பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 7 அக்டோபர், 2025

இயற்கை நுண்ணறிவு..!!! - 2

 என்னவென்பேன்!!?? 


நண்பர்களே,

இந்த  தலைப்பின் முதல் பாகத்தை எழுதிய கையேடு சுமார் 15 நாட்கள் அமெரிக்காவில்   சுற்றுப்பயணத்தில் இருந்து சென்ற வாரம்தான் திரும்பி வந்தேன், எனவேதான் இந்த அடுத்தபாகத்தை தொடர சற்று தாமதமானது.

முதலில் இருந்து வாசிக்க...இயற்கை நுண்ணறிவு..!!!

சற்றும் தொடர்பில்லாத அல்லது தொடர்பு அறுந்துபோன , நட்புறவை  நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மறந்துபோன ஒருவர் என் கனவில் வருகிறார்.

மனதின் ஒருபுறம்  மகிழ்ச்சியாக இருந்தாலும் அதே மனதின் பல புறங்களில் சற்று வினோதமாக இருந்தது.

எப்போதும் இல்லாமல் எந்த பேச்சுவார்த்தையும் இல்லாத இவர் ஏன் என் கனவில் இத்தனை ஆண்டுகள் கழித்து வரவேண்டும் என்ற சிந்தை என்னை ஆட்கொண்டு என் உறக்கத்தை உலுக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த தொலைபேசி சிணுங்கல் என்னை சீக்கிரமாய் எழ செய்தது. நேரம் விடியற்காலை மூன்று மணி.

இந்த நேரத்தில் யாராக இருக்கும்?

ஊரிலிருந்து?  நம் வீட்டிலிருந்து? நம் உறவுகளிடமிருந்து ?  

அல்லது சில நேரங்களில் , உங்க காடுமேல இருக்கி பத்தனாரு நம்பர் சொல்லு , O T P  நம்பர்  சொல்லு  போன்ற செய்திதாங்கி வரும் அழைப்பா?

தூக்கக்கலக்கத்தில் அருகிலிருந்த தொலைபேசியைத்  தட்டுத்தடுமாறி தொட்டு எடுத்து ஆன் செய்து:

 ஹலோ  யார் பேசறது என ஆங்கிலத்தில் கேட்க....

ஹலோ , நீங்க கோவா? என தமிழில் எதிர் முனையிலிருந்து கேட்க...

தாய் மொழியில், விடிந்தும் விடியாத அந்த பூபாளம் இசைக்கும் அந்த புலராத காலைப்பொழுதில்  நம்மை விசாரித்துவரும் தொலைபேசி முன்மொழிவு கடும் கோடையில் பெய்யும் பனிப்பொழிவாக என்மனதில் காலைக்குளிர் மெல்லிய காற்றுபோல ஸ்பரிசித்து குதூகலத்துடன்  என்னை துள்ளி எழுந்து உட்கார வைத்தது.

ஆமாம் நான் கோதான் பேசுகிறேன், நீங்க?

நான் கணேசன் பேசுகின்றேன் .

எந்த கணேசன்?  காஞ்சிபுரம்  N .கணேசனா?

பரவாயில்லையே, என் ஊர்ப்பெயர் மட்டுமல்லாது  என் இனிஷியலும்கூட உங்களுக்கு நினைவிருக்கின்றதே?

ஆமாம் நான் கணேசன் தான் பேசுகின்றேன், எப்படி இருக்கின்றீர்கள்?

அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்துபோன எனக்கு அவரிடம் பேச்சை தொடர வார்த்தைகளும்  மறந்து போனது;   சுதாரிக்க சில நாழிகைகள் ஆனது..

அவரோ அடுத்த முனையிலிருந்து... கோ ... கோ... தொடர்பில் இருக்கின்றீர்களா? 

ஆனந்தப் பேரதிர்ச்சி என்பதைவிட  நம்பமுடியாத அமானுஷ்யப் பேரதிர்ச்சி  யாகவே  அப்போது நான் உணர்ந்தேன்.

சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு, நண்பரே எப்படி இருக்கின்றீர்கள்?

எத்தனை காலமானது உங்கள் குரலைக்கேட்டு , என்றெல்லாம் கேட்க தோன்றினாலும் அவரிடம் நான் முதலில் சொன்ன செய்தி , நேற்று பின்னிரவில் நீங்கள் என் கனவில் வந்தீர்கள் இப்போது தொலைபேசி வாயிலாக வருகின்றீர்கள் என்னால் நம்பவே முடியவில்லை என்பதுதான்.

அவரும், அப்படியா?

என்னாலும் இதை  நம்பமுடியவில்லை.

உள்ளமெல்லாம் பூரிப்பும் உடலெல்லாம் புல்லரிப்புடனும் பேச்சைத்  தொடர்ந்தோம்.

பிறகு அவரிடம் கேட்டேன், எப்படி இருக்கின்றீர்கள்? என்னுடைய தொடர்பு தொலைபேசி எண் எங்கிருந்து கிடைத்தது.,எல்லாம் சுகம்தானே?.

நன்றாக இருக்கிறேன், இப்போது உங்களிடம் பேசுவதால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

நேற்று மாலை  அவர் கலந்துகொண்ட, நாடு முழுதும் வியாபித்திருக்கும் அவர் பணிபுரியும்  நிறுவனத்தின் சார்பாக ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில்,  ஒருவரை ஒருவர் சுய அறிமுகம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டதாம்.

அப்போது, பெயர், ஊர், படித்த பள்ளி, படித்த கல்லூரி போன்றவற்றை சொல்லவேண்டி இருந்ததாகவும், உணவு மற்றும் தேநீர்  இடைவேளையில் இவரிடம் வந்து பேசிய ஒருவர், நீங்கள் அந்த கல்லூரியில் அந்த ஆண்டு படித்திருந்தால் அங்கு படித்த கோயில்பிள்ளை  என்பவரை தெரியுமா என கேட்டதாகவும் , எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த நட்ப்பைப்பற்றி இவர் அவரிடம் கூறியதாகவும் அவரிடமிருந்து எனது தொடர்பு என்னை பெற்று இப்போது அழைத்ததாகவும் கூறினார்.

நம்பமுடியவில்லை என்றாலும் ஆச்சரியம் என்னை முழுமையாக ஆட்கொண்டது.

நேற்று பின்னிரவில் பல ஆண்டுகள் கழித்து கனவில் வந்தவர் இன்று விடியாத கருக்கலில் தொலைபேசிவாயிலாக உரையாடுவதென்பது உள்ளபடியே, உச்சிமுதல் பாதம்வரை உடல்முழுதும் ஆச்சரியத்தால் சிலிக்கச்செய்தது என்பதை  என்னவென்று நானுரைப்பேன்.

அவர் இந்தியாவில் என்னைப்பற்றி வேறொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் அல்லது என்னை பற்றி நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் அல்லது  தொலைபேசி எண்ணை  பெற்றுக்கொண்டு என்னை தொடர்புகொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த  நேரத்தில் பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உள்ள என் கனவில் அவர்  வருகிறார் என்றால் இது எந்தவகை நுண்ணறிவு? யார் உருவாக்கியது?

இப்படி மனித மூளைக்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் அப்பாற்பட்டு இந்த பிரபஞ்சத்தில் அவ்வப்போது நிகழும் இதுபோன்ற செயல்களை -  நிகழ்வுகளை என்னவென்று இந்த விஞ்ஞான உலகம் வகைப்படுத்தும்? 

இதுபோன்று உங்களுக்கும் ஏதேனும் அபூர்வமான  அனுபவம் ஏற்பட்டிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பி.கு: அதைத்  தொடர்ந்து விடுமுறையில் இந்தியா வந்திருந்தபோது அடுத்தநாளே அவரைக்  காணச்சென்று  நேரில் பார்த்து கைகுலுக்கி கட்டித்தழுவி ஒன்றாக தேநீர் மற்றும் உணவருந்தி, நீண்ட நேரம் பழைய விஷயங்களை , பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டு பிரியமான நட்பினை பிரிய மனமின்றி உடலளவில் பிரிந்துவந்தாலும் அன்றுமுதல் எங்கள் தொடர்பும் நட்பும் மீண்டும் துளிர் விட்டு இலைவிட ஆரம்பித்திருக்கின்றது.

குறுஞ்செய்திகளும்  தொலை பேசி உரையாடல்களும் எங்கள் நட்ப்பை இன்றுவரை  உயிர்ப்பூட்டி வருகின்றது.

இந்த பதிவை என் நாற்பதாண்டுகால நண்பருக்கு அர்ப்பணித்து நிறைவு செய்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக