூட முயற்சித்தாலும் , நாளை கண்டிப்பாக அலுவலகம் சென்றாகவேண்டுமே என்ற என் கடமை உணர்ச்சியின் உச்சத்தால் இமைகள் மூட மறுத்தன.

அடுத்து என்ன?

நாளை பார்ப்போம்.

அதுவரை,

நன்றியும் வணக்கமும்,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ. 


4 கருத்துகள்:

  1. தொடர்ந்து வருகிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,
      தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. இருக்கைகளை விட அதிக அளவில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்வதே தவறு. ஆனாலும் எல்லா விமான நிறுவனங்களும் இப்படித்தான் செய்கின்றன. பயணிகளின் பிரச்சனைகளைக் குறித்த எண்ணம் இவர்களுக்கு இருப்பதே இல்லை என்பதே நிதர்சனம்.

    மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வெங்கட்,

    சரியாக சொன்னீர்கள்.

    வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் வியாபாரிகளுக்கு பயணிகள், நுகர்வோர் குறித்து கிஞ்சிதமும் அக்கறை இல்லை என்பதே நிதர்சனம்.

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு