பின்பற்றுபவர்கள்

சனி, 31 டிசம்பர், 2016

பானத்தில் பாஷாணம்??

நம்பிக்கை துரோகம்.

நண்பர்களே,

மனிதன் உயிர் வாழ தேவைப்படும் இன்றியமையாத -  ஆதார-  அச்சான நீர், காற்று, உணவு போன்றவையின் முக்கியத்துவத்தை நாம் எல்லோரும் அறிவோம்.

திடமாக இருந்தாலும் திரவமாக இருந்தாலும் உணவு  என்பது நேரடியாக நம் வயிற்றிற்குள் சென்று செரிமானம் அடைந்து ரத்தத்தில் விரைவில் கலக்கக்கூடியதும் அதன் பொருட்டு நமக்கு தேவையான சத்துக்களை நம் உடலுறுப்புகளுக்கு அளித்து நாம் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ வழி செய்கின்றது என்பதும் நாம் அறிந்ததே.

அப்படிப்பட்ட உணவுகளை தயாரிக்கும்போதும் பரிமாறும்போதும் சாப்பிடும்போதும் நாம் சுகாதாரம் என்ற போர்வைவைக்கொண்டு அதனை மூடியும் தூய்மை எனும் வடிகட்டிக்கொண்டு வடிகட்டியும்   அருந்துவது மிக மிக முக்கியமானதாகும்.

முன்புபோல் அல்லாமல், இப்போதெல்லாம் பெரும் பான்மையான வீடுகளில் அவர்களுக்கான உணவினை வேறொருவரை கொண்டு சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிட்டு வருவதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம்.

இந்த வரிசையில், வேலைக்கு செல்லும் கணவன்மனைவியாக இருப்பவர்கள், நடுத்தரத்தை தாண்டிய தரத்தில் உள்ளவர்கள், பணக்காரர்கள், பெரும்  பணக்காரர்கள்,  நடிகர் நடிகைகள்,தொழிலதிபர்கள்,முழு நேர அரசியல் பிரமுகர்கள் , முன்னணி தலைவர்கள்,அரசு முன்னிலை  அலுவலர்கள் என இன்னும் பலரும் அடங்குவர்.

இப்படி தமது உயிருக்கும் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு கொண்டுள்ள உணவை தயாரிக்கவும் தமக்கு வேளாவேளைக்கு பரிமாறவும்  அவரவர்கள்  தங்களின் வசதிக்கும் வளமைக்கும் ஏற்ப சமையல் காரர்களை வேலை ஆட்களை அமர்த்திக்கொள்வது வழக்கம். 

இப்படி அமர்த்தப்படும் வேலை ஆட்கள் எத்தனை நம்பிக்கைக்குரியவர் என்பதை பெரும்பாலும் முன் கூட்டியே ஆராய்ந்து அமர்த்தப்படுவதுதான் நடைமுறை.

ஆனால் சில சமயங்களில் ஆட்கள் கிடைப்பதே அரிது இதில் நம்பகத்தன்மை சோதனை எல்லாம் செய்வதாக அறிந்தால் யாரும் வேலைக்கு வர மாட்டார்கள் என்றெண்ணி முன் பின் அறிமுக மில்லாதவர்களைக்கூட இந்த முக்கிய பணியில் அமர்த்திக்கொள்வது பெரும்பான்மையான வீடுகளில் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

இப்படி சமையல் மற்றும் வீட்டு வேலைகளில்  இருப்பவர்கள் சின்ன சின்ன திருட்டு வேலைகளில்  ஈடுபடுவதாக நாம் கேள்வி பட்டிருப்போம்.  அதாவது, அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை திருடி செல்வது, அல்லது சின்ன அளவில் பணம் நகைகளை திருடுவது போன்று.

வீட்டு வேலை செய்யும் பெரும்பான்மையானவர்கள் மிக மிக உத்தமமாகவும் நேர்மையானவர்களாகவும் எஜமானர்களுக்கு நம்பிக்கையானவர்களாகவுமே இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

அத்தகைய நம்பிக்கையானவர்களிடம், வீட்டு சாவிகளை மட்டுமல்லாது, பீரோ சாவிகளிகூட கொடுத்துவிட்டு செல்லும் எஜமானர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்..

எந்த சூழ்நிலையிலும் நம் எஜமானர்களுக்கு எள்ளளவும் துரோகம் விளைவிக்கக்கூடாது எனும் நேர்மையும் லாயல்டியும் கொண்ட சமையல் காரர்கள், வேலையாட்களை நாம் பார்த்திருப்போம்.

இவற்றிக்கெல்லாம் பல படிகள் மேலே சென்று தமது எஜமானருக்கு கொடுக்கப்படும் எந்த ரூபத்திலான உணவையும் தாம் முதலில் பரிசோதித்துவிட்டு , சுவை பார்த்தபிறகு கொடுக்கும்படியான மெய்காவலர்களைக்கொண்ட மனிதர்களும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இப்படி தமது உணவு மற்றும் சிறு தேவைகளை தமக்காக பிறர் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் எனும் சூழ் நிலையில் உள்ள முதியவர்கள், வியாதியஸ்தவர்கள் உடல் ஊனமுற்றோர், மன நிலை பாதிக்கப்பட்டோர், குழந்தைகள் போன்றோருக்கு பணிவிடை செய்பவர்கள் சாதாரண மனிதர்களுக்கு சேவை செய்வதை பார்க்கிலும் இன்னும் கூடுதல் அன்போடும், கரிசனையோடும், நம்பிக்கையோடும் , விசுவாசத்தோடும் , பணம் ஒன்றை மட்டுமே குறியாக  கொண்டில்லாமல்  முழு மனதோடு பணி புரியவேண்டும்.

ஆனால் அப்படி நம்பி முழுமையாக தமது உணவு, மற்றும் ஆரோக்கியம், மருத்துவம் போன்ற உயிர் காக்கும் அத்தனை பொறுப்புகைளையும் ஒரு தனியார் சேவை நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்த வயதான தம்பதியினரை பார்த்துக்கொள்ளும்படி நியமிக்கப்பட்டிருந்தவர் செய்த நம்பிக்கை துரோகம் என் மனதை   மிகவும் பாதித்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தெய்தித்தாளின்  வாயிலாக  அறிந்த   இந்த செய்தி கண்டு மிகவும் மனம் வேதனையில் ஆழ்ந்தது.

அதாவது அந்த முதியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் தமது சிறு நீரை கலந்து கொடுத்தது பின்னர் சி சி டி வி பதிவின் மூலம்கண்டு அதிர்ந்தது அந்த முதியவர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடும்தான்.

இந்த சாப்பாட்டில் விஷம் வைத்து விபரீத விளையாட்டை அரங்கேற்றியவர் இங்கிலாந்தில் யார்க்ஷைர் பகுதியை சார்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் கேர் டேக்கர்.

இப்படி உணவில் விஷம் வைத்து கொல்லவோ பாதிப்பை ஏற்படுத்துபவரையோ  இந்த உலகம் மட்டுமல்லாது எந்த உலகமும் மன்னிக்காது என்பது உண்மையே. 

உணவில் விஷம் வைத்து நம்பிக்கை துரோகம் செய்பவரைவிட முதுகில் குத்துபவர் ஒருவேளை மன்னிக்கப்படலாம் என்பது என் கருத்து.

நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. பணம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்ப்பால்,

      பணம் தான் பிரதானமென்றால், பணத்தோடு போகவேண்டியதுதானே, விடுத்து இதுபோன்ற இழிவான செயலில் ஈட்டுபட்டிருக்கக்கூடாது. மனிதாபிமானமற்ற செயல் இது.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் திரு கரந்தையாரே.

      கோ

      நீக்கு
  3. உண்மைதான். இவர்களைப் போன்றோரை எதிர்கொள்வது சிரமமும்கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இவர்களாக திருந்தினால்தான் உண்டு.

      நன்றி.

      கோ

      நீக்கு