Followers

Friday, December 30, 2016

இரண்டு கால்களும் போனதெங்கே?


புரியாத புதிர்.
நண்பர்களே,

நாம் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் செல்லவேண்டுமாயினும்,ஒரு தகவலை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமாயினும், அல்லது விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டுமாயினும்,
நம்மிடையே எத்தனை வாகனங்கள் போக்கு வரத்து சாதனங்கள் இருந்தாலும் கால்களின் பயன்பாடு என்பதை அறவே புறம்தள்ள முடியாது என்பது எதார்த்தமான உண்மை.

மனித வாழ்க்கையின் இயக்கமாக இருப்பது கால்கள் என்றால் அது மிகை அல்ல. 

ஆனால் அதே சமயத்தில் கண் போன போக்கிலெல்லாம் கால் போவதாயின் அந்த கால்கள் நம்மை அழிவின் பாதைக்கு கூட அழைத்து சென்று நம்மை மட்டுமல்லாது நம் உறவுகளையும் சேர்த்து அழித்துவிடும் என்பதற்கு நம்மிடையே பல முன் உதாரணங்கள் இருக்கின்றன.

மனித உடலில் கடவுளால் படைக்கப்பட்ட உன்னதமான உறுப்புகளில் நம்மை மரங்கள், பாறைகள், மலைகள் போன்ற ஜட பொருட்களில் இருந்து வேறு படுத்தி காட்டுவது நம்முடைய கால்கள் என்றால் அது மிகவும் பொருத்தமான கூற்று.

அப்படிப்பட்ட கால்கள் இல்லை என்றால் நம்முடைய நிலைமையை கொஞ்சம் சிந்தித்து பார்க்கவே கொடூரமாக இருக்கின்றது.

இந்நிலையில் பிறப்பிலோ, அல்லது, வியாதியினாலோ, அல்லது விபத்துகளினாலோ தங்களின் கால்களை இழந்தவர்கள் படும் வேதனையை நாம் பார்ப்பதைவிட சம்பந்தப்பட்டவர்களின் அனுபவம் சொல்லொணா வேதனையானது.

சில சமயங்களில் கோபத்தில்  திட்டும்போது, இன்னொரு முறை இங்கே வந்தால்....உன் காலை வெட்டிவிடுவேன் என கூறுவதையும் கேட்டிருப்போம். அப்போதெல்லாம் இது எதோ ஆத்திரத்தில் சொல்லப்படும் ஆவேச கூற்று என்று நினைத்து கொள்வோம்.

அதே சமயத்தில் மாறு கால் மாறு கை என்று சொல்லப்படும் ரீதியில் கால் கைகள் வெட்டப்பட்டவர்கள் கூட இங்கே இருக்கக்கூடும். எனினும் இரண்டு கால்களும் இழந்தவர்கள் மற்றவரின் ஒத்தாசையோ,தயவோ, பணிவிடையோ இல்லாமல் வாழ்வது என்பது கொடுமையான ஒன்று.

இப்போது மாறிவரும் விஞ்ஞான வளர்ச்சியில் இப்படி பட்டவர்கள் கூட இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளும்படியான பல வசதிகளும் வாய்ப்புகளும் வந்தபின்னும் அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கான பொருளாதார வசதிகள் அனைவரிடமும் இருக்கின்றதா என்பது கேள்விக்குண்டானது.

இந்த சூழ்நிலையில் சென்னையை மட்டுமல்லாது தமிழகம் முழுமையையும் அதிர்ச்சிக்குள்ளான சமீபத்திய நிகழ்ச்சிகளும் அதன் விளைவுகளும் இன்னும் எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கும் என நம்புகின்றேன்.

அந்த நிகழ்வு தொர்பான பல கேவிகள் பலருக்கு எழுந்திருந்தாலும் எனக்கு ஏற்பட்ட பெரிய வினா.. "அந்த இரண்டு கால்களும் எங்கே போனது "என்பதுதான்

அதாவது சமீபத்தில் தமிழகத்தை குறிப்பாக சென்னை மாநகரத்தை புரட்டிப்போட்ட வரதா புயலின்போது ஊருக்கு சென்றிருந்த  ரத்த சம்பந்தமான உறவுகளின் நிலைமை என்ன , எப்படி இருக்கின்றார்கள் என்று அறிந்துகொள்ள நேரிலோ  கால் நடையாகவோ, எந்த ஒரு வாகனத்திலோ செல்ல முடியாதபடி ஏற்பட்டிருந்த சூழலில் அவர்களை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு நலம் விசாரிக்க கால் செய்தேன்.

