அனைவருக்கும்!!
நண்பர்களே ,
ஆண்டுதோறும் பல சிறப்பு பண்டிகைகளை நாம் கொண்டாடி வருகிறோம்.
அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதன் இறுதி மாதமாகிய டிசம்பரின் இறுதி வாரத்தில் உலகமெங்கிலும் உற்சாக பெரு மகிழ்வுடன் பாகுபாடுகள் ஏதுமின்றி பெருவாரியான மக்களால் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகை என்பது ஒரு வித்தியாசமான பண்டிகை.
இந்த பெருநாளை ஆவலுடன் எதிர்பார்த்து, மாதக்கணக்கில் அதற்கான ஏ ற்பாடுகளை செய்து காத்திருக்கும் மக்களின் மனதில் ஊறும் மகிழ்ச்சியும் இனம் புரியா ஏகாந்த இன்பப் பெருக்கும் அளவிட முடியாதது.
இதுபோன்ற கிறிஸ்மஸ் காலங்களில் இதுவரை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, சைனா, இங்கிலாந்து, பஹ்ரைன், பிரான்ஸ் , மால்டா, அமெரிக்கா, இத்தாலி , எகிப்த்து, ஜார்ஜியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் நேரில் சென்று அதன் கொண்டாட்ட அலங்காரங்களை பார்த்து பரவசம் அடைந்திருக்கிறேன்.
அவ்வகையில் கடந்த வாரம் ஐந்தாவது முறையாக இத்தாலி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அந்த தேசத்தின் இரண்டு சிறப்பான நகரங்களான , பிளாரன்ஸ் மற்றும் ரோம் - வாட்டிகன் பகுதிகளை சுற்றிப்பார்த்து உள்ளம் பூரித்த இனிய நினைவுகளாக என் நெஞ்சில் ஆழமாகவும் அகலமாகவும் உட்புகுந்த அந்தப் பதிவுகள் இன்னும் பல காலங்களுக்கு என் நெஞ்சை விட்டு அகலாது என்பது திண்ணம்.
எல்லா நாடுகளிலும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம், குதூகலம் கொண்டாட்டம் பல வகையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.
இதில் ஏழை, பணக்காரன், எளியவன், வலியவன் , கற்றவன், கல்லாதவன் , உயர்ந்தவன், தாழ்ந்தவன்,,அதிகாரமிக்கவன், அதிகாரம் அற்றவன் போன்ற எந்த பாகுபாட்டு வித்தியாசத்தின் சாயமோ சாயலோ ஏதுமின்றி, அனைவரும் ஏகோபித்த மன நிலையிலிருந்து இந்த பண்டிகையை அனுசரிக்க தயாராவதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
இப்போதெல்லாம், பலரும் சொல்வதுபோல, எந்த பண்டிகை என்றாலும் அவையெல்லாம் வணிகமயமாகவும் வியாபார சிந்தை ஊடுருவியதாக மாறிப்போனதாகவும் அந்தந்த பண்டிகைகளின் உண்மையான நோக்கம் , தாத்பரியம் , உட்பொருள், காரணம், பின்னணி போன்றவை உணரப்படாமலும், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காப்படாமலும், சில வேளைகளில் அவை உதாசினப்படுத்தப்படுவதாகவும் அமைந்துவிடுகிறது.
ஒவ்வொரு பண்டிகையின் உட்பொருளை உயர்த்திப்பிடிக்கும் வகையில் நமது எல்லா பண்டிகை கொண்டாட்டங்களும் அமையுமேயானால் அதுவே அந்தந்த பண்டிகைகளுக்கு நாம் செய்யும் சிறப்பாகும்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடுமட்டுமல்லாமல், அன்பின் வெளிப்பாடாகவும், ஈகையின் வெளிப்பாடாகவும், மனித நேய வெளிப்பாடாகவும், அனைவரையும் அன்புடன் அரவணைப்பின் வெளிப்பாடாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக மேட்டிமை துறந்த தாழ்மையின் வெளிப்பாடாகவும் அமையுமேயானால் அதுவே இந்த சிறப்புப்பண்டிகை கொண்டாட்டத்தின் முழுமை என நினைக்கின்றேன்.
இந்த பண்டிகை காலங்களில் பல தனிப்பட்ட, குடும்ப,பொருளாதார, சமூக காரணிகளால் தங்களால் இயல்பான மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள முடியாத, இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட முடியாத சூழலில் இருக்கும் நம் உறவுகள் நண்பர்கள் சகோதர சகோதரிகளை நாம் நினைவுகூர்ந்து, வருகின்ற புத்தாண்டில் நம் எல்லோருக்கும் எல்லாவிதங்களிலும் சீரும் சிறப்பும் , உடலாரோக்கியமும், உள்ள மகிழ்வும், பொருளாதார ஏற்றமும், பொலிவான வாழ்வும் அமையவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
(ரோம் நகரின் ஸ்பானிஷ் படிக்கட்டுகள்- SPANISH STEPS அமைந்திருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த 2025 கிறிஸ்மஸ் அலங்காரம்.)
(ரோம் - வாடிகன் புனித பீட்டர் பேராலய - ST PETER'S BASILICA சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த 2025 கிறிஸ்மஸ் அலங்காரம்)
அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகள்.
நன்றி!
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக