Followers

Thursday, December 29, 2016

கார்டனில் காஞ்சனா.

R.I.P.
நண்பர்களே,

நிறைவேறாத ஆசைகளுடனும் ,படுபாதகமானமுறையிலும்  இறந்தவர்களும் கொல்லப்பட்டவர்களும்,
இறந்த பிறகும் அவர்களது  ஆன்மா அமைதி கொள்ளாமல் மூர்க்கத்தனமாகமும் கடும் உக்கரத்துடனும் , இந்த பிரபஞ்சத்தில் பல காலங்கள் உலவிக்கொண்டும் தங்களை சீர்குலைத்தவர்களை பழி தீர்க்கவும் அலைந்துக்கொண்டு இருக்கும் என்பது காலாகாலமாக நம்பப்பட்டும் சொல்லப்படும் வருகின்ற ஒரு ஹைபோதட்டிகளான செய்தி.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரபல ஹாலிவுட் நிறுவனங்கள் முதல் நம்ம ஊர் கோலிவுட் நிறுவனங்கள் வரை இதுவரை எண்ணற்ற திரைப்படங்களை உருவாக்கி திரை இட்டு இருக்கின்றன.  

இவற்றுக்கு சற்றும் சளைக்காதவண்ணம் சமீப காலங்களில் அறிவியல்தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு அங்கமான மின்னஞ்சல்,வாட்ஸ்-அப் , ட்விட்டர்,யூ டியூப், தொலை காட்சி போன்ற எண்ணற்ற ஊடகங்களும் தங்களின் பங்கிற்கு பல தொடர்கள் குறும் படங்கள், ஆவணப்படங்கள், காணொளி  என இந்த அமானுஷ்ய விஷயங்கள் தொடர்பான செய்திகளை பரப்பிக்கொண்டு வருகின்றன. 

என்னதான் பகுத்தறிவில் பற்றும் முற்போக்கு சிந்தனையில் முனைப்பும் கொண்டிருந்தாலும் இதுபோன்ற அமானுஷ்யங்களை அனாவசியமாக நினைக்க முடிவதில்லை.

ஆங்காங்கே நடை பெறுவதாக சொல்லப்படும் செய்திகளின் தாக்கத்தால் இதுபோன்று அமைதி பெறாத ஆவிகள் உண்மையிலேயே பழிவாங்கும் எண்ணங்களுடன் அலைந்துகொண்டுதான் இருக்குமோ என்ற நம்பிக்கை விதைகள் நமது மனதில் முளைக்கத்தான் செய்கின்றன.

இப்படித்தான் சமீபத்தில் உலகளாவிய அளவில் வானளாவிய புகழும் செல்வாக்கும் பிரபல்யமுமடைந்த ஒரு முக்கிய புள்ளியின் மரணமும், அவரது விருப்பத்திற்கும் இயற்கையின் விதிகளுக்கும் மாறாக அகாலமான முறையில் திடீரென ஏற்பட்டதால் உலகமே ஒரு நிமிடம் அசையாமல் போனது என்பதை நம்மில் பலரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

அந்த பிரபலத்தின் நினைவை போற்றும் வகையில் அவரது இளமைக்காலத்தில் அவர் பாடி நடித்த பல பாடல்களின் காணொலிக்காட்ச்சிகளை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தது.

இளமையில் அவரது அழகும் மென்மையான தன்மையும் இனிமையான அவரது குரலும் நளினமான நடனமும் பார்க்க பார்க்க ரம்மியமாக இருந்தது.

இத்தனை திறமைகளை தன்னகத்தே  கொண்டிருந்தவர் இத்தனை சீக்கிரம் இறந்துவிட்டாரே என்று நினைத்ததைவிட இப்படி தகாத மருந்து மாத்திரைகளால் கொல்லப்பட்டுவிட்டார் என்று பரவிய செய்திகேட்டு மனம் மிகவும் பதறிப்போனது.

மாலை சுமார் 7 மணிக்கு பார்க்க ஆரம்பித்த அந்த காட்சிகளின் போது உடனிருந்த நண்பர்கள், அந்த பிரபலத்தின்  ஆவி    சிறுவயதில் தமக்கு என்னென்ன பிடித்திருந்ததோ அத்தனையையும்  ஆசையாசையாய் உருவாக்கி மகிழ்ந்திருந்த அவரது கார்டனில் இன்னும் உலவிக்கொண்டுதான்   இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தனர் .  

பிறகு, சரி வேறு ஏதேனும் திரைப்படங்கள் இருந்தால் பார்க்கலாமே என்று தீர்மானித்தோம்.

வீட்டில் இருந்த திரைப்படங்கள் அனைத்தும் ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தன. சரி வேறு ஏதேனும் நாம் அனைவரும் பார்க்காத திரைப்பட டி வி டி ஷெட்டில் இருக்கும் கொண்டுவருகிறேன் என தோட்டத்தில் இருந்த ஷெட்டின் சாவியை எடுத்துக்கொண்டு தோட்டம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இருட்டில் பூட்டை தடவி பார்த்து திறந்து உள்ளே சென்று விளக்கை போட்டு அங்கிருந்த ஒவ்வொரு டி வி டி யாக பார்த்து தேர்வு செய்து கொண்டிருக்கையில் என் கண்ணில் பட்ட டி வி டி காஞ்சனா -2 .

திகில் மனதை ஆக்கிரமிக்க , ச்சே, இது சினிமாதான் என்று நினைத்து மனதை சுதாரித்துக்கொண்டு அந்த டி வி டி யை எடுத்துக்கொண்டு ஷெட்டின் விளக்கை அனைத்து விட்டு வெளி கதவை மீண்டும் தொட்டு தடவி பூட்டிவிட்டு தோட்டத்தில் நடக்க ஆரம்பித்து வீடு வந்து சேரும்வரை அந்த காஞ்சனா ஆவி தோட்டத்தில் எந்த மூலையில் இருந்து நம்மை நோக்கி பாயுமோ என்ற பதற்றத்தில் கால்கள் பின்னிக்கொண்டன நடை தளர்ந்தது.

எந்த காஞ்சனாவின்  அகால மரணத்திற்கு  எந்த விதத்திலேயும் காரணமில்லாத என்னை தாக்கவோ பயமுறுத்தவோ எந்த காஞ்சனாவிற்கும் எந்த காரணமும் இல்லாதபோதே நமக்கு இத்தனை பீதி உண்டாகும்போது உண்மையான காரணமானவர்களுக்கு எத்தனை பீதியும் கலக்கமும் இருக்கும் என்ற சிந்தனையோடு ஒரு வழியாக வீட்டினுள் நுழைந்தால் அங்கே தொலைக்காட்சியில் வழிந்து கொண்டிருந்தது அந்த பிரபலத்தின் பாடல் ஒன்று அவரது இனிமையான குரலில் உலகறிந்த அவரது நளினமான நடனத்துடன் .

அந்த பிரபலம் யார்?  நீங்கள் மட்டுமல்லாது இந்த உலகமே அறிந்தவரும் புகழின் உச்சியில் இருந்தவருமான "J" என்று எழுத்தோடு இணைந்த பெயர்கொண்ட பாப்பிசை சக்ரவர்த்தி மைக்கேல்  ஜாக்ஸ்ன்( MJ)தான்.

அவரது ஆன்மா அமைதியாக இளைப்பாற வேண்டுமென்ற வேண்டுதலோடு...

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 comments:

 1. காஞ்சனா படம் பார்த்து நான் தூங்கவே இல்ல, இப்ப இந்த பதிவு,, ம்ம்,,
  ஒஒ மைக்கேல் ஜாக்ஸ்ன்????

  நல்லது.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் பேராசிரியரே.

   கோ

   Delete
 2. ஜே.... மைக்கேல் ஜாக்சன்!

  காஞ்சனா - 2 பார்க்கவில்லை.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete