பின்பற்றுபவர்கள்

சனி, 27 ஜூன், 2015

"பாத யாத்திரை"

இலவச இணைப்பு


நண்பர்களே,

மலையனூர் மலைப்பின் தொடர்ச்சியாகவும் இந்த பதிவினை கருதலாம்.

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே,வங்கி மற்றும் தொலைபேசி துறை போன்ற மத்திய அரசு  பணிகளுக்கான தகுதி  தேர்வுகளில் பங்குகொள்ளும் வாஞ்சை நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் உள்ளத்தில் உதித்தது.

அந்த சமயத்தில் நாட்டிலேயே,  தேசிய மயமாக்க பட்ட வங்கிகளுள்  மிகபெரிய வங்கியாக திகழும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தமக்கான புதிய ஊழியர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் விநியோகிக்கும் செய்தி அறிந்து, தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று விண்ணப்ப படிவம் பெற்று , ஏற்க்கனவே வங்கியில் பணிபுரியும் ஒரு அண்ணனின் ஆலோசனைபடி தேர்வு மையத்தை ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி என்று குறிப்பிட்டு, பூர்த்தி செய்து தேவையான இணைப்புகளை இணைத்து விண்ணப்பித்து விட்டு எழுத்து தேர்விற்கு தயாரித்துகொண்டிருந்தோம்.

திருப்பதியை ஏன் தேர்வு செய்தோம்?

அன்று இருந்த நிலவரப்படி, தமிழகத்தில் நமக்கு மிகுந்த போட்டியிருக்கும் அதே சமயத்தில் ஆந்திராவில் சென்று தேர்வு எழுதினால்,தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை குறைவாகவும் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை சதவீதத்தின் அடிப்படையில் ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் விழுக்காடுகள் கிடைக்கும் அதில் நாம் தேர்ந்தெடுக்கப்பட அதிக சாத்திய கூறுகள் இருக்கும் என்ற அடிப்படையில் ஆந்திராவை தேர்ந்தெடுத்தோம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையத்தின் விவரங்கள் கிடைக்கப்பெற்றோம்.

நங்கள் மொத்தம் மூன்றுபேர்கள்.  இந்த மூன்றுபேரும் ஆரம்ப பாட சாலையில் இருந்து கல்லூரிவரை மட்டுமன்றி இன்றுவரை நண்பர்களாக இருப்பவர்கள், அதேபோல் எங்கள் மூவரின் குடும்பங்களும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் நட்புடன் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அச்சமும் இன்றி வெளி ஊர் சென்றுவர அனுமதித்தனர் எங்கள் குடும்பத்தினர்.

அதிலும் ஒரு நண்பனின் தாய் மொழி, சுந்தர தெலுங்கு என்பதனால் கூடுதல் தைரியம் எங்கள் எல்லோருக்கும். மாநிலம் கடந்து வேறு மாநிலம் செல்லும் முதல் பயணம் அது எங்கள் மூவருக்கும்.

தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு., நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு புறப்பட்டு மாலை சுமார் 5.00 மணியளவில் கீழ் திருப்பதி வந்தடைந்தோம்.

பயண திட்டம்:  திருமலையில் அன்றிரவு தங்கிவிட்டு, சனிக்கிழமை காலை கோவிலை சுற்றி பார்த்துவிட்டு  மாலை முதல் இரவு வரை அடுத்தநாள் பரீட்சைக்கு தயாரித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை  பேருந்தில் தேர்வு மையம் சென்று தேர்வெழுதிவிட்டு திருப்பதியில் ஒரு நல்ல ஒரு ஓட்டலில் கார சாரமான சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவது.

அதன்படி கீழ் திருப்தியில் இருக்கும் மலையில் இருந்து கால் நடையாக ஏழு மலைகளை கடந்து திருமலையை அடைந்தோம், வந்த உடனே அன்று இரவு சாப்பாட்டுக்கான இலவச கூப்பன்களை பெற்றுகொண்டு , இலவச தங்கும் விடுதியை  பதிவு செய்ய சென்ற இடத்தில், நீங்கள் மூவரும் மீசை முளைக்காத சின்னப்பசங்க உங்களுக்கு அறை ஒதுக்க முடியாது என்று முளைக்காத எங்கள் மீசைகளை காரணம் காட்டி எங்கள் ஆசையில் அள்ளிபோட்டனர் கூடை நிறைய மண்ணை அந்த  விடுதி பதிவு செய்யும் அலுவலர்கள். ஆனாலும் எங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை ஏனென்றால் எங்களுக்குதத்தான் முளைக்கவே இல்லையே.

Image result for pictures of tirupati tirumala hill way


சுந்தர தெலுங்கு நண்பன் அன்று கெஞ்சிய கெஞ்சலில் , " சரி வெளியிலே யாராவது லேடீஸ் இருந்தா கூட்டிட்டு வாங்க பார்க்கலாம்" என்றார்.

அறை தருவதற்கு எதற்கு லேடீஸ்?

பெண்கள் பெயரில் அறை ஒதுக்கினால், குடும்பமாக இருப்பதாக ரெக்கார்டில் பதிவு செய்துவிட்டு அதன் அடிப்படையில் உங்களுக்கு அறைக்கான அனுமதி சீட்டு கொடுக்க வசதியாக இருக்கும் என்று அவர் கூற, அந்த மலையில் நமக்கு எந்த பெண்மணி உதவுவார்கள்?  சரி  யாரையாவது கேட்கலாம் என்று நினைத்து வெளியில் சென்று தயங்கி தயங்கி ஒரு பெரிய பட்டாளமாக இருந்த கும்பலில் கொஞ்சம் வயது முதிர்ந்த ஒரு மனிதரிடம் விஷயத்தை சொல்ல அவர் தன் மனைவியோடு எங்கள் கூடவந்து அவரது மனைவி பெயரில் எங்களுக்கு அறை எடுத்து கொடுத்ததோடல்லாமல் எங்கள் தேர்விற்காக வாழ்த்துக்களையும் சொல்லி கை குலுக்கிவிட்டு சென்றார்.

Image result for pictures of tirupati devasthanam guest houses

அடுத்து நல்லபடியாக சாப்பிட்டு விட்டு அறையில் நிம்மதியாக தூங்கி எழுந்து மறு நாள் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து தெப்பக்குளத்தில் தொப்பை மூழ்கி  குளித்துவிட்டு தரிசன வரிசையில் நின்று, பல "ஜரகண்டி" களை கடந்து விக்ரகத்திற்க்கு முன் நாங்கள்.

பரீட்ச்சைக்காக வேண்டிகொண்டோம், அப்போதே அதற்க்கான பலனும் தேர்வின் முடிவுகளும் அங்கேயே எங்கள் முன் தரிசனமானதை நாங்கள் அப்போது உணரவில்லை.

மூலவர் சந்நிதானம் விட்டு வெளியில் வந்தால் அங்கும் ஜனங்கள் வரிசையாக நின்றிருந்தனர், விசாரித்ததில், இலவச பிரசாதம் வழங்குமிடம் என்று எழுதி இருப்பதை கண்டு அதுவரை அமைதியாக இருந்த வயிறு சத்தம்போட நாங்களும்  சத்தமில்லாமல் வரிசையில் நின்று வழங்கப்பட்ட பொங்கலை பெற்று உண்டோம்.

 ஆஹா......., நெய் மணக்க, முந்திரி திராட்ச்சை இடை செருகலுடன் அப்படி ஒரு பொங்கலை இன்றுவரை நான் எங்குமே சுவைத்ததில்லை, எனினும் வழங்கப்பட்ட அளவு போதுமானதாக இல்லை எனவே மீண்டும் வரிசையில் வந்து நின்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இலக்கை நெருங்கும் நேரத்தில் எங்களுக்கு முன் இருந்த ஒருவரோடு பொங்கல் வழங்குபவர் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.

அடடா... என்னங்க இது பசியை தூண்டி விட்ட ருசியான பொங்கலை இன்னும் கொஞ்சம் சாப்பிட நினைத்து சிரமப்பட்டு வரிசையில் புகுந்து கைக்கு எட்டும் தூரத்தில் வந்த  இந்த நேரத்தில் அங்கே  என்னய்யா தகராறு......

அதை நாளை சொல்கிறேன், அதுவரை, வீட்டில் நேற்று செய்த பொங்கல் ஏதேனும் மீதமிருந்தால் சூடு பண்ணி சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கள் நானும் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு நாளை தொடருகிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


8 கருத்துகள்:

  1. இப்படி பொங்கல் குடுத்திட்டீங்களே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால்,

      பொங்கல் சாப்பிட்டீர்களா?

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. நீண்ட இடைவெளிக்கு பின் என் யாத்திரையை தொடரும் உங்களுக்கு நன்றி, வாங்க முரளி, இணைந்தே பயணிப்போம்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. அரசு வேலைக்கு முயற்சித்த அரசனுக்கு,
    வணக்கம்,
    மீசையில்லை, தொப்பை ம்ம்,,,,,,
    இலவசம் எல்லாம் ஒரு தடவைதான், ஓசின்னா, தொப்பையை தடவிக்கிட்டு போய்டக் கூடாது,
    ஓஓ தவறாக நினைக்கவேண்டாம்
    ஒய்வெடுங்கள், நல்லது, நாளைத் தொடர்வோம் மீதி பொங்கல் சாப்பிட்ட கதையை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஏதோ சின்னபசங்க தெரியாம பொங்கல் ருசியில் மயங்கி ரெண்டாவதாக வரிசையில் நின்னுட்டோம், உங்கள போல முற்றும் துறந்த ஞானியாக இருந்திருந்தால் ஒருமுறையோட நடைய கட்டி இருப்போம்.

      திருப்பதி போய் பொங்கல் சாப்பிட்டு இருக்கீங்களா?
      எத்தனை முறை வாங்கி சாப்பிட்டீங்கனு கேட்கமாட்டேன், எனக்கு தெரியும்'
      பாத யாத்திரையில் என்னோடு தொடர்ந்து பயணிப்பதற்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. திருப்பதி பொங்கல்...நாவில் நீர்....அங்கு புளியோதரை? தயிர்சாதம்..? எல்லாமே ரொம்ப நல்லாருக்கும்....சர்க்கரைப்பொங்கல் அதுவும் நெய் முழங்கை வழிவார....அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பி என்று ஆழ்வார் பாடலுக்கு ஏற்ற படி இறைவன் தின்னுவது உறுதியோ இல்லையோ நாம் உண்ணுவது உறுதி.....

    பதிலளிநீக்கு
  5. அடுத்த சில பயணங்களில் புளியோதரையும் சாப்பிட்டிருக்கின்றேன், ஆனால் எத்தனை முறை என்று சொல்ல மாட்டேன், இப்பவே சிலருக்கு வயிறு எரிகின்றது.

    இறைவன் பெயரை சொல்லிவிட்டு நாம்தானே எல்லாவற்றையும் தீர்த்து கட்டுகின்றோம்?

    கோ

    பதிலளிநீக்கு