பின்பற்றுபவர்கள்

திங்கள், 9 பிப்ரவரி, 2015

"தமிழ் வந்த கதை".

தமிழ் வெல்க!!

நண்பர்களே,

எம்மை இழுத்துவந்து, அறிமுகபடுத்தி  முகப்பை திறந்துவிட்ட- இந்த விசாலமான வலைதலத்தினூடாக  கடந்த ஐந்து மாதங்களாக சுமார் 56 பதிவுகள் எழுதி அதை பண்பட்ட - அறிவார்ந்த சக பதிவாளர்கள் மற்றும் வாசகநண்பர்களின் சமூகவானில் நிலாவென  உலாவர செய்த
எனது இனிய நண்பனும் கல்லூரி தோழனுமான அன்பிற்குரிய விசு அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லிவிட்டு என் தமிழார்வத்திற்கும் கவி ஆற்றலுக்கும் காரணம் யார் - என்ன- எங்கனம் என உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த பதிவிற்கான காரணம் நமது வாசக நண்பர்களின் தீராத அன்பு கேள்விகனைகளுள்  ஒன்று "நீங்கள் எப்படி இப்படி ...உங்கள் எழுத்துக்கு முன்னால் எங்களது எழுத்துக்கள் ஜுஜிபி" என்றெல்லாம் கொஞ்சம் மிகைபடுத்தி  கேட்டிருந்தாலும், என் ஆழ் மனதில்  இந்த தமிழ் ஆர்வத்தின் மைய புள்ளி எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை என்றாவது ஒரு நாள் சொல்ல வேண்டும் என்ற பேரவா என்னுள் இருந்துகொண்டிருந்தது.

அதை இந்த சந்தர்ப்பத்தில் வெளிக்கொண்டுவர காரணமாயிருந்த என் மீது அன்புகொண்ட என் இனிய வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளுடன் இதோ என் பதில் பதிவு. 

தமிழ் பெற்றோர்களின் தவபுதல்வனாய் பிறந்தது முதல் காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

எங்கள் பெரியப்பா, எங்களிடம் எது பேசினாலும் அதில் ஒரு வகையான சொற்சுவை மிளிர பேசுவார், சின்ன வயதிலிருந்தே அது போன்ற பேச்சுக்களை கேட்டிருக்கின்றேன்.

விழா காலங்களிலும், பள்ளி சிறப்பு நிகழ்ச்சிகளிலும் எனது ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் எழுதிகொடுக்கும் வசனங்களை உச்சரிக்கும்போது அவற்றிலிருக்கும் அந்த சந்ததொகுப்புகலடங்கிய வார்த்தை சொற்றொடர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தன.

அந்த காலங்களில் ஊரில் ஏதேனும் திருவிழாக்கள் அல்லது அரசியல் கட்சி கூட்டங்கள் என்றால், கூட்டம் மாலை 6.00 மணிக்கு ஆரம்பிக்க  ஒழுங்கு செய்திருந்தால் அன்று காலை ஆறுமணியிலிருந்து, அந்த கட்சி சார்ந்த கொள்கை பாடல்களும், சினிமா, கதை வசனம் அடங்கிய ரெக்கார்ட் பிளேயர்களின் சத்தங்களும் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

அது போன்ற சினிமா கதைகளுள், வீரபாண்டிய கட்டபொம்பன் வசனங்களும், தில்லானாம் மோகனம்பாள் திரைப்பட வசனங்களும், திரு நாகூர் ஹனிபாவின் பாடல்வரிகளில் மின்னிய கவித்துவமான வரிகளும், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு கலைஞர் சமர்பித்த கவிதாஞ்சலி அடங்கிய ஒலி தட்டின் வழி வழிந்த, சொற்களுக்குள் அடங்காத, தமிழ் வார்த்தை கையாடலும், திருவிடையாடலின் கதை வசனங்களில் மின்னி துலங்கிய வார்த்தை - சொல்லாடலின் சுவையும் என்னை மிகவும் கவர்ந்தன என சொன்னால்  அது மிகை ஆகாது.

அந்த நேரத்தில் - (நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு மாணவன்) எழுத்து, வல்லினம், மெல்லினம், இடையினம்,குறில் நெடில், யாப்பு, சந்தம், அடி, தொடை,மாத்திரை,விருத்தம் , தேமா, புளிமா, தேமாங்காய், புளிமாங்காய் எல்லாம் தெரியாது.

தெரிந்ததெல்லாம், புளியங்காயும்   , மாங்காயும் தான்.

இப்படியாக தெருவில் பாடிய - பேசிய , கேட்ட ,பேச்சுகள், கதை வசனங்கள், பாட்டுக்களை மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் பயில வேண்டிய கட்டாயம்.

அந்த பள்ளியில் முன் தேர்வு, நேர்காணல் முதலியவற்றை நடத்திதான் மாணவர்களை சேர்ப்பது வழக்கம்.

அந்த பள்ளியில் சேர்வதற்கான தகுதி தேர்விற்கு என் அப்பா என்னை தயார் படுத்தி இருந்தார் அவர் பாணியில்.(ஆசிரியர் ஆயிற்றே!)

கணிதம், ஆங்கிலம், தமிழ் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றறிந்து அதற்கான பயிற்சி அளிக்கபட்டேன்.

அந்த தேர்வு நாளும் வந்தது.

ஆங்கிலத்தில் உனக்கு தெரிந்த நிறங்களின் பெயர்களும் அந்தந்த நிறத்திற்கு நேராகா ஏதேனும் ஒரு பொருளின் பெயரையும் எழுத சொல்லி இருந்தனர்.(மஞ்சள்  நிறத்தை  அப்படியே  ஆங்கிலத்தில் "manjal " என எழுதியதும் அதற்கு உதாரண பொருளாக மஞ்சள் வாழைபழம் என்று எழுதியதும்  வேறு சமாச்சாரம்)  

கணிதத்தில், கூட்டல் கழித்தல் , பிறகு எழுத்தில் எழுதியவற்றை எண்ணில்எழுதும்படியும் கூறியிருந்தனர்.(கணக்கில் புலி என்று சொல்லமுடியாது....கொஞ்சம் ஸ்மார்ட்டான பூனை என்று சொல்லலாம்.)

தமிழில் " கோடை விடுமுறையில் என்ன செய்தோம்" என்பதை எழுத் சொல்லி இருந்தனர்.

அதுவரை பார்க்காத சென்னையை குறித்து எழுத ஆரம்பித்தேன் தெரிந்த தமிழில்.

சென்னையை பார்க்காமலேயே சென்னையை பற்றி எப்படி எழுதுவது.

யோசனை.....

கலைஞரின் கவிதாஞ்சலி.....நினைவுக்கு வர...அதே சமயத்தில் எங்கள் அத்தை வீடு சென்னையில் இருப்பதும் அவர்கள் எப்போது வந்தாலும் ட்ரெயினில் வருவதாக கூறியதும் நினைவில் வர , இவற்றை ஒன்று  சேர்த்து,தத்தக்கா புத்தக்கா தமிழில் எழுத ஆரம்பித்தேன்.

ஒருவேளை கதை விடும் பழக்கம் அப்போதே ஆரம்பித்து  விட்டதோ?

"வீட்டிலிருந்து ரயில் மூலம் மெட்ராஸ் சென்றடைந்தோம். அத்தை வீட்டில் சாப்பிட்டோம், மாலை கடற்கரைக்கு சென்றோம் அங்கு....

"கடற்கரையில் இருக்கின்ற  முத்தெல்லாம் முத்தல்ல நான்தானடா நன்முத்து என சொல்லி கடற்கரையில் உறங்குகின்ற, அன்புக்கு  மூன்றெழுத்து, அறிவிற்கு மூன்றெழுத்து, வீரம் மூன்றெழுத்து  வீரம் விளைகின்ற  களம் மூன்றெழுத்து, களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து, அந்த வெற்றிக்கு நமைஎல்லாம் ஊக்குவிக்கும் அறிவுமிகு அண்ணா  என்ற மூன்றெழுத்து  உறங்குகின்ற அண்ணா சமாதியை பார்த்தோம்.

(நண்பர்களே இவை எனக்கே இப்போது நினைத்தாலும் பெரிய வியப்பாகத்தான் இருக்கின்றது--செல்வத்தில் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.--கேள்வி  ஞானம் கைகொடுத்தது)

என எழுதியதில் பல சொற் பிழைகள் , எழுத்துப்பிழை, வாக்கியபிழை,பொருட்பிழை இருந்திருந்தாலும் இந்த வரிகள் ஆசிரியர்களை பெரிதும் கவர்ந்ததாக பின்னாளில் ஒரு ஆசிரியர் மூலம்  அறிந்தேன் நல்லவேளை தேர்வில் பிழைத்தேன்.

அந்த ஆசிரியர் பற்றிதான் அடுத்தபதிவில் சொல்லபோகின்றேன்.

அதுவரை  பொறுமை ப்ளீஸ்.

மீண்டும் ( ச)சிந்திப்போம்

கோ
8 கருத்துகள்:

 1. எனக்கும் தெரிந்ததெல்லாம், புளியங்காயும் , மாங்காயும் தான். நண்பரே..
  அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்,
  தொடரட்டும் தாங்கள் விடும் தமிழ்க்கதைகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் கில்லருக்கு,

   இந்த ரெண்டு காய்களுக்கும் உள்ள ஒற்றுமை - புளிப்பு.
   வேற்றுமை, ஒன்றை கனிய வைத்தால் இனிக்கும் மற்றொன்று கனிந்தாலும் புளிக்கும்.
   "வைதேகி காத்திருப்பாள்" வாசிக்கவில்லையா?
   பார்த்துவிட்டு கருத்துரைக்க அழைக்கின்றேன்.

   நட்புடன்
   கோ

   நீக்கு
 2. சிறப்பான ஞானம்...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. தனபால்,

  துரித வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  தொடருகின்றேன்

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 4. நண்பா .. உன் தமிழ் ஆக்கத்தை உடன் இருந்து கேட்டு களித்தவன் நான் அல்லவா ? அது தான் யாம் பெற்ற இன்பம் என்ற சொல்லுகேர்ப்ப தம்மை இழுத்து வந்து இங்கே விட்டேன் .தம் எழுத்துக்களை விரும்பி ரசித்து படித்து வருகின்றேன் . தொடர்ந்து எழுதவும் .

  பதிலளிநீக்கு
 5. நண்பா,

  மிக்க மகிழ்ச்சி தங்களின் தொய்வில்லா ஊக்கத்திற்கு.

  கோ

  பதிலளிநீக்கு
 6. தத்தக்கா பித்தக்கா தான் அழகு கொஞ்சும் ,,,,,,,,,,,,,,,,,,, அருமை.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி.
  நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு