பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 மார்ச், 2015

பனையின் மழலை!!

"பேபி பாம் ட்ரீ - கிலோ £3.00"

நண்பர்களே,

வழக்கமாக நங்கள் குடியிருக்கும் பகுதியில் நம் இந்திய காய்கறிகள் ஒரு சில ஆசிய மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகளில் வியாழன் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில்தான் புதிதாக - பிரஷ்ஷாக  கிடைக்கும்.

எனவே நேற்று  மாலை அலுவலகம் விட்டு வரும் வழியில் இருந்த ஒரு இலங்கை  தமிழரின் மளிகை கடைக்கு சென்று, ஏதேனும் நமக்கு பிடித்த காய்கறிகள் புதிதாக வந்திருக்கின்றதா  என பார்க்க போனேன்.

அங்கே பலதரப்பட்ட மர கறிகள்  புதிய பொலிவுடன் அடுக்கி வைக்க பட்டிருந்தன.

கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.

இங்கே சாதாரணமாக நம் தமிழ் நாட்டில் என்னென்ன காய்கறிகள் உள்ளனவோ அவை அத்தனையும்  இங்கே கிடைக்கும், கறிவேப்பிலை வரை.(ஒரு பத்து அல்லது பனிரெண்டு கீற்றுகள்(கீற்றுகள் சரியா??) 100 ரூபாய். மற்றவற்றின் விலையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். 

வெண்டைக்காய் எனது பேவரிட், ஆனால் புதியதாக இல்லை, சரி நாளை வந்து வாங்கிக்கொள்ளலாம்  என நினைத்துகொண்டு அப்படியே மற்ற எல்லா காய்கறிகளையும் நோட்டமிட்ட என் கண்களில் அபூர்வமாக பட்டது "பனங்கிழங்கு".

ஆகா... எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்தது.

ஆரம்ப பள்ளிகூட நாட்களில் பள்ளியின் முகப்பில் பாட்டியின் கடையில்  தரையில் விரிக்கப்பட்ட கோணி பையின்மேல் பரப்பப்பட்ட  எலந்தம்பழம், நாகப்பழம், எலி மிட்டாய், கமர்கட்டு,புளிப்புமிட்டாய் அவற்றின்  மத்தியில் கூறு கட்டப்பட்ட  வேகவைத்த- வறுத்த  வேர்கடலை , கரும்பு ,வேகவைத்த  பனங்கிழங்கை பார்த்த ஞாபகம். 

Image result for pictures of panangizhangu

வெளியில் விற்கும் இது போன்ற எந்த பொருளையும் வாங்கி சாப்பிடகூடாது என்ற "தாய் சொல்லை"யும் தட்ட வைத்து நண்பன் ராஜ் குமாரோடு சேர்ந்து வாங்கி அதை எப்படி சாப்பிடுவது என்றுகூட தெரியாமல் , கரும்பை மெல்லுவதுபோல் மென்று வாயெல்லாம், பல்லெல்லாம் அதன் நாரு  மாட்டி அதை அப்படியே நாரோடு மென்று தின்று பின்னர் அம்மாவிடம் அடி வாங்கியநினைவுகளும், பின்னர் அம்மாவே மார்கெட் போய் வாங்கிவந்து வீட்டில் வேகவைத்து நாரு களைந்து சின்ன சின்னதாக உடைத்து சாப்பிட பழக்கி கொடுத்ததையும், இன்று இந்த கடையில் பார்த்த பனங்கிழங்கு என் மன கிடங்கிலிருந்த ஞாபக துகள்களை  எனக்கு நினைவு படுத்தியது.  

"சரி இந்த பனங்கிழங்கு என்னவிலை?"

"கிலோ 300 ரூபாய்."(£3.00)

"ஒரு கிலோவிற்கு எத்தனை வரும்?"

 "சுமார் பனிரெண்டு கிழங்குகள் வரும்" 

"இது எங்கிருந்து வந்தது?"

"இலங்கையில் இருந்து".

"சரி எனக்கு இரண்டு போதும் .. கொடுங்கள்."

கடைகாரர் எடைபோட்டு கொடுத்தார் அதில் இரண்டுமே  அடிபாகம் மிகவும் தடித்த கிழங்குகள் அவைதான் ருசியாக இருக்கும் என்று கடை காரர் சொல்லிகொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து ஒரு ஆங்கிலேயரும் அவரது மனைவியும் நான் இருந்த கடைக்குள் வந்து கடைகாரரிடம், பம்கின் (பூசணிக்காய் சூப்பு செய்வார்கள்)   வேண்டும் என கேட்க்க கடைகாரர் பூசணிக்காய்  அடுக்கி வைக்கபட்டிருந்த பகுதியை காட்ட அவர் என்னை தாண்டிப்போக நேர்ந்தது.

அப்போது என் கையில் இருந்த பனங்கிழங்கை காட்டி கடைகாரரிடம் இது என்ன வெஜிடபள் என கேட்டார்.
அதற்க்கு கடைகாரர் அது வந்து .... அது வந்து.... என அதன்  ஆங்கில பெயர் தெரியாமல் , என்னை பார்த்து சார் இது என்னன்னு கொஞ்சம் ஆங்கிலத்தில இவருக்கு சொல்லுங்க என்றார்.

 எப்போ இந்த கடைகாரரிடம் நான் ஷேக்ஸ்பியரின் பேரன் என்று சொன்னேன், இப்போ திடீர்னு பனங்கிழங்குக்கு ஆங்கில பெயர கேட்டா நான் என்னத்த சொல்றது?

"ஹாய் , திஸ் இஸ் பேபி பாம் ட்ரீ" .

"பேபி பாம் ட்ரீ"??

"எஸ் ....சேம்   லைக் பேபி கார்ன் ,பேபி ஸ்பினச்,பேபி டர்னிப், பேபி பொட்டேட்டோ..".

"ஒ ..... இன்ட்ரஸ்டிங்..இஸ் திஸ் எடிபில்?"

"யா.....அப்கோர்ஸ் .... குட் பார் ஹெல்த்."

"இஸ் இட் ?"

"திஸ் இஸ் புல்லி லோடட்  வித் ஆல் மினரல்ஸ் அண்ட் விட்டமின்ஸ்...."(என்னென்ன மினரல் விட்டமின்னு கேட்டா மாட்டிக்குவோம்)

"ஹவ்  டு குக் திஸ்?""

நானே இன்னிக்குதான் ட்ரை பன்னபோறேன் இதுல உனக்கு வேற டூஷன் எடுக்கணுமா என நினைத்துக்கொண்டே, 

ஐ தின்க் தி ஷாப் கீபர் கேன் எக்ஸ்ப்ளைன் பெட்டர்"

என்று சொல்லிவிட்டு நான் வாங்கிய பனங்கிழங்குக்கான பணத்தை கொடுத்துவிட்டு கடையை விட்டு நடையை கட்டினேன்.

வீட்டுக்கு வந்து ஒரு வழியாக பிரஷர் குக்கரில் வைத்து வேகவைத்து, நண்பன் ராஜ்குமாரை நினைத்துக்கொண்டே ஒரு முழு கிழங்கையும் சாப்பிட்டு முடித்தேன் அடுத்தது நாளைக்கு.

இன்றுமாலை மீண்டும் அதே கடைக்கு வெண்டைக்காய்  வாங்க போனேன்.

உள்ளே நுழைந்ததும்   என் கண்ணில் பட்டது அழகாக வண்ண எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு சிறிய பெயர் பலகை.

அந்த பலகை பனங்கிழங்கு அடுக்கி வைக்க பட்டிருந்த செல்ப் அருகில் வைக்கபட்டிருந்தது.

அப்படி  என்ன எழுதபட்டிருந்தது அந்த பலகையில்?

"பேபி பாம் ட்ரீ - கிலோ £3.00" (edible)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ







 










8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      அப்போ நான் சொன்னது ரைட்டுன்னு சொல்றீங்களா?
      வருகைக்கு நன்றி
      .
      நட்புடன்


      கோ

      நீக்கு
  2. உங்கள் பதிவைச் சிரிப்புடன் படித்தபின், என் விருப்பப் பண்டமான பனங்கிழங்கினை ஆங்கிலத்தில் கூறுவதெப்படி என்பது அறிந்து கொண்டேன்.
    எனினும் எங்கள் பதிவுலகின் "பழனி கந்தசாமி" ஐயாவிடம் சரி பார்க்க வேண்டும்.
    இந்தக் கறிவேப்பிலை கீற்றுக்கள் எனக் குறிப்பிட்டதை எங்கள் வீட்டில்
    "இடுக்கு" என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரீசு யோகன், நம்ம பதிவின் பக்கம் வந்ததை யோகமாக கருதுகின்றேன் ,

      கீற்றுக்கு மாற்று சொன்னதற்கும் மிக்க நன்றி.

      "பழனி கந்தசாமி" ஐயாவிடம் சரி பார்த்து சொல்லுங்கள்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. prouts of Asian Palmyrah Palm ?????

    ஷேக்ஸ்பியரின் எள்ளு? கொள்ளு? ******பேரன்// என்பதை இது நாள் வரை மறைத்ததற்கு எங்கள் கண்டனம். ஏதோ தமிழ்தாத்தாவின் கொள்ளுப் பேரன் என்பதைத்தான் நீங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை போனால் போகின்றது . இதையுமா ! எப்படி இருவருக்கும் பேரன் ஆக முடியும் என்று நீங்கள் கேட்கலாம்....இந்தியாவை வெள்ளைக்காரன் ஆண்டான் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.....உங்களுக்குத் தன்னடக்கம்....!!!!!

    .

    பதிலளிநீக்கு
  4. எள்ளு .... கொள்ளு....ரொம்பத்தான் லொள்ளு.
    பனங்கிழங்கு சாப்பிட்ட அனுபவம் உண்டா?
    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  5. எனக்கு ரொம்ப பிடித்த கிழங்கு. நல்லா சாப்பிடுவேன். ஆனா அங்கு கிடைத்து வாங்கி சாப்பிட்டு பெயர் சொல்லி விற்பனைசெய்து. வேகவைக்க கத்துக்கொடுக்காமல் வந்தது தமிழன் செயலா கோ, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனங்கிழங்கை வேக வைத்து சாப்பிடவேண்டும் என்று நான் சொல்லாமல் வந்ததற்கு போய்இவ்வளவு கோபபடுகின்றீர்களே. அதை கடைகாரர் சொல்லியிருப்பார் என்று நினைக்கின்றேன். அடுத்தமுறை கண்டிப்பாக சொல்லிவிட்டு வருகின்றேன்.

      "கோ"மீது "கோ"பம் வேண்டாம்.

      கோ

      நீக்கு