முதல் காலின்போது கரகரப்பான குரலில் யாரோ பேசுவது கேட்டது.

ஆனால் நான் பேசுவது அவர்களுக்கோ அவர்கள் பேசுவது என்ன என்பதோ புரியாத அளவிற்கு எதோ ஒலி மட்டும் கேட்டது.

என்னவாயிருக்கும் , ஏன் தெளிவாக கேட்கவில்லை? என நினைத்து சற்று நேரம் கழித்து மீண்டும்  கால் செய்தேன்.

அப்போது யாரோ போனை எடுத்தார்கள் ஆனால் ஹலோ என்பதை தவிர வேறு பேச்சுக்கள் கேட்கவில்லை, அதே சமயத்தில் பின் புலத்தில் இருந்து எதோ புரியாத மொழியில் இரைச்சல் கேட்டது.  நானும் முடிந்தவரை சத்தமாக பேசியும் தகவல் ஒன்றும் சொல்லவோ கேட்கவோ முடியாமல் போனது.

டிசம்பர் 13 முதல் 14 வரை தொடர்புகொள்ள முடியாமல் டிசம்பர் 15 ஆம் தேதி அழைத்தேன் , இந்தமுறை குரல்கள் தெளிவாக கேட்டது, ஈமெயில். இன்டெர் நெட் வசதிகள் இல்லாததால் தொலைபேசி யை மட்டுமே முழுவதும் சார்ந்திருக்க வேண்டி இருந்தது.

உறவுகள் நலமுடன் இருப்பதாகவும் கடந்த இரண்டு தினங்களாக மின்சார தொலைபேசி கம்பங்கள் சாய்ந்து விட்டிருந்ததால் வீட்டில் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் அவர்களாலும் என்னை தொடர்புகொள்ள முடியாமல் தவித்ததாக சொன்னார்கள்.

அப்படியானால் இரண்டு முறை நான் அழைத்த  அந்த இரண்டு கால்கள் போனதெங்கே என்ற குழப்பத்தில் தொலைபேசி எண்களை  சரி பார்த்தேன் அவை சரியான எண்கள்தான் , ஆனால்   நான் அழைத்த அந்த இரண்டு கால்கள் எங்கே போனது என்ற மாயம் தான் இன்னும் எனக்கு விளங்கவில்லை.

ஒருவேளை இத்தனை நாட்கள் அமைதியாக  வலுவில்லாமல் கடலில் மையம் கொண்டிருந்த  காற்றழுத்த தாழ்வுநிலை , வலுப்பெற்று காற்றழுத்த உயர்வு நிலையடைந்ததால் அந்த கால்கள் உரிய இடத்திலிருந்து துண்டிக்கப்பட்டு  திசை மாறி சென்றிருக்குமோ? 

நண்பர்களே,
இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கால்களும் அதாவது, மனித உடல் உறுப்பான காலும் மனித உடலுறுப்புபோன்றே அவனது வாழ்வில் ஒட்டி உறவாடும்  தொலைத்தொடர்பு  சாதனமான தொலைபேசி CALLம் எத்தனை இன்றியமையாதவை   என்பதை  நான் சொல்லவும் வேண்டுமோ?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 comments:

 1. நீங்கள் எதை சொல்ல நினைத்தீர்கள் என்பது புரிகிறது... அனைவருக்கும் "அந்த" குழப்பம் தான்...

  ReplyDelete
  Replies
  1. தனப்பால்,

   வருகைக்கு மிக்க நன்றிகள். நான் என்ன சொல்ல நினைத்தேன் என்னத்தை சொன்னேன்?, நாம் எப்பவுமே எதையும் சுற்றி வளைத்து சொல்லி பழக்கமில்லை சொன்னவை எல்லாமே பதிவில் உள்ளவை மட்டுமே. குழப்பம் வேண்டாம் தனப்பால்.

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

   கோ

   Delete
 2. :) எங்கே போனது... புரியாத புதிர் தான்...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

   Delete