Followers

Monday, June 29, 2015

"சிரஞ்சீவி"

என்றென்றும்!!

நண்பர்களே,

நம்மில் பலருக்கு , சினிமா என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு இன்றியமையாத அங்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
அதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழ் மக்களுக்கு திரைப்படம் என்பது ஏறக்குறைய உணவு, உடை இருப்பிடத்திற்கு அடுத்து வரிசையில் இடம் பிடிக்கும் அங்கமாககூட சிலருக்கு தோன்றும்.

வெறும் கூத்தும், நாடகமுமே ஒரு காலகட்டத்தில் மனிதனின் பொழுது போக்காக இருந்த நிலைமை மாறி, திரைப்படம் அதுவும் ஊமைப்படம்,பின்னர் பேசும் படம் என்ற பரிணாம வளர்ச்சியுற்று, அதன் பின்னர், கருப்பு வெள்ளை, கோவா  கலர் ஈஸ்ட்மென் கலர் என்று வளர்ந்து     இன்றைய அதி நவீன தொழில் நுட்பங்களின் அரசாட்சியின் விளைவாக, மோனோ சௌண்ட், ஸ்டீரியோ சௌண்ட், டால்பி சௌண்ட், டிஜிட்டல்சௌண்ட் இன்னும் என்னென்னவோ நவீன ஒலி அமைப்புகளோடு திரைப்படங்கள் எடுக்கபடுகின்றன.

காட்சிகளை அப்படியே பார்ப்பதற்கும் அவற்றை அந்தந்த காட்சிகளின் கண பரிமானங்களுக்கேற்ப ஒலிக்கப்படும் பின்னணி இசையுடன் பார்க்கும்போது அந்த காட்சி அப்படியே மனதோடு ஒன்றி நம் சிந்தை அந்த காட்சியோடு லயித்துபோகிறது.

அதே போல பாடல்களும் அதன் கருத்துக்களும் , அதன் வார்த்தைகளும் நம் மனதில் சிறிது காலமேனும் நிலை பெற்றிருக்க காரணம் அதன் இசையும் ராகமும் என்றால் அது மிகை அல்ல.

Image result for PICTURES OF OLD GRAMOPHONES

சரி அப்படி திரைப்படங்களில் வரும் பாடல்கள் பெரும்பாலும் அந்த திரைப்பட கதையில் வரும் ஒரு சூழ்நிலையை மையபடுத்தி அதில் சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் பாடுவதுபோல அல்லது நிகழும் சூழ்நிலைக்கு ஏற்ப எங்கிருந்தோ பின்னணியில் ஒலிப்பதாக  எல்லா பாடல்களும் அமைவது வழக்கம்.

அப்படி அந்த குறிப்பிட்ட கதைக்கு, அந்த குறிப்பிட்ட காட்சிக்கு பாடபடுவதாக அமைந்த பாடல்கள் அந்த திரைபடகாட்சியை தவிர வேறு எங்கிலும் எந்த நேரத்திலும் கேட்டு ரசிக்கும்படியாக பெரும்பாலும் அமைவதில்லை.

வேண்டுமென்றால், திரைப்படம் பார்த்த ஓரிரு நாட்கள் நம் நினைவில் இருந்து விட்டு பின்னர் நினைவை விட்டு மறைந்து போவதுண்டு.

ஆனால் ஒரு சில திரைப்பாடல்கள், எத்தனை காலங்கள் ஆனாலும் அதன் சொற்களும் ராகமும், இசையும் நம் மனதை விட்டு என்றுமே நீங்காத இடத்தை பிடித்து காலத்தை வென்ற பாடல்களாக நிலை பெறுவதுண்டு,

அத்தகைய பாடல்கள் இடம் பெற்ற  திரைப்படங்கள் நாம் பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன் அல்லது நம் பெற்றோர்கள் பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன் வெளி வந்திருந்தாலும் அதன் கதை என்னவென்று நாம் அறிந்திருக்காத  போதிலும் அவற்றின் பாடல்கள், நமக்கும் நம் இளைய சந்ததியினருக்கும் மிகவும் பிடித்த அர்த்தமுள்ள பாடல்களாக  இன்னமும் சிரஞ்சீவிகளாக நம் உள்ளங்களில் உலாவருகின்றன.

அவ்வகையில் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவ பருவத்தில், "நாட்டு நலப்பணி திட்டம்" என்று சொல்லப்பட்ட NATIONAL   SERVICE  SCHEME மில் இணைந்து ஒரு மலை கிராமத்தில் பத்து நாட்கள் முகாமிட்டு அங்குள்ள மலை வாழ் மக்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தோம்.

அந்த பத்து நாட்களின் ஒவ்வொரு இரவும் உணவிற்கு பின்னர் அனைத்து மாணவர்களும் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, பாட்டு, நடனம் போன்று தங்களது விருப்பம்  அல்லது திறமையை எல்லோர் முன்னினையிலும் செய்து காட்டி மகிழ்ந்து அன்றைய நாளில் காலை முதல் மாலைவரை கடுமையாக உழைத்த களைப்பு நீங்கி சந்தோஷமாக படுக்கைக்கு செல்வது வழக்கம்.
Image result for PICTURE OF CAMP FIRE

இப்படி ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்க எங்கள் முகாமின் கடைசி இரவு வந்தது.  மூட்டப்பட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பின் கதகதப்பில், வழக்கம் போல் எல்லோரும் வட்டமாக அமர்ந்து ஆட்டம் பாட்டம் என்றிருந்த சமயத்தில் அடுத்ததாக தமது முறை வந்தது எங்கள் திட்ட அலுவலர் பேராசிரியர் ஒருவருக்கு.

அவர் தனக்கு நடனம் ஆட தெரியாது அதே சமயத்தில் ஒரு திரைப்பட பாடல் பாடுவதாக கூறி அந்த இரவு வேளையில் , வெட்ட  வெளியில், நிலா வெளிச்சத்தில், அமைதியான அதே சமயத்தில் அழகான குரலில், வார்த்தை சுத்தமாக, சுதி சுத்தமாக சங்கதி பிறழாமல், அருமையாக ஒரு பாடல் பாடினார்.

அந்த பாடலை ஏற்க்கனவே பலமுறை எங்கெங்கேயோ  கேட்டிருந்தாலும், அன்று அவர் பாடும்போதுதான்  அந்த பாடலின் உள்ளே புதைந்திருந்த  புதையலுக்கு ஒப்பான கருத்துக்களை முழுமையாக உணர முடிந்தது. 

அந்த பாடலை, எங்கள் பேராசிரியர் எங்களுக்கான - முகாமின் கடைசி நாளுக்கான செய்திபோலவும், அறிவுரைபோலவும் பாடி முடித்ததும் கேட்ட நாங்கள் அனைவரும் தட்டிய கர ஒலிகேட்டு மகிழ்ந்த வானம் தன் மகிழ்ச்சியை காட்டும் வண்ணம் தன்  பங்குக்கு மின்னலையும் இடியையும் தூரத்தில் எங்கிருந்தோ சமிக்க்ஞையாய் வெளிப்படுத்த, வரவிருந்த மழையில் உடல் நனையும் முன்னே  , கேட்ட பாடலில் உள்ளம் நனைந்தவர்களாக படுக்க சென்றோம்.

விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் உறங்கிய பின்னும் உறங்காமல் நான் மட்டும்  அந்த பாடலின் வரிகளை நினைத்தவனாக - கண்களை நனைத்தவனாக  வெகு நேரம் விழித்திருந்து, விடிவதற்கு சற்று முன்னரே விழிகள் மூடினேன்.

அந்த பாடல் என் வாழ் நாளில் இன்றளவும் மறக்க முடியாத பாடல் என்பதால் இளங்கலை மூன்றாம் ஆண்டு இறுதியில் நடந்த கல்லூரி பாட்டு போட்டியன்று, கூடியிருந்த அரங்கம் நிறைந்த மாணவர்கள் மத்தியில், " நண்பர்களே, திரைப்பட பாடல்கள்தானே என எல்லாபாடல்களையும் நாம் அசட்டை செய்து விட்டுவிடாமல், நம் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் பாடம் சொல்லும் சில பாடல்களும் உள்ளதை கண்டறிந்து அவற்றை கேட்டு மட்டுமல்லாது உணர்ந்தும் மகிழும் பாடல்களுள் என் மனதை கவர்ந்த இந்த பாடலை பரிசுக்காக அன்றி அதன் கருத்தை நீங்களும் உணரவேண்டும் என்ற எண்ணத்தில் பாட வந்துள்ளேன்" என்றதொரு அறிமுகத்தோடு அந்த பாடலை அன்று பாடியதை இன்றும் என் மனதில் நங்கூரமிட்டு வைத்திருக்கின்றேன்.

அந்த பாடல்:
"மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
 எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் 
அமைதி நிலைக்கும்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும்காவியம் பாடி
நாளை பொழுதைஇறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு.

மயக்கமா கலக்கமா
மனதிலே  குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?

இப்போதுகூட தனிமையில் இருந்தால் இந்த பாடலை முணுமுணுப்பதுண்டு.

 நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

11 comments:

 1. எனக்கு பல திரைப்பட பாடல்கள் பிடிக்க காரணம்
  நல்ல கருத்தை சொல்லி இருப்பதால்...
  பாடல் வரிகள் கூர்ந்து கவனிச்சா
  சூப்பரா புரியும் ச்ஆர்.

  எனது பட்டியலில் இருக்கும் பாடல்களை
  நானும் அவ்வப்போது
  முணுமுணுப்பதுண்டு.

  மயக்கமா கலக்கமா-நல்ல பாடல்.
  நல்ல பதிவு சார்.

  ReplyDelete
 2. உற்சாகம் தரும் பாடல்களில் ஒன்று...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தனப்பால், சரியா சொன்னீங்க.

   கோ

   Delete
 3. மகேஷ்,

  வருகைக்கும் பதிவினை ரசித்ததற்கும் நன்றி.

  உங்களுக்கு பிடித்த பாடல்களை பற்றி எழுதுங்கள்.

  கோ

  ReplyDelete
 4. அரசனுக்கு வணக்கம்,
  அருமையான பாடல் வரிகள்,
  பதிவும் அருமை,
  தாங்கள் சொல்லும் விதம் அருமை,
  ஆனாலும் ,,,,,,,,,,,,,,,
  அருமை, வாழ்த்துக்கள், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி ஆனாலும் ,,,,,,,,,,,,,,, என்ன?

   விளக்கம் தேவை.

   கோ

   Delete
  2. அரசருக்கு வணக்கம்,
   நான் சொன்

   Delete
 5. மிக அருமையான பலட் பதிவு.....

  அருமையான பாடல் பதிவு.....எப்போதும் யாரேனும் தாங்கள் மட்டும் துன்பபடுவது போல புலம்பினால்...நாங்கள் அடிக்கடிச் சொல்லும் வரிக்ள்

  உனக்கும் கீழே உள்ளவர் கோடி
  நினைத்துப் பார்த்து
  நிம்மதி நாடு.

  இந்த வரிகளைத்தான் நாங்கள் அடிக்கடி தான் மட்டும் தான் கஷ்டப்படுவதைப் போல சொல்லும் நபர்களிடம் சொல்லுவது...

  ReplyDelete
 6. அரசனுக்கு வணக்கம்,
  இந்த பாடல் மட்டுமா?
  நன்றி.

  ReplyDelete
 7. வருகைக்கு மிக்க நன்றி,

  இன்னும் நிறைய இருக்கு நெஞ்சு நிறைய.

  கோ

  ReplyDelete
 8. "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா" இச்சூழலுக்கு,

  அன்றைய சினிமா சொன்ன கருத்து: பரிபூரண வைத்தியம் - எதையும் தாங்கும் இதயம், (கடவுள் + தன்) நம்பிக்கை
  இன்றைய சினிமா சொல்லும் கருத்து: கட்டு - குத்து பாட்டு, மது மற்றும் மாது

  நல்லா கருத்து சொல்றாங்கையா...

  ReplyDelete